Advertisment

வித்தியாச போஸ்டர்... வேலைவாய்ப்பு முகாம்... நெல்லையில் மேயர் பதவிக்கு செம்ம ரேஸ்!

பெண்களுக்காக ஒதுக்கப் பட்டதாக கூறப்படும் நெல்லை மாநகராட்சியில் யார் மேயராவது என்பதில் ஆளுங்கட்சியான திமுகவில் நடக்கும் யுத்தம்  பரபரப்பை தூண்டி இருக்கிறது .

author-image
WebDesk
Oct 21, 2021 21:28 IST
வித்தியாச போஸ்டர்... வேலைவாய்ப்பு முகாம்... நெல்லையில் மேயர் பதவிக்கு செம்ம ரேஸ்!

கட்டுரை: த.வளவன்

Advertisment

ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள் முடிவடைந்து விட்டன. இதில் ஆளுங்கட்சியான திமுகவே பெரும்பான்மை பெற்றுள்ளது. அதிமுக படுதோல்வியை சந்தித்துள்ளது.  அடுத்ததாக மாவட்ட ஊராட்சித் தலைவர், மாவட்ட ஊராட்சித் துணைத் தலைவர்,  ஊராட்சி ஒன்றியத் துணைத்தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நடந்து வரும் நிலையில் இதற்கான குதிரை பேரங்கள் உச்ச கட்டத்தில் இருக்கின்றன.

இந்நிலையில் அடுத்தடுத்த மாதங்களில் நடக்க இருக்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சி தேர்தலுக்கான  முஸ்தீபுகளும்  தொடங்கி விட்டன. முக்கியமாக நெல்லை, குமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் நடக்க இருக்கும் மாநகராட்சி மேயர் தேர்தலுக்குக்கு அனைத்துக் கட்சிகளுமே முண்டா முடிச்சுகளோடு களம் இறங்கியிருப்பது அனைவரையும் பிரமிப்படைய வைத்திருக்கிறது. இதில் பெண்களுக்காக ஒதுக்கப் பட்டதாக கூறப்படும் நெல்லை மாநகராட்சியில் யார் மேயராவது என்பதில் ஆளுங்கட்சியான திமுகவில் நடக்கும் யுத்தம்  பரபரப்பை தூண்டி இருக்கிறது .கடந்த 1996ல் தொடங்கப்பட்ட நெல்லை மாநகராட்சி  தென்மாவட்டங்களில பழமையான மாநகராட்சிகளில் ஒன்று.  நெல்லையில் முதல் மேயராக திமுகவை சேர்ந்த உமா மகேஸ்வரி வெற்றி பெற்றார். அடுத்தடுத்து நடந்த 2001, 2006, 2011, 2016 தேர்தல்களில் அதிமுகவை சேர்ந்த ஜெயராணி, திமுகவை சேர்ந்த ஏ எல் சுப்பிரமணியன், அதிமுகவை சேர்ந்த விஜிலா சத்யானந்த, அதிமுகவை சேர்ந்த புவனேஸ்வரி என  மாறிமாறி  பலரும் மேயர் இருக்கையை அலங்கரித்த நிலையில் தான் நெல்லையின்  அடுத்த மேயர் யார் என்ற கேள்வியும் பிறந்திருக்கிறது.நெல்லை மாநகரை பொறுத்த வரையில் திமுக, அதிமுக என  இரு பிரதான கட்சிகளுக்குமே  சமமான வாக்கு வங்கி உண்டு. ஆனால் ஜெயலலிதா காலத்துக்கு பிறகு தனித்தலைமை இல்லாமல் இரட்டை தலைமையுடன் நடமாடும் அதிமுகவின் செல்வாக்கு பெருமளவு சரிந்து விட்டது. இதற்கு நடந்து முடிந்த ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்களே உதாரணம். அதிமுகவில் மேயர் தேர்தலுக்கு  யாருமே  ஒரு அடி கூட எடுத்து வைக்காத நிலையில்  திமுகவில்  எப்படியும் டிக்கட்  கேட்டு வென்று விட வேண்டும் என முயற்சிப்பவர்கள் எண்ணிக்கை பத்துக்கும் அதிகம். இவர்களில் சமீபத்தில் அதிமுகவிலிருந்து திமுகவுக்கு தாவிய முன்னாள் மேயர்கள் விஜிலாசத்யானந்த் மற்றும் புவனேஸ்வரி இருவருமே அடக்கம்.

publive-image

நெல்லை மாநகராட்சியில் பிள்ளைமார் சமூக மக்கள் அதிகம்.  அனால் நடந்து  முடிந்த சட்டமன்ற தேர்தலில் பிள்ளை இனத்தை சேர்ந்த ஏ எல் எஸ் லட்சுமணனை ,தேவர் இனத்தை பா ஜ க வேட்பாளர் நயினார் நாகேந்திரன் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வென்று அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தார். அதிலிருந்தே தேவர் இன பிரமுகர்களும் மேயர் தேர்தல் களத்துக்கு வந்திருக்கின்றனர். முன்னர் துணை மேயர் விசுவநாத பாண்டியனின்  மகன் பொன்னையா பாண்டியன் மனைவி மஹாலட்சுமி, நெல்லை மாவட்ட பழம்பெரும் திமுக குடும்பத்தை சேர்ந்த கவிஞர். பூலிப்பாண்டியனின் மருமகளும் மாவட்ட திமுக மாணவர் அணி துணை அமைப்பாளருமான   துரை. சக்தி சீதா இருவரும் தேவர் சமுதாயத்திலிருந்து  மேயர் பதவியை கைப்பற்றும்   பணியை துவங்கியிருக்கின்றனர்.  

நெல்லை மாநகராட்சியில் இதுவரை தேவர் இனத்தை சேர்ந்த யாருக்குமே மேயர் பதவி கொடுக்கப் படாததால் இந்த முறையாவது தேவர் இனத்துக்கு வாய்ப்பு வழங்கப் பட வேண்டும் என்பது இவர்களின் கோரிக்கை. இந்த கோரிக்கைக்கு திமுக தலைமையிலிருந்தது என்ன ரெஸ்பான்ஸ் கிடைக்கும் என்பது வரும் மாதங்களில் தெரிந்து விடும். பொதுவாகவே திமுகவில் மாவட்ட செயலாளர் கைகாட்டும் நபர்களுக்கே சீட் கொடுக்கப் படும் வாய்ப்பு அதிகம். அந்த வகையில் நெல்லை மாநகர் மாவட்ட செயலாளரும்  பாளை சட்டமன்ற  தொகுதி  உறுப்பினருமான வகாப் தனது சார்பாக நெல்லை அல்வா குடும்பத்தை சேர்ந்த நெல்லை மத்திய மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர்  மகேஸ்வரிக்கு சீட்  கேட்க முயன்று வருகிறார். இது எந்த அளவுக்கு திமுக தலைமையிடம் எடுபடும் என்பது விரைவில் தெரிந்து விடும்.

publive-image

இவர்கள் தவிர முன்னாள் பாளையங்கோட்டை நகராட்சி தலைவர் சு ப சீதாராமன் மகள் அமுதா, நெல்லையில் பிரபலமான ஆதித்யா கார் ஜுவல்லரி குடும்பத்தை சேர்ந்த  ஒருவர் உட்பட  இரண்டு யாதவர்  இனத்தை சேர்ந்தவர்களும் இருக்கின்றனர். மேலும் மோதும் பிரபலங்கள் வரிசையில்  முன்னாள் கவுன்சிலர்கள் ரேவதி அசோக், ராஜகுமாரி இருவரும்  களத்தில் இருக்கிறார்கள். இந்நிலையில் வரும் மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற சமுதாய நலன் சார்ந்த வேலைவாய்ப்பு முகாம்கள், வித்தியாசமான  போஸ்டர்கள் என்று முன்னணியில் இருப்பவர்கள்  மாவட்ட செயலாளர் ஆசி பெற்ற மகேஸ்வரி மற்றும்   நெல்லை மாவட்ட பழம்பெரும் திமுக குடும்பத்தை சேர்ந்த கவிஞர். பூலிப்பாண்டியனின் மருமகளும் மாவட்ட திமுக மாணவர் அணி துணை அமைப்பாளருமான   துரை. சக்தி சீதா இருவரும் தான்.

publive-image

கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்களுக்கு மதிய உணவு, வீடு வீடாக சென்று கபசுர குடிநீர் வழங்கல், முகக்கவசம் வழங்குதல் என்று மகேஸ்வரி மக்களிடம் நெருங்கி பழகிக் கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் துரை. சக்தி சீதாவின் வியூகமோ வேறாக இருக்கிறது. தனது மாமனார் பெயரில் தான் துவங்கியிருக்கும் கல்வி அறக்கட்டளை மூலமாக மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தி வருகிறார் இவர். இது வரையில் 100 மாணவர்களுக்கு மேலாக வேலை வாய்ப்பு பெற்றுத்தந்துள்ளதாக சொல்லும் இவர் வரும் 24 ம் தேதி உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு தொடர்ந்து 45 நாட்கள் தொடர் இலவச வேலை வாய்ப்பு முகாம்களை நடத்தப்  போவதாக போஸ்டர்கள் அச்சடித்து   மாணவர்களை கவர்ந்து வருகிறார்.

publive-image

இவரது  இந்த முயற்சி நெல்லை மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இது தவிர கடந்த செப்டம்பர் 11ம் தேதி தியாகி இமானுவேல் சேகரனார் பிறந்த நாளின் போது அவரது நினைவு நாள் சமூக நல்லிணக்க நாளாகட்டும். சங்கடங்களை மறப்போம். சகோதரத்தை நினைப்போம் என்று இவர் அடித்த போஸ்டர்கள்  தலித் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.மொத்தத்தில் அதிமுக தரப்பில் மாநகராட்சி தேர்தல் தொடர்பாக எந்த பரபரப்பும் காணப்படாத நிலையில் திமுக தரப்பில் பலரும்  தேர்தல் பணியில் தீவிரமாக உள்ளனர். இதில் வெல்லப் போவது யார் என்பது வரும் பொங்கலை தொடர்ந்து வருவதாக சொல்லப் படும் தேர்தலில் தெரிந்து விடும்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment