கடந்த ஆண்டு, ட்ரெம்ப் ஆட்சியின் கீழ், அமெரிக்கர்கள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறும் என்று செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் அமெரிக்க ராணுவ வீரர்கள் தற்போது ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியுள்ளனர். ஒசாமா பின்லேடன் மற்றும் அல்கொய்தா தீவிரவாதிகளை ஒழித்து 20 ஆண்டு கால பணி முடிந்ததாக அமெரிக்க பெருமிதம். தாலிபான்கள் காபூலை கைப்பற்றிய நிலையில் அங்கே பதட்டமான சூழல் நிலவி வருகிறது. தாலிபான்கள் தலைமையில் வாழ விரும்பாத பலரும் நாட்டைவிட்டு வெளியேற முயற்சி செய்து வருகின்றனர்.
15ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு
கொரோனா தொற்று தடுப்பு மற்றும் கட்டுப்பாடு தொடர்பாக தலைமை செயலகத்தில் நேற்று (30/08/2021) கூட்டம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து செப்டம்பர் 15ம் தேதி காலை 6 மணி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுமக்கள் கடற்கரைகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. வழிபாட்டு தலங்களுக்கு செல்ல வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள், தொழில் வர்த்தக நிறுவனத்தினர், வங்கி , அரசு பணியாளர்கள், சிறு வியாபாரிகளுக்கு தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர்கள், உள்ளாட்சி பொறுப்பாளர்கள் மற்றும் மருத்துவ துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பெட்ரோல் டீசல் விலை நிலவரம்
சென்னையில் பெட்ரோல் டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. பெட்ரோல் ரூ. 99.20க்கும் டீசல் ரூ. 93.52க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
தமிழக அரசின் தடையை மீறி விநாயகர் சதுர்த்தி கட்டாயம் நடத்தப்படும் என இந்து முன்னணியின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் கூறியுள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒரு விநாயகர் சிலையை வைத்து சமூக இடைவெளிவிட்டு வழிபடலாம். அதற்கு அரசாங்கம் வழிகாட்டுதல்களை வெளியிடலாம். அரசாங்கத்திடம் அனுமதி கேட்டுக்கொண்டிருகிறோம். தேவைப்பட்டால் தடையை மீறி நடக்கும் என்று கூறினார்.
புதியதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. புதிய மாவட்டங்களில் 76.59 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.
டோக்கியோ பாராலிம்பிக்கில் உயரம் தாண்டுதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு ரூ.2 கோடி ஊக்கப்பரிசு வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். முன்னதாக, பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பனுக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து கூறினார்.
தமிழகத்திற்கு 30.6 டி.எம்.சி காவிரி தண்ணீரை வழங்க
வேண்டும் என கர்நாடக அரசுக்கு காவிரி நதிநீர் மேலாண்மை அணையம் உத்தரவிட்டுள்ளது.
ஜெயலலிதா பல்கலைக்கழகம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கும் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தர்ணாவில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து, ஓ.பி.எஸ் உட்பட 63 எம்.எல்.ஏக்கள் மீது தொற்றுநோய் பரவல் தடுப்புச்சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளில் திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் மீண்டும் பதக்கம் வென்றார் மாரியப்பன் தங்கவேலு. பாராலிம்பிக் உயரம் தாண்டுதல் போட்டியில் மாரியப்பன் தங்கவேலு வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
டோக்கியோ பாராலிம்பிக் போட்டிகளில் உயரம் தாண்டுதலில் இந்திய வீரர் மாரியப்பன் பதக்கத்தை உறுதி செய்துள்ளார். இதேபோல் உயரம் தாண்டுதலில் மற்றொரு இந்திய வீரர் சரத்குமாரும் பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.
விழுப்புரம் ஜெயலலிதா பல்கலை.யை அண்ணாமலை பல்கலை.யுடன் இணைக்கும் சட்ட திருத்த மசோதா ஏகமனதாக பேரவையில் நிறைவேற்றப்பட்டது. அதிமுக, பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் மசோதா நிறைவேற்றப்பட்டது
ஜெயலலிதா பல்கலை.யை அண்ணாமலை பல்கலைக் கழகத்துடன் இணைப்பது சரியான முடிவு என காங்கிரஸ் கட்சினர், இரு கம்யூனிஸ்ட் கட்சியினர், விடுதலை சிறுத்தைகள் கட்சினர் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், “ஜெயலலிதா பல்கலை கழகத்தை அண்ணாமலை பல்கலைக் கழகத்துடன் இணைப்பது சரியானது அல்ல” என சட்ட பேரவையில் பாஜக சட்டமன்ற குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
மழைக்கால தொழில் பாதிப்பு நிதியாக உப்பளத் தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.5000 வழங்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிதுள்ளார்
பெண் பத்திரிகையாளர்கள் பணிபுரிவது குறித்து தரக்குறைவான கருத்தை பகிர்ந்த வழக்கை ரத்து செய்யக்கோரி எஸ்.வி.சேகர் தொடர்ந்த வழக்கை 1 வாரத்திற்கு ஒத்திவைத்துள்ள மதுரைக்கிளை நீதிபதி நிஷாபானு, “படிக்காமல் ஏன் forward செய்தீர்கள்? அவ்வாறு forward செய்துவிட்டு, மன்னிப்பு கேட்டால் சரியாகிவிடுமா?” என கேள்வி எழுப்பினார்.
அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன், ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த அதிமுக உறுப்பினர்கள் கலைவாணர் அரங்கம் முன்பு சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
கைது நடவடிக்கை குறித்து பேசிய அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் “அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு ஜெ. பல்கலை. இணைப்பு மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. மாநில வருவாயில் நான்கில் ஒரு பங்கை கல்விக்கு ஒதுக்கியவர் ஜெயலலிதா. உயர்கல்வி சேர்க்கை உயர்ந்ததற்கு காரணமானவர் ஜெயலலிதா. அரசியல் காழ்ப்புணர்ச்சியில் திமுக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த இணைப்பை வன்மையாக கண்டிக்கிறோம்” தெரிவித்தார்.
ஆப்கானிஸ்தானில் அமையவுள்ள தாலிபான்களின் ஆட்சியை வரவேற்றுள்ளார் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஷாஹித் அஃப்ரிடி. இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டி ஒன்றில், ''தாலிபான்கள் மிகவும் நேர்மறையான மனதுடன் ஆட்சிக்கு வந்துள்ளனர். அவர்கள் பெண்களை வேலை செய்ய அனுமதிக்கிறார்கள். தாலிபான்கள் கிரிக்கெட்டை மிகவும் விரும்புகிறார்கள் என்று நான் நம்புகிறேன்” என்று கூறியுள்ளார்.
கலைவாணர் அரங்கம் முன்பு தமிழ்நாடு கைவினை காகிதகூழ் விநாயகர் சிலைகள் மற்றும் களிமன் பொம்மைகள் தயாரிப்பு சங்கத்தினர், தொழிலாளர்கள் வங்கியில் பெறப்பட்டுள்ள கடன்களை தள்ளுபடி செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்.
சென்னை, கலைவாணர் அரங்கம் முன்பு சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக எம்.எல்.ஏ ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட அதிமுக உறுப்பினர்கள் காவல்துறை வாகனத்தில் ஏற்றிச்செல்லப்பட்டனர்.
ஒரகடம் சிப்காட்டில் 150 ஏக்கர் பரப்பளவில் மருத்துவ உபகரண தொழில் பூங்கா உருவாக்கப்படும் என்று தொழில்துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல் வெளியாகியிருக்கிறது. மேலும், ராணிப்பேட்டை, பனப்பாக்கம் தொழிற்பூங்காவில் 250 ஏக்கர் பரப்பளவில் தோல் பொருள் பூங்கா உருவாக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
டோக்கியோ பாராலிம்பிக் துப்பாக்கிச்சுடுதல் ஆண்கள் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீரர் சிங்ராஜ் அதானா வெண்கலப் பதக்கம் வென்றார். இதுவரை பாராலிம்பிக்கில் இந்தியா 8 பதக்கங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த நிலையில், அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன், ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து அதிமுக உறுப்பினர்கள் கலைவாணர் அரங்கம் முன்பு சாலையில் அமர்ந்து தர்ணா போராட்ட்டத்தில் ஈடுபட்டனர்.
உச்ச நீதிமன்றத்தில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 9 நீதிபதிகளுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார் தலைமை நீதிபதி என்.வி. ரமணா. 3 பெண் நீதிபதிகள் உட்பட 9 நீதிபதிகள் இன்று பதவி ஏற்றுக் கொண்டனர்.
அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் ஜெயலலிதா பல்கலை.யை இணைக்கும் மசோதா இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக வெளிநடப்பு செய்துள்ளது.
பள்ளி, கல்லூரிகள் அருகே போதைப் பொருள்கள் விற்பனை தடை செய்ய சட்டங்களில் உரிய திருத்தம் கொண்டு வரப்படும் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். போதைப் பொருள் விற்பனை செய்பவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்றும் கூறியுள்ளார் அவர்.
டோக்கியோ பாராலிம்பிக்ஸ் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீரர்கள் மணீஸ் நார்வல் மற்றும் சிங்ராஜ் ஆகியோர் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினர்
நாளை முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் காலை 09:30 மணி முதல் மாலை 03:30 மணி வரை, 6 நாட்களுக்கு பள்ளிகள் செயல்படும், அனைவரும் மாஸ்க் அணிந்திருக்க வேண்டும், ஒவ்வொரு வகுப்பிலும் கிருமிநாசினி பாட்டில் வைத்திருக்க வேண்டும், ஒரு நாளில் 5 வகுப்புகள் மட்டும் செயல்படும் என்று கூறியுள்ளார்.
டோக்கியோவில் நடைபெற்று வரும் பாராலிம்பிக் போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் ரூபினா பிரான்சிஸ் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று மேலும் ஒரு பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.
டோக்கியோ பாராலிம்பிக் வில்வித்தை போட்டியில் காலிறுதிக்கு முன்னேறினார் ராகேஷ்குமார். ஸ்லோவேகியா வீரர் மரியனை 140 புள்ளிகளில் வீழ்த்தி காலிறுதிக்கு அவர் தகுதி பெற்றார்.
ரியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற தடகள வீரர் மாரியப்பன் தங்கவேலு இன்று டோக்கியோவில் நடைபெறும் பாராலிம்பிக் போட்டியில் ஆடவருக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் பங்கேற்கிறார்.
பெங்களூரு, கோரமங்கலா பகுதியில் ஏற்பட்ட விபத்தில் ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷின் மகன் கருணாசாகர் உட்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழப்பு
கோவையில் துணிக்கடை, நகைக்கடை, மால்கள் மற்றும் பூங்காக்கள் ஞாயிற்றுக்கிழமை அன்று செயல்பட தடை விதித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணை முழு கொள்ளளவை எட்டியதால் உபரி நீர் வெளியேற்றம். அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 2800 கன அடியில் இருந்து 4300 கன அடியாக அதிகரிப்பு.