Tamil Nadu news highlights : தமிழக அரசின் 2021-22 ஆம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கை கடந்த 13ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் அமைக்கப்பட்ட சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, பட்ஜெட் மீதான விவாதங்கள் கடந்த 19ம் தேதி வரை நடைபெற்று முடிந்தது. அதன்பிற்கு, சட்டப்பேரவைக்கு 3 நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டது. பிறகு நேற்று (23/08/2021) கூடிய சட்டமன்றத்டில் திமுக பொதுச்செயலாளர் மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனின் பொன்விழா நாளை ஒட்டி அவருடைய சட்டமன்ற பணியை பாராட்டி பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
23ம் தேதி சட்டமன்றத்தில் நடைபெற்றது என்ன? முழுமையான விவரங்கள் இங்கே
பெட்ரோல் டீசல் விலை குறைவு
சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 12 காசுகள் குறைந்து ரூ. 99.20க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே போன்று ஒரு லிட்டர் டீசல் விலை 14 காசுகள் குறைந்து ரூ. 94.52க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஆப்கான் விவகாரம்
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா மற்றும் பிரிட்டன் நாட்டு படைகள் ஆகஸ்ட் மாதம் 31ம் தேதிக்குள் அந்நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றும் இல்லை என்றால் நிலைமை மோசமாகும் என்றும் தாலிபான்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆப்கான் விவகாரம் தொடர்பாக இன்று ஜி7 நாடுகளின் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
பாரா ஒலிம்பிக்ஸ்
மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக்ஸ் போட்டிகள் இன்று துவங்குகின்றன. இந்தியா அணிக்கு தலைமை ஏற்று தமிழகத்தின் மாரியப்பன் தங்கவேலு தேசிய கொடியை ஏற்றி அணிவகுப்பு செய்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
நடிகர் ஆர்யா போல் நடித்து, ஜெர்மனியில் வாழும் இலங்கை தமிழ் பெண்ணிடம் ரூ.70 லட்சம் பறித்த 2 பேரை சென்னை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானிலிருந்து திறமையானவர்களை வெளியேற்ற கூடாது என அமெரிக்காவுக்கு தாலிபான் வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும், ஆப்கான் மக்கள் தங்கள் சொந்த நாட்டை விட்டு வெளியேறுவதை அமெரிக்க ஊக்குவிக்க கூடாது என்றும், பஞ்சஷீர் பிரச்சனைக்கு அமைதியான முறையில் தீர்வு காண விரும்புவதாகவும் தாலிபான் அமைப்பு தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 1,585 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 27 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
சென்னையில் 26 ஆம் தேதி 400 சிறப்பு முகாம்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. வார்டுக்கு 2 தடுப்பூசி முகாம்கள் என 400 சிறப்பு முகாம்கள் அமைக்கப்படுகின்றன.
அரசு சொத்துகளை குத்தகைக்கு விடும் மத்திய அரசின் முடிவு கண்டனத்திற்குரியது. அரசுக்கு சாதகமான தொழிலதிபர்களுக்கு நாட்டின் சொத்துக்களை பரிசாக அளிக்கிறார் பிரதமர். நாட்டின் சொத்துக்கள் அனைத்தையும் பாஜக அரசு விற்றுவிட்டதாக ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு செயல்வழி கற்றல் முறையில் பாடம் நடத்த தனியாருக்கு பள்ளிக்கல்வித்துறை அனுமதி வழங்கியுள்ளது. இதில், 6-9 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இணையம் வாயிலாக கணிதம், அறிவியல் பாடங்களை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
டோக்கியோ பாராஒலிம்பிக் போட்டிகள் கோலாகலமாக தொடங்கியுள்ளது. பாராலிம்பிக் வீரர், வீராங்கனைகள் அணிவகுப்பில் இந்திய தேசியக் கொடியை டெக் சந்த் ஏந்திச் சென்றார்
பெண்ணிடம் ஆபாசமாக நடந்து கொண்டதாகவும், உரிய விசாரணை நடத்தி கைது நடவடிக்கை எடுக்கவும் கோரி, தமிழ்நாடு பாஜகவின் கே.டி.ராகவன் மீது டிஜிபி அலுவலகத்தில் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி புகார் அளித்துள்ளார்
கோடநாடு கொலை,கொள்ளை வழக்கு முன்னர், முறையாக விசாரிக்கப்படவில்லை என உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால், மத்திய அமைச்சர் நாராயண் ரானே மீது வழக்குப்பதிவு செய்த அம்மாநில காவல்துறை அவரை கைது செய்து விசாரணை செய்து வருகிறது.
சட்டமன்ற விசிக தலைவர் சிந்தனைச்செல்வன் பேட்டி: “சமத்துவ சுடுகாடு போன்ற திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
மானிய கோரிக்கை பதிலுரையில் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, “முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமராகும் தகுதி உள்ளது” என்று கூறினார்.
காஞ்சிபுரம், கும்பகோணம், கரூர், கடலூர், சிவகாசி ஆகிய நகராட்சிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளை ஒன்றிணைத்து மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்றும் கூடலூர், காரமடை, கருமத்தம்பட்டி, மதுக்கரை, வடலூர், கோட்டக்குப்பம் பேரூராட்சிகள் நகராட்சிகளாக மாற்றப்படும் என்றும் பேரவையில் அறிவித்ததோடு தாம்பரம் மாநகராட்சியாக மாற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு மாதாந்திர மதிப்பூதியம் ரூ.1,000-ல் இருந்து ரூ.2,000 ஆக உயர்த்தப்படும் என்று சட்டப்பேரவையில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அமைச்சர் பெரியகருப்பன் அறிவித்துள்ளார்.
சென்னை, மெரினாவில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு ரூ.39 கோடி மதிப்பில் அமையுள்ள நினைவிடத்தின் மாதிரி புகைப்படம் வெளியாகி, வைரலாகப் பகிரப்பட்டிருக்கிறது.
ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ளவர்களை மீட்க சென்ற உக்ரைன் விமானம் கடத்தப்பட்டுள்ளது. கடத்தப்பட்ட விமானம் காபூலில் இருந்து ஈரான் நாட்டிற்கு கொண்டு செல்லப்பட்டதாக உக்ரைன் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.
கே.டி.ராகவன் குறித்து சர்ச்சை வீடியோ வெளியான நிலையில், பாஜக நிர்வாகிகள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க, விசாரணை குழு அமைந்திருப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்திருக்கிறார்.
சென்னை அருகே உள்ள வங்கக்கடல் பகுதியில் 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் இருந்து 296 கி.மீ. தொலைவில், 10 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.
வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு அடிப்படையில் நியமனங்களை மேற்கொள்ள ஏன் தடை விதிக்க கூடாது? என கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசு நாளை விளக்கமளிக்க உத்தரவிட்டுள்ளது. வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு சட்டத்தை எதிர்த்த வழக்குகளில் இடைக்கால உத்தரவு பிறப்பிப்பது தொடர்பாக நாளை முடிவெடுக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சமூக வலைதளத்தில் சர்ச்சை வீடியோ வெளியான நிலையில் தமிழக பாஜக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து கே.டி.ராகவன் ராஜினாமா செய்துள்ளார்.
என்னையும் என்கட்சியையும் களங்கபடுத்த இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.இன்று மரியாதைக்குரிய மாநிலத்தலைவர் திரு.@annamalai_k அவர்களை சந்தித்து ஆலோசனை செய்தேன்.நான் என்னுடைய கட்சி பொறுப்பை ராஜினாமா செய்கிறேன்.குற்றச்சாட்டுகளை மறுக்கிறேன்.சட்ட படி சந்திப்பேன்.தர்மம் வெல்லும்!2/2
— K.T.Raghavan (@KTRaghavanBJP) August 24, 2021
புகழேந்தி தொடர்ந்த அவதூறு வழக்கில் ஆஜராக விலக்கு அளிக்க கோரி ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செப்டம்பர் 14-ம் தேதி இருவரும் ஆஜராகவும் நீதிபதி அலீசியா உத்தரவிட்டுள்ளார்.
சென்னையில் பாசனத்திற்கு பயன்படாத பொதுப்பணித்துறை அனுமதியோடு ஆழப்படுத்தி, மழைக் காலங்களில் நீரை தேக்கி வைத்து குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.
50 ஆண்டு காலம் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் கலைஞர் கருணாநிதி. அவருக்கு நினைவிடம் என்ற வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பை வெளியிட்ட முதல்வருக்கு நன்றி. இதனை எதிர்க்கட்சியினர் முழுமனதோடு ஒரு மனதாக வரவேற்கிறோம் என்று எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பி.எஸ். பேச்சு.
மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கு மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிடம் அருகே 2.21 ஏக்கர் பரப்பளவில் 39 கோடி ரூபாய் செலவில் நினைவிடம் கட்டப்பட்டும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். சட்டப்பேரவை விதி எண் 110ன் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 216 உயர்ந்து ரூ. 35,880 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கிராம் ஒன்று ரூ. 4485க்கு விற்பனையாகிறது.
வன்கொடுமை வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீரா மிதுனை மற்றொரு வழக்கில் காவலில் எடுத்து விசாரணை செய்ய வேண்டும் என்று கே.பி. நகர் காவல்துறையினர் எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
தேசிய சொத்துகள் குத்தகை திட்டத்தின் கீழ் சென்னை உட்பட நாட்டில் உள்ள 6 விமான நிலையங்கள் தனியாருக்கு விட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 491 கி.மீ தேசிய நெடுஞ்சாலை, தூத்துக்குடி துறைமுகம், நீலகிரி மலை ரயில் சேவை போன்றவையும் தனியார் குத்தகைக்கு விட திட்டம்
கொரோனா தொற்று இரண்டாம் அலை காரணமாக பல்வேறு கல்வி நிலையங்கள் மூடப்பட்ட நிலையில் தமிழகத்தில் மீண்டும் செப்டம்பர் 1ம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. தற்போது கல்லூரிகளை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட்டுள்ளது கல்லூரி கல்வி இயக்ககம்.
ஆப்கானிஸ்தான் விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டம் வருகின்ற 26ம் தேதி அன்று நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகின்ற காரணத்தால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இன்று காலை அணையின் நீர்மட்டம் 66.08 அடியாக உயர்ந்துள்ளது. நீர்வரத்து விநாடிக்கு 11,620 கன அடியாக உள்ளது. பாசனத்திற்காக 8 ஆயிரம் கன அடி நீர் அணையில் இருந்து வெளியேற்றப்படுகிறது.
தமிழகத்தின் மிகப்பெரிய ஏரியான, கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள வீராணம் ஏரி தன்னுடைய முழுக் கொள்ளளவான 47.50 அடியை எட்டியது. சென்னை குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 30 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உள்ள விளைநிலங்களின் பாசனத்திற்காக விரைவில் நீர் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆப்கானிஸ்தானில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளின் உரிமைகளை பாதுகாக்கவும், எதிர்காலத்திற்கு வழி வகை செய்து தரக் கோரியும் டெல்லியில் வாழும் ஆப்கானியர்கள் ஐக்கிய நாடுகளின் அகதிகள் ஆணையர் அலுவலகம் முன்பு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.