Tamilnadu Neet Suicide News Update : மருத்துவ படிப்பில் சேர்வதற்கு இந்தியா முழுவதும நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது . நீட் என்று அழைக்கப்படும் இந்த தேர்வில் அதிக தேர்ச்சி பெறும் மாணவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் சேர்வார்கள். இந்த தேர்வுக்கு தமிழகம் உட்பட சில மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும் ஆண்டுதோறும் நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு இன்று தொடங்கிய நிலையில், சேலம் மாவட்டத்தை சேர்த்த தனுஷ் நீட் தேர்வு பயத்தில் தறகொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் மேட்டுர் பகுதியை சேர்த்த தனுஷ் என்ற மாணவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு 12ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
அதனைத் தொடர்ந்து மருத்துவர் ஆக வேண்டும் என்ற கனவில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த அவர், 2 முறை தேர்வு எழுதியும் தேர்ச்சி பெறவில்லை. ஆனாலும் முயற்சியை கைவிடாத அவர், நடப்பு ஆண்டுக்கான நீட் தேர்வுக்காக கடந்த சில மாதங்களாக தீவிரமாக தயாராகி வந்துள்ளார். ஆனால் இன்று தேர்வு தொடங்கிய நிலையில், மாணவன் தனுஷ், நேற்று நள்ளிரவில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், 2 முறை தேர்வு எழுதி தேர்ச்சி பெறாத நிலையில் 3-வது முறையும் தோல்வி பயத்தில் மாணவன் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து முதல்வர் ஸ்டாலின், கூறுகையில், நீட் தேர்வு அச்சத்தில் மாணவன் தனுஷ் தற்கொலை செய்ததை அறிந்து வேதனை அடைந்தேன். நீட் தேர்வுக்கு எதிரான நமது சட்டப்போராட்டம் இப்போது தொடங்குகிறது. மாணவர்களுக்கு நீட் தேர்வு ஏற்படுத்தும் சிரமத்தை மத்திய அரசு புரிந்துகொள்ளவில்லை என்று கூறிய அவர், மத்திய அரசு தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்யும்வரை இந்த சட்டப் போராட்டம் தொடரும் எனவும், நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் மசோதா சட்டமன்றத்தில் நாளை நிறைவேற்றப்படும் என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் மாணவன் தனுஷ் மரணத்திற்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். தொடர்ந்து எம்எல்ஏவும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், சட்டத்துறை அமைச்சர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஆகியோர் மாணவனின் உடலுக்கு நெரில் அஞ்சலி செலுத்திய நிலையில், உதயநிதி ஸ்டாலின் மாணவனின் பெற்றோருக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தனது ட்விட்டர் பதிவில், நீட் தேர்வு நடைபெறுமா? நடைபெறாதா? நடைபெறும் எனில் மாணவர்கள் தேர்வுக்கு தயாராக அறிவுறுத்தி முறையான பயிற்சி அளித்து குழப்பத்தில் உள்ள மாணவர்களை தெளிவுபடுத்த வேண்டும் என அறிக்கை மூலமாகவும், ஊடகங்கள் மூலமாகவும் தொடர்ந்து வலியுறுத்தினேன். அதற்கு சரியான பதிலைக் கூறி மாணவர்களுக்கு முறையான பயிற்சியளித்து இருந்தால் நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்துகொண்ட சேலம் மாவட்டத்தை சேர்ந்த மாணவர் 19 வயது தனுஷின் உயிரை காப்பாற்றி இருக்கலாம். மாணவச்செல்வங்கள் இதுபோன்ற முடிவுகளை இனி எடுக்க கூடாது என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
இதற்கிடைய மரணமடைந்த மாணவன் தனுஷின் பெற்றோரிடம் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தொலைபேசி மூலம் கண்ணீர் மல்க ஆறுதல் கூறியுள்ளார். மேலும் தமிழகத்தில் இனி இதுபோன் மரணங்கள் நிகழாமல் இருக்க நாம் போராடவேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இந்நிலையில் இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக் கோரும் புதிய சட்டம் தமிழக சட்டப்பேரவையில் நாளை நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. அந்த சட்டத்திற்கு எவ்வளவு விரைவாக முடியுமோ, அவ்வளவு விரைவாக குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றுத் தர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு அனைத்து வழிகளிலும் பாட்டாளி மக்கள் கட்சி ஒத்துழைக்கும்.
நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்து கொண்ட மாணவர் தனுஷின் குடும்பத்திற்கு அனிதா தற்கொலை உள்ளிட்ட நிகழ்வுகளில் வழங்கப்பட்டதைப் போன்று ரூ.7 லட்சம் இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு கல்வித் தகுதிக்கு ஏற்ற அரசு வேலையும் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். அதே நேரத்தில் நீட் தேர்வுக்கு அஞ்சி மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன் என கூறியுள்ளார்.
இது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பதிவில், ஆண்டுக்காண்டு தமிழக ஏழை மாணவர்கள் அதிகம் தேர்வு பெறும், உச்ச நீதிமன்றம் பாராட்டும் நீட் தேர்வு. மாணவர்களை அச்சுறுத்தும் பொய்யுரைகளைத் திமுக அரசு நிறுத்தட்டும். அரசியல் ஆதாயத்திற்காக அப்பாவி மாணவர்களின் உயிரைப் பலிவாங்கும் திமுக அரசு சேலம் மாணவர் தனுஷ் மரணத்திற்கு முழுப்பொறுப்பு.'' என்று தெரிவித்துள்ளார்
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.