சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் டிசம்பர் 24 அன்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை வரவேற்க அமைக்கப்பட்ட தி.மு.க கொடிக்கம்பத்தை அகற்ற முயன்ற 56 வயது நபர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
நிகழ்ச்சி முடிந்ததும், நள்ளிரவில், ஆளுங்கட்சியினர் கொடிக்கம்பத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டபோது, ராசிபுரத்தைச் சேர்ந்த வீரமலை என்பவர், மின் கம்பியில் கொடிகம்பம் சிக்கியதால் மின்சார தாக்குதலுக்கு ஆளானார். மின்சாரம் தாக்கி தரையில் சரிந்தவரை, அங்கிருந்தவர்கள் அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், ஆனால் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
இதையும் படியுங்கள்: மகாகவி பாரதி பேத்தி மரணம்.. ஆளுநர்கள் ரவி, தமிழிசை இரங்கல்
indianexpress.com உடன் பேசிய காரைக்குடி (வடக்கு) காவல் நிலைய அதிகாரி ஒருவர், குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 174ன் கீழ் இயற்கைக்கு மாறான மரணம் என்று வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.
“இறந்தவர் ஒரு ஒப்பந்ததாரர். இவருடன் அவரது மகன் உட்பட 10 பேர் பணியாற்றி வருகின்றனர். சாலையில் கொடிக்கம்பங்களை அமைக்க வேண்டாம் என பலமுறை கூறியும் அவர்கள் கேட்க மறுக்கின்றனர். இந்தக் கொடிக்கம்பங்கள் அனைத்தும் இரும்பினால் ஆனவை. இவர்கள், ஒரு கொடிக்கம்பத்திற்கு 50 ரூபாய் வசூலிக்கின்றனர், எனவே, அருகில் மின்கம்பி உள்ளதா அல்லது கொடிக்கம்பங்களால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுமா என்று பார்க்காமல், முடிந்தவரை அதிகமாக அமைக்க முயல்கின்றனர்,'' என்று அந்த காவல்துறை அதிகாரி கூறினார்.
மேலும், பிரேத பரிசோதனை அறிக்கைக்காக போலீசார் காத்திருக்கின்றனர் என்றும் அந்த அதிகாரி கூறினார்.
முன்னதாக, சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தான் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் குறித்து உதயநிதி, இளைஞர் நலன்,விளையாட்டு மேம்பாடு, சிறப்புத் திட்டச்செயலாக்கம் & ஊரகக் கடன் திட்டங்கள் ஆகிய துறைகளின் கீழ் சிவகங்கை மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் ஆக்கப்பணிகள் குறித்தும், அவற்றின் தற்போதைய நிலை குறித்தும் மக்கள் பிரதிநிதி- அலுவலர்களுடன் ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டம் நடத்தினோம், என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil