தமிழ்நாட்டில் ஓராண்டில் மட்டும் 4.49 லட்சம் ரேஷன் கார்டு ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோர் பாதுகாப்புத் துறை கூடுதல் தலைமைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
சென்னை கோபாலபுரத்தில் திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான கிடங்கை, ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’தமிழகத்தில் மொத்தம் 36,954 ரேஷன் கடைகளில் அரிசி, சர்க்கரை மற்றும் உப்பு போன்றவை இருப்பு உள்ளன. வரும் காலங்களில் மாதம் ஒன்றுக்கு 20 ஆயிரம் டன் துவரம் பருப்பு வழங்கவும் ஒரு கோடி பாக்கெட் பாமாயில் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டில் 4.54 லட்சம் குடும்ப அட்டைதாரருக்கு நகல் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. 4.49 லட்சம் தனிநபர் ஸ்மார்ட் கார்டுகள், இடம் பெயர்ந்தவர்கள், இறந்தவர்கள் என்ற அடிப்படையில் நீக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் மொத்தம் 58 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு, கடந்த ஆண்டில் ரூ 6.98 கோடி மதிப்புள்ள ரேஷன் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
ரேஷன் குறை தொடர்பான புகார்களுக்கு 044-28592828, 1967 மற்றும் 1800 1800 4255901 என்ற எண்களில் புகார் அளிக்கலாம். மேலும், www.tnpds.gov.in என்ற இணையதளத்திலும் புகார்கள் தெரிவிக்கலாம்,’ என ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“