தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் என்ற பெயரையோ கொடியையோ ஹைதர்அலி உள்ளிட்ட ஆதரவாளர்கள் பயன்படுத்தக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக அறக்கட்டளை தலைவர் எம்.ஹெச்.ஜவஹருல்லா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். அந்த வழக்கில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக அறக்கட்டளை கடந்த 2003 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு அரசியல் கட்சியாக செயல்பட்டு வருவதாகவும் கட்சியிலிருந்து ஏற்கனவே, ஜெய்னுலபுதீன் உள்ளிட்ட நிர்வாகிகள் விலகி வேறு கட்சி ஆரம்பித்து விட்டனர் என்றும் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த ஹைதர் அலி கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதால் அவரை கட்சி பொதுக்குழு கூடி நீக்கி விட்டதாகவும் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் ஹைதர் அலி மற்றும் அவரது ஆதரவாளர்கள், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை பெயரையும் கொடியையும் பயன்படுத்தி வருவதாகவும் எனவே அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர். சுப்பிரமணியன் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஹைதர் அலி மற்றும் அவரது ஆதரவாளர்கள் தமுமுக என்ற கட்சி பெயரையோ, கொடியையோ பயன்படுத்த கூடாது என்று இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டு வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 9 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளார்.