Tamil Nadu News Updates : 10 நாள் பயணமாக அமெரிக்கா செல்கிறார் ஓபிஎஸ்: முதலீட்டாளர்களை சந்தித்து பேச முடிவு

Tamil Nadu News in Tamil, Latest News in Tamilnadu Updates: சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.75.45. டீசல் விலை ரூ. 69.50 ஆகும்.

By: Nov 7, 2019, 7:23:18 AM

Flash News in Tamilnadu Updates: நவம்பர் 8 முதல் 17 ஆம் தேதி வரை அரசு முறைப் பயணமாக அமெரிக்கா செல்லும் துணை முதல்வர் ஓபிஎஸ்-க்கு American Multi Ethnic Coalition Inc., சார்பாக International Rising star of the year- Asia award விருது வழங்கப்பட உள்ளது. துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நவம்பர் 8 ஆம் தேதி காலை சென்னையில் இருந்து புறப்பட்டு சிகாகோ செல்கிறார். நவம்பர் 9 முதல் 12 வரை – சிகாகோவிலும் நவம்பர்13, 14 – வாஷிங்டனிலும் நவம்பர்14, 15 -இல் ஹூஸ்டனிலும் நவம்பர் 16 நியூயார்க்கிலும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். நவம்பர் 17 சென்னை திரும்புகிறார்.

தமிழ் மாநில காங்கிரஸ் தலவைர் ஜீ.கே வாசன் இன்று டெல்லியில் பிரதமர்  நரேந்திர மோடியை சந்திக்க விருக்கிறார். மாமல்லபுரம் உச்சி மாநாட்டிற்காக சென்னை வந்த போது மோடியை வரவேற்றத் தலைவர்களில் ஜீ.கே வாசனும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் மாநில காங்கிரஸ், பாஜக இடையிலான உறவுகள், மேலும்  வலுப்படும் வகையில் இந்த சந்திப்பு அமையும் என்று நம்பப்படுகிறது.

இந்தியாவில் மிகப் பெரிய அணுமின் நிலையமான கூடங்குளத்தில் கடந்த செப்டம்பர் மாதம் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டதை இந்திய அணுசக்திக் கழகம் கடந்த அக்டோபர் 30ம் அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொண்டது. சைபர் தாக்குதல் நடத்தப்பட்ட கணினிக்கும் அணுசக்தி நிலையங்களுக்குள் உள்ள கணனிக்கும் சம்மந்தம் இல்லை என்றும் அறிவித்து இருந்தது. இந்நிலையில், கூடங்குளத்தைப் போல்,  இந்தியாவின் பிராதன விண்வெளி ஆய்வு நிலையமான  இஸ்ரோவும் இந்த சைபர் தாக்குதலுக்கு உள்ளாகின என்று  ‘தி இந்தியன் எக்ஸ்ப்ரெஸ்’ என்ற ஆங்கில நாளிதழ் தற்போது செய்தி வெளியிட்டுள்ளது.

இது போன்ற முக்கிய செய்திகளை இந்த லைவ் ப்ளாக்கில் காணலாம்.

Live Blog
Tamil Nadu news today updates : Chennai weather, traffic, petrol diesel price, இன்று தமிழகம் மற்றும் உலக அளவில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்
22:01 (IST)06 Nov 2019
முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் - நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பு

சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் ரஜினிகாந்த்தை முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சந்தித்துப் பேசினார். அவர் மத்திய அரசின் சிறப்பு விருது பெறவுள்ள ரஜினியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

19:54 (IST)06 Nov 2019
அர்ஜுன் சம்பத்தை ஆறு மணி நேர விசாரணைக்கு பிறகு அனுப்பிவைத்தது காவல்துறை

திருவள்ளுவர் சிலைக்கு காவி துண்டும் ருத்திராட்ச மாலையும் அணிவித்த இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்தை ஆறு மணி நேர விசாரணைக்கு பிறகு காவல்துறையினர் அனுப்பிவைத்தனர், வரும் 20ம் தேதி காவல் நிலையத்தில் ஆஜராக உத்தரவு.

19:51 (IST)06 Nov 2019
அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர்கள் 4 பேர் பணியிட மாற்றம்

அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர்கள் 4 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மதுரை, சேலம், கன்னியாகுமரி, திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர்கள் இட மாற்றம் செய்யப்பட்டுள்னர். மதுரை ராஜாஜி மருத்துவமனை டீன் வனிதா
திருச்சி அரசு மருத்துவமனை முதல்வராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

19:05 (IST)06 Nov 2019
சென்னை வருமானவரித்துறை அலுவலகத்தில் கல்கி பகவான் விசாரணைக்கு ஆஜர்

சென்னை நுங்கம்பாக்கம் வருமானவரித்துறை அலுவலகத்தில் கல்கி பகவான் விசாரணைக்கு ஆஜரானார். சென்னை, ஆந்திரா உட்பட கல்கி பகவானுக்கு சொந்தமான 40 இடங்களில் சோதனை நடைபெற்றது; சோதனையில் ரூ.43.90 கோடி, ரூ.18 கோடி மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சி பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து, கல்கி பகவான் சென்னை நுங்கம்பாக்கம் வருமானவரித்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார்.

18:21 (IST)06 Nov 2019
திருவள்ளுவருக்கு வண்ணம் பூசத் தேவையில்லை - கமல்ஹாசன் பேட்டி

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களும் பேசுகையில், திருவள்ளுவர் எந்த மதத்துக்கும் சொந்தமற்ற பொது கருத்தியல்வாதி. திருவள்ளுவருக்கு வண்ணம் பூசத் தேவையில்லை என்று கூறினார்.

17:54 (IST)06 Nov 2019
அயோத்தி வழக்கின் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் சரி, அனைவரும் அமைதி காக்க வேண்டும் - ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர்

அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியாக உள்ல நிலையில், ஆன்மீகத் தலைவர் ஸ்ரீஸ்ரீ ரவிஷங்கர், அயோத்தி வழக்கின் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் சரி, அனைவரும் அமைதி காக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

17:32 (IST)06 Nov 2019
உள்ளாட்சி தேர்தல்: அதிமுக நிர்வாகிகளுடன் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் ஆலோசனை

உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்வது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து அதிமுக நிர்வாகிகளுடன் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை. அதிமுக எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் பங்கேற்பு

16:48 (IST)06 Nov 2019
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு

சாட்சிகளை கலைக்க முயல்கிறார் என்று ப.சிதம்பரத்தின் மீது அமலாக்கத்துறை குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறது. ஆனால் அவரை இதுவரை விசாரிக்காதது ஏன் என்று வாதம் செய்து வருகிறார் கபில் சிபில். அனைத்து ஆதாரங்களும், ஆவணங்களும் அமலாக்கத்துறையிடம் இருக்கும் போது எவ்வாறு சிதம்பரம் சாட்சியங்களை கலைப்பார் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார் அவர்.

16:25 (IST)06 Nov 2019
காற்று மாசடையும் விவகாரம் : தலைமை செயலாளருக்கு எச்சரிக்கை

ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் பயிர்க் கழிவுகளை எரிப்பதால் உருவாகும் புகை மண்டலம் டெல்லியின் இயல்பு வாழ்க்கையை முற்றிலுமாக சீரழித்துள்ளது. உங்கள் பணியை நீங்கள் சரியாக செய்யவில்லை என்றால் பணியில் இருந்து நீக்கம் செய்யப்படுவீர்கள் என உச்ச நீதிமன்றம் பஞ்சாப் தலைமை செயலாளருக்கு எச்சரிக்கை செய்துள்ளது. 7 நாட்களுக்குள் பயிர் கழிவினை அப்புறப்படுத்த தேவையான நிதியையும் நாங்களே பெற்றுத் தருகிறோம் என காட்டம்.

16:01 (IST)06 Nov 2019
கோமுகி அணையில் இருந்து நீர் திறப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்திருக்கிறது கோமுகி நதி. அந்த நதியின் அணையில் இருந்து நாளை மறுநாள் முதல் நீர் திறக்க வேண்டும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

15:54 (IST)06 Nov 2019
காவல்துறையினர் கைது செய்யப்பட வேண்டும்

வழக்கறிஞர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்ட காவல்துறையினர் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறிழைத்த காவல் அதிகாரிகள் கைது செய்யப்பட்டால் மட்டுமே போராட்டம் குறையும் என டெல்லி பார் கவுன்சில் தலைவர் கே.சி. மித்தல் அறிவித்துள்ளார்.

15:51 (IST)06 Nov 2019
வழக்கறிஞர்கள் - காவல்துறையினர் மோதல்

டெல்லியில் வழக்கறிஞர்கள், காவல்துறையினர் இடையே நடைபெற்ற மோதல் குறித்த விசாரணை டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. நீதிமன்றத்தின் உத்தரவையும் மீறி சில காவலர்கள் செயல்பட்டிருப்பது நீதிமன்ற அவமதிபாகும் என்று வழக்கறிஞர் ராகேஷ் கண்ணா வாதாடியுள்ளார். வழக்கறிஞர்களை குறை கூறுவதற்கு பதிலாக காவல்துறையினர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்று கீர்த்தி உப்பல் கேள்வி எழுப்பியுள்ளார்.

15:23 (IST)06 Nov 2019
தொடர்ந்து நடைபெறும் வக்கீல்கள் - போலீசார் தள்ளுமுள்ளு

டெல்லியில் வழக்கறிஞர்கள் மற்றும் காவல்துறையினருக்கு இடையே கடுமையான சண்டைகள் நடைபெற்று நாடு முழுவதும் கலவரமாக அமைந்திருக்கும் இதே நேரத்தில் ராஜஸ்தான் மாநிலத்தின் அல்வர் கீழமை நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் மற்றும் காவல்துறையினர் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளது.

15:10 (IST)06 Nov 2019
வழக்கறிஞர்களை தாக்கிய காவல்துறையினர்

வழக்கறிஞர்களை தாக்கிய காவல்துறையினர் கைது செய்யப்பட வேண்டும் எனவும், ஒரு வார காலத்துக்குள் கைது செய்யப்படவில்லை எனில் தர்ணா போராட்டம் நடத்துவோம் என்றும் இந்திய பார் கவுன்சில் அறிவித்துள்ளது.

14:54 (IST)06 Nov 2019
தீய சக்திகளை கைது செய்யாதது கண்டிக்கதக்கது - எச்.ராஜா

தஞ்சை பிள்ளையார்பட்டியில் அமைந்திருக்கும் திருவள்ளுவர் சிலை தீய சக்திகளால் அசிங்கப்படுத்தப்பட்டது. ஆனால் அந்த செயலை செய்தவர்களை காவல்துறை கைது செய்யவில்லை. இது கண்டிக்கத்தக்கது என்று அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்திருந்தார்.

14:40 (IST)06 Nov 2019
வெங்காயத்தின் விலையை குறைக்க அரசு முயற்சி

நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வெங்காயத்தின் வரத்து குறைவாக இருப்பதால் விலை உயரும் என்று ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களிடம் சந்தித்து பேசினார் அமைச்சர் செல்லூர் ராஜூ. மேலும் தமிழக அரசு விலையை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும் அவர் கூறினார்.

14:34 (IST)06 Nov 2019
அந்தமான் பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது

அந்தமான் அருகே உருவாகிய குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக வலுப்பெறுகிறது. இது வடமேற்கு திசையில் ஒடிசா மற்றும் மேற்கு வங்க மாநிலங்கள் நோக்கி நகர உள்ளது. இதனால் தமிழகம் மற்றும் புதுவையின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

14:10 (IST)06 Nov 2019
பாலியல் வன்கொடுமை - 17 ஆண்டுகள் சிறை

திண்டுக்கல் அருகே 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சௌந்தரபாண்டியன் என்பவருக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பினை அறிவித்துள்ளது மாவட்ட மகளிர் நீதிமன்றம்.

14:09 (IST)06 Nov 2019
மக்கள் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம்

முதல்வர் மேற்பார்வையில் சிறப்பு குறை தீர்க்கும் வட்டார திட்டம் சேலம் மாவட்டத்தில் கொங்கனாபுரத்தில் 9ம் தேதி துவங்கி தொடர்ந்து நடைபெற உள்ளது. மாவட்டம் தோறும் வட்டார அளவில் 20ம் தேதிக்குள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். இதுவரை மொத்தம் 9,72,216 மனுக்கள் பெறப்பட்டு, 5,11,186 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது, 4,37,492 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது.

14:05 (IST)06 Nov 2019
திருவள்ளுவரை வைத்து அரசியல் செய்வதை தவிர்க்க வேண்டும் - விஜயகாந்த்

திருவள்ளுவர் எந்த மதத்தை சார்ந்தவர் என்ற ரீதியில் தற்போது வலதுசாரி அமைப்புகளுக்கும் திராவிட அமைப்புகளுக்கும் இடையே பெரும் சர்ச்சை நிலவி வருகிறது. அர்ஜூன் சம்பத் தஞ்சையில் அமைந்திருந்த திருவள்ளுவர் சிலைக்கு ருத்ராட்ச மாலை அணிவித்து, காவி நிற ஆடை போர்த்தினார். இதனால் அவர் கைதும் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் திருவள்ளுவரை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என விஜயகாந்த் அறிவித்துள்ளார். 

13:57 (IST)06 Nov 2019
வெங்காய விலைக்கட்டுப்பாடு குறித்து தமிழக அரசு ஆலோசனை

தமிழகத்தில் வெங்காயத்தின் விலையை குறைப்பது மற்றும் கட்டுப்படுத்துவது தொடர்பாக அதிகாரிகளுடன் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ மற்றும் காமராஜ் ஆகியோர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

13:21 (IST)06 Nov 2019
அர்ஜுன் சம்பத் கைது

தஞ்சை பிள்ளையார்பட்டியில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு, இன்று காலை அர்ஜுன் சம்பத் காவித்துண்டு அணிவித்து, பட்டை நாமம் இட்டு, ருத்ராட்சை மாலை அணிவித்து, தீபாராதனை காட்டினார். இந்நிலையில், கும்பகோணம் அருகே தஞ்சை வல்லம் போலீசார் கைது செய்து, காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

13:11 (IST)06 Nov 2019
பஞ்சமி நிலம் சர்ச்சை - மு.க ஸ்டாலின் கழக தோழர்களுக்கு அறிக்கை

முரசொலி அலுவலக கட்டிடம்  பஞ்சமி நிலமென்று வந்த தகவல்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.  அதில், "முரசொலி நிலம் குறித்த அபாண்டப் பழியை, உரிய அதிகாரம் படைத்திட்ட ஆணையத்திடம், உரிய நேரத்தில் ஆதாரங்களுடன் வழங்கி, அதன் உண்மைத்தன்மையை நிரூபிப்பேன்!" என, முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் உயிரினும் மேலான அன்பு உடன் பிறப்புகளுக்கு உறுதியளிக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

இந்த உறுதியே, வீண் பழி சுமத்துவோர் அனைவருக்கும் இறுதியான பதிலாய் அமையுமெனக் கருதுகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

12:38 (IST)06 Nov 2019
மத்திய அரசும் மாநில அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - குஜாராத்தில் இருக்கும் கண்ணியாகுமரி மீனவர்கள்

கண்ணியாகுமரியில்  இருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்ற 600 மீனவர்கள் அரபிக் கடலில் ஏற்பட்ட  புயல் காரணமாக கரை திரும்பாமல் குஜராத், கோவா ஆகிய மாநிலங்களில் இருக்கும் கடற்கரையில் ஒதுங்கினர்.  அடுத்ததாக, அரபிக் கடலில் மகா புயலும் உருவானது. இதனால், மீனவர்கள் கன்யாகுமரிக்கு திரும்ப முடியாமல் குஜராத் வெராவல் துறைமுகத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் .

இந்த சூழ்நிலையில், தாங்கள் உண்ண உணவு இன்றியும் , உடுக்க உடை இன்றியும் தவிப்பதாக வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். மத்திய,  மாநில அரசுகள் தேவைப்படும் எந்த  நடவடிக்கையும் எடுக்க வில்லை என்ற குற்றச்சாட்டையும் முன் வைத்துள்ளனர்.          

12:15 (IST)06 Nov 2019
சரத் பவார் - சஞ்சய் ராவத் மீண்டும் சந்திப்பு

மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக,சிவசேன கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டிய எணிக்கையைப் பெற்றிருந்தாலும், முதல்வர் பதவி பங்கீடு குறித்து கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. இதனால், அங்கு அரசியல் சூழ்நிலை சற்று பதட்டமாகவே உள்ளன. இன்று காலை   முதல் அமைச்சர் தேவேந்திர பட்நாவிஸ் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் இன்று நாக்பூரில் உள்ள ஆர்எஸ்எஸ் தலைமையகத்தில்  சந்தித்து பேசினார். 

தற்போது, சிவசேனா செய்தித்தொடர்பாளர் சஞ்சய் ராவத், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை அவரது இல்லத்தில் சந்தித்து பேசியுள்ளார் .  பின்பு, செய்தியாளர்களிடம் பேசிய சஞ்சய் ராவத், ' விரிவான உரையாடலில் ஈடுபட்டோம் , சரத் பவார் முதிர்ச்சியான தலைவர் , மாநில அரசியல் குறித்த தன்னுடைய கவலையைத்  தெரிவித்தார்' என்று கூறினார்.  இந்த வாரத்தில் மட்டும் சிவசேனா கட்சி, சரத் பவாரை சந்திப்பது இரண்டாவது முறையாகும். 

11:59 (IST)06 Nov 2019
திருவள்ளுவர் சிலைக்கு காவி துண்டு ,ருத்ராட்ச மாலை அணிவித்தார்-  அர்ஜூன் சம்பத்

தஞ்சாவூர் மெடிக்கல் காலேஜ் அடுத்து உள்ள பிள்ளையார்பட்டியில் திருவள்ளுவர் சிலையின்  மீது மர்ம நபர்கள் சாணத்தை பூசி இழிவுபடுத்தினர்  . முன்னதாக  தமிழக பாஜக ட்விட்டர் பக்கத்தில் திருவள்ளுவருக்கு காவி உடை அணிந்து பதிவிடப்பட்டிருந்தது. இந்த செயலுக்கு தமிழகத்தில் பல அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இதனைத் தொடர்ந்து, இன்று தஞ்சாவூர் பிள்ளையார்பட்டியில் சேதப்படுத்தப்பட்ட  அதே திருவள்ளுவர் சிலைக்கு காவி துண்டு ,ருத்ராட்ச மாலை அணிவித்துள்ளார் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத். 

11:50 (IST)06 Nov 2019
தமிழ்நாடு இல்லாமல் இந்தியா இல்லை - வெங்கையா நாய்டு பெருமிதம்

இந்தியா துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு,  நேற்று அடையாரில் அமைந்திருக்கும் மத்திய தோல் ஆராய்ச்சி நிலையத்தில் நடந்த நிகழ்வில்  “மிருதங்கத்தின் இசைச் சிறப்பு” என்ற புத்தகத்தை வெளியிட்டார். புத்தக வெளியிட்டு விழாவில் பேசிய வெங்கையா நாயுடு, ' இந்த புத்தகம் இசைக்கும், அறிவியலுக்கும் உள்ள இணைபிரியாத ஒற்றுமையை வெளிபடுத்துகிறது என்றும் , மிருதங்கம் பற்றிய எதிர்கால ஆராய்ச்சிக்கு புதிய வாய்ப்புகளையும் ஏற்படுத்தும்' என்று தெரிவித்தார். மேலும், கலாச்சாரத்திலும்,விருந்தோம்பளிலும் பெயர் போன தமிழ்நாடு இந்தியாவின் அடையாளம்  என்றும், தமிழ்நாடு இல்லாமல் இந்தியா இல்லை என்றும் துணைக் குடியரசு தலைவர் தெரிவித்தார்.    

11:37 (IST)06 Nov 2019
நன்றி அறிக்கை - 2/2

அந்த வரலாற்று மாய்மாலர்களின் பொய்க்கூற்றை, நடுநிலையான நேர்மையான வரலாற்று ஆய்வாளர்கள் அம்பலப்படுத்தியே வருகின்றனர். கீழடி நாகரீகம் என்பது தமிழரின் நாகரீகம் என்பதை உரக்க எடுத்துச்சொல்லியே வருகிறார்கள்.மேலும் இங்கு அருங்காட்சியகம் அமைக்கப்பட வேண்டும் என்று கோரினர்.

தமிழரின் இக்கோரிக்கையை ஏற்று தமிழ்நாட்டு முதல்வரான தமிழர் மாண்புமிகு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள்,"ஆதியில் முதல் மனிதன் தோன்றியது தமிழ் பேசும் நிலத்தில்தான் என்று கூறி கீழடி அகழாய்வு பொருட்களை காட்சிப்படுத்த ரூ.12.21 கோடி செலவில் அருங்காட்சியகம் அமைக்கப்படும்” என்று அறிவித்துள்ளார்.அதுவும் தமிழ்நாடு தினம் கடைப்பிடிக்கப்படும் நவம்பர் 1ம் தேதி அறிவித்துள்ளார்.

நமது தமிழ்நாட்டு முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களுக்கு தமிழர் கலை இலக்கியப் பண்பாட்டுப் பேரவை சார்பாக பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

- பாசத்துடன்

உங்கள் பாரதிராஜா 

11:36 (IST)06 Nov 2019
கீழடி அகழாய்வு குறித்து மாண்புமிகு தமிழக முதல்வருக்கு இயக்குனர் பாரதிராஜா அவர்கள் நன்றி அறிக்கை.- 1/2

என் இனிய தமிழ் மக்களே!

சிந்து,கங்கை நதிக்கரை நாகரீகத்திற்கு பிறகு இரண்டாம் நிலை நகர நாகரீகங்கள்,தமிழ்நாட்டில் தோன்றவில்லை என்பது வரலாற்று ஆய்வாளர்கள் பலரது கருத்தாக இருந்தது. இந்தக் கருத்துக்கு மாறாக சுமார் 2200 ஆண்டுகளுக்கு முந்தைய வைகை கரை நாகரீகம்.,அதாவது தமிழர் நாகரீகம் சிறந்து விளங்கியது என்பதற்கு சான்றாக திகழ்கிறது சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடந்துவரும் அகழ்வாராய்ச்சி!

இங்கு நாற்பதுக்கும் மேற்பட்ட குழிகள் தோண்டப்பட்டு நடத்தப்பட்ட அகழாய்வில் சங்ககால தமிழ் மக்களின் தொல் எச்சங்கள் அதிகளவில் கிடைத்திருக்கின்றன. சங்க இலக்கியப் பாடல்களில் காணப்படும் பொருட்கள் அனைத்துமே இங்கே கிடைத்திருப்பதாக வரலாற்று ஆய்வாளா்களும், சங்கத்தமிழ் ஆா்வலா்களும் மகிழ்வுடனும் ஆச்சரியத்துடனும் தெரிவித்து வருகின்றனர்.

இத்தகைய சிறப்புமிக்க சான்றினை சிலர் திராவிட நாகரீகம் என்றும் சிலர் இந்து நாகரீகம் என்றும் திரிக்க முயல்கின்றனர். பொய்க்கு மேல் பொய் சொல்லி ஒரு மாயையை நிஜமாக்க முயல்கின்றனர்.

11:33 (IST)06 Nov 2019
சென்னையை அடுத்த வேங்கடமங்கலத்தில் பாலிடெக்னிக் மாணவரை துப்பாக்கில் சுட்ட மாணவன் விஜய் நீதிமன்றத்தில் சரண்

வேங்கடமங்கலத்தை சேர்ந்த முகேஷ் நேற்று தனது நண்பர் விஜய் என்பவரால் துப்பாகியால் சுடப்பட்டார்.  உயிருக்கு போராடிய நிலையில் அனுமதிக்கப்படிருந்த விஜய் இன்று மருத்துவமையில் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், துப்பாக்கியால் சுட்ட  விஜய்  தற்போது செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சரண் அடைந்திருக்கிறார். மேற்படி, விசாரணையை போலீசார் தொடங்கியுள்ளனர்.      

10:52 (IST)06 Nov 2019
பிரபந்தம் பாடுவதில் வடகலை, தென்கலை மோதல்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் இன்று பூதத்தாழ்வார் சாத்துமுறை உச்சவம் நடைபெற்றபோது, பிரபந்தங்கள பாடுவதில் வடகலை, தென்கலை பிரிவினரிடையே வாக்குவாதம், கைகலப்பு மோதல் ஏற்பட்டது. காவல் துறை, அறநிலையத் துறை  சம்பவ இடத்திற்கு நேரில் வந்து சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்.           

10:41 (IST)06 Nov 2019
கொடைக்கானல் போட் கிளப்புக்கு சீல்

கொடைக்கானில் அருகே உள்ள தனியார் போட் கிளப் ஏரியில் படகுகளை இயக்குவதால் கிடைக்கும் லாபத்தை அரசுக்கு கொடுப்பதில்லை, கொடைக்கானல் இயற்கை ஏரியை வணிகத் தளமாக மாற்றி வருதல்  போன்ற காரணங்களுக்காக   போட் கிளப்புக்கு சீல் வைக்க உச்சநீதிமன்றம்  உத்தரவு அளித்திருந்தது. அதன் தொடர்ச்சியாக, இன்று  நீதிமன்றம் உத்தரவின் பேரில் கொடைக்கானல் போட் கிளப்புக்கு நகராட்சி சீல் வைத்துள்ளது.  

10:31 (IST)06 Nov 2019
ஐந்தரைக் கிலோ தங்க கட்டிகள் பறிமுதல் :

துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தில்  ஐந்தரைக் கிலோ தங்க கட்டிகள் கைப்பற்றப் பட்டன. இந்த தங்கம் விமானித்தின்  கழிவறையில்  கிடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.  இதனையடுத்து மேற்படி விசாரணையை சுங்கத்துறை நிர்வாகிகள் எடுத்து வருகின்றனர்.  

10:10 (IST)06 Nov 2019
தேவேந்திர பட்நாவிஸ் - மோகன் பகவத் சந்திப்பு

கடந்த மாதம் அக்டோபர் 24ம் தேதி மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் முடிவு வெளியானது . இருந்தாலும் பாஜக-சிவசேன கூட்டணியில் குழப்பம் நிலவி வருவதால் இன்னும் அங்கு அரசு அமைக்க முடியாமல் இருக்கின்றது. இந்நிலையில்,  முதல் அமைச்சர் தேவேந்திர பட்நாவிஸ் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் இன்று நாக்பூரில் உள்ள ஆர்எஸ்எஸ் தலைமையகத்தில்  சந்தித்து பேசியுள்ளார்.  

09:59 (IST)06 Nov 2019
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் - வைகோ

ஆள் மாறாட்டம் , ஊழல் , போன்றவை பணம் படைத்தவர்கள் மட்டும் மருத்துவ கல்லூரிகளில் சேரும் நிலை உருவாகி உள்ளது. இந்த நிலைமை மாற வேண்டும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.     

09:50 (IST)06 Nov 2019
பணியாளர்களை வேலைநீக்கம் செய்யும் இன்ஃபோசிஸ் நிறுவனம் -

இந்தியாவின் இரண்டாவது பென்பொருள் நிறுவனமான  இன்ஃபோசிஸ்  எதிர்பார்ப்புக்கு நிகராக வேலை செய்யாத பணியாளர்களை நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.  ஊடகங்களில் பல ஆயிரம் ஊழியர்களை பொருளாதார மந்த நிலையால் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று வரும் தகவலில் உண்மையில்லை என்றும்  இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.  

09:39 (IST)06 Nov 2019
திமுக பொருளாளர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி

திமுக பொருளாளர் துரைமுருகன் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் . 

Tamil Nadu news today updates : இன்னும் 15 நாட்களில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். நாங்குநேரி தொகுதியில் நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் ஓ.பி.எஸ். இவ்வாறு தெரிவித்தார்.

தாய்லாந்தில் நடைபெற்ற மாநாட்டில் பிராந்திய விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடாததற்காக நன்றி தெரிவிப்பதாக தமிழக விவசாயிகள் சங்கத்தலைவர் செல்லமுத்து கூறியுள்ளார்.

Web Title:Tamil nadu news today live updates modi bjp shivsena whatsapp rainfall delhi airpollution

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
JUST NOW
X