கலைஞர் மகளிர் உரிமை தொகையை பிச்சை என்று கூறிய பா.ஜ.க நிர்வாகி குஷ்புவுக்கு சமூக நலன் மற்றும் பெண்கள் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் கீதா ஜீவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் போதை பொருட்களை ஒழிக்க கோரி பா.ஜ.க சார்பில் நேற்றைய தினம் செங்குன்றம் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நடிகையும், பா.ஜ.க நிர்வாகியுமான குஷ்பு கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பு, தமிழ்நாட்டில் பெண்களுக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் பிச்சை போட்டால் அவர்கள் திமுகவுக்கு ஓட்டுப் போடுவார்களா? என்று கூறினார்.
குஷ்புவின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், குஷ்புவின் கருத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் சமூக நலன் மற்றும் பெண்கள் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் கீதா ஜீவனும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் கீதா ஜீவன் வெளியிட்டுள்ள வீடியோவில், ”முதலமைச்சர் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தைப் பற்றி நடிகை குஷ்பு மிக இழிவாகப் பேசியிருக்கிறார். குறிப்பாக தமிழ்நாடு அரசு பெண்களுக்கு வழங்கும் தொகையைப் பிச்சை போடுவதாக இழிவுபடுத்தியுள்ளார். உரிமைத் தொகையைப் பெறுகின்ற அந்த ஒரு கோடியே 16 லட்சம் பெண்களையும் இழிவுபடுத்தி அந்த அம்மா பேசியிருப்பது மிகவும் வருத்தத்தைத் தருகிறது.
பெண்களின் வாழ்க்கை நிலையை அறியாதவர் அவர் என்பதை நாம் இதன் மூலம் அறிய முடிகிறது. அந்த அம்மாவுக்கு என்ன தெரியும்? தமிழ்நாட்டில் உள்ள ஏழை எளிய - நடுத்தர மக்கள் வாழ்க்கை முறை என்னவென்று தெரியுமா? அந்த ஆயிரம் ரூபாய் எவ்வளவு பயன் தருகிறது என்பதை நீங்கள் அறிவீர்களா? ஒன்றுமே தெரியாமல் வீட்டில் இருந்து வெளியே வந்து மைக்கைப் பார்த்துப் பேசுவதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
இந்த மாதிரி பேசக்கூடாது. நிலை அறியாமல் நீங்கள் பேசுகிறீர்கள் என்பதை நான் சொல்ல விரும்புகிறேன். ஏனென்றால், உங்களுக்குத் தெரியாது. மாதம் ஆயிரம் ரூபாய் என்பது உங்களுக்கு அப்படித்தான் தெரியும். நீங்கள் கோடியில் புரள்பவர். பணவசதி படைத்தவர். நீங்கள் பெரிய நடிகர். உங்களுக்கு அந்த ஆயிரம் ரூபாய் அப்படித்தான் தெரியும். ஆனால் இந்த மாதிரி ஆயிரம் ரூபாய் வைத்து குடும்பம் நடத்துகிற, வாழ்வாதாரத்துக்காக, ஒரு மருத்துவச் செலவுக்காக, பிள்ளைகளின் படிப்புக்காக எத்தனையோ பேருக்குப் பலன் தருகிறது.
அதனைச் சிலர் “முதலமைச்சர் எனக்குத் தரும் சீர்” என்று சொல்கிறார்கள். சில தாய்மார்கள், “என் பிள்ளைகள் என்னைப் பார்த்துக் கொள்ளாவிட்டாலும், மவராசன் முதலமைச்சர் எனக்கு ஆயிரம் ரூபாய் தந்து என்னைப் பார்த்துக்கொள்கிறார்” எனச் சொல்கிறார்கள். அந்த அளவுக்கு வாழ்வாதாரத்துக்கு உதவக்கூடிய உரிமைத்தொகையை நீங்கள் அசால்டா “பிச்சை போடுகிறார்” என்ற வார்த்தையைச் சொல்கிறீர்கள்.
பிச்சை என்பதன் அர்த்தம் தெரியுமா உங்களுக்கு? நீங்கள் உங்கள் போக்குக்கு வார்த்தைகளை இப்படி எல்லாம் பயன்படுத்தாதீர்கள். நிச்சயமாக இதற்கு எங்களுடைய தமிழ்நாட்டு பெண்களும், ஒரு கோடியே 16 லட்சம் மகளிர் உரிமைத் தொகை பெறும் பெண்களும் உங்களுக்கு சரியான பாடம் புகட்டுவார்கள். அவர்கள் உங்களைப் பார்த்துக் கொள்வார்கள். அடக்கி வாசியுங்கள் என்பதை மட்டும் நான் கூறிக் கொள்கிறேன்,” என கீதா ஜீவன் கூறியுள்ளார்.
— P. Geetha Jeevan (@geethajeevandmk) March 12, 2024
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.