தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர் ஒருவரிடம் ஊழல் தொடர்பாக பேசுவது போன்ற ஆடியோ வெளியானது. அதில், முதல்வர் மகன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மருமகன் சபரீசன் ஆகியோர் ஓராண்டில் ரூ.30,000 கோடி முறைகேடாக சம்பாதித்தாக பழனிவேல் தியாகராஜன் பேசுவது போன்ற ஆடியோ கிளிப் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பா.ஜ.க தலைவர் அண்ணாமலை இந்த ஆடியோ கிளிப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இதையடுத்து இந்த ஆடியோ கிளிப் எடிட் செய்யப்பட்ட ஃபேக் ஆடியோ என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்தார்.
தொடர்ந்து, அமைச்சர் மா. சுப்பிரமணியனும் பி.டி.ஆரின் கருத்தை ஆதரித்தார். இந்த ஆடியோ எடிட் செய்யப்பட்ட ஃபேக் ஆடியோ. தொழில்நுட்பம் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆதாரம் இல்லாமல் தி.மு.க 'பா.ஜ.க பைல்ஸ்' வெளியிடாது என்று கூறினார்.
தொடர்ந்து, "அந்த ஆடியோ கிளிப்பில் உள்ளவற்றில் பாதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியது அல்ல. இது போன்ற தேவையற்ற செயல்களில் தி.மு.க ஈடுபடாது. நாங்கள் எப்போதும் ஆதாரத்துடன் மட்டுமே செயல்படுவோம். உதாரணமாக, சி.ஏ.ஜி அறிக்கையின் அடிப்படையில் மட்டுமே அ.தி.மு.க மீது குற்றச்சாட்டுகளை வைக்கிறோம். ஆதாரம் இல்லாமல் யார் மீதும் தி.மு.க தேவையற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தாது" என்று அமைச்சர் மா. சுப்பிரமணியம் மேலும் கூறினார்.
முன்னதாக கடந்த ஏப்ரல் 14-ம் தேதி பா.ஜ.க தலைவர் அண்ணாமலை 'DMK பைல்ஸ் ' என்ற பெயரில் முதல்வர் ஸ்டாலின், அவரது குடும்பத்தினர் உள்பட அமைச்சர், எல்.எல்.ஏக்களின் சொத்து விவரங்களை வெளியிட்டார். இதில், 2011 தேர்தலில் பன்னாட்டு நிறுவனம், இரண்டு ஷெல் நிறுவனங்கள் மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.200 கோடி பெற்றதாக அண்ணாமலை குற்றஞ்சாட்டியிருந்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“