வரும் கல்வியாண்டு முதல் பள்ளிகளில் காலை உணவில் அரிசி உப்புமாவுக்கு பதிலாக சாம்பார் உடன் பொங்கல் வழங்கப்பட உள்ளது என சட்டப்பேரவையில் அமைச்சர் கீதா ஜீவன் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (ஏப்ரல் 16) மானியக் கோரிக்கையில் தமிழ் வளர்ச்சித் துறை, மாற்றுத்திறனாளிகள் மற்றும் சமூக நலத்துறை உள்ளிட்ட துறை மீதான விவாதங்கள் நடைபெற்றன. தொடர்புடைய துறை அமைச்சர்கள் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டனர்.
அப்போது பேசிய சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், தமிழகத்தில் 7.88 லட்சம் மாற்றுத் திறனாளிகளுக்கு மாதம் ரூ.1,500 உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. அறிவுசார் குறைபாடு உடையோர், தொழுநோயாளிகள் உள்ளிட்டோருக்கு மாதம் ரூ.2,000 பராமரிப்பு உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகை மகளிர் உரிமைத் துறை, வீட்டு மனை பட்டா, விடியல் பயணம் என்று பெண்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை முதல்வர் செயல்படுத்தி வருகிறார் என்று கூறினார்.
மேலும் பேசிய அமைச்சர் கீதா ஜீவன், வரும் கல்வி ஆண்டு முதல் நகர்ப்புறங்களில் உள்ள அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளிகளிலும் காலை உணவு வழங்கப்படும். மேலும் அரிசி உப்புமாவுக்கு பதிலாக சாம்பார் உடன் பொங்கல் வழங்கப்படும். குறிப்பாக, காலை உணவுத் திட்டத்தால் குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் வகுப்பறை ஈடுபாடு மற்றும் அதிகரித்து உள்ளதாக திட்டக் குழு ஆய்வில் தெரிய வந்துள்ளது என்று கூறினார்.
மேலும், புதுமைப் பெண் திட்டத்திற்கு இதுவரை 721 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து செலவு செய்யப்பட்டுள்ளது. 10 இடங்களில் புதிதாக தோழி விடுதிகள் அமைக்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். மாவட்டம் தோறும் தோழி விடுதிகள் என்பதை இலக்காக வைத்து இந்த அரசு செயல்பட்டு வருகிறது என்றும் அமைச்சர் கீதா ஜீவன் கூறினார்.