Tamil Nadu news today updates : சென்னையில் ஓரிரு இடங்களில் பரவலாக மழை பெய்யத் துவங்கியதும் மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் குதித்தனர். இன்று முதல் எதிர்வரும் 6 நாட்களுக்கு நல்ல மழை இருக்கும் என்று சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்திருக்கிறது. ஆனால் அனைத்து இடங்களிலும் மழைக்கான வாய்ப்புகள் குறைவாக இருக்கின்றன என்பதையும் தெரியப்படுத்தி உள்ளனர். மழை நீர் சேகரிப்பிற்கான வழிமுறைகளை நாம் பின்பற்றினால் மட்டுமே எதிர்வரும் காலங்களில் தண்ணீர் போன்ற இன்றியமையாத தேவையின் தட்டுப்பாட்டில் இருந்து தப்பிப் பிழைக்கலாம்.
சென்னை லைவ் அப்டேட்ஸ்- ஆங்கிலத்தில் படிக்க
ஜோலார்பேட்டையில் இருந்து, தினமும், 1 கோடி லிட்டர் குடிநீர் எடுத்து வந்து, இன்னும், மூன்று வாரங்களில் வினியோகம்துவங்க, வாரியம் திட்டமிட்டுள்ளது.
சென்னையில் இன்றும் மழை உண்டு : வானிலை ஆய்வு மையம்
துாத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் தொகுதி, மானாவாரி நிலங்கள் அதிகம் உடையது. சீவலப்பேரி கூட்டுக் குடிநீர் திட்டத் தின் வழியாக, இப்பகுதிக்கு, 10 நாட்களுக்கு ஒருமுறை, தண்ணீர் வினியோகிக்கப் படுகிறது.விளாத்திகுளம் பகுதியில் உள்ள, சில கிராமங்கள், பருவ மழையால் கிடைக்கும் மழைநீரை, கண்மாய்களில் சேமித்து, ஆண்டு முழுவதும், குடிநீராக பயன்படுத்தி வருகின்றன.
Live Blog
Tamil Nadu and Chennai news today live updates of weather, traffic, fuel price, political events : சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நிகழும் முக்கிய செய்திகள் தொகுப்பினை நீங்கள் இங்கு படித்துக் கொள்ளலாம்.
தேர்தல் முடிவுகளைப் பற்றிய தங்கள் பார்வைகளை பற்றியோ, அதிமுகவின் முடிவுகளைப் பற்றியோ பொது வெளியில் கருத்துகளை கூறாமல் சிறப்புடன் பணியாற்ற வேண்டும். நம்மை அழிக்க நினைப்பவர்களுக்கு நம்முடைய சொல்லும், செயலும் உதவி செய்திடக்கூடாது என்று அறிவுறுத்தி அதிமுகவினருக்கு ஓபிஎஸ்-ஈபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அரசு பள்ளிகளில் கம்ப்யூட்டர் ஆசிரியர்களுக்கான தேர்வு ஜூன் 23 ல் நடந்தது. சர்வர் கோளாறு காரணமாக பலர் தேர்வை நிறைவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டும் ஜூன் 27 ல் மறுதேர்வு நடைபெற உள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இதன்படி திருச்செங்கோடு, கும்பகோணம், திருச்சியில் தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்வர் பழனிசாமி இன்று எழுதியுள்ள கடிதத்தில், "மேகதாது அணை கட்டுவதற்கான கர்நாடகாவின் திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும். மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கக் கூடாது" என்று வலியுறுத்தியுள்ளார்.
வருகின்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் மக்களின் தற்போதைய பிரச்சனைகளான குடிநீர் பஞ்சம் மற்றும் வேலையில்லா திண்டாட்டம் ஆகியவை குறித்து விவாதிக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார் முக ஸ்டாலின். மேலும் உடனடி கவனம் பெற வேண்டிய பிரச்சனைகள் குறித்து மக்கள் மின்னஞ்சல்கள் அனுப்பலாம் என்றும் VoiceofTN@dmk.in என்று மின்னஞ்சல் முகவரி ஒன்றையும் தன்னுடைய முகநூல் பக்கத்தில் இணைத்துள்ளார் முக ஸ்டாலின்.
நாடாளுமன்றத்தில் பேசிவரும் எம்.பி. டி.ஆர். பாலு 2014ம் ஆண்டு தேர்தலில் கொடுத்த பல வாக்குறுதிகளை பாஜக நிறைவேற்றவில்லை என்று குற்றம் சுமத்தியுள்ளார். மேலும் எதிர்க்கட்சிகளின் பலவீனத்தாலேயே பாஜக ஆட்சிக்கு வர முடிந்தது என்றும் கூறினார். நீட் தேர்வு குறித்து பேசிய அவர் மாநில பாடத்திட்டம் பயின்ற ஒரு மாணவன் சி.பி.எஸ்.இ கல்வி முறையில் அமைக்கப்பட்ட நீட் தேர்வில் எப்படி தேர்ச்சி பெற முடியும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
கோவை வெள்ளியங்கிரி மலையின் அடிவாரத்தில் 4000 வீடுகள் கட்ட எதிர்ப்பு தெரிவிக்கும் வழக்கில் தமிழக அரசு, கோவைமாவட்ட நிர்வாகம் 3 வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் மலையடிவாரத்தில் வனத்துறை, வருவாய்துறை, மாசு கட்டுப்பாட்டுவாரிய அனுமதியின்றி வீடுகள்கட்ட எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலங்களவையில் தமிழ் மக்களுக்கான பிரச்சனைகள் குறித்து இன்று தமிழக எம்.பி.க்கள் குரல் எழுப்பி வருகின்றனர். தமிழகத்திற்கு தரவேண்டிய நிலுவைத்தொகை ரூ.13,000 கோடியை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று அதிமுகவின் எம்.பி. மைத்ரேயன் மாநிலங்களவையில் இன்று பேசியுள்ளார்.
நாடு முழுவதும் 120 பல்கலைக்கழகங்களில் சமஸ்கிருத மொழிக்கு தனி பாடப்பிரிவு உள்ளதாகவும், 15 பல்கலைக்கழகங்கள் சமஸ்கிருத மொழிக்காகவே செயல்படுகின்றன என்றும் நாடு முழுவதும் 10 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் சமஸ்கிருத மொழியை ஆர்வமுடன் படித்து வருகின்றனர் என்றும் நாடாளுமன்றத்தில் மத்திய அரசு அறிக்கை சமர்பித்துள்ளது.
குடிநீர் பற்றாக்குறையைத் தீர்க்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தனியார் லாரி உரிமையாளர்கள் சேவை மனப்பான்மையுடன் பணியாற்ற வேண்டும் என்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கேட்டுக் கொண்டார்.
தண்ணீர் தட்டுப்பாடு விவகாரம் பெரும்பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், தண்ணீர் எடுத்துச்செல்ல எத்தனை லாரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது? லாரிகளில் தண்ணீர் எடுத்துச்செல்ல யார் அனுமதிக்கிறார்கள் என்ற அறிக்கையை, சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர்கள் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திமுக எம்.பி. திருச்சி சிவா இன்று மாநிலங்களவையில் பேசுகையில், ‘நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும். நீட் தேர்வுக்கு விலக்கு கோரி தமிழக அரசு நிறைவேற்றிய மசோதாக்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும். நீட் தேர்வு தோல்வியால் இதுவரை 5 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர். நீட் பயிற்சி மையங்களில் பயிற்சி பெற்ற மாணவர்கள் மட்டுமே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்’ என குறிப்பிட்டார்.
மக்களவையில் திமுக எம்.பி. கனிமொழி பேசுகையில், ‘தமிழக கோவில்களில் எத்தனை சிலைகள் உள்ளன, எத்தனை மாயமாகின என்ற தெளிவான ஆவண குறிப்புகள் எதுவும் இல்லை. எனவே சிலைகள் பற்றிய விவரங்களை அரசு ஆவணப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.
ஹைட்ரோகார்பன் கிணறுகள் தோண்ட சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதி பெற வேண்டியது கட்டாயம் என நாடாளுமன்றத்தில் இன்று மத்திய அரசு தெரிவித்தது. இந்தியா முழுவதும் இந்த ஆண்டு 705 இடங்களில் ஹைட்ரோகார்பன் கிணறுகள் தோண்டப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
ராஜராஜசோழன் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் இயக்குநர் பா.ரஞ்சித் பேசிய வழக்கில், பேச்சுரிமை என்றாலும் அதற்கு வரம்பில்லையா? - மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். வழக்கின் ஆதாரங்கள், ஆவணங்களுடன் பதில்மனு தாக்கல் செய்ய திருப்பனந்தாள் காவல் ஆய்வாளருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கர்நாடகாவில் மேகதாது அணை கட்ட சுற்றுச்சூழல் அனுமதி கோரி, அம்மாநில அரசு, மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருப்பது இரு மாநில நல்லுறவுக்கு எந்த வகையிலும் உதவிடாத ஒரு சட்ட விரோத செயல். மேகதாதுவில் புதிய அணை கட்டும் முடிவை கர்நாடக அரசு கைவிட வேண்டும்; இது தொடர்பான கர்நாடக அரசின் கடிதத்தை, மத்திய அரசு நிராகரிக்க வேண்டும். மேகதாது அணை பிரச்சினையில் தமிழக அரசு உடனடியாக உச்சநீதிமன்றத்தை அணுகி, மேகதாது அணை கட்டுவதற்கு தடை உத்தரவு பெற வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
தமிழக சட்டசபை கூ ட்டத்தொடர் ஜூன் 28ம் தேதி துவங்கி ஜூலை 30ம் தேதி வரை நடைபெறும் என சபாநாயகர் தனபால் தெரிவித்துள்ளார்.
மொத்தம் 23 நாட்கள் நடைபெற உள்ள கூட்டத்தொடரின் எல்லா நாட்களிலும் கேள்வி -பதில் நிகழ்ச்சி உண்டு.
28ம் தேதி மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்படும்.
29 மற்றும் 30 அரசு விடுமுறை
ஜூலை 1ம் தேதி - சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் மற்றும் வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை மானியம் குறித்த விவாதம்
2ம் தேதி - பள்ளிக்கல்வி மற்றும் விளையாட்டுத்துறை மானியம் குறித்த விவாதம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களவையில், ஆதார் சட்ட திருத்த மசோதாவை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தாக்கல் செய்தார். மசோதா தாக்கல் செய்தபின் அவர் பேசியதாவது, மக்கள் ஆதாரை ஏற்றுக் கொண்டுள்ளனர், மேலும் இது தனிமனித சுதந்திரத்தில் பாதிப்பை ஏற்படுத்தாது என்று கூறினார்.
காவிரி நீர் விவகாரம் தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது, காவிரி நீரை, கர்நாடகா சட்டவிரோதமாக பயன்படுத்துவதை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும். காவிரி ஆற்றில் உள்ள அனைத்து அணைகளையும் நிர்வகிக்கும் அதிகாரத்தை காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு வழங்கவேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகதத்தில் தண்ணீர் பற்றாக்குறைதான் நிலவுகிறதே தவிர, தண்ணீர் பஞ்சம் இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது, பருவமழை பொய்த்ததன் காரணமாக, மாநிலம் எங்கும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. வறட்சி மற்றும் மழைப்பொழிவு இல்லாத காரணத்தினால், சென்னை உள்ளிட்ட பலபகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது. இதனால், சென்னையில் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு உச்சகட்ட அளவை எட்டியுள்ளதாக அவர் கூறினார்.
அதிமுகவினர் தங்கள் பதவியை காப்பாற்றிக்கொள்வதற்காகவே, சமீபத்தில் யாகம் நடத்தினர். மழை பெய்து தண்ணீர் தட்டுப்பாடு பிரச்னை தீரவேண்டும் என்பதற்காக அல்ல என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.தண்ணீர் பிரச்னை விவகாரம் தொடர்பாக, சென்னை சேப்பாக்கத்தில் ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் ஸ்டாலின் பேசியதாவது, குடிநீர் பிரச்சனை திடீரென வந்தது அல்ல, இது குறித்து முன்கூட்டியே சட்டமன்றத்தில் எடுத்துரைத்தேன். பதவியை காப்பாற்றுவதற்காகவே யாகம் நடத்துகிறார்கள், தண்ணீருக்காக அல்ல . தேர்தல் வராமலேயே ஆட்சி மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. தண்ணீர் பிரச்னை முடிவுக்கு வராவிட்டால், சிறைநிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என ஸ்டாலின் கூறினார்.
தண்ணீர் பிரச்சினையை கண்டித்து, சென்னை சேப்பாக்கத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உள்பட 800க்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் பங்கேற்றனர்.திமுக எம்.பி. தயாநிதி மாறன்,எம்எல்ஏ அன்பழகன்,வி.பி.துரைசாமி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.சென்னை ஆர்ப்பாட்டத்தில் ஸ்டாலின் பேச்சு
சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்வர் பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது.
மானிய கோரிக்கையின்போது, துறை சார்ந்த புதிய அறிவிப்புகள் வெளியிடுவது, நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.
சட்டசபை கூட்டத்தொடர் வரும் 28ம் தேதி துவங்க உள்ள நிலையில், கூட்டத்தொடரை எத்தனை நாள் நடத்துவது என்பது தொடர்பாக முடிவு செய்ய சபாநாயகர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் இன்று ( ஜூன் 24ம் தேதி) நண்பகல் 12 மணிக்கு நடைபெறுகிறது. எந்தெந்த தேதிகளில் எந்தெந்த துறைகளின் விவாதம் நடைபெற வேண்டும் என்பது குறித்த முடிவும் இந்த கூட்டத்தில் எடுக்கப்பட உள்ளது.
சென்னை பூந்தமல்லி அருகே ராட்டினத்தின் ஒயர் அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டதால் மூடப்பட்ட தீம் பார்க் மீண்டும் திறக்கப்பட்டது.
சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்களின் உறுதி தன்மை குறித்த சான்றிதழை தீம் பார்க் நிர்வாகம் வழங்கியதை அடுத்து திறக்கப்பட்டது.
சட்டசபை கூட்டத் தொடர், 28-ந் தேதி தொடங்க உள்ள நிலையில், தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று நடக்கிறது. சென்னை தலைமை செயலகத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இந்த கூட்டம் காலை 10 மணி அளவில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள், பங்கேற்கின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights