தமிழக சட்டசபையின் கூட்டத்தொடர் வரும் செப்டம்பர் 14-ம் தேதி முதல் 16-ந்தேதி வரை நடைபெறும் என்று சபாநாயகர் ப.தனபால் தலைமையில் அலுவல் நடைபெற்ற ஆய்வு குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
கொரோனா பெருந்தொற்று காரணமாக தற்போதைய கூட்டத்தொடர் சென்னை வாலாஜா சாலையில் கலைவாணர் அரங்கில் மூன்றாம் தளத்தில் உள்ள பல்வகை கூட்டரங்கத்தில் நடத்தப்படும் என்று சட்டப்பேரவை செயலர் சீனிவாசன் முன்னதாக தெரிவித்திருந்தார். சட்டப்பேரவைக் கூட்டுவதற்கான ஒப்புதலை மாநில ஆளுநர் பன்வாரிலால் செப்டமபர் 1ம் தேதி அளித்தார்.
முதல் நாளில், முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜே. அன்பழகன், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் எச். வசந்தகுமார், கோவிட் -19 உயரிழந்த மக்களை நினைவு கூறும் வகையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும். 16ம் தேதி துணைநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டசபையை நடத்துவதற்கு ஏற்ற வகையில் கலைவாணர் அரங்கம் மாற்றியமைக்கப்பட்டது. சபாநாயகர், முதல்-அமைச்சர், அரசு தலைமை கொறடா, எதிர்க்கட்சி தலைவர், எதிர்க்கட்சிகள் ஆகியோருக்கும் அலுவலக வசதிகளை அளிப்பதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதற்கிடையே, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை இன்று மாலை ஆளுநர் மாளிகையில் சந்தித்துப் பேசவுள்ளார்.
14ஆம் தேதி முதல் நடைபெறவுள்ள சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடர்பாக ஆளுநரிடம் முதல்வர் எடுத்துரைப்பார் எனத் தெரிவிக்கப்பட்டது .
72 மணி நேரத்திற்கு முன்பாக எம்.எல்.ஏ.க்கள் அனைவருக்கும் கொரோனா சோதனை செய்து தனிமனித இடைவெளியுடன் கூட்டத்தொடர் நடைபெறும் என்றும் முடிவெடுக்கப்பட்டள்ளது .