தமிழகத்தில், நீட் தேர்வின் தாக்கங்கள் குறித்து ஆராய அமைக்கப்பெற்ற, ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு புதன்கிழமை தனது அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கியது.
இந்த ஆண்டு மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வான நீட் தேர்வு, செப்டம்பர் 12 ஆம் தேதி நடைபெறும் என மத்திய அரசு அறிவித்தது. இந்த நிலையில் நீதிபதி ராஜன் குழு அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.
நீதிபதி ராஜனின் கூற்றுப்படி, 165 பக்கங்களைக் கொண்ட முழு அறிக்கையானது, பல்வேறு தரப்பைச்சேர்ந்த சுமார் 86,000 பேரின் கருத்துக்களை ஆராய்ந்த பின்னர் தயாரிக்கப்பட்டுள்ளது.
அறிக்கையைச் சமர்ப்பித்த பின்னர் ஊடகங்களுக்கு உரையாற்றிய ஓய்வுபெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ராஜன், பெரும்பாலானோரின் கருத்துக்கள் தங்களுக்கு நீட் தேவையில்லை என்று கூறியுள்ளதாகவும், அறிக்கையில் உள்ள முக்கிய அம்சங்கள் முதலமைச்சரின் கவனத்தை ஈர்த்தது என்றும் கூறினார்.
பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்த மாணவர்களை நீட் தேர்வு பாதிக்கிறதா என்பதை ஆய்வு செய்ய இந்த ஆண்டு ஜூன் மாதம் தமிழக அரசு இந்த உயர் மட்டக் குழுவை அமைத்தது. மருத்துவ சேர்க்கை தொடர்பான தரவுகளை ஆராய்வதற்கும், சேர்க்கை நடைமுறையில் அனைவருக்கும் வாய்ப்பு கிடைக்கும் வகையில் மாற்று முறையை பரிந்துரைப்பது போன்ற தேவையான பரிந்துரைகளைச் செய்வதற்கும் இந்த குழு வழிநடத்தப்பட்டது.
குழுவில், நீதிபதி ராஜன் தவிர, சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தைச் சேர்ந்த் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத், கல்வியாளர் ஜவஹர் நேசன் மற்றும் ஆறு உயர் அதிகாரிகள் இருக்கின்றனர்.
இந்த குழுவை அமைத்ததற்கு எதிராக தமிழக பாஜகவைச் சேர்ந்த கரு.நாகராஜன் தாக்கல் செய்த பொது நல வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தது. இந்த தீர்ப்பை வரவேற்றுள்ள முதல்வர் ஸ்டாலின், இரட்டைவேட பாஜகவுக்கும், அதிமுகவுக்கும் உயர்நீதிமன்றம் நெத்தியடி தீர்ப்பை வழங்கியுள்ளதாக கூறினார். மேலும், முக்கியத்துவம் வாய்ந்த இந்த தீர்ப்பு, தமிழக அரசின் உறுதிப்பாட்டுக்கும் முயற்சிகளுக்கும் தொடக்கப்புள்ளி எனவும், மாணவர்களின் உரிமை மட்டுமின்றி, மாநில உரிமையும் தீர்ப்பின் மூலம் நிலைநாட்டப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
திமுக நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதை தேர்தல் வாக்குறுதியாக அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
செப்டம்பர் 12 ஆம் தேதி நீட் தேர்வு நடைபெறும் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்த பின்னர், தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நீட் வேண்டாம் என்பதுதான் திமுக அரசின் கொள்கை என்று கூறினார். இருப்பினும், மாணவர்களை நீட் தேர்வுக்கு தயார் செய்யும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நீட் தேர்வுக்கு விலக்கு பெறும் வரை, தமிழக அரசின் பயிற்சி மாணவர்களுக்கு தொடர்ந்து அளிக்கப்படும். நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு பெறுவதே தமிழக அரசின் நிலைப்பாடு. மாணவர்கள் நீட் தேர்வுக்கு தயாராவது தவறில்லை என்றும் மா.சுப்பிரமணியன் கூறினார்.
இதற்கிடையில், ஸ்டாலினின் அறிக்கைக்கு பதிலளித்த முன்னாள் முதல்வர் எடப்பாடி.கே.பழனிசாமி, அரசாங்கத்தை அமைத்த 24 மணி நேரத்திற்குள் நீட் தேர்வை ரத்து செய்வதாக அளித்த வாக்குறுதியை திமுக நிறைவேற்றவில்லை என்றும், அதன் தோல்விகளை மறைக்க அதிமுகவை குற்றம் சாட்டுவதாகவும் கூறினார். மேலும், நீட் தேர்வை நடத்தவிடமாட்டோம் எனக்கூறிய விடியல் அரசு, இப்போதாவது ஏமாற்றுவதை நிறுத்துமா என கேள்வி எழுப்பியுள்ள இபிஎஸ், நீட் தேர்வை ரத்து செய்ய வழி தெரியும் எனக் கூறிய ஸ்டாலின் தன் இயலாமையை மறைக்க என் மீது பழிபோடுகிறார் என கூறியுள்ளார்.
மேலும் எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக கட்சி ஆட்சியில் இருந்தபோது பின்தங்கிய வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு பயனளிப்பதற்காக எடுத்த பல்வேறு நடவடிக்கைகளை பட்டியலிட்டார். அதாவது அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ சேர்க்கையில் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு.
திமுக தலைவர்களின் தவறான வாக்குறுதிகளை நம்பி, நீட் தேர்வை எதிர்கொள்ளத் தயாராக இல்லாத மாணவர்கள் செப்டம்பர் 12 ஆம் தேதி நாடு முழுவதும் தேர்வு நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்த பின்னர் அதிர்ச்சி அடைந்துள்ளனர் என்று பழனிசாமி ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil