Tamil Nadu news today : சென்னையில் நள்ளிரவில் ரவுடி என்கவுன்டரில் சுட்டுக்கொலை ; ரயில்வே ஊழியர்கள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே பேச வேண்டும் என்ற உத்தரவு – ரயில்வே வாபஸ், உள்ளாட்சித்துறை அமைச்சர் ராஜினாமா – ஸ்டாலின் கோரிக்கை. சென்னையில் தண்ணீர் பஞ்சம் தலை விரித்து ஆடுகிறது. சரியான மழை இல்லாததாலும், பெய்த மழையை சேகரிக்க தவறியதுமே இதற்குக் காரணம்.
இது போல் மற்ற அனைத்து தமிழக முக்கியச் செய்திகளையும் இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.
தமிழகத்தின் இன்றைய முக்கிய செய்திகளை ஆங்கிலத்தில் படிக்க..
Live Blog
Tamil Nadu and Chennai news today updates of weather, traffic, train services and airlines
தமிழகத்தின் இன்றைய முக்கிய செய்திகள்!
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே, பாரதபிரியன் என்ற மாணவன், நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால், மருத்துவ படிப்பில் சேர முடியாததால் விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. போலீசில் புகார் அளிக்காமல், உடலை அடக்கம் செய்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சட்டப் பல்கலைக்கழகத்தின் 5 ஆண்டு சட்டப் படிப்பிற்கான கட்-ஆப் மதிப்பெண் வெளியிடப்பட்டுள்ளது. மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு வரும் திங்கட்கிழமை நடைபெறும் என சட்டப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு வெதர்மேன் என்று அழைக்கப்படும் பிரதீப் ஜான், “ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் சென்னையில் மழையை எதிர்பார்க்க வேண்டாம். தண்ணீர் பிரச்சனை தீரும் என்றோ, நிலத்தடிநீர் பிரச்சனை குறையும் என்றோ எண்ண வேண்டாம்” என்று தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வறட்சிக்கு உரிய நிவாரணமும், கர்நாடகாவிடம் இருந்து காவிரி நீரை பெறுவது குறித்தும் முதல்வர், பிரதமரிடம் பேசினாரா? என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், பிரதமர் மோடி என்ன பதிலளித்தார் என்பதையும் முதல்வர், மக்களுக்கு விளக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், “தண்ணீர் இல்லாமல் பள்ளிகள், பல உணவகங்கள் மூடப்படுகிறது. அதுமட்டுமல்ல ஐ.டி கம்பெனிகள் தங்களது ஊழியர்களை இல்லத்தில் இருந்தே பணியாற்ற உத்தரவிட்டுள்ள அவல நிலைமை சென்னைக்கு வந்தது ஏன்? இதற்கெல்லாம் “ஊழலில்” நீந்தும் உள்ளாட்சித்துறை அமைச்சரிடம் உரிய பதில் இல்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.
டெல்லியில் நடந்து வரும் நிதி ஆயோக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி “2024ல் இந்திய பொருளாதாரம் 5 டிரில்லியன் டாலர் என்ற நிலையை அடைய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 5 டிரில்லியன் டாலர் என்ற இலக்கு சவாலாக இருந்தாலும் மாநிலங்களின் முயற்சியால் அதை அடைவது சாத்தியமே. வேலைவாய்ப்பு மற்றும் வருவாயை அதிகரிப்பதில் ஏற்றுமதி துறை முக்கியமானது; ஏற்றுமதியை அதிகரிப்பதில் மாநில அரசுகள் கவனம் செலுத்த வேண்டும். மக்களுக்கான திட்டங்களை நடைமுறைப்படுத்துவதே முக்கிய குறிக்கோளாக இருக்க வேண்டும். 2025க்குள் நாட்டில் காசநோயை முற்றிலும் ஒழிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு மற்றும் வருவாயை அதிகரிப்பதில் ஏற்றுமதி துறை முக்கியமானது. ஏற்றுமதியை அதிகரிப்பதில் மாநில அரசுகள் கவனம் செலுத்த வேண்டும். 2022ல் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க திட்டமிடப்பட்டுள்ளது; மத்திய அரசின் விவசாய நலத்திட்டங்கள் குறித்த நேரத்தில் விவசாயிகளை சென்றுசேர வேண்டும். ஏழ்மை, வேலைவாய்ப்பின்மை, வறட்சி உள்ளிட்டவற்றை எதிர்த்து போராட வேண்டிய தருணம் இது” என்று தெரிவித்துள்ளார்.
நடிகர் சங்க தேர்தலுக்கு பாதுகாப்பு அளிப்பது குறித்து பரிசீலனை செய்து வருவதாக, போலீஸ் கமிஷனர் தெரிவித்ததாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
அடையாரில் நடிகர் சங்க தேர்தல் நடப்பதால், எந்த வகையிலும் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலோ, பொதுமக்களுக்கு இடையூறோ ஏற்படக்கூடாது என்று கமிஷனரிடம் அளித்த மனுவில் வலியுறுத்தியிருந்ததாக விஷால் கூறியுள்ளார்.
அதிமுக அரசு எடுத்த நடவடிக்கை காரணமாக 2,400 எம்எல்டி தண்ணீர் கூடுதலாக விநியோகம் செய்யப்பட்டுள்ளது. மழை குறைவு காரணமாக நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது, தண்ணீர் இருக்கும் இடங்கள் ஆராயப்பட்டு வருகிறது . ஆந்திராவில் இருந்து கிடைக்க வேண்டிய நீரை பெற முதலமைச்சர், துணை முதலமைச்சர் பேசி வருவதாக அமைச்சர் வேலுமணி கூறியுள்ளார்.
போராட்டம் நடந்த மருத்துவமனைக்கு சென்ற முதல்வர் மம்தா பானர்ஜி, பா.ஜ., கம்யூனிஸ்ட்களின் தூண்டுதலின் காரணமாக தான் டாக்டர்கள் போராட்டம் நடத்துவதாக குறிப்பிட்டார். இதனால், கோபமடைந்த டாக்டர்கள் தங்களது போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் குடிநீர் பஞ்சம் பூதாகரமாக மாறியுள்ளதால், தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் தமிழகத்திற்கு தேவையான நிதியை, மத்திய அரசிடம் இருந்து கேட்டுப்பெற வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்
நடிகர் சங்க தேர்தல், வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. விஷால் தலைமையிலான பாண்டவர் அணியும், பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியும் களத்தில் உள்ளன. இந்நிலையில், விஷால் தொடர்பாக சரத்குமாரின் மகள் வரலட்சுமி சரத்குமார் மற்றும் ராதிகா போர்க்கொடி உயர்த்தி அறிக்கைப்போர் நடத்தி வருகின்றனர். இதனிைடயே, சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே. விஸ்வநாதனை சந்தித்த நடிகர் விஷால், அவரிடம் மனு ஒன்றை அளித்துள்ளார்.
மாநிலத்தில் நிலவும் தண்ணீர் பிரச்னையை தீர்க்கும் பொருட்டு, அரசு போர்க்கால நடவடிக்கை எடுத்து வருவதாக துணை முதல்வர் பன்னீர்செல்வம் தேனியில், பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
டில்லி சென்றுள்ள முதல்வர் பழனிசாமி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனை சந்தித்துப்பேசினார்.
முன்னதாக, முதல்வர் பழனிசாமி, பிரதமர் மோடியை சந்தித்துப் பேசியிருந்தார். இந்த சந்திப்பினிடையே, தமிழகத்திற்கான வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் நிலுவையில் உள்ள தொகைகளை வழங்கக்கோரி அறிக்கையை பிரதமரிடம் சமர்ப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சென்னை சேத்துப்பட்டு ரயில் ஸ்டேசனில், தேன்மொழி மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய சுரேந்தர் ரயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றார். படுகாயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் தேன்மொழியை பார்த்தபின் ரயில்வே டிஜிபி சைலேந்திரபாபு, சேத்துப்பட்டு ரயில் ஸ்டேசனில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது, விரைவில் அனைத்து ரயில் ஸ்டேசன்களிலும் சிசிடிவி வசதி செய்யப்படும் என்று கூறினார்.
தமிழகத்தில் போதிய மழை பெய்யதாத நிலையில் ஏற்பட்டுள்ள வறட்சியை போக்க, தேவையான நடவடிக்கையை அரசு எடுத்து வருவதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது, சென்னையில் நாள்தோறும் 80 லட்சம் பேருக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருவதாக கூறினார். சென்னையில் 9 ஆயிரம் லாரிகள் முலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருவதாகவும், நெமிலியில் 150 மில்லியன் லிட்டர் தண்ணீர் எடுக்கும் திட்டத்துக்கு விரைவில் அடிக்கல் நாட்டி பணிகளை முதலமைச்சர் தொடங்கி வைக்க உள்ளதாகவும் தெரிவித்தார். தண்ணீர் பஞ்சத்தை உணர்ந்து, குடிநீரை வீணாக்காமல் சிக்கனமாக பயன்படுத்தவும் அவர் வேண்டுகோள் விடுத்தார். விளை நிலங்களில் அரசு அனுமதி பெறாமல் குடிநீர் எடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.
சென்னை சேத்துப்பட்டு ரயில்வே ஸ்டேசனில் தேன்மொழி என்ற பெண் மீது சுரேந்தர் என்பவர் அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இதில் தேன்மொழிக்கு கழுத்து உள்ளிட்ட இடங்களில் பயங்கர வெட்டு விழுந்தது. சுரேந்தர், உடனடியாக ரயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றார். அவருக்கும் தலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காயங்கள் ஏற்பட்டுள்ளது. இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், மருத்துவமனையில் தேன்மொழியை, ரயில்வே டிஜிபி சைலேந்திரபாபு சந்தித்தார். தேன்மொழி சிகிச்சைக்காக மயக்க நிலையில் உள்ளதால், சைலேந்திரபாபு, தேன்மொழியை பார்த்துவிட்டு, அவரது தந்தையிடம் ஆலோசனை நடத்தியதாக மருத்துவமனை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல், வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. இதில் விஷால் தலைமையிலான பாண்டவர் அணியும், பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியும் போட்டியிடுகின்றன. தங்கள் அணிகளுக்கு ஆதரவை பெறும் வகையில், கமல், விஜயகாந்த் உள்ளிட்ட நடிகர்களை அவர்கள் சந்தித்து வருகின்றனர்.
இந்த தேர்தலில், தலைவர், துணைத்தலைவர், பொருளாளர், செயற்குழு உறுப்பினர்கள் என 68 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
பள்ளிகளில் தண்ணீர் பிரச்சினை குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் 24 மணி நேரத்தில் சரிசெய்யப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். பள்ளிகளில் ஏற்படும் தண்ணீா் பற்றாக் குறையை போக்க வரும் திங்கள் முதல் ஆய்வுப்பணிகள் நடைபெற உள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.
டில்லியில் பிரதமர் மோடி தலைமையில், நிடி ஆயோக்’ நிர்வாக குழுவின், ஐந்தாவது கூட்டம் இன்று ( ஜூன் 15ம் தேதி) நடைபெற உள்ளது. விவசாயம், நீர் மேலாண்மை, பாதுகாப்பு தொடர்பான விவகாரங்களை அலசி, ஆராய்ந்து, புதிய திட்டங்கள், அறிவிப்புகள் இக்கூட்டத்தின் முடிவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. இந்த கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி டில்லி சென்றுள்ளார்.
பிரபல எழுத்தாளர் ஜெயமோகனை தாக்கியதாக நாகர்கோவிலில் கடைக்காரர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலையடுத்த பார்வதிபுரத்தில் உள்ள கடையில்,, நேற்று ( ஜூன் 14ம் தேதி) இட்லி மாவு வாங்க சென்றார். மாவு அதிகம் புளித்துஇருந்ததால், கடைக்காரரிடம் அதை திருப்பியளித்தார். இதனால், கடைக்காரருக்கும், ஜெயமோகனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், கடைக்காரர்கள் மற்ற சில பேருடன் சேர்ந்து ஜெயமோகன் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். இதுதொடர்பாக, வடசேரி காவல்நிலையத்தில் ஜெயமோகன் அளித்த புகாரின் பேரில், கடைக்காரர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கேரளாவை சேர்ந்த நடிகர் வினாயகன், தலித் பெண் சமூக செயற்பாட்டாளரிடம் செல்போனில் தகாத வார்த்தைகளால் பேசியதாக கூறி 4 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். துருவ நட்சத்திரம், திமிரு, சிலம்பாட்டம் போன்ற தமிழ் திரைப்படங்களில் நடித்தவர் வினாயகன். இவர், மிருதுளா சசீதரன் என்ற இளம்பெண்ணிடம் செல்போனில் தகாத வார்த்தைகளால் பேசியதாக முகநூலில் அந்த பெண் பதிவு செய்துள்ளார். இந்நிலையில், கல்பற்றா பகுதி போலீசார், வினாயகன் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சென்னை வியாசர்பாடியில் பல கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடி வல்லரசு சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். ரவுவி வல்லரசுவை கைது செய்ய முயன்ற உதவி ஆய்வாளர்களை, வல்லரசு கத்தியால் தாக்கிவிட்டு தப்பி ஓடியதாக தகவல் வெளியாகயுள்ளது.