தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வுத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினர் இன்று அதிகாலை (ஜுன் 14) கைது செய்தனர். நேற்று காலை முதலே அமலாக்கத் துறையினர் செந்தில் பாலாஜியின் கரூர் மற்றும் சென்னை வீடுகளில் சோதனை மேற்கொண்டனர். கிட்டதிட்ட 18 மணி நேரங்களுக்கு மேலாக சோதனை செய்யப்பட்ட நிலையில் சோதனை முடிவில் அதிகாலை 2.30 மணியளவில் அமலாக்கத் துறையினர் செந்தில் பாலாஜியை கைது செய்தனர்.
Advertisment
செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினர் கைது செய்து விசாரணைக்கு கொண்டு செல்லும் வழியில் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. வலியில் துடித்து அழுத அவரை அதிகாரிகள் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிசிச்சைக்காக அனுமதித்தனர். அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், கே.என்.நேரு, சேகர்பாபு, மா.சுப்பிரமணியன் ஆகியோர் செந்தில் பாலாஜியை மருத்துவமனை சென்று பார்த்தனர்.
இதைத் தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் செந்தில் பாலாஜியை நேரில் சென்று நலம் விசாரித்தார். தி.மு.க மற்றும் கூட்டணி கட்சிகள் செந்தில் பாலாஜி கைதுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் செந்தில் பாலாஜி கைது மத்திய அரசின் அப்பட்டமான அடக்குமுறை எனக் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் செந்தில் பாலாஜி உடல் நலம் குறித்து ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், "அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு (47) இன்று காலை 10.40 மணியளவில் இருதய இரத்த நாள பரிசோதனை செய்யப்பட்டது.
அந்தபரிசோதனையில் 3 முக்கியமான இரத்த குழாய்களில் அடைப்பு உள்ளது கண்டறியப்பட்டது. அதற்கு விரைவில் பைபால் அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் பரிந்துரைக்கப்படுகிறது" எனக் கூறப்பட்டுள்ளது.
2011-2016 அ.தி.மு.க ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி பலரிடம் பண பெற்று மோசடி செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கின் பின்னணில் வருவாய் துறை, அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றதாக கூறப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“