Tamil Nadu news in tamil: கடந்த 2020 டிசம்பரில் தமிழகம் முழுதும் சுமார் 2000 அம்மா மினி கிளினிக் தொடங்கப்பட்டன. இதில் 1400 கிளினிக்குகள் கிராமப்புறங்களிலும், 200 சென்னை மாநகராட்சியிலும், 200 நகர்ப்புறங்களிலும், 200 நகரும் மினி கிளினிக்குகளாகவும் செயல்பட்டு வந்தன. இந்த மினி கிளினிக்குகள் காலை 9 மணி முதல் 11 மணி வரையும் மாலையில் 4 மணி முதல் 7 மணி வரையும் இயங்கி வந்தன.
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தில் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு சுகாதார பணியாளர் என மூவர் நியமனம் செய்யப்பட்டனர். சளி, காய்ச்சல், உடல் வலி என வருபவர்களுக்கு ஊசி, மாத்திரைகள் இந்த மினி கிளினிக்குகளில் வழங்கப்பட்டது. மேலும், சர்க்கரை மற்றும் ரத்த அழுத்த நோயாளிகளுக்கு மாதந்திர மருந்துகளும் இங்கு வழங்கப்பட்டன.
அம்மா மினி கிளினிக் தற்காலிகமாக மூடல்
இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்தது. இதனால் அம்மா மினி கிளினிக்கில் பணியாற்றிய மருத்துவர்கள் அனைவரும் கொரோனா தடுப்பு சிகிச்சை பணிக்கு மாற்றப்பபட்டனர். எனவே, தமிழகம் முழுவதும் இயங்கி வந்த 2000 மினி கிளினிக் தற்காலிகமாக மூடப்பட்டதாக அதே மாதத்தில் அறிவிக்கப்பட்டது.
இந்த மினி கிளினிக்குகள் தற்காலிகமாக மூடப்பட்டாலும் துணை சுகாதார நிலையங்கள் வழக்கம்போல செயல்படும் என்றும், கொரோனா தடுப்பு பணிகள் முடியும் வரை மினி கிளினிக்குகள் செயல்படாது என்றும் அப்போது தெரிவிக்கப்பட்டது.
கடந்த மே மாதம் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் முக ஸ்டாலின் தலைமையிலான திமுக பெரும்பான்மையான இடங்களை பிடித்து ஆட்சிக்கு வந்த நிலையில், 'மக்களைத் தேடி மருத்துவம்' என்கிற திட்டம் தொடங்கப்பட்டது. ஆனால், அம்மா மினி கிளினிக் திறப்பது பற்றிய அறிவிப்புகள் ஏதும் வெளியாகவே இல்லை.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் செயல்பட்ட 2000 அம்மா மினி கிளினிக்குகள் நிரந்தரமாக மூடப்படுவதாகவும், அம்மா மினி கிளினிக்கில் பணியாற்றிய 1820 மருத்துவர்களும் மார்ச் மாத இறுதி வரை கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் பின்னர் அவர்களுக்கு மாற்றுப்பணியிடம் வழங்கப்படும் என்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
அம்மா மினி கிளினிக் நிரந்தர மூடல் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்
இன்று சென்னை வேப்பேரி பெரியார் திடலில் சித்த மருத்துவ சிகிச்சை மையத்தை திறந்து வைத்து பார்வையிட்ட மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்கள் சந்திப்பில், "தமிழகம் முழுவதும் உள்ள அம்மா மினி கிளினிக்குகள் மூடப்படுகின்றன. அம்மா மினி கிளினிக்குகள் ஓராண்டு அடிப்படையில் தற்காலிகமாகவே தொடங்கப்பட்டன. அவற்றில் சிகிச்சைகள் அளிக்கப்படவில்லை. செவிலியர்கள் கூட நியமிக்கப்படவில்லை.
எனவே, தமிழகம் முழுவதும் உள்ள 2,000 மினி கிளினிக்குகளை மூட சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அதில் பணியாற்றி 1820 மருத்துவர்கள் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். பிறகு அவர்களுக்கு மாற்றுப்பணியிடம் வழங்கப்படும்." என்று தெரிவித்தார்.
எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்
இந்த நிலையில், அம்மா கிளினிக் மூடலுக்கு முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஏழை, எளிய மக்கள் கிராமப்புறங்களிலும்,நகரப் பகுதிகளிலும், தாங்கள் குடியிருக்கும் பகுதிக்கு அருகிலேயே சிகிச்சை பெறுவதற்காக அம்மா மினி கிளினிக் திட்டம் துவங்கப்பட்டது. இத்திட்டத்திற்கு மாண்புமிகு அம்மா அவர்களின் பெயர் சூட்டப்பட்டுள்ளது என்ற ஒரே அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன், இத்திட்டம் இந்த விடியா அரசால் மூடப்படுகிறது என்ற அறிவிப்பு வன்மையான கண்டனத்திற்குரியது.
ஏழை எளிய மக்களின் நலனில் அக்கறையில்லாத அரசு என்பதை இந்த விடியா அரசு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.
இத்திட்டம் இந்த விடியா அரசால் மூடப்படுகிறது என்ற அறிவிப்பு வன்மையான கண்டனத்திற்குரியது.
ஏழை எளிய மக்களின் நலனில் அக்கறையில்லாத அரசு என்பதை இந்த விடியா அரசு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.(2/2) pic.twitter.com/VjjzSJGyGY— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) January 4, 2022
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.