ஜோதிராதித்ய சிந்தியா காங்கிரஸில் இருந்து விலகி உள்ளார். இதனை அடுத்து இன்று அவர் பிரதமர் மோடியை சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த 18 ஆண்டுகளாக நான் காங்கிரஸ் கட்சியில் இருக்கின்றேன். நாட்டு மக்களுக்காகவும், மாநிலத்திற்காகவும், நாட்டுக்காகவும் நான் செய்ய வேண்டிய சேவைகளை காங்கிரஸில் இருந்து செய்ய இயலவில்லை. புதிய துவக்கத்தை நோக்கி நான் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுகிறேன் என்று ஜோதிராதித்ய சிந்தியா காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு ராஜினாமா கடிதம் ஒன்றை அனுப்பினார். இன்று போபாலில் அவர் அதிகாரப்பூர்வமாக பாஜகவில் இணைவார் என்று தெரியவந்துள்ளது.
மேலும் படிக்க : கமல் நாத் அரசைக் கவிழ்க்க திட்டமா? மத்தியப் பிரதேசத்தில் தடுமாறும் காங்கிரஸ்…
இத்தாலி விமான நிலையத்தில் கொரோனா இல்லை என்பதற்கான மருத்துவச்சான்றிதழ் இல்லாததால் இந்திய மாணவர்களுக்கு விமானத்தில் பயணிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தாயகம் திரும்ப உதவுமாறு இந்திய தூதரகத்திடம் கோரிக்கை. மேலும் படிக்க : வீட்டில் இருந்தே வேலை பார்த்துக் கொள்ளுங்கள் – கொரோனாவால் ஐ.டி. ஊழியர்களுக்கு உத்தரவு
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Tamil Nadu news today updates Yes bank : யெஸ் வங்கியின் முன்னாள் இயக்குநர் மற்றும் சி.இ.ஒ மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் விசாரணைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். பண மோசடி மற்றும் சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் அளிக்கப்பட்ட வங்கிக் கடன்கள் தொடர்பாக அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை பெறப்பட்ட தரவுகளின் படி பார்த்தால் 44 நிறுவனங்களுக்கு இந்த வங்கி ரூ. 34 ஆயிரம் கோடி வரை கடன் அளித்துள்ளாது. அதில் அனில் அம்பானியின் என்.பி.ஏ. கீழ் இயங்கும் 9 நிறுவனங்கள் ரூ. 12,800 கோடி வரை கடன் கொடுக்கப்பட்டுள்ளது. அதே போன்று சுபாஷ் சந்திராவின் எஸ்ஸெல் க்ரூபின் கீழ் இயங்கும் 16 நிறுவனங்களுக்கு ரூ. 8,400 கோடி வரையில் வங்கிக் கடன் அளிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பான முழுமையான செய்திகளைப் படிக்க
Web Title:Tamil nadu news today live updates coronavirus jyotiraditya scindia bjp congress rajinikanth
2021ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி தொடர்பாக, முதற்கட்டமாக வீடுகளை கணக்கிடும் பணிக்கான விவரங்கள் தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் வனத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது திமுக உறுப்பினர் அன்பரசன், விவசாய நிலங்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்துவது குறித்தும் அன்பரசன் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த முதல்வர் பழனிசாமி, “காட்டுப் பன்றிகளால் பயிர்கள் சேதப்படுத்துவதை தடுக்க உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடபட்டுள்ளது. மேலும், காட்டுப் பன்றிகளால் சேதப்படுத்தப்படும் பயிர்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டு அதற்கான இழப்பீடு விவசாயிகளுக்கு வழங்கப்படும்” என்று கூறினார்.
சென்னையில் 2017ஆம் ஆண்டு 4 பேரை கொலை செய்த வழக்கை விசாரித்து வந்த செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம், குற்றவாளி தாமோதரனுக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்டுள்ள எல்.முருகனுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவராக எல்.முருகன் நியமனம் செய்து அறிவிக்கப்பட்ட நிலையில், பாஜக தேசியத் தலைமை காலியாக இருந்த தெலங்கானா பாஜக தலைவர் பதவிக்கு அம்மாநில முன்னாள் எம்.பி., சஞ்சய்குமார் நியமனம் செய்து அறிவித்துள்ளது.
சென்னை மண்ணடியில் 27வது நாளாக நடைபெற்று வரும் சிஏஏ எதிர்ப்பு போராட்டத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆதரவு தெரிவித்துள்ளார்.
நாங்கள் கலவரத்தை சாதாரணமாக எடுத்துக்கொள்ளவில்லை. கலவரங்கள் முன்கூட்டியே திட்டமிடப்பட்டவை என்று நான் நம்புகிறேன். கலவரம் செய்தவர்கள் எந்த மதம், சாதி அல்லது அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் குற்றவாளிகள் தப்பிக்க மாட்டார்கள் என்று கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நான் உறுதியளிக்கிறேன்” என்று கூறினார்.
டெல்லி வன்முறை குறித்து மக்களவையில் பேசிய உள்துறை அமைச்ச்சர் அமித்ஷா, “உத்தரபிரதேசத்தை சேர்ந்த 300 பேருக்கு டெல்லி வன்முறையில் தொடர்புடையது தெரியவந்துள்ளது. டெல்லி வன்முறைக்கு நிதியுதவி அளித்ததாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வடகிழக்கு டெல்லியில் பிப்ரவரி 25க்கு பின் எந்தவிதமான வன்முறையும் பதிவாகவில்லை. டெல்லி வன்முறையில் ஒரு தரப்பினர் பாதிக்கப்பட்டதாக கூறுவது தவறு; இரு மதத்தினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.
இருமலுடன் தொடங்கும் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு காலர் டியூனை தடை செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தமிழக அரசு வணிக நிறுவனங்களில் பெயர் பலகை தமிழில் இருக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது. மேலும், பெயர் பலகை ஆங்கிலம் 2வது இடத்திலும், மற்ற மொழிகள் 3வது இடத்திலும் இருக்க வேண்டும் இதனை கடை பிடிக்காத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் அறிவித்துள்ளது.
திருமலை திருப்பதி தேவஸ்தான கூடுதல் செயல் அலுவலர்: கொரோனா வைரஸ் காரணமாக திருப்பதிக்கு வரும் பக்தர்கள் கட்டாயமாக முகக் கவசம் அணிய வேண்டும். திருப்பதி மலை அடிவாரத்தில் இருந்து நடந்து வரும் பக்தர்கள் மற்றும் வாகனத்தில் வரும் பக்தர்களுக்கு மருத்துவர்கள் மூலமாக நோய் தொற்று ஏதேனும் உள்ளதா என்று பரிசோதனைக்குப் பின் திருமலைக்கு அனுப்பப்பட வழிவகை செய்யப்படும். வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஏற்கனவே திருப்பதி மலைக்கு சிறப்பு தரிசனத்திற்கு முன்பதிவு செய்து இருந்தால் அதை மாற்றிக் கொண்டு மாற்று தேதியில் வரவேண்டும் என தேவஸ்தானம் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய ஜோதிர் ஆதித்ய சிந்தியா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். பாஜகவில் இணைந்த ஜோதிர் ஆதித்ய சிந்தியா, மத்தியப் பிரதேச மாநிலத்தில் காலியாக உள்ள ராஜ்ய சபா எம்.பி பதவிக்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். மத்தியப் பிரதேசத்தில் 2 ராஜ்ய சபா எம்.பி பதவி காலியாக உள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் அண்மையில், ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில், ரஜினி நாளை காலை பத்திரிகையாளர்களை சந்திக்க அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நாளை முக்கிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்ப்பு.
தமிழகத்தில் காலியாக இருந்த தலைவர் பதவிக்கு, ஹெச்.ராஜா, நயினார் நாகேந்திரன், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் பெயர்கள் போட்டியில் இருந்த நிலையில், தேசிய எஸ்சி, எஸ்டி ஆணைய துணை தலைவராக இருக்கும் எல். முருகன் தமிழக பாஜக தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சிஏஏ போராட்டம் தொடர்பான வழக்கு ஒன்றில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டங்களால், தமிழகத்தில் தற்போது சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏதும் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும், போராட்டத்தால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாமலும், போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களுக்கு பாதுகாப்பும் வழங்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளது.
சிறையில் தன்னை தாக்கி காயப்படுத்தியதாக 2 காவலர்கள் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி நிர்பயா குற்றவாளி பவன் டெல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இதற்கு சிறை நிர்வாகம் பதிலளிக்க கோரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ள ஜோதிர் ஆதித்ய சிந்தியா செய்தியாளர்களிடம் பேசுகையில், “மக்களுக்காக சேவை செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த என்னால் அதனை நிறைவேற்ற முடியவில்லை. இதற்கு அந்தக் கட்சிதான் காரணம். என் வாழ்க்கையில் இரண்டு திருப்புமுனைகள் நடந்துள்ளது. அதில் முதலாவது என் தந்தையின் மரணம். இரண்டாவது திருப்புமுனை பாஜகவில் இணைந்தது.” என்று கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய ஜோதிர் ஆதித்ய சிந்தியா, பாரதிய ஜனதா கட்சியில் சேர்நதுள்ள நிகழ்வை, பா.ஜ., தேசிய செயலாளர் ஹெச்.ராஜா வரவேற்றுள்ளார். இதுதொடர்பாக, அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் முக்கிய பொறுப்புகளை வகித்த ஜோதிர் ஆதித்ய சிந்தியா, நேற்று தனது ஆதரவாளர்களுடன் பிரதமர் மோடி சந்தித்திருந்த நிலையில், இன்று பாரதிய ஜனதா கட்சி தேசிய தலைவர் ஜே பி நட்டா முன்னிலையில், பா.ஜ., வில் இணைந்தார்.
தமிழகத்தில் அழிந்துவரும் உப்புத் தொழிலை பாதுகாக்க அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
ஹைட்ரோ கார்பன் திட்டம் தமிழகம் வர வாய்ப்பில்லை என்று சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதனால் திமுகவினர் மற்றும் மக்கள் அச்சமடைய தேவையில்லை என்றும் அவர் அறிவித்தார்.
என்.பி.ஆருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற முடியாது என்று ஆளும் கட்சி தரப்பில் அறிவிக்கப்பட்ட நிலையில் தமிமுன் அன்சாரி சட்டப்பேரவைக்கு வெளியே தர்ணாவில் ஈடுபட்டு வருகிறார்.
நாடாளுமன்றம் நிறைவேற்றிய சட்டத்தை சட்டப்பேரவை தீர்மானம் கட்டுப்படுத்தாது. மக்களை ஏமாற்றும், தவறான தீர்மானத்தை நிறைவேற்ற விரும்பவில்லை என்று என்.பி.ஆர். தீர்மானம் குறித்து ஸ்டாலின் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் உதயக்குமார் பதில்.
கொரோனா வைரஸ் சீனாவில் தான் முதலில் உருவாகியது. சீனாவின் துபேய் மாகாணம், வுஹானில் உருவான இந்நோய் படிப்படியாக மாகாணம், நாடு, கண்டம், உலகம் என அதிதீவிரமாக பரவியது. வுஹானில் ஏற்கனவே சீனாவின் ப்ரீமியர் நிலவரங்களை கவனித்து வந்தார். இந்நிலையில் சீனாவின் அதிபர் ஜின்பிங் முதன்முறையாக வுஹான் சென்று, களநிலவரங்களையும், மேற்கொள்ளப்பட்ட ஏற்பாடுகள் குறித்தும் நேரில் பார்வையிட்டார்.
ஜோதிராதித்ய சிந்தியா இன்று மதியம் 12.30 மணியளவில் ஜே.பி. நட்டா முன்னிலையில், போபாலில் பாஜகவில் இணைகிறார்.
எதிர்கட்சி உறுப்பினர்களின் அமளியால் மக்களவை 12.30 மணி வரையும், மாநிலங்களவை 2 மணி வரையும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
என்.பி.ஆர். குறித்து பொதுமக்களிடம் அச்சம் ஏற்பட்டுள்ளது என்று கூறிய திமுக தலைவர் முக ஸ்டாலின், தமிழக அரசு எழுதிய கடிதத்துக்கு மத்திய அரசு பதில் அளித்துள்ளதா என்று கேள்வியும் எழுப்பியுள்ளார்.
ஒலிம்பிக் போட்டிகளை ஒத்திவைப்பது குறித்து ஒலிம்பிக் கமிட்டி ஆலோசிக்க முடிவு செய்துள்ளது. ஒன்று அல்லது 2 ஆண்டுகள் ஒலிம்பிக் போட்டிகள் கொரோனா வைரஸ் காரணமாக ஒத்திவைக்கப்படலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுர மாவட்டம் கமுதியில் சோலார் மூலம் 500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டம் விரைவில் துவங்க உள்ளது என்று மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி அறிவித்துள்ளார்.
தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ. 240 குறைந்துள்ளது. சென்னையில் ஒரு சவரன் தங்கம் ரூ. 33, 472-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தமிழக நியாய விலைக்கடைகளில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு விரைவில் சம்பள உயர்வு அளிக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் செல்லூர் ராஜூ தகவல்
கேரள மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்த காவலர் சுப்ரியா என்ற பெண்ணுடன் கன்னியாகுமரியில் விடுதி ஒன்றில் தங்கியுள்ளார். வாவத்துறை பகுதியில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட இவரின் பிரேதத்தை பரிசோதனை செய்த போது இவர் காவல்துறையை சேர்ந்தவர் என்று தெரிய வந்துள்ளது. அவர் தங்கியிருந்த ஹோட்டலுக்கு சென்று பார்த்தால் அவருடன் தங்கியிருந்த பெண் உயிருக்கு ஊசலாடிய நிலையில் இருந்தார். அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
சட்டவிரோதமாக காவலில் இருக்கும் தன்னை விடுவிக்க வேண்டும் என்று ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளி நளினி மனு அளித்திருந்தார். நளினியின் மனுவை தள்ளுபடி செய்து அறிவித்தது சென்னை உயர் நீதிமன்றம்.
ஓ.பி.எஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்கள் அரசுக்கு எதிராக வாக்களித்த விவகாரம் தொடர்பாக சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டார். இதற்கு பதில் தர கால அவகாசம் வேண்டும் என்று 11 எம்.எல்.ஏக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மும்பை சென்செக்ஸ் 206 புள்ளிகள் உயர்ந்து 35,841 புள்ளிகளில் வணிகம் ஆரம்பித்துள்ளது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டி 34 புள்ளிகள் உயர்ந்து 10,486 புள்ளிகளுடன் ஆரம்பமாகியுள்ளது.
கேரளாவில் இன்று 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் துவங்கியுள்ளது. கொரோனாவைரஸ் அச்சம் காரணமாக மாணவர்கள் மற்றும் தேர்வு கண்காணிப்பாளர்கள் முக கவசம் அணிந்து கொண்டு தேர்வில் கலந்து கொண்டுள்ளனர்.
பொய் வழக்கு பதிவு செய்ய முயற்சி செய்வதாக சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் சபீதா மீது, அவர் வீட்டில் பணியாற்றும் பெண், மனித உரிமை ஆணையத்தில் வழக்கு.
சென்னையில் பெட்ரோல், டீசலின் நேற்றைய விலையில் மாற்றம் இல்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.73.02-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.66.48-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
நடிகர் ரஜினிகாந்த் நாளை (10/03/2020) மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார். சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் நாளை காலை 8 மணிக்கு இந்த கூட்டம் நடைபெற உள்ளது.