/tamil-ie/media/media_files/uploads/2019/11/sabarimala-1.jpg)
TN Live Updates :
Latest News in Tamil Nadu Today Updates: ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்துக்கு வெளிநாட்டில் இருந்து ரூ.305 கோடி நிதி திரட்ட அனுமதி வழங்கியதில் முறைகேடு நடந்ததாக கூறி முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், அவருடைய மகன் கார்த்தி சிதம்பரம் எம்.பி. உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ.யும், அமலாக்கப்பிரிவும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இதற்கிடையில், அமலாக்கத்துறை வழக்கில் ப.சிதம்பரம் ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.
சென்னை ஐ.ஐ.டி.யில் கேரள மாணவி தற்கொலை செய்த வழக்கு மத்திய குற்றப்பிரிவு விசாரணைக்கு மாற்றம் செய்து சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.
சென்னையில் தரமணி, வேளச்சேரி, பட்டினப்பாக்கம், எழும்பூர், கோடம்பாக்கம், கிண்டி, சேத்துப்பட்டு, புரசைவாக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நள்ளிரவில் பரவலாக மழை பெய்தது. திருச்செந்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. குறிப்பாக, தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம் ஆகிய 13 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தோனேசியாவின் மொலுக்கா தீவு அருகே உள்ள கடல் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.1 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் வடமேற்கு நகரமான டெர்னேட் என்ற இடத்தை மையமாக கொண்டு ஏற்பட்டது.
Live Blog
Tamil Nadu and Chennai news today updates of weather, traffic, rainfall, Breaking : இன்று சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்
சென்னை ஐஐடியில் தற்கொலை செய்துகொண்ட மாணவியின் தந்தை லத்தீஃப் சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து முறையிட்டார்.
இந்த சந்திப்பு குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள மு.க.ஸ்டாலின், “சென்னை ஐஐடி மாணவி பாத்திமா மரணம் தற்கொலை அல்ல; அதில் பல மர்மங்கள் அடங்கி இருப்பதை அவரது பெற்றோர் எழுப்பும் கேள்விகள் உணர்த்துகிறது! அவர்களின் கண்ணீருக்கு நீதி கிடைக்க வேண்டும்!
குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்வதன் மூலமாக நியாயத்தின் பக்கம் நிற்பதை தமிழக அரசு நிரூபிக்க வேண்டும்.
எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் ஆதிக்க சக்திகளின் கொடும்பற்கள் தனது கோரத்தாண்டவத்தை நிறுத்தவில்லை என்பதையே பாத்திமாவின் மரணம் காட்டுகிறது!
இதுபோன்ற நிகழ்வுகள் திராவிட இயக்கம் எப்போதும் தேவை என்பதை தொடர்ந்து உணர்த்துகின்றன.” என்று குறிப்பிட்டுள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை பாத்திமாவின் தந்தை லத்தீஃப் சந்தித்தார்.
ஐஐடியில் தற்கொலை செய்துகொண்ட மாணவி ஃபாத்திமாவின் தந்தை லத்தீஃப் முதல்வர் பழனிசாமி, டிஜிபியை சந்தித்த நிலையில் திமுக தலைவர் ஸ்டாலினையும் சந்தித்தார்.
பாஜகவின் தமிழக மேலிடப் பொறுப்பாளர் முரளிதரராவ்: ரஃபேல் குறித்து தவறான பிரசாரம் செய்த காங்கிரஸ் கட்சி மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். பாஜகவின் உட்கட்சி தேர்தல்கள் அனைத்தும் டிசம்பர் 15-ஆம் தேதிக்குள் நிறைவடையும், அதன் பிறகு தமிழக பாஜக தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று கூறினார்.
சென்னையில் அமைந்துள்ள தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் டிசம்பர் 2-ம் தேதி முதல் செயல்படும் - தேசிய பசுமை தீர்ப்பாய பதிவாளர் அறிவிப்பு.
தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினராக நீதிபதி கே.ராமகிருஷ்ணன் நியமனம்
சென்னை பெரம்ப்பூரில் உள்ள குடியிருப்பில் ஆழ்துளை கிணறுகள் சரியாக மூடப்படவில்லை என்று ஜெயஸ்ரீ என்ற பெண் வழக்கு பதிவு செய்திருந்தார். நேரில் ஆய்வு செய்த சென்னை மாநகராட்சி ஆணையர் ஆழ்துளை கிணறுகள் அனைத்தும் மூடப்பட்டுவிட்டதாக அறிக்கை தாக்கல் செய்தார். அதனை ஏற்ற நீதிமன்றம் விளம்பரத்துக்காக வழக்கு பதிவு செய்தார் இந்த பெண் என்று கூறி ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்தது.
ஐஐடி சென்னை மாணவி ஃபாத்திமா லத்தீஃபின் தந்தை அப்துல் லத்தீஃப் தற்போது செய்தியாளர்களை சந்தித்து வருகிறார். தனது மகளின் மரணத்தில் குற்றவாளியாக யார் இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நுகர்வோர் செலவினம் 2017 -18 ஆண்டுகளில் முதன்முறையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. 2011 - 12 ஆண்டின் போது ஒரு தனிநபரின் மாத செலவு என்பது ரூ. 1,501-ஆக இருந்தது. தற்போது ரூ. 1,446-ஆக குறைந்துள்ளது என என்.எஸ்.ஓ அறிவித்துள்ளது.
தமிழகத்தில் தென்காசி, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், மற்றும் கள்ளக்குறிச்சி என ஐந்து புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டது. இந்த ஐந்து மாவட்டங்களுக்குமான மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தென்காசி - சுகுணா சிங், கள்ளக்குறிச்சி - ஜெயசந்திரன், செங்கல்பட்டு - எஸ்.பி. கண்ணன், ராணிப்பேட்டை - மயில்வாகனன் , திருப்பத்தூர் - விஜயகுமார்
அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் என்று வாஷிங்க்டனில் உரையாற்றினார். அப்போது அவர் “தமிழகத்தில் தொழில் துவங்க அனைத்து உதவிகளையும் தமிழகம் செய்ய தயாராக உள்ளது. தமிழகத்தின் வளர்ச்சி பாதையில் இணைய தொழில் முனைவோர்களை வரவேற்கின்றேன்” என்று உரையாற்றியுள்ளார்.
மாணவி ஃபாத்திமாவின் மரணம் எங்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது என்றும் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் மாணவர்கள் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் ஐஐடி நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
தேமுதிக சார்பில் உள்ளாட்சி அமைப்பு தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு துணை செயலாளர் சுதீஷ் தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைப்பு.மேயர் பொறுப்புக்கு விருப்ப மனுவை தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் விநியோகம்.
5 பேர் கொண்ட குழுவில் இளங்கோவன், மோகன்ராஜ், பார்த்தசாரதி, ஏ,எஸ்.அக்பர் ஆகியோரும் உள்ளனர்
ஆந்திர மாநிலத்தில் அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்த ஒவ்வொரு ஆண்டும் 3 ஆயிரத்து 500 கோடி செலவு செய்யப்பட உள்ளதாக அம்மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி கூறியுள்ளார். 2020 ஆம் ஆண்டிற்குள் அரசுப் பள்ளிகளில், அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்படும் என்றும் குறிப்பிட்டார்.
வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின், இரண்டாம் நாள் ஆட்டமான இன்று, மதிய உணவு இடைவேளைக்கு பிறகு, ஓப்பனர் மாயங்க் அகர்வால் சதம் அடித்துள்ளார். டெஸ்ட் போட்டியில், இது அவரது மூன்றாவது சதமாகும்.
💯!
A well deserved 3rd Test CENTURY for @mayankcricket 👏👏
Live - https://t.co/kywRjNI5G1 #INDvBAN pic.twitter.com/WNGIf3D4Wz
— BCCI (@BCCI) November 15, 2019
வண்டலூர் உயிரியல் பூங்காவில் மாரத்தான் ஓட்டம் நடத்தப்பட்ட விவகாரம் : வன உயிரியல் பூங்கா விதிகளை மீறியதாக வண்டலூர் உயிரியல் பூங்கா நிர்வாகத்திற்கு நோட்டீஸ்.
உரிய விளக்கம் அளிக்க மத்திய உயிரியல் பூங்கா ஆணையம் உத்தரவு.
சென்னை ஐ.ஐ.டி.யில் கேரள மாணவி தற்கொலை செய்த வழக்கு மத்திய குற்றப்பிரிவு விசாரணைக்கு மாற்றம் செய்து சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நேற்று உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், மாணவி தற்கொலை தொடர்பாக ஐஐடி பேராசிரியர்கள் மூன்று பேரிடம் மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரசு நிகழ்ச்சிகளுக்கு பேனர்கள் வைக்க அரசுக்கு அனுமதி அளித்த உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.
சீன அதிபர் இந்தியாவிற்கு வந்து சென்றுவிட்டார் இனி இந்த வழக்கில் என்ன உள்ளது? - உச்சநீதிமன்றம்
உயர்நீதிமன்ற உத்தரவை அரசியல் கட்சிகளும், தனிநபர்களும் கடைபிடிக்க வேண்டும் - உச்சநீதிமன்றம்
நதிநீர் பங்கீட்டு உரிமைகள் விவகாரத்தில் அதிமுக அரசு முன்னுரிமை காட்டுவது இல்லை. தென்பெண்ணை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து தமிழகத்தின் நதிநீர் உரிமையை நிலைநாட்டி, 5 மாவட்ட மக்களுக்கான பாதிப்பை நீக்கவும், கர்நாடக பாசன திட்டங்களை தடுத்து நிறுத்திட விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் - துரைமுருகன்
உள்ளாட்சி தேர்தலை நிறுத்தும் பணியில் திமுக ஈடுபட்டிருப்பதாக அமைச்சர்கள் கூறுகின்றனர். உள்ளாட்சி தேர்தல் முறையாக நடக்க வேண்டும் என்பதற்காகவே நீதிமன்றம் சென்றோம். தேர்தலை நடத்தக் கூடாது என்ற எண்ணத்தில் அரசு தான் உள்ளது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய்சேதுபதி நடித்துள்ள சங்கத் தமிழன் இன்று வெளியாகாததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இயக்குனர் விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்துள்ள படம் சங்கத்தமிழன். இந்த படத்தில் நிவேதா பெத்துராஜ், ராசி கண்ணா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சங்கத்தமிழன் படம் இன்று ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. வீரம், ஜில்லா ஆகிய படங்களைத் தயாரித்த விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது.
இந்நிலையில் சில விநியோகஸ்தர்களுக்கு நிலுவைத் தொகையை தரவில்லை என்பதால் இப்படம் இன்று வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இன்று காலை காட்சிகள் வெளியாகாத நிலையில், தற்போது விநியோகஸ்தர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், இதனையடுத்து மதிய காட்சிக்கு இப்படம் ரிலீஸ் ஆகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாநகராட்சி மேயருக்கு ரூ.25 ஆயிரம், வார்டு உறுப்பினர் - ரூ.5 ஆயிரம், நகர்மன்றத் தலைவர் - ரூ.10 ஆயிரம், நகர்மன்ற வார்டு உறுப்பினர் - ரூ.2 ஆயிரத்து 500, பேரூராட்சித் தலைவர் - ரூ.5 ஆயிரம், பேரூராட்சி வார்டு உறுப்பினர் - ரூ.1,500, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் - ரூ.5 ஆயிரம், ஊராட்சி ஒன்றியக் குழு வார்டு உறுப்பினர் - ரூ.3 ஆயிரம் என கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட இன்று முதல் விருப்ப மனுக்களைப் பெறலாம் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
மாநகராட்சி மேயர் பதவிக்கு விருப்ப மனு கட்டணமாக ரூ.15 ஆயிரம், மாநகராட்சி மாமன்ற வார்டு உறுப்பினருக்கு ரூ.4 ஆயிரம், நகராட்சி மன்ற தலைவருக்கு ரூ.7 ஆயிரம், நகராட்சி மன்ற வார்டு உறுப் பினருக்கு ரூ.1,500, பேரூராட்சி மன்ற தலைவருக்கு ரூ.4 ஆயிரம், பேரூராட்சி மன்ற வார்டு உறுப்பினருக்கு ஆயிரம் ரூபாய், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினருக்கு ரூ.4 ஆயிரம், ஊராட்சி ஒன்றிய குழு உறுப் பினருக்கு ரூ.2 ஆயிரம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதிமுக சார்பில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கான விருப்பமனுக்கள் இன்றும் நாளையும் மாவட்ட தலைநகரங்களில் விநியோகிக்கப்படுகின்றன.
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அதிமுக சார்பில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் விருப்ப மனுக்கள் இன்றும் நாளையும் விநியோகிக்கப்படுகின்றன. மாநகராட்சி மேயர் தேர்தலுக்கான விருப்ப மனுக் கட்டணம் 25 ஆயிரம் ரூபாயாகவும், வார்டு மாமன்ற உறுப்பினருக்கான கட்டணம் 5 ஆயிரம் என கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் மாவட்ட தலைமையகத்தில் உரிய கட்டணம் செலுத்தி விருப்ப மனுக்களைப் பெறலாம். காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை உரிய கட்டணம் செலுத்தி விருப்ப மனுக்கள் விநியோகிக்கப்படவுள்ளன.
ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்துக்கு வெளிநாட்டில் இருந்து ரூ.305 கோடி நிதி திரட்ட அனுமதி வழங்கியதில் முறைகேடு நடந்ததாக கூறி முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம், அவருடைய மகன் கார்த்தி சிதம்பரம் எம்.பி. உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ.யும், அமலாக்கப்பிரிவும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.
இந்த வழக்கில் ப.சிதம்பரம், சி.பி.ஐ. அதிகாரிகளால் கடந்த ஆகஸ்டு 21-ந் தேதி கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். சி.பி.ஐ. தொடர்ந்த இந்த வழக்கில் அவருக்கு சுப்ரீம் கோர்ட்டு சில நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கியது. எனினும், அமலாக்கத்துறை வழக்கில் தொடர்ந்து திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையில், அமலாக்கத்துறை வழக்கில் ப.சிதம்பரம் ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.
இந்தோனேசியாவின் மொலுக்கா தீவு அருகே உள்ள கடல் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.1 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் வடமேற்கு நகரமான டெர்னேட் என்ற இடத்தை மையமாக கொண்டு ஏற்பட்டது.
நிலநடுக்கத்தால் கட்டிடங்கல் குலுங்கியதால் மக்கள் பீதி அடைந்து வீடுகளை விட்டு வெளியேறினர். உடனடியாக சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டதால், மக்கள் உயரமான பகுதிகளை நோக்கி ஓடினர்.
திருவேற்காடு சுந்தரா சோழபுரம் ஏழுமலை நகரை சேர்ந்தவர் தனசேகரன். இவர் கடந்த 3 ஆம் தேதி, தியாகராயநகரில் உள்ள பிரபல எலைட் தங்க நகைக்கடையில் பழைய தங்க நாணயங்கள் கொடுத்து ,3 சவரன் செயின் வாங்கியுள்ளார். பின்னர், திரும்பி வந்த அவர், அந்த தங்க நகை போலியானது என கூறி கடை ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்து மிரட்டி 15 லட்ச ரூபாய் பெற்றுள்ளார். அதன் பின்னர் மீண்டும் சில நாட்களில், 15 க்கும் மேற்பட்ட நபர்களுடன் சென்ற தனசேகர், கடை மேலாளரிடம் தகராறு செய்து ஒரு கோடி ரூபாய் கேட்டு மிரட்டியுள்ளார். இதையடுத்து நகைக் கடை மேலாளர் அளித்த புகாரின் பேரில், தனசேகர் மற்றும் அவருடனிருந்த வடபழனியை சேர்ந்த அதிமுக உறுப்பினர் ஜீவா உள்ளிட்ட 9 பேரை போலீசார் கைது செய்தனர் . இவர்களிடமிருந்து போலியான காவல்துறை அடையாள அட்டை, ஏர்கன் துப்பாக்கி மற்றும் இரண்டு கார்களையும் போலீசார், பறிமுதல் செய்தனர்.
பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை ஐஏஎஸ் அதிகாரிகள் அல்லாத அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் பள்ளி கல்வித்துறை இருந்தது. ஆனால் தற்போது ஆசிரியர் தேர்வு வாரியத்தில் ஒரு அதிகாரி, பாடநூல் கழகத்தில் ஒரு ஐஏஎஸ் அதிகாரி மற்றும் துறையின் முதன்மை செயலாளர் மற்றும் இணை செயலாளர் என 6 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர். பள்ளிக் கல்வித் துறையில் புதிதாக ஆணையர் என்ற பதவி உருவாக்கப்பட்டு, அந்த பணியிடத்தில் சிஜி தாமஸ் என்ற பெண் ஐஏஎஸ் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் புதிய கல்விக் கொள்கையில், "இந்தியன் எஜுகேஷனல் சர்வீஸ்" என்ற பதவி ஏற்படுத்தப்பட்டு, அந்த அதிகாரியின் கீழ் ஒட்டுமொத்த கல்வித்துறையும் கொண்டு வரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை தயாராக இருக்கக் கூடிய நிலையில், அந்த அறிவிப்பை நடைமுறைப்படுத்தும் விதமாக தமிழக அரசு முன்கூட்டியே இப்படி ஒரு பதவியை ஏற்படுத்தி இருக்கலாம் என ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
வெப்பச்சலனம் காரணமாக, தமிழக கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி, சென்னையில் ஒரு சில இடங்களில் நேற்றிரவு திடீரென மழை பெய்தது. நள்ளிரவுக்கு மேல் பட்டினப்பாக்கம், கிண்டி, தரமணி, மீனம்பாக்கம், உள்ளிட்ட நகரின் சில இடங்களில் மிதமான மழை பெய்தது. இதனிடையே, கடலூர், கன்னியாகுமரி, விழுப்புரம் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், இந்து மல்கோத்ரா ஆகிய 3 நீதிபதிகள் இந்த வழக்கை 7 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றி தீர்ப்பு வழங்கினார்கள். ரோகின்டன் பாலி நாரிமன், டி.ஒய்.சந்திரசூட் ஆகிய இரு நீதிபதிகள், சபரிமலை கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதித்து முன்பு வழங்கப்பட்ட தீர்ப்பு செல்லும் என்று மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர்.
தமிழக போலீஸ்துறைக்கு உபகரணங்கள் வாங்கிய விவகாரம் தொடர்பாக லஞ்ச ஒழிப்பு துறை விசாரணை நடத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights