Local Body Election 2019 : தமிழகத்தில் 2 கட்டமாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன் படி முதற்கட்ட தேர்தல் நேற்று நடந்து முடிந்தது. இரண்டாவது கட்டம் வரும் திங்கட்கிழமை நடக்கிறது. இதனையடுத்து இதன் வாக்குகள் வரும் ஜனவரி 2-ம் தேதி எண்ணப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே நகர்புற தேர்தல் நடைபெறும் வரை, ஊரக உள்ளாட்சித் தேர்தலின் வாக்கு எண்ணிக்கையை தள்ளி வைக்க வேண்டுமென சட்டப் பஞ்சாயத்து இயக்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
இந்நிலையில், நேற்று நடந்த வாக்குப்பதிவில், ஆங்காங்கே சில பிரச்னைகளும் நடக்காமல் இல்லை. திருவள்ளூரை அடுத்த பாப்பரம்பாக்கம் பகுதியில் வாக்குப்பெட்டி தீ வைத்து எரிக்கப்பட்டதால் 2 வாக்குச்சாவடி மையங்களில் மறுவாக்குப்பதிவு நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்திருக்கிறார். புதுக்கோட்டை அருகே காவலர்களை தள்ளிவிட்டு பின்பக்கக் கதவை உடைத்து மர்ம நபர்கள் வாக்குப்பெட்டியை திருடிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் தோட்டத்தில் வைக்கப்பட்டிருந்த வாக்குப்பெட்டி உடைக்கப்படுவதற்குள், அதனை பத்திரமாக மீட்ட போலீஸார் 2 பேரை கைது செய்தனர்.
Advertisment
Advertisements
நாகை மாவட்டம், வீரன்குடிகாடு வாக்குச்சாவடியில் கள்ள ஓட்டு போட முயன்ற சத்யசீலன் என்பவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். இதற்கிடையே சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் ஒன்றியத்திற்குட்பட்ட வாக்குச்சாவடியில் ஒட்டப்பட்டிருந்த மாதிரி படிவத்தில் திமுகவின் சின்னம் இல்லாததால், தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் அக்கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
காளையார்கோவில் ஒன்றியத்தில், திமுகவின் கூட்டணி கட்சியான இந்திய ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஸ்டெல்லா என்பவர் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார். இந்நிலையில் வாக்குசாவடி மையத்தில் ஒட்டப்பட்டிருந்தது வேட்பாளர்களின் மாதிரி படிவத்தில் வேட்பாளர் ஸ்டெல்லாவின் பெயருக்கு நேராக உதயசூரியன் சின்னம் விடுபட்டிருந்தது. இதனை கண்டு கோபமடைந்த வேட்பாளர்களின் முகவர்கள் தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு நிலவியது.