/indian-express-tamil/media/media_files/bkJeD2WDHpug3TL0gsWx.jpeg)
அமைச்சர் மனோ தங்கராஜ் எழுதிய 'மன் கீ பாத்' மனதின் குரலுக்கு ஓர் இந்திய குடிமகனின் 108 கேள்விகள் புத்தகம் வெளியீடு
அமைச்சர் மனோ தங்கராஜ் எழுதிய 'மன் கீ பாத்' மனதின் குரலுக்கு ஓர் இந்திய குடிமகனின் 108 கேள்விகள் என்ற புத்தகம் நாகர்கோவிலில் வெளியிடப்பட்டுள்ளது.
நாகர்கோவிலில் மார்ச் 10 ஆம் தேதி மாலை தனியார் மண்டபத்தில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக மாநில சிறுபான்மையினர் ஆணையம் தலைவர் பீட்டர் அல்போன்ஸ், மாநில திட்டக்குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன் கலந்துக் கொண்டனர்.
மன் கீ பாத் மனதின் குரலுக்கு ஓர் இந்திய குடிமகனின் 108 கேள்விகள் என அமைச்சர் மனோ தங்கராஜ் எழுதிய புத்தகத்தை பீட்டர் அல்போன்ஸ் வெளியிட, ஜெயரஞ்சன் பெற்றுக் கொண்டார்.
நிகழ்ச்சியில் குமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த், தமிழக சட்டமன்ற காங்கிரஸ் தலைவரும், கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினருமான ராஜேஷ் குமார், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.வி. பெல்லார்மின், முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன், மற்றும் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்களும் பங்கேற்று அமைச்சர் மனோ தங்கராஜ்யின் முதல் முயற்சியில் வெளி வந்துள்ள புத்தகத்தை பாராட்டினார்கள்.
அமைச்சர் மனோ தங்கராஜ் தான் எழுதிய புத்தகம் பற்றி தெரிவித்ததாவது; இந்திய பிரதமர்களில் செய்தியாளர்களை சந்திக்காத, செய்தியாளர்கள் கேள்விகளுக்கு பதில் அளிக்காத ஒரே இந்திய பிரதமர் மோடி மட்டுமே. மான் கீ பாத் மனதின் குரல் என்பது ஒரு வழிபாதை போன்றது. மோடி மட்டுமே அவருக்கு மனதில் தோன்றியதை எல்லாம் பேசிக்கொண்டு இருப்பார். பார்ப்போர் எந்த கேள்வியும் கேட்க முடியாது. இதனால்தான், ஒர் இந்தியக் குடிமகனின் 108 கேள்விகள் என நான் கேள்வியை இந்த புத்தகம் மூலம் கேள்வி எழுப்பியுள்ளேன்.
நாடாளுமன்ற பொதுத் தேர்தல் நடக்குமா என்ற கேள்வி பாமர மக்களுக்கே ஏற்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தில் மூன்று அதிகாரிகள் இருந்த இடத்தில் இப்போது ஒரே ஒருவர் மட்டுமே இருக்கிறார். தேர்தல் ஆணையர் அருண் கோயல் திடீர் ராஜினாமா எழுப்பும் கேள்விகள் பல உள்ளது. இவருக்கு இன்னும் பல ஆண்டுகள் பதவி கால அவகாசம் இருக்கும் நிலையில், அருண் கோயல் மிரட்டப்பட்டுள்ளரா என்ற கேள்வி நாட்டு மக்களுக்கு எழுந்துள்ளது. மேலும், தேர்தல் உரிய காலத்தில் நடக்குமா என்ற எண்ணம், இந்திய மக்கள் அனைவர் மனதிலும் எழுந்துள்ளது.
மன் கீ பாத் மோடியின் மனதில் எழும் உணர்வுகளை வலியுறுத்தும் அவரது சிந்தனைகள், மதம், உணவு என்ற உணர்வில் வெளிப்படுத்தும் நிகழ்ச்சியை நானே பல முறை பார்த்திருக்கிறேன். அதன் அடிப்படையில் தான் நான் இந்த புத்தகத்தை எழுதியுள்ளேன் என செய்தியாளர்களிடம் அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.
த.இ.தாகூர், கன்னியாகுமரி
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.