/indian-express-tamil/media/media_files/2025/08/26/stalin-pinarayi-2025-08-26-08-18-42.jpg)
சபரிமலை ஐயப்பன் மாநாடு: தமிழக அரசு சார்பில் 2 அமைச்சர்கள் பங்கேற்பார்கள் - பினராயி விஜயனுக்கு ஸ்டாலின் கடிதம்
கேரளாவில் திருவிதாங்கூர் தேவசம் வாரியம் சார்பில், செப்.20-ம் தேதி பம்பையில் 'உலக ஐயப்ப சங்கமம்' என்ற பெயரில் சர்வதேச ஐயப்ப பக்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது. கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தொடங்கி வைக்கும் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்த அழைப்பை ஏற்று, கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை வந்த கேரள மாநில தேவசம்வாரிய அமைச்சர் வி.என்.வாசன், ஸ்டாலினை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார். ஐயப்ப பக்தர்கள் மாநாட்டிற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதற்கு கேரள பா.ஜ.க. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பேசிய கேரள பாஜக தலைவர் சந்திரசேகர், "சபரிமலை மரபுகளையும் பக்தர்களையும் பல ஆண்டுகளாக அவதூறு செய்தவர் பினராயி விஜயன். அதேபோல, தமிழகத்தின் மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரும் இந்துக்களின் நம்பிக்கைகளை அவதூறு செய்கின்றனர். எனவே, இந்தியா கூட்டணி கட்சியினரின் மாநாட்டிற்கு உண்மையான பக்தர்கள் செல்ல மாட்டார்கள்" என்று கூறியிருந்தார்.
திருவிதாங்கூர் தேவசம் வாரியம் சபரிமலை ஐயப்பன் கோயிலின் நிர்வாகம், பக்தர்களுக்கான வசதிகள், கணக்கு வழக்குகள் போன்றவற்றை நிர்வகித்து வருகிறது. கேரள மாநிலம் மட்டுமின்றி, கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரா ஆகிய மாநிலங்களின் முதலமைச்சர்களுக்கும் ஐயப்ப பக்தர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், திருவிதாங்கூர் தேவசம் வாரியம் சார்பில், அதன் 75-வது ஆண்டு விழாவை முன்னிட்டு, கேரள மாநிலம் பம்பையில் செப்.20-ஆம் தேதி நடைபெறவுள்ள 'உலக ஐயப்பன் சங்கமம்' நிகழ்ச்சியில் தமிழக அரசின் சார்பில் 2 அமைச்சர்கள் கலந்துகொள்வார்கள் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், தனக்கு ஏற்கனவே திட்டமிடப்பட்ட நிகழ்ச்சிகள் இருப்பதால், இந்த நிகழ்வில் கலந்துகொள்ள இயலவில்லை எனத் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் சார்பில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு மற்றும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் கலந்துகொள்வார்கள் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். இந்தத் தகவலை தமிழக அரசு அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.