முதுமலை புலிகள் காப்பக பகுதியில் அறிவிக்கப்பட்ட யானை வழித்தடத்தில் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ளதாக கூறப்படும் ரிசார்ட் ஒன்றில் தமிழக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் குடும்பத்தினருடன் தங்கியிருப்பது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை வனவிலங்கு சரணாலய பகுதிக்குட்பட்ட சிகுர் பகுதியில், யானைகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுவதால் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பகுதியில் கட்டுமானங்கள் கட்ட வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தால் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், யானை வழித்தடப் பகுதிகளில் விதிகளை மீறி சில கட்டுமானங்கள் கட்டப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து இந்த கட்டுமானங்களை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட சிகுர் பள்ளத்தாக்கு யானைகள் வழித்தட ஆய்வுக் குழு தனது அறிக்கையை கடந்த ஆண்டு சமர்பித்தது. ஜங்கிள் ஹட், டி ராக், ரோலிங் ஸ்டோன்ஸ், ஃபாரஸ்ட் ஹில்ஸ் ஃபார்ம் மற்றும் கெஸ்ட் ஹவுஸ், ஜங்கிள் ரிட்ரீட் மற்றும் கோர்டன் ஜங்கிள் பிராப்பர்டீஸ் ஆகிய ரிசார்ட்டுகள் அவற்றின் வளாகத்தில் மொத்தம் 74 கட்டிடங்கள் இருப்பதை விசாரணைக் குழு கண்டறிந்துள்ளது. அதனடிப்படையில் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை இடிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், யானை வழித்தடத்தில் உள்ள 12 கட்டிடங்களை இடிக்க கடந்த ஆண்டு உத்தரவிட்டது. இருப்பினும் இதுவரை எந்த கட்டிடம் இடிக்கப்படவில்லை. இது வனப்பாதுகாவலர்களிடையே கவலையை ஏற்படுத்தி வருகிறது.
இந்தநிலையில், கோடை விடுமுறைக்காக குடும்பத்துடன் உதகமண்டலம் வந்துள்ள வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், சிகுர் பகுதியில் பாதுகாக்கப்பட்ட பகுதியில் உள்ள சொகுதி விடுதியில் தங்கியிருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.
அதிகாரப்பூர்வ தகவல்களின்படி, அமைச்சர் மதிவேந்தன் கடந்த சில நாட்களாக நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் ‘ஜங்கிள் ஹட்’ என்ற ரிசார்ட்டில் தங்கியிருந்தார். 2023ல் உச்ச நீதிமன்றத்தால் இடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்ட மற்ற 12 ரிசார்ட்டுகளில் இந்த ஜங்கிள் ஹட் ஒன்றாகும்.
இதுகுறித்து நீலகிரி மாவட்ட நிர்வாக அதிகாரிகள் கூறுகையில், அமைச்சர் மதிவேந்தன் தங்கியிருக்கும் ரிசார்ட்டின் ஒரு பகுதி மாவட்ட நிர்வாகத்தால் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது என்றனர்.
அதேநேரம், வனத்துறை அமைச்சர் யானை வழித்தடத்தில் கட்டப்பட்ட ரிசார்ட்டில் தங்கியிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. முதுமலையில் வனத்துறை நடத்தும் விருந்தினர் மாளிகைகள் உள்ளன. வனத்துறை அமைச்சர் ஒரு ரிசார்ட்டில் தங்க வேண்டிய அவசியம் இல்லை, அதன் ஒரு பகுதி சட்டவிரோதமாக செயல்பட்டதாகக் கருதப்படுகிறது, என்று வன ஆர்வலர்கள் கூறுகின்றனர். மேலும், அறிவிக்கப்பட்ட யானை வழித்தடத்தை பாதுகாப்பதில் அரசாங்கம் தீவிரம் காட்டுகிறதா என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“