Tamilnad Localbody Election Update : தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கு வரும் அக்டோபர் 6 மற்றும் 9-ந் தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், இதுவரை மொத்தம் 97 ஆயிரத்திற்கு அதிகமானோர் மனுதாக்கல் செய்துள்ளதாக தேர்தல் ஆணையம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்து.
தமிழகத்தில் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் புதிதாக பிரிக்கப்பட்ட விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிபேட்டை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதி வரும் அக்டோபர் மாத இறுதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க உத்தவிட்டார்.
அதன்படி வரும் அக்டோபர் 6 மற்றும் 9-ந் தேதி களில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று அறிவித்த தேர்தல் ஆணையம் இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செப்டம்பர் 15-ந் தேதி தொடங்கி 21-ந் தேதி நிறைவடையும் என்று அறிவித்தது. இதில் வேட்புமனு தாக்கல் செய்ய கடைசிநாளான நேற்று ஒரே நாளில் மட்டும் தமிழகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கானோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.அதன்படி இந்த தேர்தலுக்கு மொத்தம் 97,831 பேர் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதில் கிராம ஊராட்சித் தலைவர் பதவிக்கு 15,967 பேரும், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 72,071 பேரும், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 1,122 பேர் பேரும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 8,671 பேரும் மனுதாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் (சனிக்கிழமை) வேட்புமனு திரும்பப்பெற கடைசிநாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil