இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவியின் உரைக்கு நன்றி தெரிவித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:
"கடந்த ஒன்றரை ஆண்டுகளாக எந்தவித சமரசமுமின்றி திராவிட மாடல் ஆட்சி வெற்றி பெற்று வருகிறது. காலை உணவு சாப்பிடும் பள்ளிக் குழந்தைகள், கட்டணமில்லா பயணம் செய்யும் மகளிர் முகத்தில் நாள்தோறும் உதயசூரியன் உதிக்கிறது.
தமிழ்நாடு ஒட்டுமொத்தமாக முன்னேறுவதை அனைவராலும் பார்க்க முடிகிறது. சமத்துவம், பெண்ணுரிமை, மதநல்லிணக்கம், பல்லுயிர் ஓம்புதல் ஆகிய கொள்கைகளை உள்ளடக்கிய திராவிட மாடல் ஆட்சி வீரத்துடனும், விவேகத்துடன் நடைபெற்று வருகிறது.
பள்ளிவாசல்களுக்கு வழங்கப்படும் மானியத்தொகை ரூ.6 கோடியிலிருந்து ரூ.10 கோடியாக உயர்வு.
வடமாநில தொழிலாளர்கள் பற்றிய விவரங்கள் தமிழக காவல்துறை மூலம் சேகரிக்கப்படுகிறது. குற்றச்செயலில் ஈடுபடுவோர் யார் என்றாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்", என்று அறிவித்துள்ளார்.
மேலும், "தமிழ்நாட்டில் தமிழ் மொழியை படிக்காமல் பள்ளியிலிருந்து தேர்ச்சி பெற முடியாது. 10ம் வகுப்பு வரை தமிழ் மொழி கட்டாய பாடம் என்ற சட்டத்தை கலைஞர் கொண்டுவந்தார். அந்த வகையில் தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிகளிலும் தமிழ் பயிற்று மொழியாக இருப்பதை தமிழக அரசு கண்காணிக்கும்", என்று அறிவித்துள்ளார்.
தமிழ்மொழியில் தேர்வில் தேர்ச்சி பெறாமல் அரசுப்பணிகளை பெறமுடியாத வகையில், தமிழக அரசுப் பணிகள் சட்டத்தில் திருத்தம் செய்யும் மசோதா இன்று நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.