மாநகராட்சி மேயர் பதவிகளுக்கு நேரடியாக தேர்தல் நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கான பணிகளை மாநிலத் தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளுக்கு ஒரு லட்சத்துக்கும் அதிகமான பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்நிலையில், அரசியல் கட்சிகள் சார்பில் போட்டியிடும் பதவிகள் குறித்த அறிவிப்பாணையை மாநிலத் தேர்தல் ஆணையம் தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி மாநகராட்சி மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சித் தலைவர்கள், மாநகராட்சி மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள், பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் அரசியல் கட்சி சார்பில் போட்டியிடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநகராட்சி மேயர் பதவியிடங்களுக்கு நேரடித் தேர்தல் நடைபெறும் என்பது உறுதியாகியுள்ளது.
கடந்த 2011ம் ஆண்டு மாநகராட்சி மேயர் பதவிகளுக்கு நேரடித் தேர்தல் நடந்தது. 2016-ம் ஆண்டு மேயர் பதவி, கவுன்சிலர்கள் மூலமாகவே தேர்வு செய்யப்படும் என்ற சட்ட திருத்த மசோதாவை அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு தாக்கல் செய்து நிறைவேற்றியது.
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் முதல்வராக பொறுப்பேற்ற எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு, கடந்த 2018-ம் ஆண்டு, ஜெயலலிதா கொண்டு வந்த சட்டத் திருத்தத்தில் மீண்டும் மாற்றம் செய்தது. தமிழகத்தில் மாநகராட்சி மேயர்கள், நகராட்சி, பேரூராட்சித் தலைவர்களை மக்களே நேரடியாக வாக்களித்து தேர்வு செய்யும் முறை மீண்டும் கொண்டு வருவதற்கான சட்டத்திருத்த மசோதாவை, முதல்வர் பழனிசாமி தலைமையிலான அரசு, 2018-ம் ஆண்டு ஜனவரியில் பேரவையில் தாக்கல் செய்து நிறைவேற்றியது.
இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகள் தீவிரமடைந்து வரும் நிலையில், மேயர் பதவிக்கு நேரடித் தேர்தல் நடக்குமா அல்லது மறைமுகத் தேர்தல் வருமா என்பதில் குழப்பம் நீடித்து வந்தது. இந்நிலையில் மேயர் பதவியிடங்களுக்கு நேரடித் தேர்தல் நடைபெறும் என்பதை மாநிலத் தேர்தல் ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளது.