தமிழக உள்ளாட்சி தேர்தல் தேதியை டிச. 13-க்குள் அறிவிக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் கெடு

பெட்ரோல் டீசல் விலை நிலவரம் : சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 76.97. டீசல் விலை ரூ. 69.54க்கும் விற்பனையாகிறது.

By: Nov 19, 2019, 7:17:33 AM

tamil nadu news today updates : சென்னை தரமணி, வேளச்சேரி, ஈக்காட்டுத்தாங்கல், மயிலாப்பூர், மந்தைவெளி மற்றும் சாந்தோம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை முதல் பரவலாக மழை பெய்து வருவதால் வேலைக்கு செல்லும் பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

10 நாள் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்ற துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் இன்று இரவு 8 மணிக்கு சென்னை விரைகிறார். தமிழகத்தில் முதலீடு செய்வதற்கான திட்டங்கள் குறித்து அவர் அமெரிக்காவில் ஆலோசனை மேற்கொண்டார்.

இது தொடர்பான செய்திகளைப் படிக்க

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இன்று பதவி ஏற்கிறார் எஸ்.ஏ.பாப்டே. இந்திய உச்ச நீதிமன்றத்தின் 47வது தலைமை நீதிபதி இவர் ஆவார். இதற்கு முன்பு பதவி வகித்த ரஞ்சன் கோகாயின் கடைசி வேலை நாள் 16ம் தேதி நிறைவுற்றது.

Live Blog
Tamil Nadu news today updates: இன்று சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடைபெறும் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
21:46 (IST)18 Nov 2019
முதல்வர் குறித்து ரஜினி கூறிய கருத்துக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கண்டனம்

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்: அமெரிக்க சுற்றுப்பயணம் வெற்றிகரமாக அமைந்துள்ளது. அமெரிக்கவாழ் இந்தியர்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க ஆர்வமாக உள்ளனர். தமிழக வீட்டு வசதி திட்டங்களுக்காக உலக வங்கி ரூ.5,000 கோடி நிதி தருவதாக ஒப்புதல் அளித்துள்ளது. முதல்வர் பழனிசாமி குறித்து நடிகர் ரஜினி கூறிய கருத்தை வன்மையாக கண்டிக்கிறேன். எந்த தேர்தல் எப்போது வந்தாலும் அதை சந்திப்பதற்கு அதிமுக தயாராக உள்ளது.

21:03 (IST)18 Nov 2019
மகாராஷ்டிராவில் ஆட்சியமைப்பது பற்றி ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் - சரத்பவார்

தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவார், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை டெல்லியில் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எங்கள் சந்திப்பில் ஆட்சியமைப்பது தொடர்பாக விவாதிக்கப்படவில்லை. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் குறித்தும் தேசியவாத காங்கிரஸ் குறித்து மட்டுமே விவாதிக்கப்பட்டது. மகாராஷ்டிராவின் சூழல் குறித்து ஆலோசித்தோம். அங்குள்ள சூழல் குறித்து நான் சுருக்கமாக சோனியா காந்தியிடம் விளக்கினேன். மகாராஷ்டிராவில் என்ன செய்யலாம் என்பது குறித்து ஆலோசனை செய்ய காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம் ஓரிரு நாள்களில் டெல்லியில் நடைபெறும். மகாராஷ்டிராவில் ஆட்சியமைப்பது தொடர்பாக வரும் நாள்களில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும். மகாராஷ்டிராவில் எங்களுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட கட்சிகளுடனும் நாங்கள் விவாதிக்கவேண்டும். மகாராஷ்டிரா சூழல் குறித்து கவனித்துவருகிறோம். ” என்று கூறினார்.

20:52 (IST)18 Nov 2019
அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்ற துணை முதல்வர் பன்னீர்செல்வம் சென்னை திரும்பினார்

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்று அங்கே பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றபின், 10 நாட்கள் கழித்து இன்று சென்னை திரும்பினார்.

20:13 (IST)18 Nov 2019
ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக் உடன் கமல்ஹாசன் சந்திப்பு

ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக்கை புவனேஷ்வரில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நேரில் சந்தித்துப் பேசினார்.

19:31 (IST)18 Nov 2019
ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை பற்றி 3 பேராசிரியர்களிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை

சென்னை ஐஐடியில் மாணவி பாத்திமா தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக 3 பேராசிரியர்களிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பியிருந்த நிலையில் ஐஐடி வளாகத்தில் பேராசிரியர்களிடம் விசாரணை நடைபெற்றது.

19:29 (IST)18 Nov 2019
தேமுதிக தேர்தல் ஆலோசனைக் கூட்டம் - விஜயகாந்த், பிரேமலதா, சுதீஷ் பங்கேற்பு

சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை கழகத்தில் உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு மாவட்ட வாரியாக நியமிக்கப்பட்ட தேர்தல் பொறுப்பாளர்களுடன் ஆலோசனை கூட்டம்.
கூட்டத்தில் தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த், பொருளாளர் பிரேமலதா, துணை செயலாளர் சுதிஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்பு

19:26 (IST)18 Nov 2019
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சந்திப்பு

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சந்தித்துவருகிறார். அவருடன் காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி, மூத்த காங்கிரஸ் நிர்வாகிகளும் உள்ளனர்.

19:08 (IST)18 Nov 2019
மகாராஷ்டிராவில் ஆட்சியமைப்பது குறித்து சோனியா காந்தியிடம் பேசவில்லை - சரத்பவார்

காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் இன்று சந்தித்துப் பேசினார். சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மகாராஷ்டிராவில் ஆட்சியமைப்பது குறித்து சோனியா காந்தியிடம் பேசவில்லை. மகாராஷ்டிரா அரசியல் நிலவரம் குறித்துதான் பேச்சுவார்த்தை நடந்தது.” என்று கூறினார்.

18:51 (IST)18 Nov 2019
எங்களது பெரியார், கொள்கைகள் மீதான வலதுசாரி சக்திகளின் தாக்குதலுக்கு கண்டனம் - மு.க.ஸ்டாலின்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில், பெரியார் மற்றும் எங்களது கொள்கைகள் மீதான வலதுசாரி சக்திகளின் தாக்குதலை கடுமையாக கண்டனம் செய்கிறேன் என்று தெரிவித்துள்ளார். மேலும், பெரியார் கீழ்நிலையில் உள்ளவர்களுக்காகப் போராடினர். அவர் பெண்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்தார். அவர் சாதி முறைக்கு எதிராகப் பேசினார். அனைத்து ஒடுக்குகிற சக்திகளின் எதிர்ப்பிலிருந்தும் திராவிடக் கொள்கையை திமுக பாதுகாக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

17:56 (IST)18 Nov 2019
பொருளாதாரம் முடங்குவதற்கான காரணம் குறித்து மன்மோகன் சிங் விளக்கம்

வர்த்தகர்கள், தொழில்துறையினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் மத்தியில் நிலவும் அவநம்பிக்கை, அச்சம், நம்பிக்கையின்மையே பொருளாதார வளர்ச்சி முடங்குவதற்கு காரணம் என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

இதுகுறித்து ஆங்கில நாளிதழில் அவர் எழுதியுள்ள கட்டுரையில், 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஜிடிபி சரிவு, 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலைவாய்ப்பின்மை, 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நுகர்வு விகிதம் குறைந்திருப்பது, வங்கிகளின் வாராக்கடன் அதிகரித்திருப்பது, 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மின்னுற்பத்தி சரிவு என புள்ளிவிவரங்கள் கூறுவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

பொருளாதாரத்தில் மிகப்பெரிய பிரச்சனை ஏற்பட்டுள்ளதையே இது காட்டுவதாகவும் அவர் கூறியுள்ளார். தொழில்துறையினர், வர்த்தகர்கள் மீதான சந்தேகங்களை போக்கி, பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் நம்பிக்கையையும் உறுதியையும் பிரதமர் மோடி ஏற்படுத்த வேண்டும் என மன்மோகன் சிங் வலியுறுத்தியுள்ளார்.

17:54 (IST)18 Nov 2019
மக்களை அதிகாரிகள் தேடிச் சென்று குறைகளை தீர்க்கின்றனர் - எஸ்.பி.வேலுமணி

அதிமுக அரசு மக்களுக்காக பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருவதாகவும், அதிகாரிகளை மக்கள் சென்று பார்த்த நிலை மாறி, தற்போது மக்களை அதிகாரிகள் தேடிச் சென்று குறைகளை தீர்ப்பதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

கோவை இடையர்பாளையத்தில் நடைபெற்ற முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்ப்பு முகாமில் அவர் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை பெற்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் பேசிய உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அத்திக்கடவு - அவினாசி திட்டத்தில் விடுபட்ட பகுதிகளும் சேர்க்கப்படும் என்றார்.

17:36 (IST)18 Nov 2019
மருத்துவர்கள் மீதான பழிவாங்கும் நடவடிக்கையை நிறுத்த வேண்டும்

போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அரசு மருத்துவர்கள் மீதான பழிவாங்கும் நடவடிக்கையை தமிழக அரசு நிறுத்த வேண்டும். அது தொடரக் கூடாது என அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

17:32 (IST)18 Nov 2019
ஜேஎன்யூ மாணவர்கள் மீது போலீசார் தடியடி

விடுதி கட்டண உயர்வை கண்டித்து நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக சென்ற ஜேஎன்யூ மாணவர்கள் மீது போலீசார் தடியடி; பல மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டதாக தகவல்.

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை தடியடி நடத்தி கலைத்த காவல்துறையினர்.

17:31 (IST)18 Nov 2019
சோனியாவை சந்தித்த சரத்பவார்

டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியாவை சந்தித்தார் சரத் பவார்.

மகாராஷ்டிராவில் சிவசேனாவுடன் இணைந்து ஆட்சி அமைப்பது குறித்து ஆலோசனை.

17:12 (IST)18 Nov 2019
ரஜினி அதிர்ஷ்டத்தை நம்புகிறவர்; நாங்கள் வேறு - அமைச்சர் ஜெயக்குமார்

"அரசியல் எனும் சமுத்திரத்தில் முதலில் ரஜினி குதிக்கட்டும். ரஜினி அதிர்ஷ்டத்தை நம்புகிறவர். ஆனால், அதிமுக மக்களை வாக்காளர்களை நம்பும் கட்சி" என்று அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

17:00 (IST)18 Nov 2019
கூட்டத்தை புறக்கணிக்க காரணம் என்ன? - தி.மு.க தலைவர் ஸ்டாலின் கடிதம் மூலம் விளக்கம்

இதனிடையே, முதலமைச்சர் தலைமையில் நடந்த தேர்வுக்குழு கூட்டத்தை புறக்கணித்ததற்கான காரணம் குறித்து தி.மு.க தலைவர் ஸ்டாலின் கடிதம் மூலம் விளக்கம் அளித்துள்ளார். நிர்வாக சீர்திருத்த செயலாளர் சுவர்ணாவுக்கு அவர் அளித்து விளக்க கடிதத்தில், வெளிப்படைத்தன்மை துளியும் இல்லாத தேர்வுக்குழு கூட்டத்தில், நான் பங்கேற்பது பொருத்தமாக இருக்காது என்று கூறியுள்ளார்.

16:52 (IST)18 Nov 2019
15 நாட்களுக்கு தண்ணீர் திறக்க உத்தரவு

தேனி பெரியாறு அணையிலிருந்து நாளை முதல் 15 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு உத்தரவு

16:51 (IST)18 Nov 2019
அதிகாரிகள் அரசின் ஊதுகுழல்கள் - நீதிபதிகள்

கோவில் நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசித்தவர்களுக்கு பட்டா வழங்கும் அரசாணை. தடை கோரிய வழக்கில் அதிகாரிகளுக்கு நீதிமன்றம் கடும் கண்டனம்

அறநிலையத்துறை அதிகாரிகள் அரசின் ஊதுகுழலாகவும், பொம்மைகளாகவும் தான் இருக்கிறார்கள் - நீதிபதிகள் வேதனை

16:50 (IST)18 Nov 2019
தமிழக உள்ளாட்சி தேர்தல் தேதி - மாநில தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் கெடு

தமிழக உள்ளாட்சி தேர்தலை நடத்தக் கோரி, கடந்த 3 ஆண்டுகளாக உச்சநீதிமன்றம் சட்டப்போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த விவகாரத்தில், தமிழக அரசு மற்றும் மாநில தேர்தல் ஆணையத்துக்கு எதிராக தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, உச்சநீதிமன்ற நீதிபதி தீபக் குப்தா தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான தமிழக தேர்தல் ஆணையர் பழனிசாமி, உள்ளாட்சித் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருவதகாவும், எனினும், டிசம்பர் 2வது வாரம் வரை கால அவகாசம் தர வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார். இதனை ஏற்ற நீதிபதி தீபக் குப்தா, டிசம்பர் 13ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் தேதியை அறிவிக்க வேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்துக்கு கெடு விதித்துள்ளார். இது குறித்த முழுமையான அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

16:49 (IST)18 Nov 2019
மத்திய அரசு அறிவிப்பு

டிஜி லாக்கர், எம் பரிவஹன் மொபைல் செயலியில் இருக்கும் மின்னணு வடிவிலான லைசென்ஸ், வாகன பதிவு ஆவணம், போன்ற வாகன ஆவணங்கள் செல்லும், அவற்றை ஏற்றுக் கொள்ளலாம் - மத்திய அரசு

16:48 (IST)18 Nov 2019
தென்பெண்ணை ஆற்று திட்டங்களை தடுத்து நிறுத்தாதது ஏன்? - ஆர்ப்பாட்டம் அறிவித்த திமுக

தென்பெண்ணை ஆற்று திட்டங்களை தடுத்து நிறுத்தாத அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக திமுக அறிவித்துள்ளது. அதன்படி வரும் 21ஆம் தேதி கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என கட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

16:13 (IST)18 Nov 2019
முடியாதது என நினைத்தவற்றை முடித்துக் காட்டிய மாநிலங்களவை - பிரதமர்

250-வது மாநிலங்களவை கூட்டத்தொடரில் கலந்து கொண்டு பிரதமர் மோடி பேசும்போது கூறியதாவது,

வரலாற்று சிறப்பு மிக்க இந்த கூட்டத்தில் பேசுவது பெருமையாக உள்ளது. மாநிலங்களவை பல வரலாற்று தருணங்களைக் கண்டு உள்ளது. இது வரலாற்றையும் உருவாக்கியுள்ளது. மேலும், வரலாறு உருவாக்கப்படுவதையும் கண்டு உள்ளது. இது ஒரு தொலைநோக்கான அவையாகும். பன்முகத் தன்மையின் பிரதிநிதியாக, கூட்டாட்சி அமைப்பிற்கு முக்கியத்துவம் அளிப்பதாக மாநிலங்களவை உள்ளது.

தேர்தல் அரசியலில் இருந்து விலகி மக்களுக்கு, நாட்டிற்கும் அதன் வளர்ச்சிக்கும் பங்களிக்க மாநிலங்களவை ஒரு வாய்ப்பை வழங்குகிறது.

டிரிபிள் தலாக் மசோதா இங்கு நிறைவேற்றப்படாது என்று பரவலாக நம்பப்பட்டது, ஆனால் நிறைவேற்றப்பட்டது. இந்த அவையில் ஜி.எஸ்.டி. கூட நிறைவேற்றப்பட்டது.

370 மற்றும் 35 (ஏ) சட்டப்பிரிவு தொடர்பான மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டபோது மாநிலங்களவையின் பங்கை நாம் ஒருபோதும் மறக்க முடியாது.

16:08 (IST)18 Nov 2019
வெங்கடேசனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி

நீட் ஆள்மாறாட்ட விவகாரம் : மாணவனின் தந்தை வெங்கடேசனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை.

16:08 (IST)18 Nov 2019
வேட்பாளர்களை தேடி வருகிறது திமுக - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

இளைஞர்கள் அதிகமுள்ள கட்சி அதிமுக, அதிமுகவில்தான் இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வேட்பாளர்களை தேடி வருகிறது திமுக - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

16:07 (IST)18 Nov 2019
பேராசிரியர்கள் 3 பேருக்கும் சம்மன்

ஐஐடி மாணவி உயிரிழந்த விவகாரம்: பேராசிரியர்கள் 3 பேர் நேரில் ஆஜராக மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

15:36 (IST)18 Nov 2019
நவ. 21,22,23 ஆகிய தேதிகளில் விருப்ப மனு

உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுவோருக்கான விருப்பமனு நவ. 21,22,23 ஆகிய தேதிகளில் வழங்கப்படுகிறது - காங்கிரஸ் அறிவிப்பு

15:35 (IST)18 Nov 2019
தனி மாவட்டமாகும் மயிலாடுதுறை

நாகை மாவட்டத்தை பிரித்து, மயிலாடுதுறை தனி மாவட்டமாக அறிவிக்கப்படும் என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.

15:34 (IST)18 Nov 2019
திருச்சி பாரதிதாசன் பல்கலை.யில் போராட்டம்

சென்னை ஐஐடி மாணவி தற்கொலை எதிரொலி : திருச்சி பாரதிதாசன் பல்கலை.யில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், பதிவாளர் கோபிநாத் கணபதியை அவரது அறைக்குள் வைத்து பூட்டியதால் பரபரப்பு.

15:34 (IST)18 Nov 2019
முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்ற எஸ்.ஏ.பாப்டேக்கு முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

14:53 (IST)18 Nov 2019
ரஜினியை கணக்கில் எடுத்துக் கொள்ள மாட்டார்கள் - அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

சிகரெட்டை தூக்கிப் போட்டு பிடித்தவர்களை எல்லாம் மக்கள் கணக்கில் எடுத்துக் கொள்ள மாட்டார்கள். எம்.ஜி.ஆர். , ஜெயலலிதா இடத்தை யாரும் தொட்டுக் கூட பார்க்க முடியாது என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் மயிலாடுதுறையில் தெரிவித்துள்ளார். 

14:47 (IST)18 Nov 2019
மாநிலங்களவையின் 250வது கூட்டத்தொடரில் பிரதமர் மோடி

வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டத்தில் பேசுவது பெருமை அளிக்கிறது. பன்முகத்தன்மையின் பிரதிநிதியாக, கூட்டாட்சி அமைப்பிற்கு முக்கியத்துவம் அளிப்பதாக மாநிலங்களவை உள்ளது

- மாநிலங்களவையின் 250வது கூட்டத்தொடரில் பிரதமர் மோடி பேச்சு

14:46 (IST)18 Nov 2019
பொன்.மாணிக்கவேலுவுக்கு, உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

சிலை கடத்தல் தொடர்பான ஆவணங்களை ஏ.டி.ஜி.பி.யிடம் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் - பொன்.மாணிக்கவேலுவுக்கு, உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் உத்தரவு

14:45 (IST)18 Nov 2019
விஜயகாந்த் தலைமையில் ஆலோசனை

சென்னை கோயம்பேட்டில் தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் தலைமையில் தேர்தல் பொறுப்பாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

14:45 (IST)18 Nov 2019
சிலிண்டர் வெடிப்பு சம்பவங்களால் 3,063 விபத்துக்கள்

கடந்த 3 ஆண்டுகளில் எல்பிஜி கேஸ் சிலிண்டர் வாயு கசிவு மற்றும் சிலிண்டர் வெடிப்பு சம்பவங்களால் 3,063 விபத்துக்கள் நடைபெற்று, அதில் 813 பேர் உயிரிழந்துள்ளனர் - மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் மக்களவையில் எழுத்துபூர்வமாக தகவல்.

14:15 (IST)18 Nov 2019
சர்வதேச திரைப்பட விழாவுக்கு நிதி

சென்னை சர்வதேச திரைப்பட விழாவுக்கு தமிழக அரசு சார்பில் ரூ.75 லட்சம் நிதியை வழங்கினார் முதலமைச்சர் பழனிசாமி.

14:14 (IST)18 Nov 2019
மிதமான மழைக்கு வாய்ப்பு

வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

14:14 (IST)18 Nov 2019
நிரந்தர சின்னம் கிடைக்கவில்லை என்றால் சுயேட்சை தான் - தினகரன்

நிரந்தர சின்னம் கிடைக்கவில்லை என்றால் சுயேட்சையாகவாவது போட்டியிட வேண்டும் என்பது தொண்டர்களின் கருத்தாக உள்ளது - தினகரன்

கட்சி பதவிக்கான பணிகள் நடந்து வருகிறது, அமமுக உள்ளாட்சி தேர்தலில் கட்டாயம் போட்டியிடும் - நெல்லையில் தினகரன் பேட்டி

14:10 (IST)18 Nov 2019
நிர்மலா தேவிக்கு பிடிவாரண்ட்

நிர்மலா தேவிக்கு பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்தது விருதுநகர் மாவட்ட நீதிமன்றம். நேரில் ஆஜராக 2 முறை உத்தரவிட்டும் ஆஜராகாததால், நீதிபதி அதிரடி. ஏற்கனவே நிர்மலாதேவிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்து பிடிவாரண்ட் - நீதிபதி பரிமளா

14:07 (IST)18 Nov 2019
முதலமைச்சராக பழனிசாமி ஆகியது கனவு என்பது அல்ல

முதலமைச்சராக பழனிசாமி ஆகியது கனவு என்பது அல்ல, அது நினைவாக மாறிய ஒன்று - அமைச்சர் செங்கோட்டையன்

14:06 (IST)18 Nov 2019
உயர் கல்வித்துறை செயலாளரை அனுப்பி இருக்கிறோம்

மாணவி பாத்திமா மரணம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள உயர் கல்வித்துறை செயலாளரை அனுப்பி இருக்கிறோம் - மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால்

13:54 (IST)18 Nov 2019
ஈழத்தமிழர்களின் நலனையும் உரிமைகளையும் பாதுகாத்திட வேண்டும் - முக ஸ்டாலின்

இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற கோத்தபய ராஜபக்‌ஷேவுக்கு பிரதமர் வாழ்த்துகள் தெரிவித்திருந்தார். மத்திய அரசும் பிரதமர் மோடியும் இணைந்து ஈழத்தமிழர்களின் நலனையும் உரிமைகளையும் பாதுகாத்திட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என திமுக தலைவர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

12:56 (IST)18 Nov 2019
உண்மை தெரியாமல் சிவாஜி குறித்து விமர்சனம் - நடிகர் பிரபு வேதனை

அமெரிக்காவில் எம்.ஜி.ஆர் வைத்த வேண்டுகோளுக்கு இணங்க தன் தந்தை சிவாஜி கட்சி ஆரம்பித்தார். ஜானகி ராமச்சந்திரன் தோல்வியுறுவார் என தெரிந்தும் கூட்டணி வைத்தார். அரசியல் பதவி குறித்த ஆசை என் தந்தைக்கு என்றுமே இருந்ததில்லை என்றும் அவர் அறிவிப்பு. உண்மை தெரியாமல் தற்போது சிவாஜி குறித்து விமர்சிக்கப்படுவதாக நடிகர் பிரபு பேச்சு

12:33 (IST)18 Nov 2019
உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பாணை

டிசம்பர் 2ம் தேதி உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பாணை வெளியிடப்படும் என்று உச்ச நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு.

12:31 (IST)18 Nov 2019
JNU protest

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் தற்போது நாடாளுமன்றம் நோக்கி பேரணி ஒன்றை நடத்தி வருகின்றனர். தங்களின் கல்வி கட்டணம் உயர்த்தப்பட்டதை கண்டித்து இந்த போராட்டஙகளில் மாணவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போரட்டம் தொடர்பாக உயர்மட்ட குழு ஒன்றை மத்திய அரசு அமைத்துள்ளது. இந்த குழுவில் வி.எஸ்.சவுகான், ரஜினிஸ் ஜெயின் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

12:26 (IST)18 Nov 2019
இலங்கையின் அதிபராக பதவியேற்றார் ராஜபக்‌ஷே

இலங்கையின் 8வது அதிபராக பதவியேற்றார் கோத்தபய ராஜபக்‌ஷே

12:17 (IST)18 Nov 2019
ஐ.என்.எக்ஸ் வழக்கு சிதம்பரம் ஜாமீன் மனு நாளை அல்லது நாளை மறுநாள் விசாரிக்கப்படும்

ஐ.என்.எக்ஸ் மீடியா அமலாக்கத்துறை வழக்கில் சிதம்பரம் ஜாமீன் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.  நாளை அல்லது நாளை மறுநாள் இந்த வழக்கு விசாரிக்கப்படும் என்று எஸ்.ஏ. பாப்டே அறிவித்துள்ளார். 

11:57 (IST)18 Nov 2019
நாடாளுமன்ற வளாக பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பு

ஜெ.என்.யூ மாணவர்கள் தங்கள் கல்லூரி கட்டணம் உயர்த்தப்பட்டதை தொடர்ந்து ஒரு வார காலமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று அம்மாணவர்கள் பேரணி செல்ல இருப்பதால் நாடாளுமன்ற வளாகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

11:28 (IST)18 Nov 2019
கதிர்ஆனந்த் பதவி ஏற்பு

வேலூர் மக்களவைத் தொகுதியில் தேர்தலில் வெற்றி பெற்ற திமுகவின் கதிர்ஆனந்த் இன்று நாடாளுமன்ற உறுப்பினராக பதவி ஏற்றுள்ளார். இன்று குளிர்கால கூட்டத்தொடர் ஆரம்பமாகியுள்ள நிலையில் பதவி ஏற்றுக் கொண்டார்.

11:12 (IST)18 Nov 2019
திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு எதிராக பிடிவாரண்ட்

வருமான வரி வழக்கில் தமிழ் திரைப்ப்ட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவை நேரில் ஆஜராக கூறி பலமுறை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் அவர் ஒரு போதும் நேரில் ஆஜராகவில்லை என்ற காரணத்தால் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டது எழும்பூர் நீதிமன்றம்.

11:11 (IST)18 Nov 2019
ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மீண்டும் மேல் முறையீடு

ஐ.என்.எக்ஸ். வழக்கில் அமலாக்கத்துறை போடப்பட்டிருக்கும் வழக்கில் இருந்து ஜாமீன் கேட்டு இதற்கு முன்பு டெல்லி உயர் நீதிமன்றத்தில் செய்யப்பட்டிருந்த மேல்முறையீடு மனு தள்ளுபடி செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று மீண்டும் ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் ஜாமீன் கேட்டு மேல் முறையீடு.

Tamil Nadu news today updates : கரூரில் உள்ள கொசுவலை தயாரிப்பு ஆலைகள் மற்றும் அலுவலகத்தில் இன்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். 4வது நாளாக இந்த சோதனை நடைபெற்று வருகிறது. பவானிசாகர் அணை நீர்மட்டம் 105 அடி, நீர் இருப்பு 32.8 டி.எம்.சி, அணையின் நீர்வரத்து 6,718 கன அடி, நீர் வெளியேற்றம் 6700 கன அடியாக உள்ளது. இலங்கை அதிபராக மகிந்த ராஜபக்‌ஷேவின் சகோதரர் கோத்தபய ராஜபக்‌ஷே இன்று பதவியேற்கிறார்.

Web Title:Tamil nadu news today live updates chennai weather tn politics sa bobde

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
இதைப் பாருங்க!
X