Tamil Nadu News today updates : காஷ்மீர் விவகாரத்தில் காங்கிரஸ் மதச்சாயம் பூசுவதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார். வடகிழக்குப் பருவமழை தொடங்கிய நிலையில், தமிழகம் முழுவதும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. 14 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
நாங்குநேரியில் ஆங்காங்கே சிதறிக் கிடந்த 2000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வரும் 21-ம் தேதி நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளில் இடைத் தேர்தல் நடைபெறுகிறது. இன்று அதற்கான இறுதிக்கட்ட பரப்புரையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினும் ஈடுபடுகிறார்கள். தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதற்காக அரசியல் கட்சிகளின் சின்னத்தின் விபரத்தை வெளியிட்டது தேர்தல் ஆணையம். பிரபல பாலிவு நடிகர் அமிதாப் பச்சன் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கல்லீரல் நோய் பிரச்னையால் அவர் அவதிப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Live Blog
Tamil Nadu and Chennai news today updates of weather, traffic, political events : சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட ராமகிருஷ்ணாபுரம் பகுதியில், மழையையும் பொருட்படுத்தாமல் வீடு வீடாகச் சென்று அமைச்சர் ஜெயக்குமார் வாக்கு சேகரித்தார். பின்னர் அங்கிருந்த பெண்கள் மற்றும் மூதாட்டிகளுடன், அவர் செல்பி எடுத்து மகிழ்ந்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், ராஜீவ் கொலை வழக்கில் சிறை வாசம் அனுபவித்து வரும், 7 தமிழர்களை விடுதலை செய்வதில், அதிமுகவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்றார். அசுரன் திரைப்படத்தில் உள்ள நில அபகரிப்பு சார்ந்த கதைகள் அனைத்தும் திமுகவுக்கே பொருந்தும், என குற்றம்சாட்டிய அமைச்சர் ஜெயக்குமார், அத்திரைப்படத்தில் வரும் வடக்கூரான் வில்லனைப் போன்றவர் மு.க ஸ்டாலின், என விமர்சித்தார்.
திமுகவின் தலைமையகமான அண்ணா அறிவாலயம் அமைந்திருக்கும் பகுதி பஞ்சமி நிலம் என்றால் அது குறித்து விசாரித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்றார்.
காயம் காரணமாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-து டெஸ்ட் போட்டியில் இருந்து குல்தீப் யாதவ் விலகியுள்ளார். அவருக்கு பதில் ஷாபஸ் நதீம் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
JUST IN: Jharkhand spinner Shahbaz Nadeem added to India squad for the third #INDvSA Test. Decision taken after Kuldeep Yadav complained of left shoulder pain
— Cricbuzz (@cricbuzz) October 18, 2019
மக்களின் கோரிக்கைகளை அதிமுக அரசு நிச்சயம் நிறைவேற்றி தரும். அரசின் காப்பீட்டு திட்டத்தின் மூலம் ரூ 5 லட்சம் வரை இலவசமாக சிகிச்சை பெற முடியும். காங்கிரஸ் வேட்பாளர் சென்னையில் வசிக்கிறார், அவரது தொழிலைத்தான் அவர் கவனிப்பார் - முதலமைச்சர் பழனிசாமி
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை கொலை வழக்கில் தண்டனைபெற்று வேலூர் மத்திய சிறையில் உள்ள முருகன் அறையிலிருந்து, ஸ்மார்ட் போன் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
வேலூர் மத்திய சிறையில் உள்ள ராஜீவ் கொலை கைதி முருகனின் அறையிலிருந்து ஸ்மார்ட் போன் பறிமுதல்..#VellorePrison
— Thanthi TV (@ThanthiTV) October 18, 2019
நாங்குநேரி தொகுதியில் தேர்தல் பிரசாரம் செய்த முதலமைச்சர் பழனிசாமி: திமுக போட்ட வழக்கினால் மன உளைச்சல் ஏற்பட்டுதான் ஜெயலலிதா மரணமடைந்தார். ஜெயலலிதாவை வசைபாடிய ப.சிதம்பரம் உள்ளிட்டோரை அவரது ஆன்மா பழிவாங்கியுள்ளது. ஜெயலலிதாவின் ஆவி சுமா விடாது. திமுக ஆட்சியில் இருந்தபோது ஸ்டாலின் திண்ணையில் அமர்ந்து மனு வாங்கியிருந்தால், அவர் நல்ல தலைவர். ஆனால், அப்படி செய்யவில்லை. மு.க.ஸ்டாலின் என்ன பேச வேண்டும் என்றே தெரியாமல் பேசுகிறார் என்று விமர்சனம் செய்தார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும்; தமிழகத்தை சேர்த்து தமிழீழம் அமைப்பது என்பது தவறானது. ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்க தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகளை முறையாக சுகாதார முறையில் பராமரிக்க கோரி விழுப்புரத்தை சேர்ந்த ஆனந்தராஜ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் நவம்பர் 20-ம் தேதிக்குள் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டது.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில், “பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என தமிழக அமைச்சரவை நிறைவேற்றி அனுப்பிய தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள முடியாது” என தமிழக ஆளுநர், முதலமைச்சரிடம் தெரிவித்து விட்டதாக வெளியாகியுள்ள செய்தி குறித்து முதல்வர் அவர்கள், தமிழக மக்களுக்கு உடனே விளக்கம் தந்திட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
"பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என தமிழக அமைச்சரவை நிறைவேற்றி அனுப்பிய தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள முடியாது" என தமிழக ஆளுநர், முதலமைச்சரிடம் தெரிவித்து விட்டதாக வெளியாகியுள்ள செய்தி குறித்து முதல்வர் அவர்கள், தமிழக மக்களுக்கு உடனே விளக்கம் தந்திட வேண்டும் https://t.co/6pjC8oSIs1
— M.K.Stalin (@mkstalin) October 18, 2019
செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ண்: ராஜீவ் காந்தி கொலை குறித்து சீமான் பேசியது வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஏற்றுக்கொள்ள முடியாதது என்று கூறினார்.
ஹரியான சட்டமன்ற பொதுத் தேர்தலில் பிரசாரம் செய்த பிரதமர் மோடி, நாட்டில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறையை போக்க அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.3.5 லட்சம் கோடி செலவிட திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அரசின் திட்டத்தால் நீருக்காக வானிலையை நம்பியிருக்க வேண்டிய சூழல் விவசாயிகளுக்கு ஏற்படாது என்றும் அவர் கூறினார்.
ஐ.என்.எக்ஸ். வழக்கில் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தார். ப.சிதம்பரத்தின் மனு உச்சநீதிமன்ற நீதிபதி ஆர்.பானுமதி தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களுக்குப் பின்னர் உச்ச நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது.
மதுரை மாவட்டத்தில் தீபாவளிக்கு அதிகாலை 2 மணி வரை கடைகளை திறந்து வைக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை அனுமதி அளித்துள்ளது. தீபாவளி வணிகத்துக்காக அக்டோபர் 25, 26ஆம் தேதிகளில் இரவிலும் கடைகள் திறந்திருக்க அனுமதி கோரிய மனு மீது உயர் நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
கல்கி ஆசிரமத்தில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் கணக்கில் காட்டப்படாத ரூ.500 கோடி வருமானம் கண்டுபிடிப்பட்டுள்ளது. மேலும், ரூ.43.9 கோடி இந்தியப் பணம், ரூ.18 கோடி மதிப்புள்ள அமெரிக்க டாலர்கள் பறிமுதல் என வருமான வரித்துறை தகவல்
நாங்குநேரியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி,சுவிஸ் வங்கியில் திமுக, காங்கிரஸில் எத்தனை பேருக்கு பணம் இருக்கிறது என மோடி கணக்கெடுத்து வருகிறார். கறுப்புப் பணம் பதுக்கிய யாரையும் மோடி விடமாட்டார் என்று கூறினார்.
தமிழகம் முழுவதும் 3,500க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்றுள்ளனர் என்று சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். மேலும், வட சென்னை, வேலூர், காஞ்சிபுரம், தூத்துக்குடி, தருமபுரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ளது. சென்னையில் 100-க்கும் அதிகமானோர் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்ரு தெரிவித்தார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து சர்ஃப்ராஸ் அகமது அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் டெஸ்ட், டி-20 அணியின் கேப்டனாக சர்ஃப்ராஸ்க்கு பதில் 'அஸார் அலி' நியமனம் செய்யப்பட்டுள்ளார். உலக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் தோல்வியடைந்ததால் நடவடிக்கை.
செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு: திமுக எம்எல்ஏ சரவணன் பணப்பட்டுவாடா செய்ததாக எழுந்த புகார் தொடர்பாக, நெல்லை மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் சத்ய பிரதா சாஹூ அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. இடைத்தேர்தல் நடைபெறும் நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் இருந்து நாளை மாலை 6 மணியுடன் வெளியூர்க்காரர்கள் தொகுதியிலிருந்து வெளியேற வேண்டும் என உத்தரவிட்டார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ரவிச்சந்திரன், பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், “ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்க நடவடிக்கை வேண்டும். தமிழக அமைச்சரவை தீர்மானம் மீது ஆளுநர் விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என்று கோரியுள்ளார்.
சென்னை குடிநீர் வாரியம் மூலம் வழங்கப்படும் லாரி குடிநீர் விலை 5 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. லாரியில் வழங்கப்படும் 9,000 லிட்டர் தண்ணீருக்கான கட்டணம் ரூ.700-லிருந்து ரூ.735 ஆக உயர்ந்துள்ளது. 6 ஆயிரம் லிட்டம் தண்ணீரின் விலை ரூ.435-லிருந்து ரூ.499 ஆக உயர்வு.
நான் சொல்வது பொய்; அது பஞ்சமி நிலம் என்று மருத்துவர் அய்யா நிரூபித்தால் நான் அரசியலை விட்டு விலகத் தயார்!
அவர் சொல்வதை நிரூபிக்கத் தவறி, அது பச்சைப் பொய்யென்றால், அவரும், அவர் மகனும் அரசியலை விட்டு விலகத் தயாரா?
— M.K.Stalin (@mkstalin) October 18, 2019
முரசொலி அலுவலக இடம் பஞ்சமி நிலம் என நிரூபித்தால் அரசியலை விட்டு விலக தயார் என்றும், நிரூபிக்க தவறினால், ராமதாசும், அன்புமணியும் அரசியலை விட்டு விலக தயாரா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார் மு.க.ஸ்டாலின். முரசொலி அலுவலக இடம் பஞ்சமி நிலம் என தெரிவித்த ராமதாசுக்கு அவர் தனது கண்டனத்தையும் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் காவிரி நதிநீர் ஒழுங்காற்று குழுக்கூட்டம், அதன் தலைவர் நவீன் குமார் தலைமையில் தொடங்கியது. இதில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, பாண்டிச்சேரியின் பிரதிநிதிகள் காவிரி நீர் தொடர்பான தங்களது தரப்பு புள்ளி விவரங்களை சமர்ப்பிக்கின்றனர்.
அரசு அறிவிக்கும் சிறப்பு விடுமுறை தனியார் நிறுவனங்களுக்குப் பொருந்தாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதோடு, மாற்றுமுறை ஆவணச் சட்டத்தின் கீழ் அரசு அறிவிக்கும் பொது விடுமுறை, தனியார் நிறுவனங்களுக்கு நேரடியாக பொருந்தாது என்றும், விடுமுறை தினத்தில் பணிக்கு வராத ஊழியர்கள் ஊதியம் பெற உரிமையில்லை எனவும் குறிப்பிட்டுள்ளது.
ரூ.4,355 கோடி முறைகேட்டில் சிக்கியுள்ள பஞ்சாப்-மகாராஷ்டிர கூட்டுறவு வங்கி வாடிக்கையாளா்களின் வைப்புத்தொகை முழுமையாக திரும்ப கிடைப்பதை உறுதி செய்யக் கோரும் மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. அதோடு மும்பை உயர்நீதிமன்றத்தை நாடவும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கந்தசாமியை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரம் மேற்கொண்டார். கானை பகுதியில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் பேசிய சீமான் இனி ஹீரோ ஹீரோயின்களுக்கு தமிழக அரசியலில் பொதுமக்கள் இடம் கொடுக்ககூடாது என்றார்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்க தமிழக ஆளுநர் பன்வாரிலால் மறுத்ததாக தகவல் வெளியாகியிருக்கிறது. பேரறிவாளன் உள்பட 7 பேரை முன்கூட்டியே விடுவிக்க அனுமதிக்கோரி ஆளுநருக்கு அமைச்சரவை பரிந்துரைத்தது குறித்து, அரசுக்கு எழுத்துப்பூர்வமாக ஆளுநர் இதுவரை பதிலளிக்காத நிலையில் தனது முடிவை முதல்வர் பழனிசாமியிடம் கூறிவிட்டதாகவும் தகவல் தெரிவிக்கிறது.
10 நாள் பயணமாக இமயமலை சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்த், கேதார்நாத் சிவன் கோயிலில் சாமி கும்பிட்டார். மேலும் அங்குள்ள சில குகை கோவில்களிலும் வழிபாடு நடத்திய அவர், அதிகாலையில் எழுந்து நடைபயிற்சி மேற்கொள்வதோடு, தன்னை சந்திக்கும் ரசிகர்களுடன் உற்சாகமாக புகைப்படம் எடுத்து மகிழ்ந்தார். பாபாஜி குகையில் தியானம் மேற்கொண்டு வரும் ரஜினிகாந்த் கம்பளிப் போர்வை, குல்லாவுடன் வித்தியாசமான தோற்றத்தில் காட்சி தருகிறார்.
கடந்த 15-ந் தேதி (செவ்வாய்கிழமை) அன்று நள்ளிரவு 2 மணிக்கு நடிகர் அமிதாப் பச்சனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து அவர் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 3 நாட்களாக அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவுக்கு இணையான தனி அறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
உத்தரகாண்ட் மாநிலம் பாபாஜி குகை பகுதியில், தமது சொந்த செலவில் அமைக்கப்பட்டுள்ள ஆசிரமத்தை நடிகர் ரஜினிகாந்த் பார்வையிட்டார். இமயமலைக்கு 10 நாள் ஆன்மீக பயணம் சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்த், உத்தரகாண்ட் மாநிலம் துவாராகாட் நகரில் உள்ள பாபாஜி குகை பகுதிக்கு சென்று வழிபாடு நடத்தினார். இந்நிலையில், பாபாஜி குகையின் அருகே தமது சொந்த செலவில் அமைத்த ஆசிரமத்தை, இன்று அவர் பார்வையிட்டார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights