/indian-express-tamil/media/media_files/2025/01/30/g9Q3Zd4dKAwMO4CQvRbt.jpeg)
கோவை காந்திபுரம் பகுதியில் கட்டப்பட்டு வரும் பெரியார் நூலகம் மற்றும் அறிவுசார் மைய கட்டுமான பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பணிகள் எவ்வாறு நடைபெறுகிறது, பணியாளர்கள் எவ்வாறு பணியாற்றுகிறார்கள், அவர்களின் பாதுகாப்பு மற்றும் அங்குள்ள ஆய்வகத்தை ஆய்வு செய்த அமைச்சர் எ.வ வேலு பணிகளை குறிப்பிட்ட நேரத்தில் முடிக்குமாறு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எ.வ வேலு, “முதலமைச்சர் கோவையில் நூலகம் அமைக்கப்பட வேண்டும் என்று அறிவித்ததை தொடர்ந்து முதல்வரால் அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் துவங்கப்பட்டது. 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்த நூலகம் திறக்கப்படும் என்று முதல்வர் அறிவித்ததன்படி இலக்கு அமைத்து பொதுப்பணித்துறை சார்பில் பணிகள் நடைபெற்று வருகிறது.
300 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வரும் இந்த நூலகத்தில் கட்டிடம் மட்டும் 250 கோடி ரூபாய் மதிப்பில் அமைகிறது. 45 கோடி ரூபாய் மதிப்பில் புத்தகங்கள் 5 கோடி ரூபாய்க்கு விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட கணினிகள் என்பதன் அடிப்படையில் பணிகள் நடைபெற்று வருகிறது.
தரைத்தளம் அல்லாமல் ஏழு தளங்கள் கொண்ட கட்டிடமாக இந்த கட்டிடம் அமைக்கப்பட்டு வருகிறது. ஏறத்தாழ ஒரு லட்சம் புத்தகங்கள் வைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. நான்கு இடங்களில் லிப்ட் வசதி, முதல் இரண்டு தளங்களுக்கு எக்ஸ்கலேட்டர் வசதி, வாகனம் நிறுத்தும் வசதி என பல்வேறு வசதிகள் செய்யப்படுகிறது.
மண்டல தலைமை பொறியாளர் தொடர்ந்து பணிகளை கண்காணித்து வருகிறார். மாதம் மாதம் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். மேலும் மண் பரிசோதனை, நீர் பரிசோதனை, சிமெண்ட் கம்பிகளின் தரம், மணல் அல்லது எம் சாண்ட் ஆகியவை ஆய்வு செய்வதற்கு ஆய்வகமும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்தும் முறையாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அதற்கான ஆவணங்கள் தங்களிடம் இருக்கிறது.
பணியாளர்கள் பாதுகாப்பிற்கு திராவிட மாடல் ஆட்சியில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. பணியாளர்களுக்கு பயிற்சியாளர்கள் தமிழ் மற்றும் ஹிந்தி ஆகிய இரண்டு மொழிகளிலும் அறிவுரைகளை வழங்கப்படுகிறது.
மேட்டுப்பாளையம் சாலையில் சாய்பாபா காலனி பகுதியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலம் ஏற்கனவே காலதாமதமான ஒன்று. பெரும்பாலான மக்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க முதலில் மேம்பால பணிகள் நடைபெற்று வருகிறது. மேம்பாலத்தை விரிவாக்கம் செய்வது குறித்து டிசைன்கள் கேட்கப்பட்டுள்ளது. டிசைன்கள் வரும் பட்சத்தில் மேற்கொண்டு அதற்கான பணிகள் நடைபெறும்.
மெட்ரோ நிர்வாகத்திற்கும் பொதுப்பணித்துறைக்கும் சம்பந்தமில்லை. எனினும் அவர்களிடம் என்.ஓ.சி வாங்கியே எங்கள் பணிகளை செய்து வருகிறோம்.
அவிநாசி மேம்பாலம் விரிவாக்கம் குறித்து மதிப்பீடு தயார் செய்யப்பட்டு நிதி துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிதி ஆண்டில் பணிகள் துவங்கி விடும்.
தமிழ்நாட்டில் 66 ஆயிரம் கிலோமீட்டர் தூர சாலைகள் நெடுஞ்சாலை துறை கட்டுப்பாட்டில் இருக்கிறது. ஒரே ஆண்டில் அனைத்து பணிகளையும் செய்ய முடியாது. அவர்களின் பணிகளையும் எங்களின் பணிகளையும் கவனத்தில் கொண்டு பணிகள் மேற்கொண்டு வருகிறோம், என்று அமைச்சர் எ.வ வேலு கூறினார்.
காந்தி மண்டபத்தில் தலைவர்களுக்கு உரிய மரியாதை தருவதில்லை என்று ஆளுநர் கூறி இருப்பது குறித்தான கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், ஆளுநர் ஆளுநராக இருந்து பணியாற்றினால் மாநிலம், மக்கள் என அனைவருக்கும் சிறப்பு. ஆளுநர் அரசியல்வாதியாக மாறுகின்ற பொழுது உண்மையாக நாங்கள் எதை செய்தாலும் அதனை பாராட்ட மனம் இல்லாமல் ஏதாவது ஒரு குறை கூற வேண்டும் என்று ஆளுநர் கருதுகிறார் என்று கூறினார்.
இந்நிகழ்வில் கோவை மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர், மேயர், பொதுப்பணித்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.
பி.ரஹ்மான், கோவை
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.