Tamil Nadu News today updates : தேர்தல் நேரத்தில் அமைச்சர்கள் வருவார்கள், மற்ற நேரத்தில் வரமாட்டார்கள் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்

Petrol Diesel Price: சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 76.43 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.57 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன

By: Oct 8, 2019, 10:48:03 PM

Tamil Nadu News today updates : மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி – சீன அதிபர் ஸி ஜின்பிங் சந்திப்பையொட்டி வரலாறு காணாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக சென்னையில் 5000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 11-ம் தேதி நடைபெறும் இந்த சந்திப்பிற்காக சென்னை விமான நிலைய சுவர்களில் வண்ணம் தீட்டப்பட்டுள்ளன. சென்னையிலிருந்து மாமல்லபுரம் செல்லும் சாலைகள் முழுவதும் சீர் செய்யப்பட்டு பளபளக்கின்றன.

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பணம் கொடுத்து வெற்றி பெற திமுக திட்டமிட்டிருப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார். ஆனால், அந்த 2 தொகுதிகளிலும் மக்கள் செல்வாக்குடன் அதிமுக வெற்றி பெறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா உள்ளிட்ட 75 நாடுகளைச் சேர்ந்தவர்களின் 31 லட்சம் வங்கிக் கணக்குகளை சுவிஸ் வங்கி வெளியிட்டுள்ளது. அதில் பலரது வங்கிக் கணக்குகளில் இருந்த பணமும் கடந்த ஆண்டே எடுக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

Live Blog
Tamil Nadu and Chennai news today updates of weather, traffic, political events : சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் உடனுக்குடன்  அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
20:48 (IST)08 Oct 2019
ரஃபேல் விமானத்தில் பறந்தார் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்

பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், மெரிக்னக்கில் ரஃபேல் போர் விமானம் ஒப்படைப்புக்குப் பிறகு ரஃபேல் விமானத்தில் பறந்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இது மிகவும் சௌகரியமான நல்ல விமானமாக உள்ளது. இந்த தருணம் எதிர்பார்க்காதது. ஒரு நாள் சூப்பர் சோனிக் விமானத்தில் பறப்பேன் என்று நான் நினைத்து பார்த்ததே இல்லை. 2021 பிப்ரவரியில் 18 விமானங்கள் அளிக்கப்படும். 2022 ஏப்ரல் - மேவில் 36 விமானங்கள் அளிக்கப்படும். இது நம்முடைய தற்காப்புக்காக மட்டும்தான். எந்த ஒரு நாட்டுக்கும் எதிராக அச்சுறுத்த அல்ல. என்று கூறினார்.

20:20 (IST)08 Oct 2019
அமெரிக்க விமானப் படை தாக்குதலில் இந்தியாவின் அல்கொய்தா தலைவர் அசிம் உமர் கொலை

இந்திய துணைக் கண்டத்தின் அல்கொய்தாவின் தலைவர் அசிம் உமர் ஆப்கானிஸ்தானின் தெற்கு ஹெல்மண்ட் மாகாணத்தில் மூசா காலா மாவட்டத்தில் அமெரிக்கப் படைகளால் வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்: டோலோ செய்தி

19:48 (IST)08 Oct 2019
தேர்தல் நேரத்தில் அமைச்சர்கள் வருவார்கள் மற்ற நேரத்தில் வரமாட்டாரகள் - மு.க.ஸ்டாலின் விமர்சனம்

நாங்குநேரி தேர்தல் பிரசாரத்தில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்: தேர்தல் வந்துள்ளதால் அமைச்சர்கள் வருவார்கள்; மற்ற நேரத்தில் மக்கள் குறையை கேட்க வர மாட்டார்கள். விரைவில் ஆட்சி மாற்றம் வரப்போகிறது; ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என்றார்.

18:41 (IST)08 Oct 2019
ரஜினிகாந்த் கட்சியில் முதல் ஆளாக திருநாவுக்கரசர் இணைவார்: கராத்தே தியாகராஜன்

ரஜினி கட்சி ஆரம்பித்தால் அதில் முதல் நபராக திருச்சி எம்.பி. திருநாவுக்கரசர் இணைவார் என காங்கிரஸ் கட்சி முன்னாள் பிரமுகர் கராத்தே தியாகராஜன் குறிப்பிட்டார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘தற்போது ரஜினிக்கு எதிராக திருநாவுக்கரசர் பேசினாலும், மறைமுகமாக ரஜினியை தொடர்புகொண்டு சமாதானம் பேசிவிடுவார்’ என குறிப்பிட்டார்.

18:36 (IST)08 Oct 2019
இந்தியா- பிரான்ஸ் பாதுகாப்பு கூட்டுறவில் இது புதிய மைல் கல்- ராஜ்நாத்சிங்

முதல் ரஃபேல் ஜெட் விமானத்தை பெற்றுக்கொண்ட மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங், ‘இந்தியா- பிரான்ஸ் பாதுகாப்பு கூட்டுறவில் இது புதிய மைல் கல்’ என வர்ணித்தார். இதன்படி 2020 மே மாதம் முதல் ‘பேட்ச்’சாக 4 விமானங்கள் இந்தியாவுக்கு வந்து சேரும்.

17:25 (IST)08 Oct 2019
முதல் ரஃபேல் போர் விமானம்!

டஸால்ட் ஏவியேசன் நிறுவனத்திடம் ரூ.59,000 கோடியில் 36ரஃபேல் போர் விமானங்களில் வாங்க 2016 ஆம் ஆண்டு  ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதன்படி, பிரான்ஸ் நாட்டின் போர்டோவில் இந்திய விமானப்படைக்காக வாங்க உள்ள 36 விமானங்களில் முதல் ரஃபேல் போர் விமானத்தைப்  மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் இன்று பெற்றுக் கொண்டார். 

17:23 (IST)08 Oct 2019
சிலைகள் அவமதிப்பு குறித்து திருமாவளவன் பேட்டி!

அம்பேத்கரின் சிலை அவமதிப்பு சம்பவங்களை தமிழக அரசு வேடிக்கை பார்த்து வருவது சமூக நல்லிணக்கத்திற்கு எதிராக முடிந்துவிடும் என்று விடுதலை சிறுத்தை கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார். உலக நாடுகள் மதிக்கும் அம்பேத்கரை தமிழகத்தில் தொடர்ந்து அவமதித்து வருவது தலைதூக்கி இருப்பதாக கூறிய அவர், கீழடி ஆய்வுகளை தொடர்ந்து மேற்கொள்ள தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார். 

16:56 (IST)08 Oct 2019
நீட் தேர்வு வழக்கு நாளை விசாரணை!

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்த உதித்சூர்யா,  மற்றும் அவர்களின் தந்தைகள் ஜாமின் கோரிய மனு நாளை தேனி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. அதே போல், சேலம் சிறையில் உள்ள மாணவன் இர்பானை தேனிக்கு மாற்றக் கோரும் சி.பி.சி.ஐ.டி. போலீஸின் மனு நாளை மறுநாள் விசாரணைக்கு வருகிறது. இர்பான் தேனி சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டவுடன், நீதிமன்ற உத்தரவு பெற்று, காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர். மாணவன் இர்பான் வாய் திறந்தால், நீட் ஆள்மாறாட்ட விவகாரத்தில், மேலும் பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

16:29 (IST)08 Oct 2019
லதா ரஜினிகாந்த் பேட்டி!

தேர்வு முறை மட்டுமல்ல, கல்வி முறையே முற்றிலும் மாற்றப்பட வேண்டும் என்று ரஜினிகாந்த் மனைவி லதா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். தேர்வுகள் மூலம் குழந்தைகளின் திறனை அளவிட முடியாது. கல்வியாளர்களுடன் கலந்துரையாட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். முன்னதாக அவரிடம் 5,8ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அறிவிப்பு குறித்து கருத்து கேட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

16:19 (IST)08 Oct 2019
இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு!

இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது. ஜேம்ஸ் பீபிள்ஸ் - மைக்கேல் மேயர் - டிடியர் கியூலோஸ் ஆகியோருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் சுவிட்சர்லாந்து மற்றும் கனடாவைச் சேர்ந்த இயற்பியல் விஞ்ஞானிகள் ஆவர்.  சூரியக் குடும்பத்திற்கு வெளியே உள்ள கோள்கள் குறித்த ஆய்வுக்காக  இந்த நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

16:09 (IST)08 Oct 2019
சுற்றுலா பயணிகளுக்கு தடை!

பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜீ ஜின்பிங்கும் வரும் 11-ம் தேதி மாமல்லபுரத்தில் பேச்சு வார்த்தை நடத்தவுள்ளன. இதனால் மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகளுக்கு இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய தொல்லியத்துறை அறிவித்துள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 

15:07 (IST)08 Oct 2019
பாதுகாப்பான முறையில் பேனர்களை வைப்பதில் தவறில்லை – வானதி சீனிவாசன்

உலகத் தலைவர்கள் வரும்போது அவர்களை வரவேற்பதற்காக பாதுகாப்பான முறையில் பேனர்களை வைப்பதில் தவறில்லை  என்று பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

14:40 (IST)08 Oct 2019
தமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு – வானிலை மையம்

வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையின் காரணமாக உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.  அதே போல் நீலகிரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கும் வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்துள்ளது

13:51 (IST)08 Oct 2019
உள்ளாட்சித் தேர்தல் நடந்தே தீரும் – அமைச்சர் செங்கோட்டையன்

அடுத்த மாதம் உள்ளாட்சித் தேர்தல் நடந்தே தீரும் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது தொடர்பான மனுக்களும் டெல்லியில் கொடுக்கப்பட்டுள்ளன என விக்கிரவாண்டி அருகே மேல்காரணையில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

13:39 (IST)08 Oct 2019
தமிழகத்தில் 2,951 பேருக்கு டெங்கு பாதிப்பு – பீலா ராஜேஷ்

தமிழகத்தில் 2,951 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர்  பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.  டெங்கு காய்ச்சலால், ஒரு உயிர் கூட போகக்கூடாது என்பதே அரசின் லட்சியம் என்றும், அதற்கேற்ற நடவடிக்கைகளில் சுகாதாரத்துறை அமைச்சகம் ஈடுபட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

13:02 (IST)08 Oct 2019
ரஜினி அரசியலுக்கு வருவார் - ராதாரவி

பாஜக, அதிமுக கூட்டணியுடன், நடிகர் ரஜினி ஆட்சியை பிடிப்பார் என்றும், ரஜினி கட்சி ஆரம்பித்து முதல்வர் வேட்பாளராக போட்டியிட்டால் அவர் பின்னால் நான் நிற்பேன், எனவும் நடிகர் ராதாரவி தெரிவித்துள்ளார். அதோடு ”ரஜினி பொறுமையாக, சூழ்நிலைகளை உணர்ந்து நிதானமாக முடிவு எடுப்பவர். ஆனால் அவர் எடுக்கும் முடிவுகள் தெளிவாக இருக்கும். எனவே விரைவில் அரசியலுக்கு வருவார்” என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

12:52 (IST)08 Oct 2019
தலைமை செயலகத்தில் ஆலோசனை

பிரதமர் மோடி - சீன அதிபர் சந்திப்பு நடைபெறவுள்ள நிலையில், சென்னை தலைமை செயலகத்தில், பொதுத்துறை செயலாளர் செந்தில் தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. இந்த  ஆலோசனையில் காஞ்சி மாவட்ட துணை ஆட்சியர், மாவட்ட வருவாய் அதிகாரிகள், பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். 

12:36 (IST)08 Oct 2019
அமைச்சர் காமராஜ் பிரச்சாரம்

ஒரே நாடு, ஒரே அட்டை என்பதெல்லாம் அந்தந்த பகுதியை பொறுத்தது என்றும், தமிழகத்தை பொறுத்தவரை பொது விநியோகத் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது எக்காரணம் கொண்டு மானியங்கள் ரத்தாகாது என்றும் நாங்குநேரி தொகுதி பிரச்சாரத்தில் அமைச்சர் காமராஜ் குறிப்பிட்டுள்ளார். 

12:18 (IST)08 Oct 2019
ஆளுநருக்கு முதல்வர் வாழ்த்து

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு, மலர்க்கொத்துடன், விஜயதசமி திருநாள் வாழ்த்து கடிதத்தை அனுப்பினார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

11:59 (IST)08 Oct 2019
டெங்கு நடவடிக்கை

டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகின்றன எனவும்,  தமிழகம் முழுவதும் 2,951 பேர் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்தபின் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் பேட்டியளித்துள்ளார். 

11:42 (IST)08 Oct 2019
பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவருக்குக் கடிதம்

ஜம்மு-காஷ்மீரில் இயல்பு நிலையை திரும்பக் கொண்டுவரக்கோரி பத்திரிகையாளர்கள், கல்வியாளர்கள், அரசியல் தலைவர்கள் என 250 பேர் குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர். 

11:18 (IST)08 Oct 2019
தங்கம் விலை சரிவு

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.184 குறைந்து ரூ. 29,032க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

11:02 (IST)08 Oct 2019
பாரதிராஜா கருத்து

கலைஞர்கள் தங்கள் கருத்தை திரைப்படங்கள் மூலமாகவே பதிவு செய்யவேண்டும், பொதுவெளியில் பேசக் கூடாது என்று அச்சுறுத்துவது ஏற்கத்தக்கதல்ல என்றும், 50 பேருக்கு எதிரான தேசதுரோக வழக்கினை திரும்பப்பெற மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் என்றும் இயக்குநர் பாரதிராஜா கேட்டுக் கொண்டுள்ளார். 

10:51 (IST)08 Oct 2019
விமானப்படை தினம்

விமானப்படை தினத்தையொட்டி உத்தரபிரதேசம் காசியாபாத்தில் நடைபெறும் வான் சாகச நிகழ்வில் மிக் 21 ரக விமானத்தை இயக்குகிறார் விங் கமாண்டர் அபிநந்தன்

10:42 (IST)08 Oct 2019
விஜயதசமியையொட்டி பள்ளி குழந்தைகள் சேர்ப்பு

சென்னையில் உள்ள அரசு பள்ளிகள், அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யூகேஜி வகுப்பில் குழந்தைகள் சேர்க்கை நடைபெறுகின்றன. விஜயதசமியையொட்டி மாணவர்களின் கை பிடித்து ஆசிரியர்கள் அரிசியில் “அ” எழுதி கற்றுக்கொடுத்தனர். 

10:31 (IST)08 Oct 2019
மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை

பிரதமர் மோடி - சீன அதிபரின் வருகையை முன்னிட்டு மாமல்லபுரத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக சுற்றுலா தலங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. ஐந்துரதம், கடற்கரை கோயில், அர்ஜூனன் தபசு உள்ளிட்ட இடங்கள் தற்காலிகமாக மூடப்பட்டு,  சுற்றுலா பயணிகளுக்கு இன்று முதல் அனுமதி மறுக்கப்படுகிறது. 

10:29 (IST)08 Oct 2019
தண்ணீர் கொண்டு வரும் பணிகள் நிறைவு

வேலூரிலுள்ள ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயிலில் தண்ணீர் கொண்டுவரும் பணிகள் இன்றுடன் முடிவடைகின்றன.  ரயில் மூலம் இதுவரை 39.75 கோடி லிட்டர் தண்ணீர் சென்னைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே தெரிவித்துள்ளது. 

10:27 (IST)08 Oct 2019
அசுரனை வாழ்த்திய பாரதிராஜா

”தமிழக மக்களாகிய நாம், அசுரனை வரவேற்போம்” என்று, சமீபத்தில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில், நடிகர் தனுஷ் நடித்து வெளிவந்த அசுரன் திரைப்படத்தைப் பாராட்டி இயக்குனர் பாரதிராஜா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

10:24 (IST)08 Oct 2019
ஸ்டாலின் வரவேற்பு

சீன அதிபர் தமிழகம் வருவதை அறிந்து பெருமகிழ்ச்சி கொள்கிறேன் என்றும், நல்லுறவு பேச்சுவார்த்தையை பிரதமர் மோடி - சீன அதிபர் ஸி ஜின்பிங் தமிழகத்தில் நடத்துவது வரவேற்கத்தக்கது என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

Tamil Nadu news today updates : 2016 ஆம் ஆண்டில், இந்தியாவும் சுவிட்சர்லாந்தும் வங்கி கணக்குகளில் தகவல் பகிர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தன. இது 2018 ஜனவரி முதல் நடைமுறைக்கு வந்தது. இந்த தகவல் பரிமாற்றம் பொதுவான அறிக்கையிடல் தரநிலை (சி.ஆர்.எஸ்) இன் கீழ் மேற்கொள்ளப்படுகிறது. இது போன்ற தகவல் பரிமாற்றத்திற்கான உலகளாவிய அறிக்கையிடல் தரநிலை, ரகசியத்தன்மை விதிகள் மற்றும் தரவு பாதுகாப்பு போன்ற அம்சங்களை இது கவனிக்கிறது. பொதுவான அறிக்கையிடல் தரநிலையை (சி.ஆர்எஸ்.) பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு (ஓ.இ.சி.டி) உருவாக்கியுள்ளது.

தெலங்கானா ஆளுநராக தமிழிசை சௌந்தரராஜன் பொறுப்பேற்ற பின்னர், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று சென்னையில் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் இடைத்தேர்தலில் திமுக பணம் கொடுத்து வெற்றி முயற்சிப்பதாக குற்றம் சாட்டினார்.

Web Title:Tamil nadu news today live updates pm modi mamallapuram visit

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
விடைபெற்ற எஸ்.பி.பி.
X