புதிய கல்விக் கொள்கையை ஆய்வு செய்ய 2 நிபுணர் குழுக்கள்: தமிழக அரசு

NEP 2020 : தமிழக மக்களின் உணர்வை ஏற்று, மத்திய அரசு அறிவித்த, மும்மொழி கொள்கையை மறு பரிசீலனை செய்து, அந்தந்த மாநிலங்கள் தங்களின் கொள்கைக்கேற்ப செயல்படுத்திக் கொள்ள, பிரதமரை கேட்டுக் கொள்கிறேன்

By: August 4, 2020, 8:34:05 AM

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு தாக்கல் செய்துள்ள புதிய கல்விக்கொள்கையின் சாதகம் மற்றும் பாதகங்கள் குறித்து ஆராய 2 நிபுணர் குழுக்கள் அமைக்கப்படுவதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

புதிய கல்விக்கொள்கை குறித்த ஆலோசனை கூட்டம், தலைமைச்செயலகத்தில் முதல்வர் பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

புதிய கல்விக்கொள்கையில், உயர்நிலைக்கல்வி மற்றும் பள்ளிகல்வித்துறையில் உள்ள முக்கிய அம்சங்கள், சாதக, பாதகங்கள் குறித்து ஆராய 2 நிபுணர் குழுக்கள் அமைக்கப்பட உள்ளதாக மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

புதிய கல்விக்கொள்கையில் பல்வேறு அம்சங்கள் உள்ளன. இவற்றில் தமிழகத்திற்கு எது சாதகமாக உள்ளது. அரசின் கொள்கைக்கு எதிரான அம்சங்கள் ஏதேனும் உள்ளதா என்பது குறித்து ஆராய வேண்டும்.

தமிழகத்தில் மும்மொழிக்கொள்கை, அரசியல்ரீதியாக பெரும்புயலை கிளப்பியுள்ள நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முதல்வர் பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்நிலையில், புதிய கல்விக்கொள்கையில் உள்ள மற்ற அம்சங்கள் குறித்து இந்த நிபுணர் குழுக்கள் ஆய்வு மேற்கொள்ளும்.

புதிய கல்விக்கொள்கை தொடர்பாக முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் இரு மொழி கொள்கையையே, அரசு தொடர்ந்து கடைப்பிடிக்கும் என்பதை, கடந்த ஆண்டு சுதந்திர தின உரையிலும், சட்டசபையில் நடந்த, பல்வேறு விவாதங்களின் போதும் தெளிவாக கூறியுள்ளேன். தற்போது, மத்திய அரசால் வெளியிடப்பட்டுள்ள, புதிய கல்வி கொள்கையில், மும்மொழி கொள்கை இடம்பெற்று இருந்தாலும், ஜெ., அரசு, மும்மொழி கொள்கையை, தமிழகத்தில் எப்போதும் அனுமதிக்காது. இரு மொழி கல்வி கொள்கையை மட்டுமே, தொடர்ந்து பின்பற்றும். தமிழகத்தில், ஒட்டுமொத்த மக்களின் உணர்வும், அ.தி.மு.க., உட்பட பெரும்பாலான அரசியல் கட்சிகளும், இரு மொழியை பின்பற்றுவதையே, கொள்கையாக கொண்டுள்ளன. இந்த சூழ்நிலையில், மத்திய அரசு அறிவித்த, தன் புதிய கல்வி கொள்கையில், மும்மொழி கல்வி இடம்பெற்றிருப்பது வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது. ஒட்டுமொத்த தமிழக மக்களின் உணர்வை ஏற்று, மத்திய அரசு அறிவித்த, மும்மொழி கொள்கையை மறு பரிசீலனை செய்து, அந்தந்த மாநிலங்கள் தங்களின் கொள்கைக்கேற்ப செயல்படுத்திக் கொள்ள, பிரதமரை கேட்டுக் கொள்கிறேன். தமிழ் மொழிக்கோ, தமிழர்களுக்கோ பாதிப்பு ஏற்படும் போது, அந்த பாதிப்பை களைய, தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்கும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

இந்த கூட்டத்தில். துணை முதல்வர் பன்னீர்செல்வம், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலெட்சுமி, தலைமைச்செயலாளர் சண்முகம், உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Tamil nadu nep 2020 new education policy edappadi palanichami three language policy tn government oppose experts panel

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

விடைபெற்ற எஸ்.பி.பி.
X