News Highlights : சஞ்சய் தத் மருத்துவமனையில் அனுமதி

Tamil News Live updates : தமிழகத்தின் இன்றைய முக்கியச் செய்திகள், அரசியல் நிலவரங்கள், பொதுப் பிரச்னைகள், பொழுதுபோக்கு விஷயங்கள் என அனைத்தையும் இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.

Tamil News Today Updates : கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சிகள் வேகமெடுத்துள்ள நிலையில், தடுப்பூசி விவகாரத்தை கவனிக்க தனி குழுவை, மத்திய அரசு அமைத்துள்ளது. சரியான தடுப்பூசியை இறுதி செய்வது, அதை வாங்குவது, அதற்கான நிதியை ஒதுக்குவது, நம் நாட்டுக்கு கொண்டு வருவது, பாதுகாத்து வைத்திருப்பது,மக்களுக்கு செலுத்துவது வரையிலான அனைத்தையும் இந்தக் குழு கவனிக்கும். ‘நிடி ஆயோக்’ அமைப்பைச் சேர்ந்த, டாக்டர் வி.கே.பால் தலைமையில், இந்த சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் பொது முடக்கம் காரணமாக தமிழகத்தில் அனைத்து மாநகராட்சிகளிலும் உள்ள கோயில், தேவாலயம், மசூதி ஆகிய வழிபாட்டு தளங்கள் மூடப்பட்டு இருந்தது. இந்த நிலையில், தமிழக முதல்வர் பழனிசாமி சென்னை உள்ளிட்ட மாநகராட்சி பகுதிகளில் 10 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் உள்ள சிறிய கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகளை ஆகஸ்ட் 10ம் தேதி முதல் பொதுமக்கள் வழிபாடுகளுக்காக திறக்க அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார். மேலும், மாவட்ட ஆட்சியர்களின் அனுமதி பெற்று பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கலாம் என அறிவுறுத்தியுள்ளார்.

அதே போல, நாளை மறுநாள் முதல் தமிழகம் முழுவதும் ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகள் செயல்பட அனுமதி அளித்துள்ள தமிழக அரசு நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தியுள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசின் வழிமுறைகளை தீவிரமாக கடைபிடிக்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழகம், குஜராத், கர்நாடகா, தெலங்கானா ஆகிய 4 மாநிலங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Live Blog

சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.


22:51 (IST)08 Aug 2020

சஞ்சய் தத் மருத்துவமனையில் அனுமதி

மும்பை லீலாவதி மருத்துவமனையில்  பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்  அனுமதிக்கப்பட்டார்.  இதயக் கோளாறு மற்றும் சுவாசப் பிரச்னையில் அவதிப்பட்ட அவர்,   தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சஞ்சய் தத்தின் உடல்நிலை, சீராக உள்ளது என மருத்துவர்கள் தெரிவித்தனர்.  

21:38 (IST)08 Aug 2020

தமிழக மருத்துவர்களின் இறப்பு எண்ணிகையை வெளியிட வேண்டும் – ஸ்டாலின் கோரிக்கை

 தமிழக மருத்துவர்களின் இறப்பு எண்ணிகையை வெளியிட வேண்டும் என்று திமுக  தலைவர் மு.க  ஸ்டாலின் கோரிக்கை  விடுத்துள்ளார். இதுகுறித்து, தனது ட்விட்டர் பக்கத்தில், ” தமிழகத்தில் 43 மருத்துவர்கள் கொரோனா பெருந்தொற்றால்  இறந்தார்கள் என்ற செய்தியை சுகாதார துறை அமைச்சர் விஜய பாஸ்கர் மறுத்தார். இந்தியாவில் 196 மருத்துவர்கள் இறந்திருப்பதாக IMAIndiaOrg தற்போது தெரிவித்திருக்கிறது.  இதில் தமிழக மருத்துவர்களின் எண்ணிக்கையை அமைச்சர் அறிவிப்பாரா?” என்று பதிவிட்டுள்ளார்.  

21:20 (IST)08 Aug 2020

ராஷ்ட்ரீய ஸ்வச்தா கேந்திராவை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

தூய்மையான பாரதம் திட்டத்தில் அனுபவங்களை கலந்தாடல் செய்யும் மையமான ராஷ்ட்ரீய ஸ்வச்தா கேந்திராவை புதுடெல்லி ராஜ்காட்டில் பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார்.  

19:56 (IST)08 Aug 2020

கொரோனா பெருந்தொற்று – மத்திய சுகாதார அமைச்சகம் செய்திக் குறிப்பு

கொரோனாவிலிருந்து குணமடைவோர் வீதம் தொடர்ந்து அதிகரித்து தற்போது 68.32%-மாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 48,900 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நாட்டில் தற்போது 6,19,088 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுவோர் வீதம் 29.64%-மாக உள்ளது.

இந்தியாவில் கொரோனாவிலிருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 14.2 லட்சத்தை தாண்டியது. உலகளவில் ஒப்பிடுகையில், இந்தியாவில் பாதிப்பு மிக குறைவாக ஒரு மில்லியன் பேருக்கு 1469 என்ற அளவில் உள்ளது.

 

19:43 (IST)08 Aug 2020

பழனி திமுக எம்.எல்.ஏ ஐ.பி. செந்தில் குமாருக்கு கொரோனா தொற்று

பழனி திமுக எம்.எல்.ஏ ஐ.பி. செந்தில் குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.   

18:41 (IST)08 Aug 2020

தமிழகத்தில் புதிதாக 5883 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் இன்று மட்டும் 5,883 பேருக்கு  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, மாநிலத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,90,907 ஆக அதிகரித்தது  .

18:28 (IST)08 Aug 2020

அண்ணா அவர்களின் கொள்ளு பேத்தி UPSC தேர்வில் வெற்றி – ஸ்டாலின் வாழ்த்து

UPSC தேர்வில் வெற்றி பெற்ற பேரறிஞர் அண்ணா அவர்களின் கொள்ளு பேத்தி ராணி அவர்களுக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார். மேலும், பேரறிஞர் அண்ணா போல் இந்திய ஒன்றியத்துக்கே வழிகாட்டும் வகையில் மென்மேலும் உயர வேண்டும் என வாழ்த்து மடல் எழுதியுள்ளார்.

18:27 (IST)08 Aug 2020

மு.க ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம்

புதிய கல்விக் கொள்கையில் திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டுமென்று வலியுறுத்தி திமுக தலைவர் மு க ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

17:03 (IST)08 Aug 2020

1 லட்சம் கோடி ரூபாய்க்கான நிதித் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி நாளை வெளியிடுகிறார்

வேளாண் உள்கட்டமைப்பு நிதித் திட்டத்தின் கீழ் (ரூ. 1 லட்சம் கோடி நிதி உதவித் திட்டம்), ஆகஸ்ட் 9 ஆம் தேதி காலை 11 மணிக்கு காணொளிக் காட்சி மூலம் 1 லட்சம் கோடி ரூபாய்க்கான நிதித் திட்டங்களை பிரதமர் திரு. நரேந்திர மோடி வெளியிடுகிறார். மேலும் பிரதமர், ஆறாவது தவணையாக 17,000 கோடி ரூபாய் நிதியை 8.5 கோடி விவசாயிகளுக்கு PM-KISAN திட்டத்தின் கீழ் வெளியிடுகிறார், இந்நிகழ்ச்சி நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான விவசாயிகள், கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் மக்களின் முன்னிலையில் நடைபெறும்

16:59 (IST)08 Aug 2020

86 குடியிருப்புகள் இருந்தது

உயிரிழந்த அனைவரும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் என தெரியவந்துள்ளது. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் 86 குடியிருப்புகள் இருந்ததாக கேரள மாநில வனத்துறையினர் தெரிவித்தனர்.

16:59 (IST)08 Aug 2020

நிலச்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 29ஆக அதிகரித்தது

கேரள மாநில இடுக்கி மாவட்டத்தில் மூணாறு அருகே, ராஜமலையில் ஏற்பட்ட நிலச்சரிவில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 29ஆக அதிகரித்துள்ளது. 4 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். அந்தப் பகுதியில் இடிபாடுகளுக்கு இடையே 29 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மீட்புப் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினரும், மாநில தீயணைப்புப் படையினரும் ஈடுபட்டுள்ளனர்.

16:55 (IST)08 Aug 2020

தூய்மை பாரத இயக்கம் விழிப்புணர்வு மையம்

தூய்மை பாரத இயக்கம் தொடர்பான விழிப்புணர்வு மையத்தை பிரதமர்  நரேந்திர மோடி இன்று புதுதில்லியில் திறந்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், தில்லியைச் சேர்ந்த 36 பள்ளி மாணவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். அவர்களுடன் பிரதமர் கலந்துரையாடவுள்ளார்.
திறந்தவெளி கழிப்பிடத்திலிருந்து பொதுமக்களை விடுவித்து, சுகாதார பழக்கத்தை ஏற்படுத்தும் வகையில், தூய்மை பாரதம் இயக்கம் தொடங்கப்பட்டது. தூய்மை பாரத திட்டத்தின் செயல்பாடுகளை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில், இந்த மையத்தில் ஒலி ஒளி காட்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

15:51 (IST)08 Aug 2020

கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தார் நடிகர் அபிஷேக் பச்சன்

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் அபிஷேக் பச்சன் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினார்.

இது குறித்து அபிஷேக் பச்சன் தனது ட்விட்டர் பக்கத்தில், “இன்று பிற்பகல் கொரோனா பரிசோதனையில் கோவிட் -19 நெகடிவ் என்று பரிசோதனை முடிவு வந்தது. கொரோனாவை நான் வெல்வேன் என்று சொன்னேன். எனக்கும் எனது குடும்பத்துக்காக நீங்கள் செய்த பிரார்த்தனைகளுக்கு அனைவருக்கும் நன்றி. நானாவதி மருத்துவமனையின் மருத்துவர்கள் மற்றும் நர்சிங் ஊழியர்களுக்கு அவர்கள் செய்த எல்லாவற்றிற்கும் எனது மனப்பூர்வமான நன்றி.” என்று தெரிவித்துள்ளார்.

14:56 (IST)08 Aug 2020

துரைமுருகன் அதிமுகவிற்கு வர அமைச்சர் ஜெயகுமார் அழைப்பு

அமைச்சர் ஜெயக்குமார்: “திமுக பொதுச் செயலாளர் பதவி கிடைக்காததால் துரைமுருகன் வருத்தத்தில் இருக்கிறார். துரைமுருகன் அதிமுகவிற்கு வந்தால் நிச்சயமாக நல்ல முடிவு எடுக்கப்படும். அதிமுக ஒரு ஆலமரம். அதிருப்தியில் உள்ள திமுகவினர் யார் வந்தாலும் நிழல் கொடுக்கும். துரைமுருகன் அதிமுகவுக்கு வந்தால் சிவப்பு கம்பளம் போட்டு வரவேற்க தயாராக உள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.

14:42 (IST)08 Aug 2020

தஞ்சை அரசு மருத்துவமனைக்கு ஜோதிகா ரசிகர் மன்றம், அகரம் சார்பில் ரூ.25 லட்சம் நிதியுதவி

தஞ்சை அரசு மருத்துவமனைக்கு ஜோதிகா ரசிகர் மன்றம் மற்றும் அகரம் சார்பில் ரூ.25 லட்சம் நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது. தஞ்சை அரசு மருத்துவமனைக்கு தேவையான உபகரணங்களும் நடிகை ஜோதிகா சார்பில் அமைச்சர் விஜயபாஸ்கரிடம் வழங்கப்பட்டது.

14:04 (IST)08 Aug 2020

நீலகிரி மாவட்டத்துக்கு ‘ரெட் அலெர்ட்’ – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

தென்மேற்குப் பருவக்காற்று தீவிரத்தால் அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டத்தில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதால் வானிலை ஆய்வு மையம் ரெட் அலெர்ட் அறிவித்துள்ளது. மேலும், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், திருவாரூர், வேலூர்,தஞ்சை, நாகை மாவட்டங்களிலும் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

13:54 (IST)08 Aug 2020

கேரளா விமான விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி- மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அறிவிப்பு

கேரளா விமான விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சமும் நிதியுதவி வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அறிவித்துள்ளார்.

13:49 (IST)08 Aug 2020

கேரளா மூணாறு நிலச்சரிவில் உயிரிழந்தவர்களில் தமிழகத்தைச் சேர்ந்த 8 பேர் பலி

கேரளாவில் பெய்துவரும் கனமழையால் மூணாறு பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி 22 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில், மூணாறு நிலச்சரிவில் சிக்கி நெல்லை மாவட்டம் பிள்ளையார் கோவிலைச் சேர்ந்த 8 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

13:21 (IST)08 Aug 2020

கேரளா விமான விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மு.க.ஸ்டாலின் ஆறுதல்

கேரளா விமான விபத்து துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்துக் கொள்வதோடு, காயமடைந்தவர்கள் விரைந்து நலம் பெற விழைகிறேன் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

12:57 (IST)08 Aug 2020

இ-பாஸ் வழங்க லஞ்சம் பெறும் அதிகாரிகளை இரும்புக் கரம்கொண்டு ஒடுக்க ஐகோர்ட் அறிவுறுத்தல்

இ-பாஸ் வழங்க லஞ்சம் பெறும் அதிகாரிகளை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். ரத்த தாகம் கொண்ட ஓநாய்கள் போல செயல்பட்டு ஊழல் செய்கின்றனர் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

12:26 (IST)08 Aug 2020

கேரளா விமான விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ஓ.பி.எஸ் இரங்கல்

தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கோழிக்கோடு விமான விபத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “கேரள மாநிலம் கோழிக்கோடில் துபாயில் இருந்து வந்த ஏர் இந்தியா விமானம், தரையிறங்கும்போது தடுமாறி எதிர்பாராமல் விலக்விபத்துக்குள்ளாகிய செய்தி அறிந்து அதிர்ச்சியும் துயரமும் அடைந்தேன். இக்கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்து சிகிச்சை பெறுபவர்கள் விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

12:13 (IST)08 Aug 2020

கேரளாவில் மூணாறு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ஓ.பி.எஸ். இரங்கல்

தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது டிவிட்டர் பக்கத்தில் , “கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் பெய்துவரும் கன மழையால் மூணாறு அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பலர் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன். இத்துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

12:04 (IST)08 Aug 2020

ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பித்து எளிதாக இ-பாஸ் பெறலாம் – சென்னை மாநகராட்சி ஆணையர்

ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பித்து எளிதாக இ- பாஸ் பெறலாம் என்று – சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். மேலும், புரோக்கர்கள், தனி நபர்களை பொதுமக்கள் நாட வேண்டாம். சென்னையில் கொரோனா தடுப்பு பணி 3 அல்லது 4 மாதங்களுக்கு தொடர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

11:42 (IST)08 Aug 2020

கேரளா விமான விபத்து; கருப்பு பெட்டி கிடைத்தது

கேரளாவில் கோழிக்கோடு விமான நிலையத்தில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் நேற்று விபத்துக்குள்ளானது. விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டி கிடைத்துள்ளது. விபத்தின்போது விமானத்தில் நடந்த நிகழ்வுகள்
கருப்பு பெட்டியில் பதிவாகியிருக்கும். விமான விபத்துக்கு மோசமான வானிலை காரணமா?, விமான சக்கரம் சுழலாதது விபத்துக்கு காரணமா என்று தீவிர விசாரணை நடைபெற்றுவருகிறது.

11:34 (IST)08 Aug 2020

கேரளா: மூணாறு நிலச்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 22ஆக உயர்வு

கேரளாவில் பெய்த கனமழையால் மூணாறு ராஜமலை பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. நிலச்சரிவில் காணாமல் போனவர்கள் 33 பேர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் 15 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

11:31 (IST)08 Aug 2020

கேரள விமான விபத்தில் உயிரிழந்த ஒருவருக்கு கொரோனா; பயணிகளை தனிமைப்படுத்த அமைச்சர் உத்தரவு

கேரள விமான விபத்தில் உயிரிழந்தவர்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று; பயணிகள் அனைவரையும் தனிமைப்படுத்த கேரள சுகாதார அமைச்சர் ஷைலஜா உத்தரவிட்டுள்ளார். விமான விபத்து ஏற்பட்ட ஓடுதளத்திற்கு அருகில் உள்ள கொண்டட்டி கிராமம் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

10:49 (IST)08 Aug 2020

சென்னையில் உள்ள அம்மோனியம் நைட்ரேட்டை ராணுவ கிடங்கிற்கு மாற்ற திட்டம்

சென்னையில் உள்ள அம்மோனியம் நைட்ரேட்டை குடியிருப்புகள் இல்லாத ராணுவத்துக்கு சொந்தமான வெடிப்பொருள்கள் பாதுகாப்பு கிடங்கிற்கு மாற்ற முடிவெடுக்கப்பட்டுள்ளது. சென்னை காவல் ஆணையர், வெடிப்பொருள் பாதுகாப்பு அதிகாரிகள், சுங்கத்துறை இணை ஆணையர் உள்ளிட்டோர் பங்கேற்ற இந்த முடிவு எடுக்கப்பட்டது.

10:34 (IST)08 Aug 2020

கோழிக்கோடு விமான விபத்து; முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்

கேரள மாநிலம், கோழிக்கோடு விமான நிலையத்தில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விபத்துக்குள்ளானதில் 18 பேர் உயிரிழந்தனர். இந்த விமான விபத்து சம்பவத்துக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். விமான விபத்தில் உறவுகளை இழந்தவர்களுக்கு அதனை தாங்கும் சக்தியை இறைவன் கொடுக்க வேண்டும் என்றும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று முதலமைச்சர் பழனிசாமி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

10:09 (IST)08 Aug 2020

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 48,900 பேருக்கு கொரோனா தொற்று

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 48,900 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 20,27,074லிருந்து 20,88,611ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில், கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 13.78 லட்சத்திலிருந்து 14.27 லட்சமாக உயர்ந்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 41,585லிருந்து 42,518ஆக அதிகரித்துள்ளது என்று சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

10:01 (IST)08 Aug 2020

விமான விபத்து; உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரார்த்தனைகள்; ஏ.ஆர்.ரஹ்மான் ட்வீட்

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கும் போது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்காக பிரார்த்திப்பதாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

சென்னை உள்ளிட்ட மாநகராட்சி பகுதிகளில் 10 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் உள்ள சிறிய கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகளை ஆகஸ்ட் 10ம் தேதி முதல் பொதுமக்கள் வழிபாடுகளுக்காக திறக்க அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், மாவட்ட ஆட்சியர்களின் அனுமதி பெற்று பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கலாம் என முதல்வர் பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil nadu news today live coronavirus flight accident tamil nadu e pas nep 2020 modi

Next Story
சென்னையில் 1000க்கு கீழ் சென்ற கொரோனா பாதிப்பு – 119 பேர் பலி
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com