ஊரக உள்ளாட்சி தேர்தலில் திருச்செந்தூர் ஊராட்சிக்குட்பட்ட பிச்சிவிளை ஊராட்சியில் உராட்சி மன்ற தலைவருக்கு போட்டியிட்ட பட்டியலினப் பெண் வெறும் 10 வாக்குகள் பெற்று ஊராட்சி மன்ற தலைவராக வெற்றிபெற்றுள்ளார்.
ஊரக உள்ளாட்சி தேர்தலில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டம், கருங்குளம், சாத்தான்குளம், திருச்செந்தூர் உள்ளிட்ட7 ஊராட்சி ஒன்றியங்களில் வாக்குப்பதிவு நடைபெற்றது.
இதில் திருச்செந்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பிச்சிவிளை ஊராட்சியின் தலைவர் பதவி இந்த உள்ளாட்சி தேர்தலில் சுழற்சி முறையில் பட்டியலினப் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கு அந்த கிராமத்தினர் கருப்புக்கொடி காட்டி கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதற்கு காரணம் என்ன என்று விசாரித்தபோது, பிச்சிவிளையில் மொத்தம் 785 வாக்குகள் உள்ளன. இதில் 6 வாக்குகள் மட்டுமே பட்டியல் இனத்தவர் வாக்குகள். அதனால், பட்டியல் இனத்தவருக்கு ஊராட்சி தலைவர் பதவியை ஒதுக்கீடு செய்ததற்கு பெரும்பான்மையாக உள்ள சமூகத்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.தேர்தலை புறக்கணிக்கும் வகையில், பிச்சிவிளையில் உள்ள 6 வார்டுக்கும் ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு ஒருவர் கூட வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. அதோடு, தேர்தல் அன்று தலைவர் பதவியைப் பட்டியலினத்தவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டதைக் கண்டித்து பிச்சிவிளை ஊராட்சியில் கிராம மக்கள், ஊர் முழுவதும் கறுப்புக் கொடிகட்டி தேர்தலைப் புறக்கணிக்கவும் செய்தனர்.
பட்டியல் இனத்தவர்கள் தரப்பில் இருந்து பிச்சிவிளை ஊராட்சி தலைவர் பதவிக்கு ராஜேஸ்வரி, சுந்தராச்சி ஆகிய இருவர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
தேர்தலில் பிச்சிவிளையில் உள்ள மொத்தம் 785 வாக்குகளில் 3 பெண்கள் உட்பட 13 பேர் மட்டுமே வாக்களித்தனர். வாக்கு எண்ணிக்கையில் சுந்தராச்சி 2 வாக்குகளும் ராஜேஸ்வரி 10 வாக்குகளும் பெற்றனர். இதில் 6 வாக்குகள் பட்டியலினத்தவர்கள் வாக்களித்தனர். வாக்கு எண்ணிக்கையின்போது 1 வாக்கு செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. இதனால், 10 வாக்குகள் மட்டுமே பெற்ற ராஜேஸ்வரி ஊராட்சி தலைவராக வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
ஊராட்சி தலைவர் பதவியை பட்டியல் இனத்தவருக்கு ஒதுக்கீடு செய்ததால் பெரும்பாண்மையோர் தேர்தலை புறக்கணித்ததால் 10 வாக்குகள் மட்டுமே பெற்று ராஜேஸ்வரி வெற்றி பெற்றது தமிழக அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும்,
இந்த உள்ளாட்சி பிச்சிவிளையில், தலைவர் மட்டுமே தேர்வான நிலையில், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் விரைவில் நடத்தப்படலாம் என்று தேர்தல் அலுவலர்கள் வட்டாரம் தெரிவிக்கின்றனர்.