Tamil Nadu Local Body Election News : தமிழகத்திலுள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கு 2 கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. அதன்படி முதல் கட்ட தேர்தல் நேற்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடந்தது. பெரிய பிரச்னைகள் ஏதுமின்றி அமைதியாக நடந்த இந்த வாக்குப் பதிவில், 76.19% வாக்குகள் பதிவாகியுள்ளன.
இதில் 156 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 260 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும், 2 ஆயிரத்து 546 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும், 4 ஆயிரத்து 700 கிராம ஊராட்சி தலைவர் பதவியிடங்களுக்கும், 37 ஆயிரத்து 830 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும் போட்டியிடுபவர்களை தேர்வு செய்வதற்கான வாக்குப்பதிவு நடந்தது.
இதற்காக 24 ஆயிரத்து 680 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. ஊராட்சி தேர்தலுக்காக 702 தேர்தல் நடத்தும் அலுவலர்களும், 13 ஆயிரத்து 62 உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர்களும் தேர்தல் பணிகளில் ஈடுபட்டனர். பாதுகாப்பு பணிக்காக 63 ஆயிரம் போலீசார் பணி அமர்த்தப்பட்டனர்.
Live Blog
Tamil Nadu Local Body Election News
இன்று தமிழகத்தில் நடைபெறும் உள்ளாட்சித் தேர்தல்கள் குறித்த அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளுங்கள்.
ஜனவரி 16ஆம் தேதி பொங்கல் விடுமுறை தினத்தன்று, பிரதமர் மோடி உரையை கேட்க 9-ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவு. அனைத்து மாணவர்களும் தவறாமல் பள்ளிக்கு வருவதை மாவட்டத்தில் உள்ள அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் – பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் உத்தரவு
“முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் உற்ற நண்பரும், உச்சநீதிமன்ற முன்னாள் நீதியரசருமான டாக்டர் திரு எஸ்.மோகன் அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக மறைவெய்தினார் என்ற துயரச் செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். அவரது மறைவிற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” – மு.க.ஸ்டாலின்
ஜனவரி 16ஆம் தேதி பொங்கல் விடுமுறை தினத்தன்று, பிரதமர் மோடி உரையை கேட்க 9-ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவு. அனைத்து மாணவர்களும் தவறாமல் பள்ளிக்கு வருவதை மாவட்டத்தில் உள்ள அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் – பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் உத்தரவு
புதுக்கோட்டை மாவட்டத்தில் முதற்கட்ட வாக்குப்பதிவில் 80.69% வாக்குகள் பதிவாகியுள்ளது – மாவட்ட ஆட்சியர்.
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பணியாற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள், ஓய்வுபெற்ற காவலர்களுக்கு ஊதியம் தர ரூ.1.38 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு
புதுக்கோட்டை மாவட்டம் பெரிய முள்ளிப்பட்டியில் காவலர்களை தள்ளிவிட்டு வாக்குப் பெட்டியை மர்ம நபர்கள் திருடிச் சென்றதாக தகவல் வெளியாகியிருக்கிறது. வாக்குச்சாவடி பின்பக்க கதவை உடைத்து இந்த சம்பவத்தை மர்ம நபர்கள் அரங்கேற்றியிருக்கிறார்கள்.
தமிழகத்தில் இன்று நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் மாலை 3 மணி நிலவரப்படி 57.5% வாக்குகள் பதிவாகியிருக்கிறது. இந்தத் தகவலை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டது.
திருவள்ளூரில் வாக்குச்சாவடி குளறுபடி காரணமாக வரிசையில் நின்ற மக்களுக்கு மாலை 7 மணி வரை வாக்களிக்க அனுமதிக்கப்பட்டிருக்கிறது. இதுபோல மேலும் சில இடங்களில் வாக்குப் பதிவு தாமதம் ஆனதால், இறுதி நிலவரம் வெளியாக இன்னும் அவகாசம் தேவை.
27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சிப் பதவிகளுக்கு முதல்கட்டத் தேர்தல் இன்று நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப் பதிவு மாலை 5 மணிக்கு நிறைவு பெற்றது. 5 மணி வரை வரிசையில் நின்றவர்களுக்கு டோக்கன் கொடுத்து வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டது. வாக்குப் பதிவு அதிகாரபூர்வ சதவிகிதம் சிறிது நேரத்தில் தெரியக் கூடும்.
வாக்காளர் பட்டியலில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக கும்பகோணம் பகுதியின் செம்மங்குடி ஊராட்சியில் உள்ள 8 மற்றும் 9-வது வார்டுகளின் வாக்குச்சாவடியில் தேர்தல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
முதற்கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மதியம் 1 மணி நிலவரப்படி 42.47% வாக்குகள் பதிவு
– மாநில தேர்தல் ஆணையம்
உள்ளாட்சித் தேர்தலில் வாக்குப் பெட்டிகளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என திமுக, வழக்கு தொடர்ந்ததை ட்விட்டரிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது
ஊரக உள்ளாட்சி தேர்தலில் 1 மணி நிலவரப்படி நாகை – 41.63%, தர்மபுரி – 35.91%, கடலூர் – 40.36%, திருவாரூர் – 48.71%, மதுரை – 46%, அரியலூர் – 34.21%, புதுக்கோட்டை – 48%, தூத்துக்குடி – 42.39%, நாமக்கல் – 50%, திண்டுக்கல் – 43.24%, ராமநாதபுரம் – 43.01%, கோவை – 38.29%, கரூர் – 50.02%, திருப்பூர் – 41.36%, திருச்சி – 49.20%, திருவண்ணாமலை – 36.90%, பெரம்பலூர் – 44.43% வாக்குகள் பதிவாகியுள்ளன.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்கும் வரை, ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை அறிவிக்கக் கூடாது என சட்டப் பஞ்சாயத்து இயக்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் அருகேயுள்ள பாம்பரம்பாக்கம் வாக்குச்சாவடி மையத்தின் வாக்குப்பெட்டி தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது
வாக்குச் சாவடிகளை வேறு இடத்திற்கு மாற்றியதால், அதிருப்தியடைந்த பொதுமக்கள் தேர்தலை புறக்கணித்தனர்.
திருவாரூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குபதிவு 838 மையங்களில் நடைபெற்று வருகிறது. காலையில் இருந்தே பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்குகளை பதிவுசெய்து வருகின்றனர்.இந்த நிலையில், வாக்களிக்க விடுமுறை அளிக்கவில்லை என்று மத்திய அரசு ஊழியர்கள் கூறியுள்ளனர்.
சேலம், எடப்பாடி சிலுவம்பாளையம் வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று வாக்களித்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இதற்காக சென்னையிலிருந்து சேலத்திற்கு விமானம் மூலம் சென்ற அவர், தனது ஜனநாயக கடமையை ஆற்றினார்.
முதற்கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் 11 மணி நிலவரப்படி 24.08 % வாக்குகள் பதிவாகியிருப்பதாக, மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
வாக்குபெட்டிகள் வைக்கும் இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும் என்ற திமுக-வின் வழக்கை, டிசம்பர் 30-ஆம் தேதி விசாரிக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்
உள்ளாட்சி தேர்தலில் பதிவாகும் வாக்குப் பெட்டிகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டுமென திமுக தரப்பில் ஆர்.எஸ்.பாரதி உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு போட்டுள்ளார்
திருவண்ணாமலை வந்தவாசி அருகே வாக்காளர்களுக்குக் கொடுப்பதற்காக எடுத்து செல்லப்பட்ட காமாட்சி விளக்குகள் மற்றும் சேலைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
நீலகிரி தொகுதியின் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் ஆ.ராசா, தனது சொந்த ஊரான பெரம்பலூரில் உள்ளாட்சித் தேர்தல் வாக்கினைபதிவிட்டார்.
திருவள்ளூர், ஈக்காடு பகுதியில் கள்ள ஓட்டு புகார் காரணமாக தேர்தல் நிறுத்தப்பட்டுள்ளது. வாக்கு சீட்டுகளை தூக்கி எறிந்து, போராட்டம் நடத்தப்பட்டதால் பரபரப்பான சூழல் நிலவியுள்ளது. வாக்குச்சாவடி முன்பு ஏராளமானோர் திரண்டதால் பரபரப்பான சூழ்நிலை உருவானது
ஊரக உள்ளாட்சி தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி விருதுநகர் – 8.52%, திண்டுக்கல் – 5.6%, திருப்பூர் – 8.58%, திருச்சி – 16%, தருமபுரி – 10%, கரூர் – 14.48%, நாகை – 9.21%, மதுரை – 8%, திருவாரூர் – 12. 84%, தூத்துக்குடி -9.80% வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. ஒட்டு மொத்தமாக 10.4% வாக்குகள் பதிவாகியிருப்பதாக தேர்தல் ஆணையர் அறிவித்தார்
உள்ளாட்சித் தேர்தலில், ஆளுங்கட்சிக்கு மாற்றாக, திமுக – காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவுக்கோரி, காங்கிரஸின் மூத்தத் தலைவர் ப.சிதம்பரம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சேலம் மாவட்டம் வீரபாண்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட பூலாவரி கிராமத்தில் வாக்குச்சாவடியில் வாக்களிக்க வந்த வாக்காளர்களின் வாக்குகளை அ.தி.மு.க.வினரே செலுத்தியதால் அதிர்ச்சி அடைந்தனர். அதிகாரிகள் முன்பு அதிமுக-வினர் இப்படி செய்த போதும், அதை அவர்கள் கண்டுக்கொள்ளாமல் இருந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இன்று தமிழகம் முழுவதும் முதல் கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. இதனால் மின்வாரிய அலுவலகங்களுக்கு பொது விடுமுறை அளித்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு வரும் திங்கட்கிழமையும், இதன் வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2-ம் தேதியும் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளன.
அரியலூர் மாவட்ட கலெக்டர் டி.ரத்னா உள்ளாட்சித் தேர்தலில் தனது வாக்கினை செலுத்திய போது…
கடலூர், விலங்கல்பட்டு ஊராட்சி 4-ஆவது வார்டில் வேட்பாளர்களின் சின்னம் வாக்கு சீட்டில் இல்லாததால் தேர்தல் தற்காலிக நிறுத்தம்.
பிச்சிவிளை பஞ்சாயத்தில் உள்ள 6 வார்டுகளை தனித்தொகுதியாக அறிவித்ததால் வாக்காளர்கள் வாக்களிக்க மறுப்பு
கீழக்கரை அருகே புது மாயாகுளம் பகுதியில் தனி தொகுதி என அறிவிக்கப்பட்டதால் வாக்களிக்க மறுத்து வாக்காளர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதம்.
ஈரோட்டில் வரிசையில் நின்று தனது உள்ளாட்சித் தேர்தல் வாக்கினை அளித்தார் அமைச்சர் செங்கோட்டையன்
ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தலா ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி வீதம் 27 தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அசம்பாவிதங்களை தவிர்க்க தேர்தல் பாதுகாப்பு பணியில் சுமார் 60 ஆயிரம் காவலர்களும் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
கிராம ஊராட்சி உறுப்பினருக்கு வெள்ளை வாக்கு சீட்டு, கிராம ஊராட்சி தலைவருக்கு இளஞ்சிவப்பு, ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினருக்கு பச்சை, மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினருக்கு மஞ்சள் வாக்குச் சீட்டு என அவைகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
தமிழகத்தில் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது..!
வாக்குச்சாவடியிலிருந்து நூறு மீட்டர் தொலைவிற்குள் தேர்தல் ஆதரவு கோருவது, தேர்தல் சட்டத்தின் கீழ் குற்றமாகும். வாக்காளர் தவிர, எந்தவொரு நபரும் தேர்தல் நடத்தும் அலுவலரிடமிருந்து உரிய அனுமதி சீட்டு பெறாமல் வாக்குச்சாவடிக்குள் நுழைதல் கூடாது என்றும் தேர்தல் ஆணையம் எச்சரித்து உள்ளது.
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சிகளில் முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது. ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் இன்று உள்ளாட்சித் தேர்தல் நடக்கிறது. 156 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 260 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு இந்தத் தேர்தல் நடக்கிறது.