Tamil nadu news today updates : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., நடத்திய 'குரூப் - 4' தேர்வு முறைகேடு தொடர்பாக, இடைத்தரகராக இருந்து தேர்வெழுதியவர் உட்பட, மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், 2017 ம் ஆண்டு நடந்த குரூப் 2ஏ தேர்விலும் முறைகேடு நடந்துள்ளது தெரிய வந்துள்ளது. முறைகேடு தெரியவந்தாலும் அனைவரும் தற்போது அரசு பணிகளில் உள்ளனர். எனவே அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியவில்லை. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க டி.என்.பி.எஸ்.சி., அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
டிஎன்பிஎஸ்சி முறைகேடு - முக்கிய குற்றவாளிக்கு சிபிசிஐடி வலைவீச்சு
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
'மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு, 'நீட்' நுழைவுத் தேர்வு கட்டாயமே. இது தொடர்பாக ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவிலிருந்து பின்வாங்கும் பேச்சே இல்லை' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீட் தேர்வை எதிர்த்து, தமிழக அரசு சார்பிலும் உச்ச நீதின்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு, நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Live Blog
Tamil nadu news today updates : இன்று சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
திருவண்ணாமலை அருகே அரசு பள்ளியில் அரையாண்டு தேர்வில், முதல் மதிப்பெண் பெற்ற மாணவி, 'ஒரு நாள் தலைமையாசிரியர்' பொறுப்பு வழங்கி கவுரவிக்கப்பட்டார்.
நெசல் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் வெங்கடேசன், அரையாண்டுத் தேர்வில் முதல் மதிப்பெண் பெறுபவர்கள் ஒரு நாள் தமது பணிகளை மேற்கொள்ளலாம் என்று அறிவித்துள்ளார்.
அரையாண்டுத் தேர்வில் 500க்கு 447 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்த 10ஆம் வகுப்பு மாணவி மதுமிதா, திங்கட்கிழமை “ஒருநாள் தலைமை ஆசிரியராக” பதவியேற்று, தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
ஆசிரியர்கள் அவருக்கு சால்வை அணிவித்து, தலைமை ஆசிரியர் இருக்கையில் அமரவைத்தனர். பின்னர் அவர் வருகைப் பதிவேட்டை ஆய்வு செய்தல், வகுப்பறைகளுக்குச் சென்று பார்வையிடுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டார்.
அமெரிக்காவுக்கான இந்திய தூதராக Taranjit Singh Sandhu வை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் நியமித்துள்ளது. தரஞ்சித் சிங் தற்போது இலங்கைக்கான இந்திய தூதராக பணியாற்றி வந்த நிலையில், தற்போது மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. 1988ஆம் ஆண்டு முதல் வெளியுறவுத்துறையில் தரஞ்சித் சிங் பணியாற்றி வருகிறார். 1998ஆம் ஆண்டு அணு ஆயுத சோதனை நடத்தியதற்கு இந்தியா மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்த போது, வாசிங்டனில் இந்தியாவுக்கான செயலாளராக பணியாற்றி வந்த தரஞ்சித் சிங்கே, பல்வேறு பேச்சுவார்த்தை நடத்தி இந்திய, அமெரிக்க உறவை மேம்படுத்த முயற்சி செய்தார்.
நிர்பயா பாலியல் கொலை குற்றவாளி முகேஷின் கருணை மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பு நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மனு நீதிபதி பானுமதி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது முகேஷ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அஞ்சனா பிரகாம் கருணை மனுவை ஆராயாமல் அவசரமாக நிராகரித்துள்ளார் எனவும், முகேஷிற்கான சட்ட உதவிகள் தாமதமாக வழங்கப்பட்டன எனவும் வாதிட்டார். வாதங்களை பதிவு செய்துகொண்ட நீதிபதி வழக்கு மீதான தீர்ப்பை நாளைக்கு ஒத்திவைத்தார்.
கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக கூறப்படும் வழக்கில் பேராசிரியர் நிர்மலாதேவி இன்றும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை இதனைத் தொடர்ந்து 2 வது முறையாக பிடிவாரண்ட் பிறப்பித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்ற நீதிபதி பரிமளா அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார் .. ஏற்கனவே நவம்பர் 18ஆம் தேதி நிர்மலா தேவிக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப் பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
குரூப் 4 தேர்வில் 288 மதிப்பெண் பெற்று, தமிழக அளவில் எட்டாவது இடத்தில் பண்ருட்டியை சேர்த்த சிவராஜ் என்பவர் தேர்வானார். இவர் மோசடியாக தேர்வு எழுதியது அம்பலமானதால், தலைமறைவாக இருந்து வந்தார். இந்த நிலையில், செல்போன் சிக்னல் மூலம் அவரை கண்டுபிடித்த சிபிசிஐடி போலீசார், பண்ருட்டி பேருந்து நிலையத்தில் கைது செய்தனர். இதுபோல, இன்று மாலையில் மேலும் ஒருவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். இதையடுத்து, கைதானவர்களின் எண்ணிக்கை 14ஆக உயர்ந்துள்ளது.
நடிகர் ரஜினிக்கு விதிக்கப்பட்ட ரூ.66.22 லட்சம் அபராதம் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்த வழக்கு தள்ளுபடி. 2002 - 2005 கணக்காண்டுகளில் முறையாக வருமான வரி செலுத்தவில்லை என அபராதம் விதிக்கப்பட்டது.
ரஜினிக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை வருமானவரி தீர்ப்பாயம் ரத்து செய்தது. அதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வருமான வரித்துறை வழக்கு தொடர்ந்தது. ஒரு கோடி ரூபாய்க்கு குறைவான அபராதம் என்பதால் வழக்கை வருமான வரித்துறை திரும்பப் பெற்றது
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் கர்ணன் படத்தின் போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது.
#கர்ணன் #karnan shoot in progress pic.twitter.com/YkjaaoIrgC
— Dhanush (@dhanushkraja) January 28, 2020
'உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை வீடியோ பதிவில் முறைகேடு செய்ய முடியாது. கண்காணிப்பு கேமரா பதிவுகள் மாவட்ட ஆட்சியர்கள் கட்டுப்பாட்டில் பாதுகாப்பாக உள்ளன" - சென்னை உயர் நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் திட்டவட்டம்
ஊரக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக தி.மு.க. தொடர்ந்த வழக்கு முடித்து வைப்பு
தமிழ்நாட்டில் மணல் குவாரிகளை அமைக்கும்போது கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம். அதில் மணல் தேவை, சப்ளை, முறைகேட்டை தடுத்தல் ஆகியவற்றுக்கு தனி அமைப்பை ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் சந்தித்து பேசினார். அப்போது 5 மற்றும் 8ம் வகுப்பு பொது தேர்வை ரத்து செய்யக்கோரி தலைமை செயலகத்தில் செங்கோட்டையனிடம் அவர் மனு அளித்தார். தொடர்ந்து பேசிய அவர், 5 மற்றும் 8ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்துவது மாணவர்களுக்கு மனஉளைச்சல் ஏற்படுத்தும் என தெரிவித்தார். மேலும் பொதுத்தேர்வால் மாணவர்கள் கல்வியை கைவிடும் சூழல் ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஜே.என்.யூ மாணவர் ஷர்ஜீல் இமாம் டெல்லி போலீசாரால் தேசத் துரோக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். அசாம், உத்தரப்பிரதேசம், அருணாச்சல பிரதேசம், புது டெல்லி, மணிப்பூர் ஆகிய ஐந்து மாநிலங்களின் காவல்துறையினரால் தேசத் துரோகத்திற்காக இமாம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தில் ஜனவரி 16 அன்று அவர் ஆற்றிய உரை தான் இதற்குக் காரணம்.
நாகை அவுரித்திடலில் நடைபெற்ற போராட்டத்தில், தி.மு.க நிர்வாகிகள், விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்கும் ஹைட்ரோகார்பன் திட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். புதுக்கோட்டை திலகர் திடலில், நடந்த போராட்டத்தில், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்த மாட்டோம் என ஆளும் அரசு கொள்கை முடிவு எடுக்க கேட்டுக் கொள்ளப்பட்டது.
டெண்டர் விவகாரத்தில் ஒத்துழைக்க மறுத்ததால், தகவல் தொழில்நுட்பத்துறை அரசு செயலாளர் சந்தோஷ்பாபு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதிகாரி மாற்றம் குறித்து ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கம் முணுமுணுப்பே காட்டாமல் முடங்கிப் போனது ஏன்? என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தின் கீழ் பிப்.1-ம் தேதி முதல் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்ட மக்கள் எந்த ரேஷன் கடையிலும் பொருட்கள் வாங்கலாம் எனவும், சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட உள்ள இந்த திட்டம் அடுத்தபடியாக அனைத்து மாவட்டங்களிலும் கொண்டு வரப்படும் எனவும் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக பாரம் ஏற்றி வரும் கனரக வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் எனவும், சம்பந்தப்பட்ட குவாரிகள் மற்றும் லாரி உரிமையாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
தமிழக மக்களிடம் பிப். 2 முதல் 8ம் தேதி வரை ஒவ்வொரு இல்லத்திலும் ஒரு கோடி கையெழுத்தினை தொண்டர்கள் பெற வேண்டும். கையெழுத்து இயக்கத்தின் மூலம் நாட்டை பிளவுபடுத்தும் கொடிய சட்ட திட்டங்களுக்கு எதிரான உரிமை குரல் ஓங்கி ஒலிக்கட்டும் என தொண்டர்களுக்கு ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தஞ்சை பெரிய கோயில் கும்பாபிஷேகம் தமிழிலும், சமஸ்கிருதத்திலும் நடைபெறும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பான பிரமாண பத்திரம் தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
காஞ்சிபுரம் அடுத்த பரனூர் டோல்கேட்டில், அரசு பஸ் டிரைவருக்கும், டோல்கேட் ஊழியருக்கும் ஏற்பட்ட வாய்த்தகராறு கைகலப்பில் முடிந்தது. இதனைத்தொடர்ந்து நடைபெற்ற மோதலில், டோல்கேட் சூறையாடப்பட்டது. இந்த சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், டோல்கேட்டில் இருந்த ரூ.18 லட்சம் பணம் காணவில்லை என டோல்கேட் இன்சார்ஜ் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் நிகழ்ந்துள்ள முறைகேடு குறித்து சிபிசிஐடி விசாரணை நடத்தினால் உண்மை வெளிவர வாய்ப்பில்லை. எனவே, இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முகமது ரஸ்வி என்பவர் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு, விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில், சின்ன வெங்காயத்தின் விலை அதிரடியாக சரிவடைந்துள்ளது. நேற்று வரை பெரிய வெங்காயத்தின் விலை கிலோ ரூ.100க்கும், சின்ன வெங்காயம் கிலோ ரூ.200க்கும் விற்கப்பட்டு வந்த நிலையில், இன்று சின்ன வெங்காயம் கிலோ ரூ.40 முதல் ரூ.60 என்ற அளவிலும், பெரிய வெங்காயம் கிலோ ரூ.30 முதல் ரூ.40 என்ற அளவிலும் விற்பனையாகிறது.
மகாராஷ்டிரா மற்றும் ஆந்திரா மாநிலங்களிலிருந்து அதிகளவில் வெங்காயம் வந்துள்ளதால், விலை குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
உ.பி.,யில் ஆர்.எஸ்.எஸ்., நடத்தும் முதல் ராணுவ பள்ளியின் வகுப்புகள் ஏப்ரல் முதல் துவங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பள்ளியில், என்.டி.ஏ, கடற்படை அகாடமி மற்றும் இந்திய ராணுவத்தின் தொழில்நுட்ப தேர்வுக்கு மாணவர்கள் தயார் செய்யப்படுவார்கள். பிப்ரவரி 23ம் தேதி வரை மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படும். மார்ச் 1ம் தேதி நுழைவுத் தேர்வு நடைபெறும். பின் நேர்காணல் நடத்தப்பட்டு, ஏப்ரல் 6 ம் தேதி முதல் வகுப்புகள் நடைபெறும்.
திமுகவில் கட்சி தொண்டர்களுக்கு உழைப்புக்கேற்ற உயர்வு வழங்கப்பட்டு வருவதாக கட்சி இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் அனைவரும் முதல் அமைச்சர்களே என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்திருந்த நிலையில், திமுக பொருளாளர் துரைமுருகன் உடனடியாக, முதல்வர் பதவியை, துணை முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு வழங்க முதல்வர் பழனிசாமி தயாரா என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், திமுகவில் வாரிசு அரசியலே உள்ளது என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் ஜனவரி 31 மற்றும் பிப்ரவரி 1ம் தேதிகளில் மேற்கொள்ள உள்ள வேலைநிறுத்தப்போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என்று வங்கி ஊழியர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, மத்திய தொழிலாளர் நல ஆணையர் ராஜன் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எதுவும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக சீனாவில் பலி எண்ணிக்கை 106ஆக அதிகரித்துள்ளது. இந்த வைரசால் புதிதாக 1,300 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சீன அரசு தெரிவித்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights