Tamilnadu News Highlights: உள்ளாட்சித் தேர்தல்- நவம்பர் 6-ல் அதிமுக முக்கிய ஆலோசனை
Tamil Nadu news today updates : தமிழகத்தின் இன்றைய முக்கியச் செய்திகள், அரசியல் நிலவரங்கள், பொதுப் பிரச்னைகள், பொழுதுபோக்கு விஷயங்கள் என அனைத்தையும் இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.

Tamil Nadu news updates : ‘தமிழக போக்குவரத்துத்துறையை சீரமைக்க 1600 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும்’ என இந்தியா வந்துள்ள ஜெர்மன் பிரதமர் ஏஞ்ஜலா மெர்க்கல் அறிவித்துள்ளார். ஏற்கனவே ‘குளுகுளு வசதி பஸ்கள், படுக்கை வசதி பஸ்கள், மின்சார பஸ்கள்’ என அறிமுகம் செய்யப்பட்டு வரும் நிலையில் ஜெர்மன் நிதி உதவியால் பளிச்சிடும் பஸ்களுடன் அரசு போக்குவரத்து கழகத்தின் சேவையும் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக அமைச்சரவையை மாற்றி அமைக்க, முதல்வர் இ.பி.எஸ்., திட்டமிட்டுள்ளதாக, தகவல் வெளியானதை தொடர்ந்து, எம்.எல்.ஏ.,க்களில் பெரும்பாலானோர், அமைச்சர் கனவில் மிதக்க துவங்கி உள்ளனர். அமைச்சர் பதவியை பிடிக்க, பல்வேறு வழிகளில், முயற்சிகளை மேற்கொண்டுள்ளதுடன், முதல்வர் தங்கள் கனவை நிறைவேற்றுவார் என்ற, எதிர்பார்ப்பிலும் உள்ளனர்.
'திருவள்ளுவர் ஓர் அறிவுக்கடல். அவரை எந்தச் சிமிழுக்குள்ளும் அடைக்கப் பார்க்காதீர்கள்'
என்று கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
மகாராஷ்டிராவில் நீடிக்கும் இழுபறி முடிவுக்கு வந்து விரைவில் ஆட்சி அமையும் என நம்புகிறேன்
இறுதியில் அனைவரும் மகாராஷ்டிர மக்களின் நலனுக்காகவே பணியாற்றப் போகிறோம்
- தேவேந்திர பட்னாவிஸ்
தமிழ்நாடு-புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 50 ஆயிரம் வழக்கறிஞர்கள் நாளை பணி புறக்கணிப்பு போராட்டம். டெல்லி நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்களை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை
- வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் எஸ்.கே.வேல் பேட்டி
தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டத்திற்கு ஒரே நேரத்தில் வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் இரண்டு மாவட்ட போலீசாரும் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.
தஞ்சாவூர் பெரிய கோயிலை கட்டிய மாமன்னன் ராஜராஜசோழனின் பிறந்த நாள், சதய விழாவாக ஆண்டுதோறும் தமிழக அரசு சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. ராஐ ராஐசோழனின் 1034 ஆவது ஆண்டு சதய விழா தஞ்சை பெரிய கோயிலில் வரும் 5 மற்றும் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. இரண்டு நாட்கள் நடைபெறும் சதய திருவிழாவையொட்டி முதல் நாளில் கருத்தரங்கம், கவியரங்கம், உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இரண்டாம் நாளில் தமிழக அரசு சார்பில் மாமன்னன் ராஐராஐசோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சதய விழாவையொட்டி வரும் 6 தேதி தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை தச்சநல்லூரில் உள்ள நல்மேய்ப்பர் நகரை சேர்ந்தவர் சங்கையா. இவருக்கு பேச்சியம்மாள் என்ற மனைவியும் நான்கு மகன்களும், இரண்டு மகள்கள் உள்ள நிலையில், வீட்டில் பேரன்,பேத்தி என 54 குடும்ப உறுப்பினர்களுடன், கூட்டுக்குடும்பமாக வசித்து வருகிறார். இந்நிலையில் சங்கய்யாவுக்கு, இன்றுடன் நூறு வயது பூர்த்தியாகிறது. இதை முன்னிட்டு, நூறாவது பிறந்த நாளை கேக் வெட்டி பேரன் தம்பதிகள் ஒருவருக்கொருவர் ஊட்டி அனைவரும் கொண்டாடினர். இதைத்தொடர்ந்து பேரன் பேத்திகள் முதிய தம்பதிகளிடம் வணங்கி வாழ்த்து பெற்றனர்.
அறுபடை வீடுகளில் ஒன்றான பழனியில், கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. மலைக்கோவில் மேற்பிரகாரத்தில் உள்ள மண்டபத்தில் சண்முகர் - வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்றது. முன்னதாக சண்முகர்-வள்ளி, தெய்வானைக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. கந்தசஷ்டி திருவிழா ஏழாம் நாளான இன்றுடன் நிறைவு பெற்ற நிலையில், இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
பனாஜியில் உள்ள ராஜ்பவனில் கோவா மாநில ஆளுநராக சத்யபால் மாலிக் பதவியேற்றுக் கொண்டார்
டெல்லி தீஸ்ஹசாரி நீதிமன்றத்தில் போலீசார்-வழக்கறிஞர்கள் மோதல் சம்பவத்தில் நீதி விசாரணைக்கு உத்தரவு. ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.பி.கார்க் தலைமையில் 6 வாரத்தில் விசாரணையை முடிக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு
சுனாமி உள்ளிட்ட இயற்கை பேரிடர் காலங்களில் தேசிய கடல் தொழில் நூட்ப கழகம் பங்களிப்பு சிறப்பு வாய்ந்தது என்று துணை முதல்வர் என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார். அறிவியல் தொழில் நூட்ப வளர்ச்சியில் கடலாய்வு என்பது இன்றியமையாதது என்றும் அவர் கூறினார்.
2001ல் இதே நாள்(நவ.3), தனது முதல் சர்வதேச டெஸ்ட் போட்டியில் விளையாடினர் சரவெடி ஷேவாக். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மெகா பவுலிங் அட்டாக்கை சமாளித்து சதம் அடித்து, முதல் போட்டியிலேயே முத்திரை பதித்தார் இந்த முச்சத நாயகன்.
பிரியங்கா காந்தியின் வாட்ஸ் அப்பையும் பெகாசஸ் ஸ்பைவேர் தாக்கியுள்ளது என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜிவாலா தெரிவித்துள்ளார்.
காற்று மாசு அதிகரிப்பு காரணமாக டெல்லியில் நாளை முதல் வாகனக் கட்டுப்பாடு அமலுக்கு வருகிறது
- மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியம்
நிகழ்ச்சியில் பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் உலகிலேயே சுனாமி மற்றும் பேரிடர் எச்சரிக்கை அளிக்கும் நவீன தொழில்நுட்பங்களை கொண்டுள்ள நாடாக இந்தியா இருப்பது பெருமை அளிக்கிறது என்று தெரிவித்தார். அமெரிக்காவை விட இந்தியா தான் வானிலை அறிக்கை மற்றும் கடல் சார்ந்த தகவல்களை அளிப்பதில் முதலிடம் வகிப்பதாக கூறினார்.
அரசு முறை பயணமாக தாய்லாந்து சென்றுள்ள பிரதமர் மோடி, பாங்காங்கில், நடைபெற்ற 16ஆவது ஏசியன் - இந்தியா நாடுகளுக்கு இடையேயான உச்சிமாநாட்டில் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், இந்தியாவின் கிழக்காசிய கொள்கையில் ஏசியன் நாடுகளின் வளர்ச்சியும் முக்கியமான ஒன்று என தெரிவித்தார். மேலும், தென்கிழக்காசிய நாடுகளின் ஒருங்கிணைந்த, பலம்பொருந்திய, பொருளாதார வளர்ச்சியே, இந்தியாவிற்கு சாதகமானது என்றும் அதுவே இந்தியாவின் விருப்பம் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
விழுப்புரம் : தளவானுர் கிராமத்தில் இடிதாக்கி இளம்பெண் நித்தியா உயிரிழப்பு - மேலும் ஒரு பெண் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி.
பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் பிறந்த நாளையொட்டி துபாயில் உள்ள புர்ஜ் கலிஃபா கட்டடத்தில் வண்ண விளக்குகள் மூலம் பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
ஷாருக்கானின் 54வது பிறந்த நாள் அவரது ரசிகர்களால் நேற்று விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, துபாயில் உள்ள மிக உயரிய புர்ஜ் கலிஃபா கட்டடத்தில் வண்ண விளக்குகள் மூலம் ஷாருக்கானுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. அதே போல், மின் விளக்குகள் மூலம் ஒளிரூட்டப்பட்ட சிறப்பு நீரூற்றுகளும் அமைக்கப்பட்டிருந்தன.
இதை அங்கிருந்த மக்கள் ஆச்சர்யத்துடன் கண்டு மகிழ்ந்தனர். இது குறித்து ட்வீட் செய்த ஷாருக் கான், தமக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றி என குறிப்பிட்டுள்ளார்.
ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் உள்ள பத்வேல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆஞ்சநேயலு. கூலி வேலை செய்து வந்த இவருக்கு நாகலட்சுமி, இரண்டு மகன்கள் உள்ளனர். ஆஞ்சநேயலு, அடிக்கடி குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து தகராறில் ஈடுபடுவார் என கூறப்படுகிறது.
இந்நிலையில் வழக்கம் போல் குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்துள்ளார். அப்போது ஆத்திரமடைந்த நாகலட்சுமியும் அவரது மகன்களும் இணைந்து ஆஞ்சநேயலுவை சரமாரியாக அடித்துள்ளனர். இதில் நிலைத்தடுமாறி கீழே விழுந்ததில் ஆஞ்சநேயலு கல்லில் அடிப்பட்டு ரத்த வெள்ளத்தில் சரிந்துள்ளார்.
இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக கொண்டு சென்றபோது வழியிலேயே அவர் உயிரிழந்தார். இதுதொடர்பாக அஞ்சநேயலுவின் மனைவி, இரு மகன்களையும் போலீசார் கைது செய்தனர்.
எத்தனை வர்ணம் பூசினாலும் உங்கள் வர்ண சாயம் வெளுத்துவிடும், சாயம் பூசுவதைவிடுத்து, திருக்குறள் படித்து திருந்தப்பாருங்கள் - திமுக தலைவர் ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
உள்ளாட்சி தேர்தலில் திமுக வரலாறு காணாத தோல்வியை சந்திக்க போகிறது என ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி அளித்துள்ளார்.
இந்தி கற்பதை எதிர்க்கவில்லை எந்தவொரு மொழியை திணித்தாலும் எதிர்ப்போம் என கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.
நில நடுக்க அபாயம் உள்ளதால் மீத்தேன் உள்ளிட்ட ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு இங்கிலாந்து தடை விதித்துள்ளதை போல, இந்தியாவும் அந்த திட்டங்களை கைவிட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இங்கிலாந்து தடை விதிப்பதற்கு முன்பாகவே பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்காட்லாந்து உள்ளிட்ட நாடுகளில் ஹைட்ரோ கார்பனுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டி உள்ள அவர், ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்பட்டால், தமிழகத்தில் நில நடுக்கம் ஏற்படுவதையும், காலப் போக்கில் பாலைவனமாக மாறுவதையும் தடுக்க முடியாது என எச்சரித்துள்ளார்.
புதுச்சேரி அருகே சூரசம்ஹார விழாவை பார்க்க சென்ற வீடுகளில் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி அடுத்த கரிக்காலம்பாக்கத்தை சேர்ந்த முகுந்தன் என்பவர் சூரசம்ஹார பார்க்க சென்ற போது, அவரது வீட்டில் இருந்து மர்ம நபர்கள், 10 சவரன் நகை மற்றும் 40 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்துள்ளனர். இதேபோல் அதேபகுதியில் காந்தி நகரில் வசிக்கும் குமார் என்பவரும் சூரசம்ஹாரம் பார்க்க சென்ற நிலையில், ஒரு சவரன் நகை, வெள்ளி கொலுசு மற்றும் செல்போன்கள் என 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இருவரும் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. டெல்டா மற்றும் தென் தமிழக மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்துவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒருசில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளாட்சி தேர்தல் குறித்து வரும் 6ஆம் தேதி, எம்.எல்.ஏ, எம்.பிக்கள் மற்றும் நிர்வாகிகளுடன் அதிமுக ஆலோசனை நடத்த உள்ளது. கட்சி தலைமை அலுவலகத்தில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இந்த ஆலோசனை நடைபெறுகிறது.
சென்னையில் தொடர் மழையால் வெங்காயம் விலை கடந்த ஒரு வாரத்தில் 3 மடங்காக உயர்ந்துள்ளது. கடந்த வாரம் ரூ.25க்கு விற்பனை செய்யப்பட்ட வெங்காயத்தின் விலை தற்போது ரூ.80க்கு விற்கப்பட்டு வருகிறது. இது பொதுமக்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்தி உள்ளது.
ஆங்கிலத்தில் உள்ள போக்குவரத்து காவல் அபராத ரசீதை தமிழில் மாற்றாவிடில் திமுக சார்பில் பெரிய போராட்டம் நடத்தப்படும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அயல்நாட்டு வர்த்தகத்தில் தமிழக மன்னர்கள் சிறந்து விளங்கினர் என்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறியதாவது, முதலாம் நூற்றாண்டில் சோழர்களால் அமைக்கப்பட்ட பூம்புகார் நகரம் கடல்சார் கட்டமைப்பில் நாம் சிறந்து விளங்கியதற்கான சான்று என்று தெரிவித்துள்ளார்.
பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில், அணைக்கான நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதன் காரணமாக அணையின் முழு கொள்ளளவான 105 அடியில் தற்போது 104 அடியை எட்டியுள்ளது. அணையின் நீர் மட்டம் உயர்ந்துள்ளதால் பாசனப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தென்காசி மற்றும் மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த சிலநாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக, குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அருவிகளில் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது.
பெரியார் மற்றும் அண்ணாவின் சிந்தனைகள் உள்ளதால் தான் தமிழகத்தில் எந்த ஆதிக்க சக்தியாலும் நுழைய முடியவில்லை. ஒரு சிலர் திமுகவில் குழப்பத்தை ஏற்படுத்த நினைக்கிறார்கள், அது ஒருபோதும் நடக்காது என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சிறந்த நட்சத்திரத்திற்கான மத்திய அரசின் விருது பெறவுள்ள நடிகர் ரஜினிகாந்திற்கு புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு தனது தொலைப்பேசி பேச்சுக்களை ஒட்டுக் கேட்டதாகவும், அதற்கு தன்னிடம் ஆதாரம் உள்ளது. பிரதமர் இந்த விவகாரத்தில் கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக் கொள்வதாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
கடந்த 5 ஆண்டில் நடுத்தர மக்கள் மீதான வரிச்சுமையை குறைத்துள்ளோம். தற்போது இந்தியா வரும் வெளிநாட்டு பயணிகள் பாதுகாப்பாக உணர்கின்றனர். இதனால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 50% அதிகரித்துள்ளது. இந்தியாவில் தொழில் தொடங்குவது எளிமையாக்கப்பட்டுள்ளது .தொழில் தொடங்க சிறந்த இடமாக இந்தியா விளங்குவதாக தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் இருந்து லிட்டருக்கு 8 காசுகள் குறைந்து, ஒரு லிட்டர் ரூ.75.59 ஆகவும், டீசல், நேற்றைய விலையில் இருந்து மாற்றம் எதுவும் இல்லாமல் லிட்டருக்கு ரூ.69.52 ஆகவும் உள்ளது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் உள்ள காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்துக்கு, நீதிமன்றம் ஜாமின் மறுத்துள்ளது. இதை கிண்டல் செய்யும்விதமாக பா.ஜ., தேசிய செயலாளர் ஹெச்.ராஜா டுவிட்டர் பதிவிட்டுள்ளார். அதில் குறிப்பிட்டுள்ளதாவது, மீன் கிடையாது. வலை தரலாம். சிதம்பரத்திற்கு ஜாமீன் கிடையாது அதற்கு பதிலாக சிறையில் கொசுவலை கொடுக்க நீதிமன்றம் உத்தரவு என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.<