Tamil News Updates : மக்கள் மன்ற செயலாளர்களை சந்திக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்

தமிழகத்தில் நடைபெறும் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்

கொரோனா வைரஸ் தடுப்பூசி முகாம்கள்

மதுரையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி கையிருப்பு இல்லாத காரணத்தால் இன்று தடுப்பூசி முகாம்கள் நடைபெறாது என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. சென்னையில் இன்று தொடர்ந்து இரண்டாவது நாளாக கொரோனா தடுப்பூசி மையங்கள் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கோவையில் 65 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி இரண்டாம் டோஸ் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வரும் தடுப்பூசி மையங்களில் மூத்த குடிமக்களுக்கு மட்டும் இன்று தடுப்பூசி வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

09ம் தேதி மாலை நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஆளும் கட்சிக்கு எதிராக 6 தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது. அதில் பெட்ரோல் டீசல் விலை உயர்வு மற்றும் மேகதாது அணை தொடர்பான பிரச்சனைகள் முக்கிய இடம் பெற்றுள்ளன. இது தொடர்பாக முழுமையான செய்திகளைப் படிக்க

பெட்ரோல் டீசல் விலை உயர்வு

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 30 காசுகள் உயர்ந்து 101.67க்கு இன்று விற்பனை செய்யப்பட்டு வருகிறது. டீசல் 24 காசுகள் அதிகரித்து ரூ. 94.39க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Live Updates
7:37 (IST) 10 Jul 2021
கொங்கு நாடு முழக்கம் ஆபத்தானது – கம்யூனிஸ்ட் செயலாளர் பாலகிருஷ்ணன்

கொங்கு நாடு முழக்கம் ஆபத்தானது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், தமிழகத்தில் கொங்கு பிரதேசத்தை தனியாக பிரித்து யூனியன் பிரதேசமான மாற்ற பாஜக முயற்சி செய்வதாக குறிப்பிட்டுள்ள அவர் இதற்கு தான் கண்டனம் தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.

7:33 (IST) 10 Jul 2021
தமிழகத்தில் புதிதாக 2,913 பேருக்கு கொரோனா தொற்று

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு வெகுவாக குறைந்து வரும் நிலையில், இன்று புதிதாக 2,913 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தொற்று பாதிப்புக்கு 49 பேர் பலியாகியுள்ளனர்.

6:59 (IST) 10 Jul 2021
மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களை சந்திக்கும் ரஜினிகாந்த்

சிகிச்சை முடிந்து அமெரிக்காவில் இருந்து திரும்பிய நடிகர் ரஜினிகாந்த் மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களை ஜூலை 12ஆம் தேதி சந்திக்கிறார். இந்த சந்திப்பில், ரஜினி மக்கள் மன்ற செயல்பாடு குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

5:48 (IST) 10 Jul 2021
“ஓபிஎஸ் அண்ணன் போனில் வாழ்த்து சொன்னார்” – அண்ணாமலை

தமிழக பாஜகவின் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள அண்ணாமலைக்கு ஓபிஎஸ், போனில் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

5:47 (IST) 10 Jul 2021
ஜூலை 22 முதல் நாடாளுமன்றம் அருகே விவசாயிகள் போராட்டம்: ராகேஷ் டிக்கைட்

ஜூலை 22-ஆம் தேதி முதல் 200 பேர் நாடாளுமன்றத்திற்கு அருகே போராட்டம் நடத்துவார்கள் என பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் டிக்கைட் அறிவித்துள்ளார்.

5:18 (IST) 10 Jul 2021
விக்ரம் படத்தின் ‘பர்ஸ்ட் லுக்’ போஸ்டர் வெளியீடு!

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் ’விக்ரம்’ படத்தின் 'பர்ஸ்ட் லுக்' போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இதில் கமல் முகம் உட்பட மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் மலையாள நடிகர் பகத் பாசில் ஆகியோரின் முகங்களும் இடம் பெற்றுள்ளன.

4:52 (IST) 10 Jul 2021
‘கோவில் நிலங்களை யாருக்கும் தானமாக வழங்க சட்டத்தில் இடமில்லை’ – அமைச்சர் சேகர்பாபு.

“கோவிலுக்கு தானமாக கொடுத்த நிலங்களை யாருக்கும் தானமாக வழங்க சட்டத்தில் இடமில்லை என்று கூறியுள்ள அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு, 'கோயில் நில ஆக்கிரமிப்பாளர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது' என்று தெரிவித்துள்ளார்.

4:48 (IST) 10 Jul 2021
ஜம்மு காஷ்மீரில் 2 தீவிரவாதிகளை சுட்டுக்கொன்றது பாதுகாப்பு படை!

ஜம்மு காஷ்மீரின் ரானிபோரா பகுதியில் அத்துமீறி ஊடுருவிய 2 தீவிரவாதிகளை மத்திய பாதுகாப்பு படை சுட்டுக்கொன்றது.

4:30 (IST) 10 Jul 2021
டெல்லியில் பிரதமர் மோடியுடன் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சந்திப்பு

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் டெல்லியில் பிரதமர் மோடி சந்தித்து பேசி வருகிறார். திமுக தலைமையிலான புதிய அரசு பதவியேற்ற பிறகு முதல்முறையாக பிரதமரை சந்திக்கிறார் ஆளுநர் பன்வாரிலால் புரோகித். இந்த சந்திப்பின் போது கொரோனா சூழல், தமிழக அரசியல் குறித்து ஆலோசிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

4:14 (IST) 10 Jul 2021
வியட்நாமின் புதிய பிரதமருக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

வியட்நாம் பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ள பாம் மின் சின்னிற்கு பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியா – வியட்நாம் இடையேயான நட்புறவு தொடரும் என இருநாட்டு பிரதமர்களும் பரஸ்பரம் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

3:34 (IST) 10 Jul 2021
தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

தென்மேற்கு பருவக்காற்று தீவிரமடைந்ததன் காரணமாக கோவை, நீலகிரி, தேனி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், திண்டுக்கல், ஈரோடு, நெல்லை மாவட்டத்தில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

2:37 (IST) 10 Jul 2021
ஜூலை 18ல் இந்தியா-இலங்கை ஒருநாள் போட்டி

இந்தியா, இலங்கை இடையேயான ஒருநாள் கிரிக்கெட் தொடர் வரும் 18-ஆம் தேதி தொடங்கும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. ஜூலை 13-ம் தேதி போட்டி தொடங்கவிருந்த நிலையில் இலங்கை அணி குழுவில் கொரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டதால் தேதி மாற்றப்பட்டுள்ளது.

2:07 (IST) 10 Jul 2021
தேர்வை தள்ளி வைக்க உத்தரவு

மோட்டார் வாகன ஆய்வாளர் பணிக்கான நேர்முக தேர்வை தள்ளிவைக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1:58 (IST) 10 Jul 2021
வேலைவாய்ப்பு தொடர்பான எழுத்துத் தேர்வுகளுக்கு அனுமதி

ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் வேலைவாய்ப்பு தொடர்பான எழுத்துத் தேர்வுகள் அரசு வழங்கியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு நடத்த அனுமதி அளிக்கப்படுகிறது. இதுகுறித்த விபரங்களை தேர்வு நடத்தும் அமைப்புகள் முன்னதாக மாவட்ட ஆட்சியரிடம் தெரிவிக்க வேண்டும்.

1:51 (IST) 10 Jul 2021
திருமண நிகழ்வுகளில் 50 நபர்களுக்கு மட்டுமே அனுமதி

ஊரடங்கு தளர்வுகளில் திருமண நிகழ்வுகளில் 50 நபர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. இதேபோல், இறுதி சடங்குகளில் 20 நபர்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு. மேலும், நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர அனைத்து பகுதிகளிலும் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகளுக்கு தொடர்ந்து அனுமதி உண்டு.

1:39 (IST) 10 Jul 2021
சமுதாயம், அரசியல் சார்ந்த கூட்டங்களுக்கு தடை

சமுதாயம், அரசியல் சார்ந்த கூட்டங்களுக்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாச்சார நிகழ்வுகளுக்கும் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. உயிரியல் பூங்காக்கள், நீச்சல் குளங்களை திறக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளதோடு, அனைத்து மதுக்கூடங்கள் திறக்கவும் தடை நீட்டிக்கப்படுகிறது.

1:36 (IST) 10 Jul 2021
பள்ளி, கல்லூரிகள் திறக்க தடை நீட்டிப்பு

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் திறப்பதற்கான தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதேபோல் திரையரங்குகள் திறப்பதற்கான தடையும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

1:22 (IST) 10 Jul 2021
புதுச்சேரிக்கான பேருந்து சேவை தொடக்கம்

புதுச்சேரி தவிர பிற மாநிலங்களுக்கு தனியார் மற்றும் அரசு பேருந்து சேவைக்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரிக்கான பேருந்து சேவை மட்டும் தொடங்கப்படுகிறது.

1:20 (IST) 10 Jul 2021
உணவகம், தேநீர் கடைகள், பேக்கரிகளுக்கு இரவு 9 மணி வரை அனுமதி

ஊரடங்கு தளர்வாக, இரவு 8 மணி வர அனுமதிக்கப்பட்ட கடைகளுக்கு இரவு 9 மணி வரை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி உணவகம், தேநீர் கடைகள், பேக்கரி, நடைபாதை கடைகள், இனிப்பு, கார வகை கடைகள் இரவு 9 மணி வரை, 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்படலாம்

1:10 (IST) 10 Jul 2021
தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 19 வரை நீட்டிப்பு

தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தற்போது அமலில் உள்ள ஊரடங்கு நாளை மறுநாள் காலை 6 மணியுடன் நிறைவடைய உள்ள நிலையில், 19ஆம் தேதி காலை 6 மணி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

12:48 (IST) 10 Jul 2021
12ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல், இம்மாத இறுதிக்குள் வழங்கப்படும் -அமைச்சர் தகவல்

12ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல், இம்மாத இறுதிக்குள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

12:14 (IST) 10 Jul 2021
நாளை திமுகவில் இணைகிறார் அதிமுக முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம்

அதிமுக முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் உள்ளிட்ட 300 அதிமுக நிர்வாகிகள் நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைய உள்ளனர்.

12:12 (IST) 10 Jul 2021
அனைத்து ரேஷன் கடைகளிலும் புகார் பதிவேடு வைக்க தமிழ்நாடு அரசு உத்தரவு

அனைத்து ரேஷன் கடைகளிலும் புகார் பதிவேடு வைக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இணைய வழி புகார் அளிப்பதில் பல்வேறு சிரமங்கள் இருப்பதால் பதிவேடு முறையை கடைபிடிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

11:47 (IST) 10 Jul 2021
பிரதமர் மோடி தலைமையில், வரும் 14-ம் தேதி மத்திய அமைச்சரவை கூட்டம்

மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்ட நிலையில் வரும் 14ம் தேதி பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது

11:20 (IST) 10 Jul 2021
ஓய்வூதியதாரர்களுக்கு குடும்ப நல நிதி

ஓய்வூதியம் பெறும் நபர்களுக்கு குடும்ப நல நிதி வழங்க ரூ. 25 கோடிய்யை விடுவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 13,746 ஓய்வூதியதாரர்களின் விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளதால் முதல்கட்டமாக ரூ.25 கோடி விடுவிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

11:05 (IST) 10 Jul 2021
தங்கம் விலை அதிகரிப்பு

தங்கம் விலை இன்று சென்னையில் ஒரு சவரனுக்கு ரூ. 80 அதிகரித்து ரூ. 36,200க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 4525 ஆக உள்ளது.

10:24 (IST) 10 Jul 2021
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பேரறிவாளன்

விழுப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் வயிறு மற்றும் சிறுநீரக சிகிச்சை பெற பேரறிவாளன் அனுமதிக்கப்பட்டுள்ளார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான பேரறிவாளனுக்கு சமீபத்தில் பரோல் நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

9:43 (IST) 10 Jul 2021
அனைத்து கோவில்களிலும் மராமத்து பணிகள் நடைபெறும்

கோவில்களை பாதுகாக்க அனைத்து கோவில்களிலும் மராமத்து பணிகள் நடத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார். கோவில் சொத்துகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தால் சட்டப்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் கடந்த 5 ஆண்டுகளாக தற்காலிக பணிகளில் இருந்தவர்களுக்கு பணி நிரந்தரம் செய்யப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

9:40 (IST) 10 Jul 2021
ஸைடஸ் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி – செப்டம்பர் முதல் விநியோகம் தொடங்கும்

12 முதல் 18 வயதினருக்கான ஸைடஸ் காடிலா (Zydus Cadila) நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி விநியோகம் செப்டம்பரில் துவங்க உள்ளதாக தடுப்பூசி நிர்வாகத்திற்கான தேசிய நிபுணர் குழு அறிவித்துள்ளது. கொரோனா பரவலின் மூன்றாம் அலை, சிறுவர், சிறுமியரை அதிகம் தாக்க வாய்ப்புள்ளதாக கருதப்பட்ட நிலையில் குழந்தைகளுக்கான இந்த தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

9:37 (IST) 10 Jul 2021
கொரோனா தொற்று விகிதம்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 42,766 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 45,254 பேர் சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர். 1,206 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

9:21 (IST) 10 Jul 2021
அரசு பேருந்துகளின் ஆயுட்காலம் அதிகரிப்பு

அரசு விரைவுப் பேருந்துகளின் ஆயுட்காலத்தை அதிகரித்து அரசாணை வெளியிட்டுள்ளது தமிழக அரசு. அரசு விரைவு பேருந்துகளுக்கு 3 ஆண்டுகள் அல்லது 7 லட்சம் கி.மீ பயணம் என்று இருந்ததை மாற்றி தற்போது 7 ஆண்டுகள் அல்லது 12 லட்சம் கி.மீ என்று மாற்றப்பட்டுள்ளது.

9:19 (IST) 10 Jul 2021
பட்டிமன்ற பேச்சாளர் முனைவர் சோ.சத்யசீலன் உடல்நலக்குறைவால் காலமானார்

பட்டிமன்ற பேச்சாளர் முனைவர் சோ.சத்யசீலன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். தமிழக அரசின் கலைமாமணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றவர் அவர் என்பது குறிப்பிடத்தக்கது.

8:47 (IST) 10 Jul 2021
இந்தியாவில் கொரோனாவின் கப்பா மாறுபாட்டால் பாதிப்பு

லக்னோவில் அமைந்துள்ள கிங் ஜார்ஜ் மருத்துவ பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட முதல் கட்ட SARS-CoV-2 வைரஸ் ஜீனோம் வரிசைப்படுத்தல் ஆராய்ச்சிகளின் முடிவுகளை உத்திரபிரதேச மாநில அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்டது. மொத்தமாக ஆராயப்பட்ட 109 மாதிரிகளில் 107 மாதிரிகளில் டெல்டா மாறுபாடு இருப்பது கண்டறியப்பட்டது. மீதம் உள்ள இரண்டு மாதிரிகள் கப்பா மாறுபாட்டால் பாதிப்படைந்துள்ளது தெரிய வந்துள்ளது.

8:27 (IST) 10 Jul 2021
தமிழக ஆளுநர் டெல்லி பயணம்

தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார், இன்று அவர் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளார்.

8:24 (IST) 10 Jul 2021
யானை சில்வர் மான்ஸ்ட்ரா உயிரிழப்பு

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் அபயாரன்யம் யானைகள் முகாமில் கூண்டில் அடைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட  35 வயது ஆண் காட்டு யானை சில்வர் மான்ஸ்ட்ரா உயிரிழந்தது.

8:13 (IST) 10 Jul 2021
கேரளாவில் வார இறுதி ஊரடங்கு

கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் கேரளாவில் அதிகரித்துள்ள காரணத்தால் இன்று மற்றும் நாளை முழுமையான ஊரடங்கை அறிவித்துள்ளது அம்மாநில அரசு. தனியார் போக்குவரத்து சேவை முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மதுக்கடைகள், வணிக நிறுவனங்கள், வங்கிகள் எதுவும் செயல்படாது என்றும் அறிவிப்பு.

Web Title: Tamil nadu news live updates breaking news headlines politics dmk admk

Next Story
டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்கள் நியமனத்தை ஆளுநர் ரத்து செய்ய வேண்டும் – மு.க ஸ்டாலின்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com