Advertisment

காந்தியை கொன்றது யார் என்பது ஆளுநருக்கு தெரியும்தானே? அமைச்சர் சாமிநாதன் பதில்

மதவெறிக்காக காந்தியை கொன்றவர்கள் இன்று ரத்த பசியோடு அலைந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை எதிர்த்து ஆளுநர் குறிப்பிடும் திராவிட சித்தாந்தத்தைப் பின்பற்றுபவர்கள்தான் களமாடி கொண்டிருக்கிறார்கள் – அமைச்சர் மு.பெ சாமிநாதன்

author-image
WebDesk
New Update
rn ravi and saminathan

மகாத்மா காந்தியின் கொலைக்குப் பின்னால் இருந்தவர்களையும் அமைப்பையும் ஆதரிப்பவர்களின் நோக்கங்களை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள் என ராஜ்பவன் பதிவுக்கு அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பதில் கொடுத்துள்ளார்.

Advertisment

தேசதந்தை மகாத்மா காந்தியின் 78வது நினைவு நாளையொட்டி, இன்று சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் மகாத்மா காந்தி படத்துக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். மேலும், தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டார். 

இந்தநிலையில், கிண்டியில் உள்ள காந்தி மண்டபத்தில் மரியாதை செலுத்தாதது குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி கேள்வி எழுப்பினார். “காந்தி மண்டபம், சென்னை கிண்டி தேசிய உயிரியல் பூங்காவை ஒட்டியுள்ள ஒரு பரந்த நிலத்தில் 1956 -ஆம் ஆண்டு கே. காமராஜர் அவர்களால் கட்டப்பட்ட  பிரம்மாண்டமான நினைவுச்சின்னமாகும். காந்தி நினைவு நிகழ்வுகளை - அவரது பிறந்தநாள் மற்றும் உயிர்த்தியாக தினத்தை - நகர அருங்காட்சியகத்தின் ஒரு மூலையில் நடத்துவதில் ஏதேனும் அர்த்தமுள்ளதா? 

தேசப்பிதாவுக்கு உரிய மரியாதை செலுத்த காந்தி மண்டபத்தில் தகுந்த முறையில் நடத்தவும் முதலமைச்சரிடம் நான் பலமுறை கோரிக்கைகள் விடுத்தேன். ஆனால், எனது கோரிக்கைகள் பிடிவாதமாக மறுக்கப்பட்டுள்ளன. காந்திஜி தனது வாழ்நாளில் திராவிட சித்தாந்தத்தைப் பின்பற்றுபவர்களால் கடுமையாக எதிர்க்கப்பட்டு கேலி செய்யப்பட்டார். இன்றும் அவர் தொடர்ந்து கேலி செய்யப்பட வேண்டுமா?" என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கேள்வி எழுப்பினார்.

Advertisment
Advertisement

இந்நிலையில், ஆளுநருக்கு அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பதில் கொடுத்துள்ளார். தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மகாத்மா காந்தியின் நினைவு தினம் நடத்துவது தொடர்பாக ஆளுநரின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறோம். "காந்தி மண்டபத்தில் காந்தி நினைவு நிகழ்வை நடத்தாமல் அருங்காட்சியகத்தின் ஒரு மூலையில் நடத்துவதில் ஏதேனும் அர்த்தமுள்ளதா?'' என கேள்வி எழுப்பியிருக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. 

பாரம்பரியமாக, காந்தி ஜெயந்தி கொண்டாட்டங்கள் மற்றும் தியாகிகள் தின அனுசரிப்புகள் மெரினா கடற்கரை காந்தி சிலைக்கு அருகில் மட்டுமே நடத்தப்பட்டு வருகின்றன. இருப்பினும், மெரினா கடற்கரை சாலையில் மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதால், 2022-ஆம் ஆண்டு தமிழக அரசு எழும்பூர் அருங்காட்சியக வளாகத்திற்குள் மகாத்மா காந்தியின் புதிய சிலையை நிறுவியது.

அன்று முதல் மகாத்மா காந்தி பிறந்தநாள் மற்றும் தியாகிகள் தின அனுசரிப்புகள் இரண்டும் எழும்பூர் அருங்காட்சியக காந்தி சிலை முன்புதான் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, ஆளுநர் ஆர்.என். ரவி கடந்த ஆண்டுகளில் எழும்பூரில் நடந்த இந்த நிகழ்வுகளில் கலந்து கொண்டார். பாரம்பரியமிக்க எழும்பூர் அருங்காட்சியகத்தின் வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தியிருக்கிறார். 

பாந்தியன் சாலையை ஒட்டியிருக்கும் அந்த அருங்காட்சியகத்தின் பிரதான நுழைவு வாயில் முன்பு இருக்கும் காந்தி சிலை முன்புதான் அஞ்சலி நிகழ்வு நடந்தேறியிருக்கிறது. ஆளுநர் குறிப்பிடுவது போல அருங்காட்சியகத்தின் ஒரு மூலையில் நடக்கவில்லை என்பதை முதலமைச்சர் அஞ்சலி செலுத்திய புகைப்படத்தை பார்த்தாலே தெரியும். பின்னணியில் பாந்தியன் சாலையும் மேம்பாலமும் புகைப்படத்தில் தெரியும். ஆனால், ஆளுநர் கண்களுக்கு வெறும் அவதூறுதான் தெரியும். 

'காந்திஜி தனது வாழ்நாளில் திராவிட சித்தாந்தத்தைப் பின்பற்றுபவர்களால் கடுமையாக எதிர்க்கப்பட்டு கேலி செய்யப்பட்டார். ஆனால் இன்றும் அவர் தொடர்ந்து கேலி செய்யப்பட வேண்டுமா?” எனவும் கேட்டிருக்கிறார் ஆளுநர். 1947 ஆகஸ்ட்15- ஆம் தேதி இந்தியா சுதந்திரம் அடைந்த போது, திராவிட கழக பொதுச் செயலாளராக இருந்த அண்ணா, 'சுதந்திர தினம் இன்பநாள்' என சொல்லி, பிரிட்டிஷுக்கு ஆதரவானவர்கள் என்கிற பழி விழுந்துவிடாமல் பாதுகாத்தார். 
அந்த அண்ணாவின் வழி வந்த நாங்கள் தேசத்தையும் தேச பிதாவையும் நேசிப்பவர்கள். தேசப்பிதாவை கொன்றவர்களை கொண்டாடுகிறவர்கள் அல்ல நாங்கள். காந்தி ஏன் கொல்லப்பட்டார்? அவரை கொன்றது யார்? என்பது எல்லாம் ஆளுநருக்கு தெரியும்தானே! இன்று தேசப்பிதா மறைந்த தினம் மட்டுமல்ல, இந்துத்துவா தீவிரவாதியால் மகாத்மா காந்தி கொல்லப்பட்ட தினமும் என்பது வரலாறு. 

மதவெறிக்காக காந்தியை கொன்றவர்கள் இன்று ரத்த பசியோடு அலைந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை எதிர்த்து ஆளுநர் குறிப்பிடும் திராவிட சித்தாந்தத்தைப் பின்பற்றுபவர்கள்தான் களமாடி கொண்டிருக்கிறார்கள். மகாத்மா காந்தியின் கொலைக்குப் பின்னால் இருந்தவர்களையும் அமைப்பையும் ஆதரிப்பவர்களின் நோக்கங்களை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள். 

2024 நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் தனியார் ஊடகத்திற்கு பேட்டி அளித்த பிரதமர் மோடி, ''மகாத்மா காந்தியைப் பற்றி உலகினர் யாருக்கும் தெரியாது. காந்தி’ என்ற திரைப்படத்திற்குப் பிறகே தெரிந்தது'' என சொல்லி காந்தியை சிறுமைப்படுத்திய போது ஆர்.என்.ரவி எங்கே போனார்? 2019-ம் ஆண்டு உத்தரபிரதேசம் அலிகாரில் உள்ள இந்து மகா சபை அலுவலகத்தில் மகாத்மா காந்தியின் உருவ பொம்மையை துப்பாக்கியால் சுட்டு தீ வைத்த பூஜா சகுன் பாண்டேவை ஆளுநர் ரவி கண்டித்திருக்கிறாரா? 

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசைவிட ஆளுநர் முக்கியமானவர் அல்ல. மன்னராக, ஜமீன்தாராக நினைத்துக் கொண்டு அதிகாரம் செய்யும் மனநோயில் இருந்து ஆளுநர் விடுபட வேண்டும். இந்தப் பிரச்சினையை அரசியலாக்குவதைத் தவிர்த்து, தமிழக மக்களிடையே ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை வளர்ப்பதில் கவனம் செலுத்துமாறு ஆளுநரை கேட்டுக்கொள்கிறோம்.” இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

Tamil Nadu Governor Rn Ravi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment