Tamilnadu Local Body Election Update : தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பாமக மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் கடத்தப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளர்.
தமிழகத்தில் கடந்த ஆண்டு இறுதியில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், வரும் பிப்ரவரி 19-ந் தேதி நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்காக வாக்குப்பதிவு நடைபெறும் என்று கடந்த மாத இறுதியில் அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஜனவரி 29-ந் தேதி முதல் நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில், தமிழகம் முழுவதும் அரசியல் கட்சியினர் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் தங்களது மனுவை தாக்கல் செய்தனர்.
தொடர்ந்து பிப்ரவரி 4-ந் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்த நிலையில், 5-ந் தேதி வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. இந்நிலையில், நகர்புற உள்ளாட்சி தேர்தலில் புதுக்கோட்டை மாவட்டத்தில், இலுப்பூர் பேரூராட்சியின் 3-வது வார்டில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் செல்வம் என்பவரை சக வேட்பாளர் லட்சுமணன் கடத்திவிட்டதாக புகார் எழுந்துள்ளது. கடந்த 3 தினங்களாக லட்சுமணன் செல்வத்திடம் போட்டியில் இருந்து விலகும்படி வற்புறுத்தியதாகவும், அதற்கு செல்வம் மறுத்துவிட்டதால் அவரை கடத்திவிட்டதாகவும் செல்வத்தின் குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர்.
அதேபோல், வேலூர் மாவட்டத்தில் பாமக வேட்பாளரை திமுக வேட்பாளர் கடத்திவிட்டதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், வேலூர் மாநகராட்சி 24 வட்டத்தில், தோல்வி பயம் காரணமாக, பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் ஆர்.டி. பரசுராமனை திமுக மாவட்ட செயலாளர்கள் கடத்திச் சென்று போட்டியிலிருந்து விலக வேண்டும்; இல்லையேல் தொழில் செய்ய முடியாது என்று மிரட்டுகிறார்கள். இது கண்டிக்கத்தக்கது!
மக்கள் செல்வாக்குள்ளவர்கள் வெற்றி பெறுவது தான் ஜனநாயகம். செல்வாக்கு இல்லாதவர்கள் அதை வளர்த்துக் கொள்ள வேண்டும். மாறாக மிரட்டக் கூடாது. பாமக வேட்பாளரை மிரட்டிய திமுகவினர் மீது மாநில தேர்தல் ஆணையம், காவல்துறை, திமுக தலைமை ஆகியவை நடவடிக்கை எடுக்க வேண்டும்! என்று பதிவிட்டுள்ளார்.
தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில், வேட்பாளர்கள் கடத்தப்பட்டதாக எழுந்துள்ள புகார் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த பாமக தற்போது கூட்டணியில் இருந்து விலகி தனித்து போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “