News Highlights: பரிசோதனையை அதிகரிப்பதே சிறந்த வழி- டாக்டர் சௌமியா சாமிநாதன்

மருத்துவ படிப்பில் அகில இந்திய இட ஒதுக்கீட்டில் ஓபிசி பிரிவினருக்கு 50% ஒதுக்கீடு அளிப்பதைப் பற்றி 3 மாதங்களில் முடிவெடுக்க வேண்டுமென, மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

By: Jul 29, 2020, 7:18:22 AM

Tamil News :  கோவிட்-19 நோய் தொற்றை வெற்றிகரமாக கட்டுப்படுத்துவதற்கு பரிசோதனையை அதிகரிப்பதுதான் மிகச்சிறந்த வழி என்று உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி டாக்டர் சௌமியா சாமிநாதன் தெரிவித்துள்ளார். மருத்துவ படிப்பில் அகில இந்திய இட ஒதுக்கீட்டில் ஓபிசி பிரிவினருக்கு 50% ஒதுக்கீடு அளிப்பதைப் பற்றி 3 மாதங்களில் முடிவெடுக்க வேண்டுமென, மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஓபிசி இட ஒதுக்கீடு குறித்த இந்த தீர்ப்பை, திமுக, அதிமுக, மதிமுக, பாஜக உள்ளிட்ட தமிழக கட்சிகள் வரவேற்றுள்ளன. கவச உடைகள் தயாரிப்பதில் இந்தியா 2-ம் இடத்தில் இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். கொரோனாவை தடுக்கும் முகக் கவசங்களை இலவசமாக விநியோகிக்கும் திட்டத்தினை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார். இதற்கு ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் டோக்கன் விநியோகம் செய்யப்பட்டு, 5-ம் தேதி முதல் ரேஷன் கடைகளில் பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு குடும்பத்திற்கும் கொரோனா நிவாரணத் தொகையாக ரூ.5000 வழங்க வலியுறுத்தி திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளன. கேரள தங்கக் கடத்தல் விவகாரம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வரும் என்.ஐ.ஏ, முன்னாள் முதன்மை செயலர் சிவசங்கரனிடம் 9 மணி நேரம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியது. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவு புதிய உச்சமாக ஒரே நாளில் 6993 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மொத்த பாதிப்பு 2.20-ஐக் கடந்தது.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Live Blog
சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
22:12 (IST)28 Jul 2020
நாளை மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்தவுள்ளார்

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு தொடர்பாக முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி நாளை காணொலி காட்சி வாயிலாக மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார். இந்த நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்துவற்காக பிறப்பிக்கப்ப்ட்ட ஊரடங்கு வரும் வெள்ளிக்கிழமை முடிவடையவுள்ள நிலையில், அவர் இந்த ஆலோசனையை மேற்கொள்கிறார்.

21:57 (IST)28 Jul 2020
கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு பரிசோதனையை அதிகரிப்பதுதான் மிகச்சிறந்த வழி : சௌமியா சாமிநாதன்

கோவிட்-19 நோய் தொற்றை வெற்றிகரமாக கட்டுப்படுத்துவதற்கு பரிசோதனையை அதிகரிப்பதுதான் மிகச்சிறந்த வழி என்று உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி டாக்டர் சௌமியா சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

தற்போது இந்தியா நாள் ஒன்றுக்கு 5.5 லட்சம் பரிசோதனைகளை மேற்கொள்வதாகவும், இது வெகு விரைவில் 10 லட்சமாக அதிகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, நோய் தொற்றை கட்டுப்படுத்துவதற்கான ஒரு சிறப்பான முயற்சி என்றும் டாக்டர் சௌமியா குறிப்பிட்டுள்ளார்.

20:58 (IST)28 Jul 2020
அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா சிகிச்சை மையங்கள் - தமிழக அரசு அரசாணை

சென்னையைத்  தவிர்த்து அனைத்து மாவட்டங்களிலும்  கொரோனா சிகிச்சை மையங்கள் அமைக்க  ரூ.69 கோடி ஒதுக்கி  தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.    

20:30 (IST)28 Jul 2020
ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்ததாக மூன்று தனியார் நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு

600 கோடி ரூபாய் அளவிற்கு ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்ததாக மூன்று தனியார் நிறுவனங்களுக்கு எதிராக சரக்கு மற்றும் சேவை வரி புலனாய்வுப் பிரிவு தலைமை இயக்குநரகம் வழக்குப் பதிவு செய்துள்ளது.


Fortune Graphics Limited, Rema Polychem Pvt. Ltd., Ganpati Enterprises ஆகியவை இந்த 3 நிறுவனங்கள் ஆகும்.
பொருட்களை விநியோகம் செய்யாமல், போலியாக பில்களை தயார் செய்து வரி ஏய்ப்பு செய்ததாக இந்த நிறுவனங்கள்மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.


இந்த வழக்கு தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், சரக்கு மற்றும் சேவை வரி புலனாய்வுப் பிரிவு தலைமை இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

19:52 (IST)28 Jul 2020
தமிழர்களை காலம் காலமாக ஒதுக்குகின்றனர்: ஏ.ஆர் ரகுமான் குறித்து கருணாஸ்

தமிழர்களை ஒதுக்கி வைப்பது காலம் காலமாக நடந்து வரும் செயல் என்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பிரச்னை தொடர்பாக நடிகரும், எம்.எல்.ஏ- வுமான கருணாஸ் கருத்து தெரிவித்தார்.

முன்னதாக, ரேடியோ மிர்ச்சியில் பேசிய ஏ.ஆர்.ரஹ்மான், “ நான் நல்ல திரைப்படங்களை வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால். என்னை வேண்டாம் என்று சொல்ல ஒரு கும்பல் இருப்பதாக நான் நினைக்கிறேன். அந்த கும்பல் தவறான புரிதல்களால் சில தவறான வதந்திகளை பரப்புகிறது," என்று தெரிவித்தார்.  

19:44 (IST)28 Jul 2020
15 வயது சிறுமியை பாலியல் வல்லுறவு: நஞ்சில் முருகேசன் மீது வழக்குப் பதிவு

நாகர்கோயில் முன்னாள்  அதிமுக எம்.எல்.ஏ நஞ்சில் முருகேசன் மீது இன்று (ஜூலை 28) 15 வயது சிறுமியை பாலியல் வல்லுறவு செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இந்த சம்பவம் நிகழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது. 

நேற்று, நஞ்சில் முருகேசன் அதிமுக கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக பன்னீர்செல்வம் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.     

19:32 (IST)28 Jul 2020
அறிக்கைகளை வெளியிடுவதைத் தவிர்ப்பது முறையாக இருக்கும் - இந்திய தேர்தல் ஆணையம்

ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் திரு. ஜி.சி.முர்முவை மேற்கோள் காட்டி, ‘’தொகுதி வரையறைக்குப் பின்னர் ஜம்மு காஷ்மீரில் தேர்தல்’’ என வெளியான செய்திகளை இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிக்கை மறுத்துள்ளது.

தேர்தல் நேரம் உள்ளிட்ட அரசியல் சாசன விஷயங்கள் முற்றிலும் இந்திய தேர்தல் ஆணையத்தின் வரம்புக்கு உட்பட்டது என துணைநிலை ஆளுநருக்கு நினைவூட்ட விரும்புவதாக ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

தேர்தல் நடைபெறவுள்ள மாநிலத்துக்கு தேர்தல் ஆணையம் பயணம் மேற்கொண்டு, சம்பந்தப்பட்ட அனைத்து பிரிவினருடனும் விரிவான ஆலோசனைகளை நடத்தும். தேர்தல் ஆணையத்தின் அரசியல் சாசன உரிமையில் தலையிடுவதற்கு ஒப்பானது என்பதால், தேர்தல் ஆணையம் தவிர பிற அதிகார அமைப்புகள், இதுபோன்ற அறிக்கைகளை வெளியிடுவதைத் தவிர்ப்பது முறையாக இருக்கும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

19:27 (IST)28 Jul 2020
கொரோனா இறப்பு விகிதம் 2.24%

19:26 (IST)28 Jul 2020
இந்தியாவில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைவோர் விகிதம் 64,24%

இந்தியாவில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை 64,24  விகிதமாக உள்ளது.  

19:22 (IST)28 Jul 2020
வெளிநாடுகளில் மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து வந்த 64 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் வெளிநாடுகளில் மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து வந்த 64 பேருக்கு இன்று கொரோனா  தொற்று கண்டறியப்பட்டது 

19:21 (IST)28 Jul 2020
வங்கிசாரா நிதி நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் நாளை பிரதமர் ஆலோசனை

பிரதமர் நரேந்திரமோடி வங்கி மற்றும் வங்கிசாரா நிதி நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் நாளை மாலை ஆலோசனை நடத்துகிறார். நிதித்துறையில் மேற்கொள்ள வேண்டிய எதிர்கால நடவடிக்கைகள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.

18:25 (IST)28 Jul 2020
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,972 பேருக்கு கொரோனா; 88 பேர் பலி

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,972 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 2,67,288ஆக உயர்ந்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

18:11 (IST)28 Jul 2020
நடிகை வனிதா மீது சென்னை போரூர் போலீசார் வழக்குப்பதிவு

நடிகை வனிதா ஐயப்பன்தாங்கலில் உள்ள குடியிருப்பில் கொரோனா காலத்தில் அனுமதியின்றி நிகழ்ச்சி நடத்தியதாக, அடுக்குமாடி குடியிருப்பு சங்க பொதுச் செயலாளர் நிஷாதோட்டா புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் நடிகை வனிதா மீது போரூர் போலீசார் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

18:00 (IST)28 Jul 2020
இந்தியாவுக்கு வரும் ரஃபேல் போர் விமானம் புகைப்படம் வெளியானது

ரஃபேல் போர் விமானம் இந்ந்தியாவுக்கு வரும் வழியில் அம்பாலாவில் வானில் எரிபொருள் நிரப்பியபோது எடுக்கப்பட்ட புகைப்படம்ரஃபேல் போர் விமானம் பிரான்ஸில் இருந்து இந்தியாவுக்கு வரும் வழியில் அம்பாலாவில் வானில் எரிபொருள் நிரப்பியபோது எடுக்கப்பட்ட படம் வெளியாகி உள்ளது.

17:45 (IST)28 Jul 2020
சாத்தான் குளம் வழக்கு; சிபிஐ விசாரணை நிலையறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் சிபிரை விசாரணை தொடர்பான நிலையறிக்கையை சீலிட்ட கவரில் தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. சாத்தான்குளம் வழக்கை விசாரித்து வரும் சிபிஐ அதிகாரிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதால் விசாரணை தற்காலிகமாக முடங்கியுள்ளது. உயிரிழந்த ஜெயராஜின் மனைவி இந்த வழக்கில் தங்களை எதிர் மனுதாரர்களாக சேர்க்க கோரிக்கை வைத்துள்ளார்.

17:32 (IST)28 Jul 2020
ரஜினிகாந்த் இ-பாஸ் பெற்றே கேளம்பாக்கம் சென்றுள்ளார் - சென்னை மாநகராட்சி ஆணையர்

சென்னையில் கொரோனா பரிசோதனை வாகனங்களை தொடங்கி வைத்த பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “நடிகர் ரஜினிகாந்த் உரிய முறையில் இ.பாஸ் பெற்றே கேளம்பாக்கம் சென்றுள்ளார். செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகத்திடம் இ-பாஸ் பெற்று கேளம்பாக்கம் சென்றது ஆய்வில் தெரியவதுள்ளது. சென்னையில் மூன்று மடங்கு கொரோனா பரிசோதனையை அதிகரித்தது திருப்புமுனையாக அமைந்துள்ளது. சென்னையில் கொரோனா வைரஸ் பரிசோதனை நாள் ஒன்றுக்கு 12,000 பரிசோதனைகள் செய்யப்படுகிறது.” என்று கூறினார்.

17:04 (IST)28 Jul 2020
ஊழல் வழக்கில் மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்குக்கு 12 ஆண்டுகள் சிறை

ஊழல் உள்ளிட்ட 7 வழக்குகளில் மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு மலேசிய நீதிமன்றம் 12 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

16:50 (IST)28 Jul 2020
விருதுநகர் மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் 610 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

விருதுநகர் மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் 610 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 41 சிறுவர்கள், 13 கர்ப்பிணிகள் உள்பட மொத்தம் இன்று 610 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 7,545-ஆக உயர்ந்துள்ளது.

16:45 (IST)28 Jul 2020
மேற்குவங்கம் மாநிலத்தில் ஆகஸ்ட் 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு - முதல்வர் மம்தா பானர்ஜி

மேற்குவங்கம் மாநிலத்தில் ஆக.31ஆம் தேதி வரை வாரத்தில் 2 நாட்கள் மட்டுமே பொதுமுடக்கம் கடைபிடிக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

16:27 (IST)28 Jul 2020
சென்னையில் மழை!

சென்னையில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.  மேடவாக்கம், செம்பாக்கம், பல்லாவரம், பம்மல், மீனம்பாக்கம், கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், தியாகராயநகர், தாம்பரம், பெருங்களத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. 

16:07 (IST)28 Jul 2020
என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை!

திருச்சியில் என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை' கேரள தங்கக்கடத்தல் விவகாரம் தொடர்பாக திருச்சியில் என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றன. கேரளாவில் இந்த வழக்கு மிகப் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது குறி[ப்பிடத்தக்கது. 

16:04 (IST)28 Jul 2020
சென்னை கலெக்டருக்கு கொரோனா!

சென்னை மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமிக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

15:33 (IST)28 Jul 2020
நடிகர், விமர், சூரி மீது வழக்குபதிவு!

ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் கொடைக்கானல் வனப்பகுதியில் உள்ள பேரிஜம் ஏரியில் நடிகர்கள் சூரி மற்றும் விமல் உள்ளிட்டோர் மீன்பிடித்த படங்கள் வெளியானது. இதையடுத்து அவர்கள் மீது வனத்துறை வழக்குப்பதிவு செய்து அபராதமும் விதித்தது. இந்த நிலையில் கோட்டாட்சியர் சிவகுமார் நடத்திய விசாரணையில் அவர்கள் இ-பாஸ் இல்லாமல் வந்ததும் ஏரியில் மீன்பிடித்ததும் தெரியவந்தது. இதையடுத்து நடிகர்கள் விமல், சூரி உள்ளிட்டோர் மீது தொற்றுநோய் பரவும் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் தங்கிய இடங்கள் உள்ளிட்டவை குறித்து விசாரிக்க தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

15:30 (IST)28 Jul 2020
திருமுருகன் காந்திக்கு கொரோனா!

மே 17 இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்திக்கு கொரோனா தொற்று உறுதியானது. தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

14:24 (IST)28 Jul 2020
முதல்வருக்கு கொரோனா இல்லை!

புதுச்சேரி மாநில முதலமைச்சர் நாராயணசாமி, சபாநாயகர் சிவகொழுந்து, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என முடிவு வந்துள்ளது. புதுச்சேரி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்ற, என்.ஆர்.காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஜெயபால்  மற்றும் 2 சபை காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, நேற்றைய தினம் முதலமைச்சர் நாராயணசாமி, சபாநாயகர் சிவகொழுந்து, உள்ளிட்ட 126 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

14:16 (IST)28 Jul 2020
பவானிசங்கர் அணை!

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து வருகிற ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், கொடிவேரி விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, நவம்பர் 28ம் தேதி வரை 120 நாட்களுக்கு முதல்போக பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுமாறு ஆணையிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்

14:16 (IST)28 Jul 2020
ஒரே தேசம், ஒரே அட்டை!

ஒரே தேசம், ஒரே அட்டை என்ற திட்டம் செயல்படுத்துவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பாக பயோமெட்ரிக் முறை நடைமுறைபடுத்தப்படும் என்றும், அமைச்சர் காமராஜ் குறிப்பிட்டார்

13:50 (IST)28 Jul 2020
12-ம் வகுப்பு மறுதேர்வு முடிவுகள்!

12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேற்று நடந்த மறு தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி இன்று தொடங்கி உள்ள நிலையில், முடிவுகள் நாளை மறுநாள் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது. கடந்த மார்ச் 24ஆம் தேதி நடந்த கடைசி தேர்வை எழுத முடியாத மாணவர்களுக்கு, நேற்று  மறுதேர்வு நடைபெற்றது.  800 பேர் தேர்வெழுத அனுமதி சீட்டு பெற்ற நிலையில், 300 மாணவர்கள் மட்டுமே தேர்வில் பங்கேற்றனர் . இந்த நிலையில் 300 மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணி, இன்று காலை முதல் அந்தந்த மாவட்டங்களில் நடந்து வருகிறது

13:31 (IST)28 Jul 2020
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது எப்போது

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது எப்போது என்பது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தி வருகிறார். தலைமைச் செயலகத்தில் நடைபெறும்  ஆலோசனைக் கூட்டத்தில் பள்ளி கல்வி ஆணையர் சிஜி தாமஸ், பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். 

12:58 (IST)28 Jul 2020
நாளை மறுநாள் தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் 

நாளை மறுநாள் தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்  நடைபெறுவதாக தி.மு.க. தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.  நாளை மறுநாள் காலை 10.30 மணிக்கு காணொலி மூலம் நடைபெறும் கூட்டத்தில் தி.மு.க. எம்.பி. - எம்.எல்.ஏ.க்களும் பங்கேற்கிறார்கள்.

12:38 (IST)28 Jul 2020
ஸ்வப்னா சுரேஷுக்கு 5 நாள் காவல்

கேரள தங்க கடத்தல் வழக்கில் கைதாகியுள்ள ஸ்வப்னா சுரேஷூக்கு 5 நாள் சுங்கத்துறை காவல். ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் ஆகியோரை 5 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க கொச்சி நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. 

12:03 (IST)28 Jul 2020
திமுக கேவியட் மனு

ஓபிசி இடஒதுக்கீடு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் திமுக சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. 

11:30 (IST)28 Jul 2020
தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பா? - நாளைமறுநாள் முதல்வர் பழனிசாமி ஆலோசனை

தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து வரும் 30ஆம் தேதி மருத்துவ வல்லுநர் குழுவுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார். 

11:17 (IST)28 Jul 2020
தொடர்ந்து அதிகரிக்கும் தங்கம் விலை

தொடர்ந்து புதிய உச்சத்தில் தங்கத்தின் விலை இருக்கிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.192 உயர்ந்து ரூ.40,296-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.24 உயர்ந்து ரூ.5,037-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

10:19 (IST)28 Jul 2020
ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆதரவாக எஸ்.பி.வேலுமணி ட்வீட்

இந்தியாவுக்கு புகழ் சேர்த்த இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானுக்கு எதிராக செயல்படுவது கண்டிக்கத்தக்கது. ஏ.ஆர்.ரகுமானுக்கு தனது மனப்பூர்வமான ஆதரவை தெரிவிப்பதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ட்வீட் செய்துள்ளார். 

09:56 (IST)28 Jul 2020
இந்தியாவில் கொரோனா

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 15 லட்சத்தை நெருங்குகிறது. இங்கு கொரோனாவின் பாதிப்பு மொத்த பாதிப்பு - 14,83,156,  குணமடைந்தோர் - 9,52,743, சிகிச்சையில் - 4,96,988, உயிரிழப்பு - 33,425 என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

09:46 (IST)28 Jul 2020
கந்த சஷ்டி விவகாரம்

கந்த சஷ்டி கவச விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள கறுப்பர் கூட்டம் செந்தில்வாசன் மீதும் குண்டாஸ் சட்டம் பாய்ந்துள்ளது. 

09:24 (IST)28 Jul 2020
கீழநத்தம் இளைஞர் கொலை - உதவி ஆய்வாளர் மீது 2 பிரிவுகளில் வழக்கு

நெல்லை கீழநத்தம் பகுதியை சேர்ந்த இளைஞர் சண்முகையா போலீஸ் வாகனம் மோதி உயிரிழந்த சம்பவத்தில், உதவி ஆய்வாளர் ஐயப்பன் மீது 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீசார் தாக்கியதில் சண்முகையா உயிரிழந்ததாக உறவினர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

09:12 (IST)28 Jul 2020
சாத்தான்குளம் வழக்கு - மேலும் 2 போலீஸாருக்கு கொரோனா

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைதான மேலும் 2 போலீசாருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.  எஸ்.எஸ்.ஐ. பால்துரைக்கு நோய் தொற்று உறுதியான நிலையில் மேலும் 2 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். காவலர்கள் முருகன், முத்துராஜா ஆகியோருக்கு கொரோனா தொற்று இருப்பது தற்போது உறுதியாகியுள்ளது. சிபிஐ அதிகாரிகள் 6 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 6,993 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யபட்டுள்ளது. இதனால், மாநிலத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 2,20,716 ஆக அதிகரித்துள்ளது. அதோடு ஒரே நாளில் கொரோனா பாதிப்பால் 77 பேர் உயிரிழந்ததையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 3,571 ஆக அதிகரித்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Web Title:Tamil nadu news today live covid 19 obc reservation dhanush birthday

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.