Tamil Nadu news Covid-19 battle is harder in villages : சென்னை, கோவை உள்ளிட்ட மாநகரங்களில் கொரோனா தொற்றில் குறைவு ஏற்பட்டுள்ள நிலையில் சில ஊரக பகுதிகளில் தொற்று எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஆனைமலை, பொள்ளாச்சி, காரமடை, அன்னூர் மற்றும் சூலூர் போன்ற பகுதிகளிலும், பழங்குடிகள் வாழும் பகுதிகளிலும் நிலைமை கவலைக்கிடமாகவே உள்ளது. போதுமான சுகாதார உள்கட்டமைப்பு இந்த பகுதிகளில் குறைவாக இருக்கின்ற காரணத்தால் நோய் தொற்றினை கட்டுக்குள் கொண்டு வருவது சவாலானதாக உள்ளது.
தாளவாடி பழங்குடி கிராமங்களில் உடல்நலக் குறைவு என்றால் 60கி.மீ பயணித்து சத்தியமங்கலத்தை அடைய வேண்டும். அங்கும் போதுமான வசதிகள் இல்லை என்றால் ஈரோட்டிற்கு தான் செல்ல வேண்டும். படுக்கை வசதிகள் இல்லாத காரணத்தால் பல நேரங்களில் ஈரோட்டில் இருந்து கோவைக்கு நோயாளிகள் அழைத்துச் செல்லப்படும் நிலையும் கூட ஏற்பட்டுள்ளது.
கிராமப்புறங்களில் மக்களுக்கு போதுமான மருத்துவ சிகிச்சை வசதிகள் இல்லாத சூழலில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி போன்ற மாவட்டங்களில் இருந்து மக்கள் சேலம் போன்ற பகுதிகளுக்கு வந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். கிராமப்புறங்களில் உள்ள மருத்துவமனைகளில் போதுமான ஆக்ஸிஜன் படுக்கை வசதிகள் இல்லை.
மே 1ம் தேதி அன்று தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை மற்றும் திருச்சி மாவட்டங்களில் கொரோனா தொற்றின் எண்ணிக்கை 8325 ஆக இருந்தது. மாநிலத்தின் மொத்த பாதிப்பில் அவை 43% மட்டுமே. ஆனால் மே 31ன் போது இந்த நான்கு மாவட்டங்களில் கொரோனா தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை7898 ஆக உள்ளது. மாவட்டத்தின் மொத்த பாதிப்பில் இவை 28.2% தான். ஆனால் கிராமப்புற மற்றும் புறநகர் பகுதிகளில் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மதுரை, கோவை, மற்றும் திருச்சி மாவட்டங்களில் உள்ள கிராமப்புறங்களில் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இரண்டு வாரங்களுக்கு முன்பு மொத்த கொரோனா தொற்றில் கோவை கிராமப்புறங்களின் பங்கு 30% ஆக இருந்த நிலையில் தற்போது 45% ஆக அதிகரித்துள்ளது. முதல் கொரோனா அலையில் மிக மோசமான பாதிப்பை சந்தித்த மதுரையில் தற்போது பதிவாகும் வழக்குகளில் 40% கிராமப்புறங்களில் இருந்து உறுதி செய்யப்படுகிறது. தமிழகத்தில் மட்டும் அல்லாமல் இந்த நிலை நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் காணப்படுகிறது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பிறகு நகரங்களில் வாழும் மக்கள் தங்களின் சொந்த கிராமங்களை நோக்கி சென்றதன் விளைவாக இந்த தொற்று உயர்வு ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
குறைவான விழிப்புணர்வு, பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றாமல் இருத்தல், தனிமனித இடைவெளியை கடைபிடிக்காமல் இருத்தல் போன்ற காரணங்கள் தொற்றின் எண்ணிக்கையை மேலும் அதிகரித்துள்ளது. ஆரம்ப அறிகுறிகள் தெரியும் போதே மருத்துவமனைக்கு செல்லாமல் இருப்பதும் இந்த தொற்றின் எண்ணிக்கை அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil