உரிமையைக் கேட்கிறோம்; உபகாரமல்ல; மத்திய அமைச்சருக்கு அன்பில் மகேஷ் பதில்

புதிய கல்விக் கொள்கையை தமிழக அரசு ஏற்றுக்கொண்டால்தான் கல்வி நிதி விடுவிக்கப்படும் – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்; அண்ணாவின் உரையை குறிப்பிட்டு அமைச்சர் அன்பில் மகேஷ் பதில்

author-image
WebDesk
New Update
dharmendra pradhan anbil mahesh

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்

உரிமையைக் கேட்கிறோம்; உபகாரமல்ல, இழந்ததைக் கேட்கிறோம்; இரவல் பொருளல்ல என அண்ணாவின் உரையை மேற்கோளிட்டு மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலளித்துள்ளார்.

Advertisment

மத்திய அரசின் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டமான சமக்ரா சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு ரூ. 2,152 கோடி கல்வி நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த நிதியை மத்திய அரசு விடுவிக்கவில்லை. இந்நிலையில், புதிய கல்விக்கொள்கையை ஏற்காவிட்டால் தமிழ்நாட்டிற்கு கல்வி நிதி கிடையாது என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அமைச்சர் பேசியதாவது, ”மும்மொழிக்கொள்கையை பிற மாநிலங்கள் ஏற்கும்போது தமிழ்நாடு மட்டும் ஏற்க மறுப்பது ஏன்? புதிய கல்விக் கொள்கையை தமிழக அரசு ஏற்றுக்கொண்டால்தான் கல்வி நிதி விடுவிக்கப்படும். புதிய கல்விக் கொள்கையை தமிழக அரசு ஏற்காத பட்சத்தில் 2 ஆயிரம் கோடி ரூபாயை விடுவிக்க சட்டத்தில் இடமில்லை. அரசியல் காரணங்களுக்காகவே தேசிய கல்விக்கொள்கையை தமிழக அரசு எதிர்க்கிறது” என்று கூறினார்.
இந்தநிலையில், அண்ணாவின் உரையை பதிவிட்டு, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலளித்துள்ளார்.

”வாழ்ந்தவர்கள் என்பதை நினைவூட்ட வரலாறு இருக்க, எதற்காக வடவரிடம் பிடரியைக் கொடுத்துவிட்டுப் பிறகு மெள்ள மெள்ள வலிக்கிறது, வலிக்கிறது என்று வேதனைக் குரலொலித்துக் கிடக்க வேண்டும்? 

Advertisment
Advertisements

மாதாவுக்கு மத்தாப்பு வண்ணச் சேலையா கேட்கிறோம்? 

அன்னையின் ஆடையை, அக்கிரமக்காரனே பிடித்திழுக்கத் துணிகிறாயே, ஆகுமா இந்த அக்கிரமம் என்றல்லவா கேட்கிறோம். 

உரிமையைக் கேட்கிறோம்; உபகாரமல்ல, இழந்ததைக் கேட்கிறோம்; இரவல் பொருளல்ல. 
எம்மிடமிருந்து பறித்துக்கொண்டதைக் கேட்கிறோம்; பிச்சையல்ல." 

இந்த மூலக்கருத்தை உணரா முன்னம் வடவரின் கொட்டம் அடக்கப்படுவது முடியாத காரியமாகும் -பேரறிஞர் அண்ணா.” இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Anbil Mahesh Dharmendra Pradhan

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: