கொரோனா அதிகம் பரவி வரும் 12 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்த உள்ளார். தேர்தல், அரசியல், சமூகம் சார்ந்த செய்திகளை இந்த லைவ் ப்ளாக்கில் காணலாம். உடனுக்குடன் செய்திகளை தமிழில் அறிந்துகொள்ள இந்தத் தளத்துடன் இணைந்திருங்கள்.
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. தற்போது தினசரி பாதிப்பு 1 லட்சத்தைக் கடந்து அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. அந்த வகையில் நேற்று 1.15 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.மகாராஷ்டிரா, பஞ்சாப், கர்நாடகா, டெல்லி மற்றும் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் டெல்லி, பஞ்சாப், ஜார்க்கண்ட், குஜராத், மகாராஷ்ட்ரா உள்ளிட்ட மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்திலும் தினசரி பாதிப்பு 5 ஆயிரத்தை நெருங்கி சென்று கொண்டிருக்கிறது. கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அதனை கட்டுப்படுத்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில் கொரோனா பரவல் அதிகமுள்ள மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், கேரளா, டெல்லி, தமிழ்நாடு, மத்திய பிரதேசம், உத்தரப்பிரேதசம், கர்நாடகா, குஜராத் மற்றும் பஞ்சாப் உள்பட 12 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று கொரோனாவைக் கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசனையில் ஈடுபடுகிறார்.கடந்த 6 ஆம் தேதியன்று 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில், அடுத்த 4 வாரங்கள் நெருக்கடியான வாரங்களாக இருக்கும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது.இதனால் பொதுமக்களிடம் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா என்ற பரபரப்பு எழுந்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதனையடுத்து சிகிச்சை பெற்று வரும் அவர் விரைவில் குணமடைய வேண்டிய கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, அவர் தனது சொந்த ஊரான கண்ணூர் மாவட்டம் தர்மடத்தில் உள்ள வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டார்.
தமிழகத்தில் பெருகி வரும் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், தொற்று பாதிப்பை கட்டுப்படுத்த தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த கட்டுப்பாடுகளை மக்கள் அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என்று தமிழக ஆளுநர் கூறியுள்ளார்.
திரையரங்குகளில் 50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், தனுஷ் நடித்துள்ள 'கர்ணன்' திரைப்படம் நாளை திட்டமிட்டபடி திரையரங்குகளில் வெளியாகும் என தயாரிப்பாளர் எஸ்.தாணு அறிவித்துள்ளார்.
தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அரசியல் கட்சியினரிடம் இருந்து எந்த அளவுக்கு விலகி சுதந்திரமாக செயல்படுகிறது என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
நெடுஞ்சாலைகள், சாலைகள், நடைபாதைகளில் அனுமதியின்றி சிலை வைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பது தொடர்பான தமிழக அரசின் அரசாணை (183ன்) படி உரிய நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே,மணியங்குறிச்சி கிராமத்தில் அனுமதியின்றி முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகள் அமைக்க தடை கோரிய வழக்கில் நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.
இன்று நடைபெற்ற சென்னைப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்துக் கொண்ட தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மூன்று பேருக்கு மட்டும் பட்டங்களை வழங்கினார். கொரோனா அச்சத்தால் 3 பேருக்கு மட்டும் பட்டம் வழங்கப்பட்டதாக பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக லஞ்ச ஒழிப்பு துறை அரசியல் கட்சிகளிடம் இருந்து விலகி, எந்த அளவுக்கு சுதந்திரமாக செயல்படுகிறது? கடந்த மூன்று ஆண்டுகளில் எத்தனை ஊழல் வழக்குகளை கையாண்டுள்ளது? என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் இது சம்பந்தமாக 3 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகளை திட்டமிட்டப்படி நடத்துவதா அல்லது ஒத்திவைப்பதா என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை செயலாளர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ,45 வயதுக்கு மேற்பட்டோர் இரண்டு வார காலத்துக்குள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என தமிழக அரசு அறிவுறித்தியுள்ளது. மேலும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படும் எனவும் தகவல்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஏப்ரல் 10ஆம் தேதி முதல் கோயம்பேடு உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள பெரிய காய்கறி சந்தைகளில் சில்லரை வியாபார கடைகளுக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு கோயம்பேடு சந்தை மூலம் கொரோனா பாதிப்பு அதிகரித்ததால் தற்போது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களில் காவல்துறை அதிகாரிகள் தினமும் 5 முறை ஆய்வு செய்ய வேண்டும் என டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.
அதிகப்படியான கொரோனா பரவல் காரணமாக வரும் 10-ம் தேதி முதல் சில கட்டுப்பாடுகளை தமிழக அரசு அமலுக்கு கொண்டுவரவுள்ளது. பேருந்துகளில் இருக்கைகளில் அமர்ந்து செல்லும் பயணிகளுக்கு மட்டுமே அனுமதி, அனைத்து திரையரங்குகளும் 50% இருக்கைகளை மட்டும் பயன்படுத்தி செயல்பட அனுமதி, திருமண விழாக்களில் 100 பேருக்கு மிகாமல் மட்டுமே பங்கேற்க வேண்டும், ஹாப்பிங் மால்கள், பெரிய கடைகளில் 50% வாடிக்கையாளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும், கோயம்பேட்டில் சில்லரை வியாபாரத்திற்கு தடை விதிப்பு, திருவிழா, மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படவுள்ளன.
சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணங்கள் நியாயமாக இல்லை என்றும் ஃபாஸ்டேக் முறை எளிதில் அணுகும் வகையில் இருக்க வேண்டும், மக்களுக்கு பற்றி விளக்க வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.
திருநெல்வேலி மாநகராட்சிக்கு உட்பட்ட பேட்டை செந்தமிழ்நகர்ப் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பெண்கள், 3 சிறுவர்கள் உட்பட 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து அந்தப் பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்டோர் அனைவரும் தற்போது வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். அவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
உலகமே இரண்டாம் கொரோனா அலையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் போது, வடகொரியாவில் இதுவரை ஒருவருக்கு கூட கொரோனா தொற்று ஏற்படவில்லை என அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார்.
கொரோனா பரிசோதனை செய்தவர்களுக்கு மட்டும் சென்னை பல்கலையின் 163-வது பட்டமளிப்பில் பங்கேற்க அனுமதி என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. ஆளுநர் பன்வாரிலால் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் பங்கேற்க 872 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
கொரோனா தடுப்பூசிகள் சோதனைகளுக்கு இடையே, சமீப காலத்தில் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இந்நிலையில் இயக்குநர் எஸ்.பி.முத்துராமனுக்கு அறிகுறிகளுடன் கூடிய கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
புதுச்சேரியில் ஒரு மாதத்திற்குள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த திட்டமிட்டுள்ளதாகவும், கொரோனா பரிசோதனை எண்ணிக்கை குறைக்கப்படவில்லை என துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் கொரோனா அபாயகரமான கட்டத்தில் இல்லை என்பதால் தற்போது ஊரடங்கிற்கு அவசியம் இல்லை என தமிழிசை கூறியுள்ளார்.
ஸ்ரீபெரும்புதூர் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் செல்வப்பெருந்தகைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று உறுதியான நிலையில் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.
திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா உறுதியான நிலையில் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். ஏற்கனவே துரைமுருகன் 2 தவணை கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் மேலும் 1,26,789 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 625 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்தியாவில் மொத்தமாக 1,29,28,574 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 1,18,51,393 பேர் குணமடைந்துள்ளனர். இந்தியாவில் இதுவரை கொரோனா தொற்றுக்கு 16,68,62 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால் ஏப்ரல் 11 முதல் 28 வரை இந்தியாவில் இருந்து வரும் பயணிகள் நியூசிலாந்து வர அனுமதியில்லை என நியூசிலாந்து அரசு அறிவித்துள்ளது.
மதுரையில் கொரோனா தொற்று உறுதியானவர்கள் வசிக்கும் தெருக்கள் இன்று முதல் மூடப்படும் என்றும் கொரோனா பரவல் அதிகரிக்கும் பகுதிகளில் முக்கியத்துவம் அளித்து தடுப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என மதுரை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் காய்ச்சல் பரிசோதனை முகாம்களை அதிகரிக்கவும், சென்னையிலுள்ள 200 வார்டுகளிலும் சிறப்பு காய்ச்சல் முகாம்களை அதிகரிக்கவும் மாநகராட்சி திட்டமிட்டுள்ளது பாதிப்பு அதிகமுள்ள இடங்களில் கூடுதல் முகாம்களை நடத்தவும் மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பிரதமர் மோடி 2-ம் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார். கொரோனா வைரசை எதிர்கொள்வதற்கான வழிகளில், தடுப்பூசி செலுத்திக்கொள்வதும் ஒன்று.தகுதி பெற்ற அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.