ரஜினிகாந்துடன் விக்னேஸ்வரன் சந்திப்பு: இலங்கை வரும்படி அழைப்பு

தமிழக செய்திகள் லைவ் அப்டேட்ஸ்

By: Jan 13, 2020, 7:17:20 AM

Tamil Nadu news today updates : பொங்கல் விடுமுறையை முன்னிட்டு, மக்கள் இப்போதே சொந்த ஊர்களுக்கு திரும்ப ஆரம்பித்துவிட்டனர். இதனால் பேருந்து நிலையம், ரயில் நிலையம் போன்றவற்றில் கூட்டம் அலை மோதுகிறது.  பொங்கல் திருவிழா பண்டிகையை முன்னிட்டு 12,13,14 தேதிகளில் வெளியூர் செல்லும் பேருந்துகளுக்கு 6 தற்காலிக போர்டிங் பாயிண்ட்டை அறிவித்துள்ளது தமிழக அரசு.

கோயம்பேடு திணறுகிறது: சென்னை போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சிறப்பு ஏற்பாடுகள்

தவிர, மேற்கு வங்கம் சென்றுள்ள பிரதமர் மோடி அங்கு இன்று இரண்டாவது நாளாக பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

தமிழகத்தில் ஊராட்சி துணைத்தலைவர், ஒன்றிய தலைவர், துணைத் தலைவர், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மற்றும் துணைத்தலைவர் ஆகிய பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நடந்தது. 314 பதவிகளில் 41 பதவிகளுக்கு போதிய எண்ணிக்கையில் உறுப்பினர் வருகை இல்லாததால் தேர்தல் நடைபெறவில்லை. மீதமுள்ள 273 பதவிகளுக்கு தேர்தல் நடந்தது.

இதில், அ.தி.மு.க. 94 இடங்களிலும், தி.மு.க. 107 இடங்களிலும், பா.ம.க. 19 இடங்களிலும், காங்கிரஸ் 8 இடங்களிலும், தே.மு.தி.க. 7 இடங்களிலும், அ.ம.மு.க. 5 இடங்களிலும், பா.ஜ.க. 4 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்டு கட்சி 3 இடங்களிலும், எஸ்.டி.பி.ஐ. கட்சி ஒரு இடத்திலும், சுயேச்சை 25 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.

 

Live Blog
Tamil Nadu news today updates இன்று சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற இருக்கும் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் அறிந்து கொள்ள
22:57 (IST)12 Jan 2020
நடிகர் ரஜினிகாந்துடன் இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஷ்வரன் சந்திப்பு

தமிழகம் வந்துள்ள இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஷ்வரன் சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த்தின் இல்லத்திற்கு சென்று அவரை சந்தித்துப் பேசினார். மேலு, நடிகர் ரஜினிக்கு இலங்கை வருமாறு விக்னேஷ்வரன் அழைப்பு விடுத்தார்.

22:04 (IST)12 Jan 2020
அதிமுகவினர் யாரும் தங்கள் தனிப்பட்ட கருத்துகளை பொதுவெளியில் தெரிவிக்கக்கூடாது: ஓபிஎஸ்-ஈபிஎஸ்

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், கூட்டணி வியூகங்கள் குறித்து அதிமுக தலைமை மட்டுமே முடிவெடுக்கும். அதிமுகவினர் யாரும் தங்கள் தனிப்பட்ட கருத்துகளை பொதுவெளியில் தெரிவிக்கக்கூடாது. அரசியல் நிலைப்பாடு பற்றி செயற்குழு, பொதுக்குழுவில் விவாதிக்கப்பட்டிருப்பதை நினைவில் கொள்ளவேண்டும். கொள்கை முடிவுகளைப்பற்றிய தனிநபர் விமர்சனமும்,கருத்துகளும் தேவையற்ற விவாதங்களை உருவாக்கும். கூட்டணி,தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைபற்றி ஓபிஎஸ்-ஈபிஎஸ் முடிவெடுப்பர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

21:00 (IST)12 Jan 2020
நாளை மாலைக்குள் 10.59 லட்சம் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படும் - அமைச்சர் காமராஜ்

அமைச்சர் காமராஜ்: 10 லட்சத்து 59 ஆயிரத்து 745 குடும்பங்களுக்கு நாளை மாலைக்குள் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும். தற்போது வரை 94.71% குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

20:53 (IST)12 Jan 2020
பொங்கலைக் கொண்டாட ஜனவரி 14-ம் தேதி விடுமுறை அறிவிக்க அரசு ஊழியர்கள் வலியுறுத்தல்

பொங்கல் பண்டிகையை கொண்டாடும் விதமாக 14ஆம் தேதியும் விடுமுறை அறிவிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

19:42 (IST)12 Jan 2020
நாட்டு மக்களுக்கு பொங்கல், மகர சங்கராந்தி வாழ்த்துகளைத் தெரிவித்தார் - குடியரசுத் தலைவர்

பொங்கல், மகர சங்கராந்தி உள்ளிட்ட பண்டிகைகளை முன்னிட்டு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகள் மாநிலம் மற்றும் கலாச்சார ஒருங்கிணைப்பில் முக்கிய பங்களிக்கின்றன என்று தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

19:00 (IST)12 Jan 2020
பரோல் முடிந்து மீண்டும் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார் பேரறிவாளன்

ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் சிறையிலிருந்து பரோலில் வெளியே வந்த நிலையில், பரோல் கால அவகாசம் முடிந்து மீண்டும் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

18:07 (IST)12 Jan 2020
மனிதநேய மக்கள் கட்சியினர் போராட்டம்

திருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலம் ரயில் நிலையத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, முஸ்லிம் முன்னேற்றக்கழகம், மனிதநேய மக்கள் கட்சியினர் மறியல் போராட்டம் நடத்தினர்.

18:06 (IST)12 Jan 2020
4 பேரிடம் விசாரணை

எஸ்.எஸ்.ஐ வில்சன் கொலை வழக்கில் கேரள மாநிலம் தென்மலை பகுதியை சேர்ந்த 4 பேரிடம் விசாரணை

* விசாரணைக்கு பின் 4 பேரையும் தமிழக கியூ பிரிவு போலீசிடம் ஒப்படைத்தது கேரள காவல்துறை

* அடுத்தக்கட்ட விசாரணைக்காக 4 பேரையும் தென்காசிக்கு அழைத்துச் சென்றது கியூ பிரிவு போலீஸ்

16:51 (IST)12 Jan 2020
இந்திய கலாச்சாரத்துக்கு மிரட்டல்

"ஜே.என்.யு. வை அழிப்பதன் மூலம் இந்திய கலாச்சாரத்துக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது என்று ஜே.என்.யூ மாணவர் சங்க தலைவர் அய்ஷி கோஷ் தெரிவித்துள்ளார்.

16:41 (IST)12 Jan 2020
உதவி தொகை வழங்குவதில் பல லட்சம் மோசடி

கிருஷ்ணகிரியில் டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி திட்டத்தில் மகப்பேறு உதவி தொகை வழங்குவதில் பல லட்சம் மோசடி

மோசடி தொடர்பாக 2018ம் ஆண்டு புகார் அளித்த நாகவேனி என்ற செவிலியர் தற்காலிக பணியிடை நீக்கம், 21 செவிலியர்களுக்கு மெமோ வழங்கி சுகாதார துறை நடவடிக்கை

16:40 (IST)12 Jan 2020
இரட்டை குடியுரிமை வேண்டும் - விக்னேஷ்வரன்

தமிழர்கள் இலங்கைக்கு வந்தால் அவர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டிய சூழல் இல்லை, அதனால் இரட்டை குடியுரிமை வேண்டும் - விக்னேஷ்வரன்

பல்வேறு நாட்டில் உள்ள அனைத்து இலங்கை தமிழர்களும் இலங்கை திரும்ப வேண்டும் - இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஷ்வரன்

16:04 (IST)12 Jan 2020
நகர்ப்புற தேர்தல்களிலும் அதிமுக வெற்றி பெறும்

நகர்ப்புற தேர்தல்களிலும் அதிமுக வெற்றி பெறும். தான் அரசியல்வாதி என்று கமல் சொல்லக் கூடாது; மக்கள்தான் சொல்ல வேண்டும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

15:26 (IST)12 Jan 2020
அரசியலில் திளைத்தவர்களால் அதை புரிந்துகொள்ள முடியாது

புதிய இந்தியாவை உருவாக்க நினைக்கும் இளைஞர்களால் குடியுரிமை திருத்த சட்டத்தை புரிந்துக் கொள்ள முடியும் என்றும் ஆனால் அரசியலில் திளைத்தவர்களால் அதை புரிந்துகொள்ள முடியாது எனவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்

15:07 (IST)12 Jan 2020
4வது அடுக்குமாடி கட்டடமும் தகர்ப்பு

கேரள மாநிலம் கொச்சியின் மராடு பகுதியில் 4வது அடுக்குமாடி கட்டடமும் வெடிவைத்து தகர்க்கப்பட்டது.

விதிமுறைகளை மீறி நீர் ஆதாரங்களின் அருகில் கட்டியதால் நீதிமன்ற உத்தரவுப்படி, ஏற்கனவே 3 கட்டடங்கள் அகற்றப்பட்ட நிலையில், 4வது கட்டடம் தகர்ப்பு

15:06 (IST)12 Jan 2020
திமுக எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவர்

ஜே.என்.யு பல்கலைக்கழகத்தில் இயல்பு நிலை திரும்பவில்லை; மாணவர்கள் தாக்கப்பட்டது பற்றி திமுக எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவர்

- உதயநிதி ஸ்டாலின்

14:13 (IST)12 Jan 2020
புதிய அத்தியாயம் விரைவில் உருவாகும் - மு.க.ஸ்டாலின்

நூற்றாண்டு சாதனையில் திராவிட இயக்கக் கொள்கைகள் வேரூன்றி காலச்சுவடுகளாக பதிந்திருப்பது மகிழ்ச்சி

மக்களாட்சி மாண்புகளைக் காக்கும் புதிய அத்தியாயம் விரைவில் உருவாகும் களம் அமைந்துவிட்டது

- மு.க.ஸ்டாலின்

14:13 (IST)12 Jan 2020
அன்பழகனை விடுதலை செய்க - வைகோ

பத்திரிகையாளர் அன்பழகன் மீதான வழக்கை காவல்துறை திரும்பப்பெற்று விடுதலை செய்ய வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

14:12 (IST)12 Jan 2020
உலகக்கோப்பை அரையிறுதியில் நான் ஏன் டைவ் அடிக்கவில்லை? - தோனி

உலகக்கோப்பை அரையிறுதியில் நான் ஏன் டைவ் அடிக்கவில்லை என்று என்னிடம் கேட்டுக் கொண்டே இருக்கிறேன்; அந்த இரண்டு இஞ்ச் தூரத்தை நீ டைவ் அடித்திருக்க வேண்டுமென எனக்குள் நான் சொல்லிக்கொண்டே இருக்கிறேன்’ - தோனி

14:12 (IST)12 Jan 2020
ரஜினிகாந்த் - முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன் சந்திப்பு

சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் இலங்கை வடக்குமாகாண முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன் சந்திப்பு

இலங்கையில் சுற்றுப்பயணம் செய்ய வருமாறு நடிகர் ரஜினிக்கு விக்னேஸ்வரன் அழைப்பும் விடுத்தார்

14:11 (IST)12 Jan 2020
காவல் அதிகாரி மரணத்திலும் அரசியல்

காவல் அதிகாரி மரணத்திலும் அரசியல் செய்ய வேண்டும் என உள்நோக்கம் கொண்டுள்ளார் ஸ்டாலின்

எஸ்எஸ்ஐ வில்சன் கொலையில் தொடர்புடையோரை பிடிக்க தனிப்படை அமைத்து தீவிர புலன் விசாரணை

- அமைச்சர் ஜெயக்குமார்

14:11 (IST)12 Jan 2020
முதல் தெய்வம் எனது தொண்டர்கள் - விஜயகாந்த்

எனக்கு ஐந்து தெய்வங்கள்; முதல் தெய்வம் எனது தொண்டர்கள்

நான் நலமுடன் நிச்சயம் திரும்பிவருவேன்; அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்

- தேமுதிக தலைவர் விஜயகாந்த்

13:24 (IST)12 Jan 2020
பத்திரிகையாளர் அன்பழகனை உடனே விடுதலை செய்க - மு.க.ஸ்டாலின்

"Chennai Book Fair-ல், அதிமுக அரசின் ஊழல்களை அம்பலப்படுத்தும் புத்தகம் இருந்ததால் 'மக்கள் செய்தி மையம்' அரங்கின் அனுமதியை ரத்து செய்து, பத்திரிகையாளர் அன்பழகனையும் கைது செய்திருப்பது கண்டனத்திற்குரியது. அன்பழகன் உடனே விடுவிக்கப்பட்டு, உரிம அனுமதியும் திருப்பித் தரப்பட வேண்டும்" என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.

13:06 (IST)12 Jan 2020
யோகா பயிற்சி என்பது மோடிக்காக அல்ல; நமது ’பாடி’க்காக

நம் நாட்டில் இந்து என்று சொன்னாலே சிலருக்கு அலர்ஜி; அது சரியல்ல. யாரையும் சாதி ரீதியாக வேறுபடுத்தி பார்க்கக்கூடாது; பிற மதத்தை சேர்ந்தவர்களை மதிக்க வேண்டும், யோகா பயிற்சி என்பது மோடிக்காக அல்ல; நமது ’பாடி’க்காக. மொழித் திணிப்பும், தாய்மொழி எதிர்ப்பும் எங்கும் இருக்கக் கூடாது; தாய்மொழியை நாம் மறக்கக்கூடாது.

- துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு

12:20 (IST)12 Jan 2020
பொய்ச் செய்திகள் நாட்டில் அராஜகத்துக்கு வழிவகுப்பு

குடியுரிமைத் திருத்தச் சட்டம் தொடர்பாக எதிர்க்கட்சிக‌ள் பரப்பிவரும் பொய்ச் செய்திகள் நாட்டில் அராஜகத்துக்கு வழிவகுத்திருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்ற‌ஞ்சாட்டியுள்ளார்.

12:19 (IST)12 Jan 2020
ஜே.என்.யூ மாணவர்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலின்

டெல்லி ஜே.என்.யூ பல்கலைக்கழக மாணவர்களுடன் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு.

பல்கலைக்கழகத்தில் உள்ள விடுதியில் மாணவர் சங்க தலைவர் அய்ஷி கோஷ் உடன் சந்திப்பு

12:18 (IST)12 Jan 2020
2 மாத பரோல் இன்றுடன் நிறைவு

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்த பேரறிவாளனின் 2 மாத பரோல் இன்றுடன் நிறைவு.

பரோல் நிறைவடைந்ததால் ஜோலார்பேட்டையில் உள்ள இல்லத்தில் இருந்து சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்

12:05 (IST)12 Jan 2020
ஈரானுக்கான இங்கிலாந்து தூதர் கைது - பிரிட்டன் கண்டனம்

உக்ரைன் விமானம் மனித தவறுகளினால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஈரான் அறிவித்ததைத் தொடர்ந்து, ஈரான் அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், ஈரானில் உள்ள அமிர் கபிர் பல்கலைக்கழகம் அருகில் நடைபெற்ற போராட்டத்தில் ஈரானுக்கான இங்கிலாந்து தூதர் ராப் மெக்கைர் கலந்து கொண்டார். அப்போது அங்கு வந்த பாதுகாப்பு படை போராட்டக்காரர்களுடன் இங்கிலாந்து தூதரையும் கைது செய்தது. சில மணி நேரங்களுக்கு பின் அவர்களை விடுதலை செய்தது.

போராட்டத்தை தூண்டிய குற்றச்சாட்டில் அவரை தடுப்புக் காவலில் கைது செய்ததாக ஈரான் அரசு தெரிவித்துள்ளது.

ஈரானில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற இங்கிலாந்து தூதர் ராப் மெக்கைரை அந்நாட்டு அரசு கைது செய்துள்ளதற்கு பிரிட்டன் அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. இது சர்வதேச விதிகளை மீறிய செயல் என குற்றம் சாட்டியுள்ளது.

ஈரான், அமெரிக்கா இடையிலான மோதல் வலுப்பெற்றுள்ள நிலையில், இங்கிலாந்து தூதர் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

11:40 (IST)12 Jan 2020
குடியிருப்பு வெடிவைத்து தகர்ப்பு

கேரளா மாநிலம்  கொச்சியில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட மராடு அடுக்குமாடி குடியிருப்பு வெடிவைத்து தகர்க்கப்பட்டது. கடலோர கட்டுமான விதிகளை மீறி கட்டப்பட்ட குடியிருப்பை இடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்த‌து.

11:33 (IST)12 Jan 2020
பெரியார் பல்கலை., மாணவி தற்கொலை

பெரியார் பல்கலைக்கழக விடுதியில் தர்மபுரி பாப்பிரெட்டிப்பட்டியைச் சேர்ந்த மாணவி நிவேதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தற்கொலைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.

11:32 (IST)12 Jan 2020
14-ஆம் தேதியும் விடுமுறை வேண்டும் - ராமதாஸ்

தமிழ்நாட்டில் 14-ஆம் தேதி போகிப்பண்டிகை வரை பள்ளிகள், கல்லூரிகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் விடுதிகளில் தங்கி பயிலும் மாணவ, மாணவியர் பொங்கல் திருநாளைக் கொண்டாட சொந்த ஊருக்கு செல்வதில் சிக்கல் ஏற்படும்!

பொங்கல் திருநாள் கொண்டாட்டம் என்பது போகிப்பண்டிகையுடன் தொடங்குகிறது. எனவே போகியை கொண்டாடவும், விடுதி மாணவர்கள் பொங்கலுக்கு சொந்த ஊர் செல்ல வசதியாகவும் 14-ஆம் தேதியும் விடுமுறை வழங்க பள்ளிக் கல்வித்துறைக்கு தமிழக அரசு ஆணையிட வேண்டும்!

-மருத்துவர் ராமதாஸ்

11:29 (IST)12 Jan 2020
அதிக புகை தரும் பொருட்களை எரிக்க வேண்டாம்

போகி அன்று விமான நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் அதிக புகை தரும் பொருட்களை எரிக்க வேண்டாம் - சென்னை விமானநிலைய நிர்வாகம்

கடந்த போகி பண்டிகை அன்று விமான போக்குவரத்தில் கடும் பாதிப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

11:28 (IST)12 Jan 2020
சென்னையில் ஸ்மார்ட் கம்பங்கள்

மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் சென்னையில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக மக்கள் அதிகமாக கூடும் மெரினா, பெசன்ட் நகர், தி.நகர் உள்ளிட்ட இடங்களில் ஸ்மார்ட் கம்பங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த கம்பங்களில் இருந்து கிடைக்கும் தகவல்களை கண்காணிக்க சென்னை மாநகராட்சி அலுவலகத்தில், 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட உள்ளது. குற்றச்செயல்கள் மற்றும் போக்குவரத்து விதிமீறல்களை கண்காணிக்கும் வகையில் 360 டிகிரி சுழன்று கண்காணிக்கக் கூடிய கேமிரா மற்றும் மழைமானி, எந்தெந்த பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளது உள்ளிட்டவற்றை கண்காணிக்கும் பல்வேறு சிறப்பம்சங்கள், இந்த ஸ்மார்ட் கம்பத்தில் இருப்பதாக கூறுகிறார் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்.

முதற்கட்டமாக சென்னையில் 50 இடங்களில் இந்த ஸ்மார்ட் கம்பங்கள் பொருத்தப்பட உள்ளதாகவும், விரைவில் 15 மண்டலங்களிலும் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

11:25 (IST)12 Jan 2020
விமான போக்குவரத்து பாதிப்பு

துபாயில் கனமழை பெய்து வருவதால் விமான ஓடுபாதைகள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

11:24 (IST)12 Jan 2020
தமிழ்நாடு வனச்சார்நிலைப் பணி அறிவிப்பு

தமிழ்நாடு வனச்சார்நிலைப் பணிகளில் அடங்கியுள்ள வனக்காப்பாளர், ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் பதவிகளுக்கான காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர்கள் தேர்வுக்குழுமம் வெளியிட்டுள்ளது

11:24 (IST)12 Jan 2020
இந்தியாவில் ஜன.13 அரசு முறை துக்கம்

ஓமன் சுல்தான் கபூஸ் மறைவையொட்டி இந்தியாவில் ஜன.13 அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படும்

தேசியக்கொடி நாளை அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும்; அரசு சார்ந்த பொழுதுபோக்கு நிகழ்ச்சி நடைபெறாது

- மத்திய உள்துறை அமைச்சகம் |

11:23 (IST)12 Jan 2020
குடியுரிமையும் பறிக்கப்படாது - பிரதமர் மோடி

சிஏஏ தொடர்பாக நாட்டு மக்கள் திசை திருப்பப்படுகின்றனர்

குடியுரிமை திருத்தச் சட்டம் மூலம் யாருடைய குடியுரிமையும் பறிக்கப்படாது என்பதை மீண்டும் சொல்கிறேன்

அரசியல் விளையாட்டில் ஈடுபடுவோர் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து புரிந்துகொள்ள மறுக்கின்றனர்

- பிரதமர் மோடி

11:22 (IST)12 Jan 2020
இரண்டாவது நாளாக விசாரணை

குரூப் 4 தேர்வு முறைகேடு புகார் தொடர்பாக, டிஎன்பிஎஸ்சி செயலாளர் நந்தகுமார் மற்றும் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சுதன் ஆகியோர் ராமநாதபுரத்தில் விசாரணை நடத்தினர். தவறுகள் கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, டிஎன்பிஎஸ்சி செயலாளர் நந்தகுமார் அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்நிலையில், அங்கு தேர்வு பணிகளில் ஈடுபட்ட அலுவலர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

11:21 (IST)12 Jan 2020
2.81 லட்சம் பேர் பயணம்

பொங்கல் சிறப்பு மற்றும் வழக்கமான பேருந்துகளில் இதுரை 2.81 லட்சம் பேர் பயணித்துள்ளனர்.

பயணம் மேற்கொள்ள 1.75 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர் - போக்குவரத்துத்துறை.

11:21 (IST)12 Jan 2020
மேட்டூர் அணை நீர்மட்டம்

மேட்டூர் அணை நீர்மட்டம் - 112.61 அடி, நீர் இருப்பு - 82.17 டிஎம்சி, நீர்வரத்து - 1,006 கனஅடி, நீர் திறப்பு - 10,600 கனஅடி.

11:20 (IST)12 Jan 2020
பெட்ரோல், டீசல் விலை

பெட்ரோல் விலை 12 காசுகள் குறைந்து ரூ.78.86-க்கும், டீசல் 6 காசுகள் குறைந்து ரூ.73.04-க்கும் விற்பனை.

11:19 (IST)12 Jan 2020
பொங்கல் திருநாள் - சிறப்பு பேருந்துகள் எங்கிருந்து எங்கே?

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சிறப்பு பேருந்துகள் எங்கிருந்து செல்கின்றன உள்ளிட்ட முழு விவரம் இங்கே,

11:11 (IST)12 Jan 2020
50% கட்டண தள்ளுபடி

ஜனவரி 15,16,17ஆம் தேதிகளில் அரசு விடுமுறை என்பதால் மெட்ரோ ரயிலில் 50% கட்டண தள்ளுபடி வழங்கப்படும்

ஜன.17 காணும் பொங்கலன்று மெரினா கடற்கரைக்கு மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து பயணிகளுக்கு CAB இயக்கப்படும்

- மெட்ரோ ரயில் நிர்வாகம்

Tamil Nadu News Today Updates :

ஈரோடு மாவட்டம் கோபியில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறுகையில்,

பொங்கல் பண்டிகையையொட்டி 13-ந் தேதி அதாவது நாளை (திங்கட்கிழமை) முதல் பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை அளிப்பது குறித்து முதல்- அமைச்சர் பழனிசாமியுடன் கலந்து ஆலோசித்து முடிவு அறிவிக்கப்படும். கட்டாயக்கல்வி உரிமை சட்டத்தில் சில தனியார் பள்ளிக்கூடங்களில் அரசின் இட ஒதுக்கீட்டின்படி மாணவர்கள் சேர்க்கை நடைபெறுவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. ஒரு சில பள்ளிக்கூடங்களில் அதுபோல் உள்ளது. இதுகுறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். அடுத்த ஆண்டு என் கவனத்துக்கு யாரும் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை கொண்டு வந்தால் அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ளும்.

அரசு பள்ளிக்கூடங்களில் காலை உணவு வழங்கப்படும் என வதந்திகளை பரப்பி வருகிறார்கள். காலை உணவு வழங்குவது குறித்து முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இதுவரை எந்தவித கருத்தும் தெரிவிக்கவில்லை. இது சமூக வலைத்தளங்களில் பரவி வரும் வதந்தியே தவிர வேறொன்றும் இல்லை என்றார்.

 

Web Title:Tamil nadu news today live updates tn local body indirect election results weather news pongal holidays irctc darbar collections

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
JUST NOW
X