நீலகிரி ‘மேடநாடு’ பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியில் உள்ள அமைச்சரின் மருமகன் தேயிலைத் தோட்டத்துக்கு அனுமதி ஏதும் பெறாமல் அத்துமீறி 2 கி.மீ தூரம் வரை சாலை அமைத்தது தொடர்பாக வனத்துறையினர் அண்மையில் 3 பேரை கைது செய்த நிலையில், எஸ்டேட் உரிமையாளரும், சுற்றுலா துறை அமைச்சர் ராமச்சந்திரன் மருமகனுமான சிவக்குமார் மீது தற்போது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அவர் ஏ1-ஆக சேர்க்கப்பட்டுள்ளார்.
தொடர்ந்து கோத்தகிரி ஜூடிசியல் மாஜிஸ்திரேட் முன் சிவக்குமார் ஆஜராகி கடந்த புதன்கிழமை முன் ஜாமீன் பெற்றார். எஸ்டேட் மேலாளர் உள்பட கைது செய்யப்பட்ட 3 பேர் மீது தமிழ்நாடு வனச்சட்டம் 1882-ல் பிரிவு 21-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் கீழ் கோத்தகிரியை அடுத்த மேடநாடு காப்புக் காட்டில் உள்ள 230 ஏக்கர் எஸ்டேட்டுக்கு செல்ல சாலை சீரமைப்பு பணி அனுமதியின்றி நடந்துள்ளது. இந்த எஸ்டேட்டின் உரிமையாளர், சுற்றுலா துறை அமைச்சர் ராமச்சந்திரனின் மருமகன் சிவகுமார் ஆவார்.

அங்கு 1.6 கி.மீ தூரத்திற்கு அனுமதியின்றி சாலை அமைக்கப்பட்டு வருவதாக கிடைத்த புகாரின்பேரில், கடந்த 13- ம் தேதி வனத்துறையினர் அங்கு ஆய்வு செய்தனர். சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்றதை உறுதி செய்த அதிகாரிகள், எஸ்டேட் மேலாளர் பாலமுருகன், பொக்லைன் மற்றும் ரோடு ரோலர் இயந்திர ஓட்டுநர்கள் உமர் பரூக், பங்கஜ் குமார் சிங் ஆகியோரை கைது செய்தனர்.
தொடர்ந்து சாலை விரிவாக்கத்திற்கு பயன்படுத்தப்பட்ட பதிவு எண் பெறாத பொக்லைன் மற்றும் ரோடு ரோலர் இயந்திரங்களை பறிமுதல் செய்தனர். சம்பந்தப்பட்ட பகுதியை மாவட்ட வன அலுவலர் கவுதம் ஆய்வு செய்தார். இது தொடர்பாக எஸ்டேட் உரிமையாளர் சிவக்குமாருக்கு நோட்டீஸ் அனுப்பபட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் எஸ்டேட் உரிமையாளரான சுற்றுலாத் துறை அமைச்சர் கா.ராமச்சந்திரனின் மருமகன் சிவகுமார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அவருக்கு நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கியுள்ளது.
செய்தியாளர்களிடம் பேசிய சிவக்குமார், அமைச்சர் மருமகன் ஆவதற்கு முன்பே இந்த எஸ்டேட் எனக்கு சொந்தமானது தான். அமைச்சருக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை. எஸ்டேட் செல்வதற்கான வழி உரிமையை வனத்துறையினர் ஏற்கனவே வழங்கியுள்ளனர். தற்போது புதிதாக சாலை அமைக்கப் படவில்லை, குண்டும், குழியுமாக இருந்த பகுதிகள் மட்டும் மண் கொட்டி சமப்படுத்தப்பட்டது என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“