Tamilnadu Localbody Election Update : தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட விழுப்புரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, தென்காசி, வேலூர், காஞ்சிபுரம், திருநெல்வேலி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு கடந்த 6 மற்றும் 9-ந் தேதி என இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் திமுக அதன் கூட்டணி கட்சிகளுடன் களமிறங்கிய நிலையில் சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த பாமக தற்போ உள்ளாட்சி தேர்தலை தனித்து சந்தித்தது.
வழக்கம் போல அதிமுக பாஜக கூட்டணி அமைத்த நிலையில், நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம், அமமுக, ஆகிய கட்சிகளுடன் விஜயின் மக்கள் இயக்கமும் உள்ளாட்சி தேர்தலை சந்தித்தது. 2 கட்டங்களாக நடைபெற்ற இந்த தேர்தலின் வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. இதில் வழக்கம்போல ஆளும்கட்சியாக திமுக முன்னணியில் இருந்து வரும் நிலையில், எதிர்கட்சியான அதிமுக 2-வது இடத்தில் இருந்து வருகிறது.
இந்நிலையில், இந்த தேர்தலில் பல சுவாரஸ்யமான நிகழ்வுகள் அரங்கேறியுள்ளது.
ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே சிறுமருதூர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவருக்கு 3பேர் போட்டியிட்டுள்ளனர். இதில் கடல்மணி என்ற கதிரவன் என்பவர் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். மொத்தம் 1150 வாக்குகள் கொண்ட அந்த கிராமத்தில் 989 வாக்குகள் பதிவாகியுள்ளது. இதில் கதிரவன் 424 வாக்குகளும், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரின் மனைவி கன்னியம்மாள் 423 வாக்குள் பெற்றுள்ளனர்.
ஒரு வாக்கு வித்தியாசத்தில் மக்கள் இயக்கம் வேட்பாளர் வெற்றி
தமிழகத்தில் முதல்முறையாக உள்ளாட்சி தேர்தலை சந்தித்துள்ள நடிகர் விஜயின் மக்கள் இயக்கம் கட்சியினர் பல இடங்களில் போட்டியிட்ட நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் கருப்பட்டி தட்டை காந்தி நகர் வார்டு உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்ட மக்கள் இயக்கம் வேட்பாளர் பிரபு ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இதில் பிரபு 65 வாக்குகளும் அவரை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர் 64 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
2 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி
கடலூர் மாவட்டம் மேல்புவனகிரி அருகே தில்லைநாயகபுரம் கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட மகாவதி என்ற பெண் ஒருவர் இரண்டு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அந்த கிராமத்தில் மொத்தம் பதிவான 723 ஓட்டுகளில் மகாவதி 268 வாக்குகளும், அவரை எதிர்த்து போட்டியிட்ட கலையரசி என்பவர் 266 வாக்குகளும் பெற்றனர்.
கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம் நடுகட்டி ஊராட்சிக்கு உட்பட்ட 6-வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட நதியா என்ற 22 வயதான பட்டதாரி பெண் 2 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். 287 வாக்குள் பதிவாக நிலையில், நதியா 112 வாக்குகளும், அவரை எதிர்த்து போட்டியிட்ட திலகவதி என்ற பெண் 110 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றியத்தில் உள்ள மோர்தானா ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பரந்தாமன் என்பவர் 2 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். 3 பேர் போட்டியிட்ட இந்த தேர்தலில் பரந்தாமன் 464 வாக்குகளும், சீதாராமன் என்பவர் 462 வாக்குகளும், பங்காரு என்பவர் 324 வாக்குகளும் பெற்றனர்.
ஒரு வாக்கு பெற்ற பாஜக வேட்பாளர்
கோவை மாவட்டத்தில் பெரியநாயக்கம்பாளையத்தை சேர்ந்த குருடம்பாளையம் ஊராட்சியில் நடைபெற்ற 9-வது வார்டுக்கான இடைத்தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட கார்த்திக் என்பவர் ஒரு வாக்கு மட்டுமே பெற்றுள்ளார். பாஜகவின் மாவட்ட இளைஞரணி துணைத்தலைவராக உள்ள கார்த்திக் வீட்டில் 6 பேருக்கு வாக்குரிமை இருந்தும் அவர் ஒரு ஓட்டு மட்டுமே பெற்றுள்ளது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
4 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
தேனி மாவட்டம் போடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நாகலாபுரம் கிராமத்தில் 4வது வார்டு மூன்று நபர்கள் போட்டியிட்ட நிலையில், பெருமாள் என்பவர் 4 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். 254 வாக்குகள் பதிவான நிலையில். பெருமாள் 103 வாக்குகளும், ராஜாராம் என்பவர் 99 வாக்குகளும் பொன்மனி என்பவர் 52 வாக்குகளும், பெற்றனர்.
8 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
திருவாரூர் மாவட்டம் பள்ளிவாரமங்கலம் பகுதியில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்காக போட்டியிட்ட சுபாஸ்ரீ என்பவர் 8 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். திமுக ஆதரவு பெற்ற இவர் முதலில் 10 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அதிமுக சார்பில் போட்டியிட்ட சாவித்ரி என்பவர் மறுவாக்கு எண்ணிக்க கேட்டதால் மீண்டும் வாக்கு எண்ணப்பட்டது. இதில் சுபாஸ்ரீ 8 வாக்குக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. பாதிவான 690 வாக்குகளில் சுபாஸ்ரீ 349 வாக்குகளும், சாவித்ரி 341 வாக்குகளும் பெற்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil