Tamilnadu lockdown news in tamil: தென் ஆப்பிரிக்க நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று திரிபான ஒமைக்ரான் வைரஸ், இந்தியாவில் கொரோனா 3வது அலை உருவெடுக்க முக்கிய காரணியாக உள்ளது. இந்த வைரஸ் தொற்று தமிழகம் உட்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கண்டறியப்பட்டுள்ள நிலையில், சுகாதாரத் துறைக்கு இது ஒரு புதிய சவாலாக அமைந்துள்ளது.
இதனால், தமிழகம் உட்பட பெரும்பாலான மாநிலங்களில், தினசரி கொரோனா பாதிப்பும் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நேற்று திங்கள் கிழமை 13, 990 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், 11 பேர் தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர். 2, 547 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டோர் உட்பட 62, 767 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தலைநகர் சென்னையை பொறுத்தவரை, 6,190 பேருக்கு நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டோர் உட்பட 30, 843 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதற்கிடையில், ஒமைக்ரான் வைரஸ் பரவல் காரணமாக, நாட்டில் சில மாநிலங்களில் வார நாட்களில் மற்றும் வார இறுதி நாட்களில் முழுஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி தமிழகத்திலும், டிசம்பர் 6ம் தேதி முதல் மாநிலம் முழுவதும் இரவு நேர ஊரடங்கும், டிசம்பர் 9-ந் தேதி முதல் ஞாயிற்றுகிழமைகளிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்து இருந்தது. மேலும், இந்த கட்டுப்பாட்டு நடைமுறைகள் நேற்று 10ம் தேதி வரை மட்டுமே எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தமிழகத்தில் புதிய ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசித்து முதல்வர் நடவடிக்கை எடுப்பார் என்றும், ஊரடங்கை பொறுத்தவரை பொருளாதாரமும், மக்களும் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கை இருக்க வேண்டும் என்பதில் முதல்வர் உறுதியாக உள்ளார் என்று நேற்று முன்தினம் ஞாயிற்று கிழமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில், பொங்கல் பண்டிகைக்கு பிறகு தொடர்ச்சியாக முழு ஊரடங்கிற்கு வாய்ப்பில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், “தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு பிறகு தொடர்ச்சியாக முழு ஊரடங்கிற்கு வாய்ப்பில்லை. மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக்கூடாது என்பதில் அரசு தெளிவாக உள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“