தென் மாவட்ட பேருந்துகள் பொங்கலுக்கு பிறகு கிளாம்பாக்கத்தில் இருந்து முழுமையாக இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை கிளாம்பாக்கத்தில் அமைந்துள்ள புதிய பேருந்து நிலைய முனையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (டிசம்பர் 30) திறந்து வைத்தார். பின்னர் பேருந்து நிலைய செயல்பாடுகள் குறித்து அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கமளித்தார்.
அரசு விரைவு போக்குவரத்து கழகத்தை பொறுத்தவரை, இன்றைக்கு கோயம்பேட்டில் இருந்து இயங்குகின்ற பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு வந்து தெற்கு பகுதிக்குச் செல்லும். பெங்களூர் மற்றும் கிழக்கு கடற்கரை சாலைகளுக்குச் செல்லும் பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இயங்கும்.
அதேபோல, தென் தமிழ்நாட்டில் இருந்து வருகின்ற அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் பேருந்துகள் அத்தனையும் நாளை நான்கு மணி அளவிலே கோயம்பேட்டிற்கு வரும். அதற்குப் பிறகு வருகின்ற அத்தனை பேருந்துகளும் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திற்கு தான் வரும். கோயம்பேட்டிற்கு செல்லாது. எனவே அரசு விரைவு போக்குவரத்து கழகத்தைப் பொறுத்தவரை நாளையிலிருந்து முழுமையாக கிளாம்பாக்கத்திலிருந்து இயங்கும்.
சாதாரண நாட்களில் 300 புறப்பாடுகளும் வார இறுதி நாட்களில் 360 புறப்பாடுகளும் கொண்ட அரசு விரைவு போக்குவரத்து கழகத்தினுடைய பேருந்துகள் அத்தனையும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து இயங்கும்.
அதேபோல, சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் சார்பில் இயக்கப்படும் பேருந்துகள் டிசம்பர் 31 ஆம் தேதி காலையிலிருந்து சென்னையின் எல்லா பகுதிகளுக்கும் கிளாம்பாக்கத்திலிருந்து இயக்கப்படும். ஏற்கனவே உள்ள வழித்தடத்தில் இயக்கிக் கொண்டிருக்கிற பேருந்துகளை தாண்டி கூடுதலாகவும் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
மாநகர போக்குவரத்து கழகத்தைப் பொறுத்தவரை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு கிளாம்பாக்கத்தில் இருந்து 270 நடைகள் இயக்கப்படும். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து செல்லும்.
அதேபோல தாம்பரம் செல்கின்ற பேருந்துகள் இரண்டு நிமிடத்திற்கு ஒரு பேருந்து கிளாம்பாக்கத்தில் இருந்து செல்லும். கிளாம்பாக்கத்தில் இருந்து கிண்டிக்கு மூன்று நிமிடத்திற்கு ஒரு பேருந்து இயக்கப்படும். ஏற்கனவே இந்த வழித்தடத்தில் 2386 நடை பேருந்துகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இப்பொழுது கூடுதலாக 1691 நடைகள் இயக்கப்பட்டு, 4074 நடையாக அவை அதிகரிக்கப்பட்டுள்ளன.
அரசு விரைவு போக்குவரத்து கழகம் அல்லாத விழுப்புரம், கும்பகோணம், சேலம், கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி ஆகிய ஆறு போக்குவரத்து கழகப் பேருந்துகளும் கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கம் வந்து அந்தந்த வழித்தடத்தில் இயங்கும்.
இந்த நிலை பொங்கல் பண்டிகை வரை நீடிக்கும். பொங்கலுக்குப் பிறகு அந்த அத்தனை பேருந்துகளும் கிளாம்பாக்கத்திலிருந்து தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளுக்கு இயக்கப்படும். 1040 புறப்பாடுகள் பொங்கல் வரை கோயம்பேட்டிலிருந்து கிளாம்பாக்கம் வழியாக இயக்கப்படும்.
ஆம்னி பேருந்துகள் இன்றைக்கு கிளாம்பாக்கத்திலிருந்து தங்கள் செயல்பாட்டினை தொடங்கிவிட்டார்கள். ஆம்னி பேருந்துகளுக்கு கோயம்பேட்டில் இருந்து ஏற்கனவே முன்பதிவுகள் நடைபெற்றுள்ளதால் பொங்கல் வரை மட்டுமே அவை கோயம்பேட்டில் இருந்து இயக்கப்படும். பொங்கலுக்கு பிறகு கிளாம்பாக்கத்தில் இருந்து முழுமையாக இயக்கப்படும்.
ஏற்கனவே விரைவு பேருந்துகளுக்கு கோயம்பேட்டில் இருந்து தான் முன்பதிவு செய்து வருகின்றனர். எனவே தற்போது விரைவு பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் மட்டுமே இயக்கப்படக்கூடிய சூழல் உள்ளதால் அவர்கள் பயணம் செய்த அடுத்த நாள் அவர்களது தொகை மீண்டும் வங்கி கணக்கிற்கு செலுத்தப்படும். வரும் ஜனவரி ஒன்றாம் தேதி முதல் கிளாம்பாக்கத்தில் இருந்து பேருந்துகள் புக்கிங் செய்யபடும். இவ்வாறு அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“