புதிய தலைமைச் செயலக வழக்கை லஞ்ச ஒழிப்புத் துறையிடம் வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது. இந்த தகவலை அரசுத் தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்தது.
சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமைச் செயலக கட்டிடம் கட்டியதில் நடந்த முறைகேடு புகார் குறித்து விசாரித்த விசாரணை ஆணையத்துக்கு புதிய நீதிபதியை நியமிக்கப் போவதில்லை என்றும் தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. மேலும் இதுவரை நடைபெற்று விசாரணை குறித்த விபரங்கள் மற்றும் ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு துறைக்கு அனுப்ப பட்டுள்ளதாக தமிழக அரசு நீதிமன்றத்தில் கூறியது.
புதிய தலைமை செயலகம் கட்டியதில் முறைகேடுகள் நடந்ததாக கடந்த 2011-ம் ஆண்டு ஜூன் 22-ம் தேதி ஓய்வு பெற்ற நீதிபதி ரகுபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த விசாரணை ஆணையம் மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி, முன்னாள் துணை முதல்வரான மு.க.ஸ்டாலின், முன்னாள் பொதுப் பணித்துறை அமைச்சார் துரைமுருகன் ஆகியோருக்கு 2015 ஆம் ஆண்டு சம்மன் அனுப்பியது.
ஆணையம் அமைக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்யவும், தங்களுக்கு அனுப்பப்பட்ட சம்மனை ரத்து செய்யவும், ஆணைய நடைமுறைகளை எதிர்த்தும் மூவரும் வழக்கு தொடர்ந்தனர். இதில் ஆணைய விசாரணைக்கு 2015 ஆம் ஆண்டில் உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.
தடையை நீக்கக்கோரி ஆணையம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், மேலும் ரகுபதி ஆணையத்தின் செயல்பாடுகளை நிறுத்தி வைக்கும் வகையில் தமிழக அரசு ஒரு வாரத்தில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். ரகுபதி ஆணையத்துக்கு வழங்கக் கூடிய நிதி மற்றும் சலுகைகள் அனைத்தையும் அரசு நிறுத்த வேண்டும் என கடந்த மாதம் உத்தரவிட்டார்.
இதனையடுத்து ஆணையத்தின் பொறுப்பிலிருந்து நீதிபதி ரகுபதி, ராஜினாமா செய்தார். புதிய நீதிபதியை நியமிக்க அரசு முடிவு செய்து உள்ளதா? என்பது குறித்து பதிலளிக்க நீதிபதி சுப்பிரமணியம் உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று (செப்டம்பர் 27) நீதிபதி எஸ் எம் சுப்ரமணியம் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் இந்த புகார்கள் தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், விசாரணை ஆணையத்தை புதிய நீதிபதியை நியமித்து புதுப்பிக்கவில்லை என்றும் தெரிவித்தார்.மேற்கொண்டு விசாரிக்க வேண்டும் என்றால் அதனை லஞ்ச ஒழிப்பு துறை மேற்கொள்ளும் என்றார்.
இதையடுத்து இந்த வழக்கு தொடர்பாக நாளை உத்தரவு பிறப்பிக்க இருப்பதாக தெரிவித்த நீதிபதி, உயர் நீதிமன்றம் ஆணையத்திற்கு எதிரானது அல்ல என்றும், நியாயமான பிரச்னைகளுக்கு ஆணையம் அமைக்கலாம் என்றும் வலியுறுத்தினார்.
அவ்வாறு அமைக்கப்படும் ஆணையங்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் விசாரணை முடிக்க வேண்டும் இதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். மேலும் அரசின் நலத்திட்டங்களை மக்கள் நலன் கருதி அமல்படுத்த வேண்டுமே தவிர, அரசியல் அடிப்படையில் இருக்கக் கூடாது என்றும் கருத்து தெரிவித்தார்.