scorecardresearch

இன்றைய செய்திகள் : தடையை மீறி இன்று சட்டமன்றம் முற்றுகை: இஸ்லாமிய அமைப்புகள் மும்முரம்

Tamil nadu news today updates : தமிழகத்தின் இன்றைய முக்கியச் செய்திகள், அரசியல் நிலவரங்கள், பொதுப் பிரச்னைகள், பொழுதுபோக்கு விஷயங்கள் என அனைத்தையும் இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.

இன்றைய செய்திகள் : தடையை மீறி இன்று சட்டமன்றம் முற்றுகை: இஸ்லாமிய அமைப்புகள் மும்முரம்

Tamil nadu news today updates : சி.ஏ.ஏ, என்.ஆர்.சி, என்.பி.ஆர் போன்ற சட்டங்களுக்கு எதிராக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. சென்னை வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற போராட்டத்தினை கலைக்க காவல்துறை தடியடி நடத்தியது. இதற்கு கடுமையான கண்டனங்கள் தமிழகம் முழுவதும் எழுந்தது. இந்நிலையில் சி.ஏ.ஏவுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் இல்லையென்றால் சட்டமன்றத்தை முற்றுகையிடுவோம் என்று அறிவித்திருந்தனர்  இஸ்லாமிய மக்கள். அவர்களின் இந்த போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இன்று காலை சரியாக 10:30 மணியளவில் கலைவாணர் அரங்கில் இருந்து இந்த போராட்டம் துவங்குகிறது.

பொய் பிரசாரங்களையும், விஷம செயல்களையும் புறந்தள்ளிவிட்டு, சமூக நல்லிணக்கத்தை காப்பாற்ற, முஸ்லிம் சகோதர – சகோதரிகள் ஒத்துழைக்க வேண்டும்,” என, முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகத்தில், சிறுபான்மையின சகோதர – சகோதரிகளுக்கு எதிரான எந்த ஒரு செயலையும், அரசு அனுமதிக்காது. ஜெ., அரசு, சிறுபான்மையின மக்களுக்கு எப்போதும் பாதுகாப்பு அரணாக விளங்கும் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

ஆயுட்காலம் நிறைவு, குறைந்த செயல்திறன் எதிரொலி – மூடப்படுகிறது என்எல்சி முதலாவது அனல் மின் நிலையம்

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

தொலைதொடர்பு துறைக்கு செலுத்த வேண்டிய, 53 ஆயிரம் கோடி ரூபாய் நிலுவையில், முதற்கட்டமாக, 2,500 கோடி ரூபாய் செலுத்த முன் வந்த, வோடபோன் ஐடியா நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்க, உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக மறுத்து விட்டது.பார்தி ஏர்டெல், வோடபோன் ஐடியா, டாடா டெலிசர்வீசஸ் உள்ளிட்ட, 15 மொபைல் போன் சேவை நிறுவனங்கள், தொலைதொடர்பு துறைக்கு, 1.47 லட்சம் கோடி ரூபாய் நிலுவை வைத்துள்ளன

Live Blog

Tamil nadu news today updates : இன்று சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.


22:14 (IST)18 Feb 2020

சிவானந்தா குருகுலம் திரு .ராஜாராம் உடல்நலக்குறைவால் காலமானார்

சென்னையில் உள்ள சிவானந்த குருகுலத்தை நிறுவிய பத்மஸ்ரீ டாக்டர் ராஜாராம் இன்று காலமானார். அவருக்கு வயது 67. கடந்த சில காலங்களாக உடல்நிலை குறைவின் காரணமாக மருத்துவ சிகிச்சை எடுத்து வந்த டாக்டர் ராஜாராம், சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலமானார்.

22:10 (IST)18 Feb 2020

ஆவடி அருகே மது போதையில் இருந்தவரை அடித்து கொலை; போலீஸ் விசாரணை

சென்னை ஆவடி அருகே மதுபோதை ஆசாமியை மர்ம நபர்கள் அடித்து கொலை செய்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

22:08 (IST)18 Feb 2020

சிஏஏவுக்கு எதிராக நாளை திட்டமிட்டபடி சட்டமன்ற முற்றுகைப் போராட்டம் – காஜா முகைதீன்

அனைத்து இஸ்லாமிய அமைப்புகள், அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு தலைவர் காஜா முகைதீன், சிஏஏவுக்கு எதிராக நாளை திட்டமிட்டபடி சட்டமன்ற முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார். மேலும், தேசியக்கொடி ஏந்தி அமைதியான முறையில் வரம்பு மீறாத வகையில் போராட்டம் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.

22:03 (IST)18 Feb 2020

நன்றி தெரிவித்த சிவகார்த்திகேயன்

தனது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து நடிகர் சிவகார்த்திகேயன் தனது பேஸ்புக் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். 

21:58 (IST)18 Feb 2020

என்ஆர்சி என்றால் என்ன?

சிஏஏ மற்றும் என்ஆர்சி என்றால் என்ன ? என்பதை புரிந்துகொண்டு முதலமைச்சர் பேச வேண்டும் என திமுக எம்பி கனிமொழி விமர்சித்துள்ளார்.

21:44 (IST)18 Feb 2020

விண்ணப்பங்களை மாற்றி முறைகேடு செய்தவர் கைது

குரூப் மற்றும் விஏஓ தேர்வுகளில் ஜெயக்குமாருடன் இணைந்து விண்ணப்பங்களை மாற்றி முறைகேடு செய்த திருவல்லிக்கேணியைச் சேர்ந்த குற்றவாளி அசோக்குமார் என்பவர் கைது

 

21:11 (IST)18 Feb 2020

உயிரிழந்தோர் எண்ணிக்கை 1900

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1900 ஆக அதிகரித்துள்ளது. சீனாவில் உள்ள விளையாட்டு மைதானங்கள் அனைத்தும் மருத்துவமனைகளாக மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

21:03 (IST)18 Feb 2020

மாநாடு ஷூட்டிங்

சிம்புவின் ‘மாநாடு’ படத்தின் படப்பிடிப்பு நாளை தொடங்க உள்ளது. பல்வேறு சிக்கல்கள் நடுவில் சிக்கித் தவித்த இந்தப் படம் ஒருவழியாக தொடங்க உள்ளதால் சிம்புவின் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

20:45 (IST)18 Feb 2020

சிஏஏவுக்கு எதிராக நாளை திட்டமிட்டபடி போராட்டம்

சிஏஏவுக்கு எதிராக நாளை திட்டமிட்டபடி சட்டமன்ற முற்றுகைப் போராட்டம் நடைபெறும். தேசியக்கொடி ஏந்தி அமைதியான முறையில் வரம்பு மீறாத வகையில் போராட்டம் நடைபெறும். எதிர்மனுதாரராக சேர்க்கவில்லை என்பதால் நீதிமன்றம் விதித்த தடை எங்களுக்குப் பொருந்தாது

– அனைத்து இஸ்லாமிய அமைப்புகள், அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு தலைவர் காஜா முகைதீன்

20:42 (IST)18 Feb 2020

சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் – டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசு முன்வர வேண்டும். மாநில அளவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஒடிசா அரசு முடிவு செய்திருக்கிறது. அதற்கு என்னென்ன காரணங்கள் உண்டோ, அவை அனைத்தும் தமிழகத்திற்கும் பொருந்தும்” என்று தெரிவித்துள்ளார்.

20:40 (IST)18 Feb 2020

செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்திற்கு உரிய நிதி ஒதுக்கி, ஆய்வறிஞர்களை நியமிக்க வேண்டும் – ஸ்டாலின்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்திற்கு உரிய நிதி ஒதுக்கி, ஆய்வறிஞர்களை நியமிக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

20:34 (IST)18 Feb 2020

தமிழகத்தை வஞ்சிக்கிறது மத்திய அரசு – கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில்,  “தமிழகத்தை, மத்திய அரசு தொடர்ந்து வஞ்சிக்கிறது. தமிழக நலன்களை பாதிக்கும், ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை, உதய் மின் திட்டத்தை தமிழக அரசு ஆதரிக்கிறது. ரயில்வே, தபால் துறை தேர்வில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளதால் ஏராளமான இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை” என தெரிவித்துள்ளார்.

20:25 (IST)18 Feb 2020

பிகில் பட வசூல் விவகாரம்: பைனான்சியர் அன்புசெழியன் வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜர்

பிகில் திரைப்படத்தின் வசூல் தொடர்பாக விளக்கம் அளிக்க ஏஜிஎஸ் நிறுவனம், நடிகர் விஜய் மற்றும் அன்புச்செழியன் ஆகியோருக்கு வருமான வரித்துறை சம்மன் அனுப்பி இருந்தது. இதில் பிப்ரவரி 11ஆம் தேதி நடிகர் விஜய் மற்றும் அன்புச்செழியனின் ஆடிட்டர் ஆகியோர் ஆஜராகி விளக்கம் அளித்தனர். கடந்த 12ஆம் தேதி ஏஜிஎஸ் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி அர்ச்சனா கல்பாத்தி ஆஜரானார். தொடர்ந்து, நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என அன்புச்செழியனுக்கு சம்மன் அளிக்கப்பட்டது. அதன்படி, இன்று அவர் நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜரானார்.

20:13 (IST)18 Feb 2020

கோலியை அவுட்டாக்கி திறனை சோதிப்பேன்

இந்தியா உடனான டெஸ்ட் போட்டியில் கோலியை அவுட்டாக்கி தன்னுடைய திறனை சோதிப்பேன் என்று நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ட்ரெண்ட் போல்ட் கூறியுள்ளார்.

20:09 (IST)18 Feb 2020

சமஸ்கிருத வளர்ச்சிக்கு ஒதுக்கப்பட்டது ரூ.643.84 கோடி

கடந்த 3 ஆண்டுகளில் சமஸ்கிருத வளர்ச்சிக்கு ஒதுக்கப்பட்டது ரூ.643.84 கோடி, செம்மொழி தமிழின் வளர்ச்சிக்கு ஒதுக்கியதோ வெறும்
ரூ. 22.94 கோடி! மத்திய அரசு தமிழ் மொழிக்கு எதிரானது என்பதை உணர்ந்து, மொழி உரிமை காக்க உரிய நிதி கோரி பெறுவதற்கான முதுகெலும்பற்றது எடப்பாடி அரசு 

– திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

19:41 (IST)18 Feb 2020

சிஏஏ-வால் யாருக்கும் பாதிப்பு இல்லை என யார் சொன்னாலும் தவறு தான் – கே.எஸ்.அழகிரி

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி: சிஏஏ-வால் யாருக்கும் பாதிப்பு இல்லை என யார் சொன்னாலும் தவறு தான். சிஏஏவை ஆதரிக்க வேண்டுமெனில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என தமிழக அரசு கேட்டிருக்கலாம் என்று கூறியுள்ளார்.

18:33 (IST)18 Feb 2020

டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் இடைத்தரகர் ஜெயக்குமார் உடன் இணைந்து முறைகேடு செய்ததாக ஒருவர் கைது

குரூப் 4 மற்றும் விஏஓ தேர்வுகளில் ஜெயக்குமாருடன் இணைந்து விண்ணப்பங்களை மாற்றி முறைகேடு செய்த திருவல்லிக்கேணியைச் சேர்ந்த குற்றவாளி அசோக்குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

18:30 (IST)18 Feb 2020

இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் நாளை நடைபெறவுள்ள சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்திற்கு தடை

இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் நாளை நடைபெறவுள்ள சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்திற்கு தடை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மார்ச் 11 வரை போராட்டத்திற்கு தடை விதித்துள்ள உயர் நீதிமன்றம் மத்திய, மாநில அரசுகள், தமிழக டிஜிபி, காவல் ஆணையர், வண்ணாரப்பேட்டை துணை ஆணையர், காவல் ஆய்வாளர் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

17:43 (IST)18 Feb 2020

ரூ.300 கோடி வரி ஏய்ப்பு புகார் விவகாரம் – வருமானவரி அலுவலகத்தில் அன்புச்செழியன் ஆஜர்

பிகில் திரைப்பட வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக, தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம், பைனான்சியர் அன்புச்செழியன் உள்ளிட்டோருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையின் அண்மையில் சோதனை செய்தனர். அதே போல, நடிகர் விஜய் இடம் விசாரணை மேற்கொண்டனர்.

வருமானவரித்துறை சோதனையில், அன்புச்செழியன் மற்றும் அவரது நண்பருக்கு சொந்தமான இடங்களில் இருந்து ரூ.77 கோடி கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக, கடந்த 11ம் தேதி நடிகர் விஜய், அன்புச்செழியன் ஆகியோரது ஆடிட்டர்களும்,12ஆம் தேதி ஏ.ஜி.எஸ் நிறுவன சிஇஓ அர்ச்சனா கல்பாத்தி ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

இந்த நிலையில், நுங்கம்பாக்கம் வருமான வரித்துறை அலுவலகத்தில் பைனான்சியர் அன்புச்செழியன் நேரில் ஆஜரானார். அவரிடம் 300 கோடி ரூபாய் தொடர்பான வரி ஏய்ப்பு குறித்து கேள்வி எழுப்பிய அதிகாரிகள் நடிகர் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு பணப்பரிவர்த்தனை செய்யப்பட்டது குறித்து வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

17:16 (IST)18 Feb 2020

சிஏஏவால் தமிழகத்தில் யார் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்; நான் பதில் சொல்கிறேன் – முதல்வர் ஆவேசம்

தமிழக சட்டப்பேரவையில் குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்து பேசிய முதல்வர் பழனிசாமி: குடியுரிமைச் சட்டத்தை திரும்ப பெறும் அதிகாரம் மத்திய அரசிடம் தான் உள்ளது; தமிழக அரசிடம் இல்லை. சிஏஏவால் தமிழகத்தில் யார் பாதிக்கப்பட்டு இருக்காங்கனு சொல்லுங்க; நான் பதில் சொல்றேன் என ஆவேசமாகப் பேசினார்.

16:31 (IST)18 Feb 2020

குடியுரிமைச் சட்டத்தை திரும்ப பெறும் அதிகாரம் மத்திய அரசிடம்  உள்ளது; தமிழக அரசிடம் இல்லை – முதல்வர்

தமிழக சட்டப்பேரவையில் குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்து பேசிய முதல்வர் பழனிசாமி: குடியுரிமைச் சட்டத்தை திரும்ப பெறும் அதிகாரம் மத்திய அரசிடம் தான் உள்ளது; தமிழக அரசிடம் இல்லை. என தெரிவித்துள்ளார்.

16:28 (IST)18 Feb 2020

கிராமக் கோயில்கள் திருவிழாக்களில், கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் – வைகோ கோரிக்கை

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் உள்ள பல்லாயிரக்கணக்கான கிராமங்களில் கோடிக்கணக்கன மக்கள் மாசி, பங்குனி மாதங்களில் தங்கள் குலதெய்வ வழிபாடுகளை திருவிழாக்களாக நடத்தி வருகிறார்கள். இந்த திருவிழாக்களில்தான் மக்கள் ஒன்று கூடுகிறார்கள். இத்தகைய கோயில் திருவிழாக்களில் அறிவார்ந்த பட்டிமன்றங்கள், சமயச் சொற்பொழிவுகள், ஆடல், பாடல், இசைக் கச்சேரிகள், வில்லிசை என பல்வேறு கேளிக்கை நடைபெறுகின்றன. முன்பெல்லாம் இது போன்ற நிகழ்வுகள் இரவு 9 மணிக்கு தொடங்கி அதிகாலை 5 மணி வரை நடைபெறும். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக, இரவு 10 மணிக்கு மேல் திருவிழாக்களில் ஒலிபெருக்கி பயன்படுத்தக் கூடாது நிபந்தனை விதித்துள்ளது. விழா கமிட்டியினர் கோயில் விழாக்களுக்கு அனுமதி பெறுவதற்கு சிரமப்படுகின்றனர். அதனால், தமிழக காவல்துறை கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

16:20 (IST)18 Feb 2020

குஜராத்துக்கு டிரம்ப் வருகை எதிரொலி; குடிசைவாசிகள் காலி செய்ய அகமதாபாத் நகராட்சி நோட்டீஸ்

குஜராத்துக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் வருகை எதிரொலியாக அகமதாபாத்தின் மொடேரா பகுதி குடிசைவாசிகள் 7 நாட்களில் காலி செய்ய வேண்டும் என அகமதாபாத் நகராட்சி நோட்டீஸ் விடுத்துள்ளதால பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

16:16 (IST)18 Feb 2020

விஜய்யின் ‘மாஸ்டர்’ படப்பிடிப்பு இன்னும் 10 நாட்களில் முடிவடைய உள்ளதாக தகவல்

விஜய்யின் ‘மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்புகள் இன்னும் பத்து தினங்களில் முழுமையாக முடிவடைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

16:12 (IST)18 Feb 2020

அமைச்சர் வேலுமணி மீதான வழக்கை திசை திருப்பும் நோக்கில் என் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது – ஸ்டாலின்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடர்ந்த அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்த மனுவில், அமைச்சர் வேலுமணி மீதான வழக்கை திசை திருப்பும் நோக்கில் என் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். இந்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

16:07 (IST)18 Feb 2020

ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்துக்கு டுவிடரில் கொலை மிரட்டல் விடுத்தவர் மீது வழக்குப்பதிவு

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு ட்விட்டரில் கொலை மிரட்டல் விடுத்தவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

15:47 (IST)18 Feb 2020

மது குடிப்பது அதிகரிப்பதே டாஸ்மாக் வருவாய் உயர்வுக்கு காரணம் – அமைச்சர் தங்கமணி

தமிழக சட்டப்பேரவையில் 2020-21-ம் ஆண்டுக்கான பட்ஜெட் விவாதத்தின்போது, திமுக எம்.எல்.ஏ மனோஜ் தங்கராஜ், வருவாய் பற்றாக்குறை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனிடையே டாஸ்மாக் மூலம் ரூ.30,000 கோடி கிடைப்பதாக சொல்கிறீர்கள். இவ்வாறு அரசுக்கு வருவாய் வருவது நல்லதல்ல. மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்று தெரிவித்தீர்கள். எப்போது மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் தங்கமணி: மது குடிப்பது அதிகரிப்பதே டாஸ்மாக் வருவாய் உயர்வுக்கு காரணம். தமிழகத்தில் மக்கள் குடிக்கிறார்கள். அதற்காக என்ன செய்ய முடியும்? திமுக ஒரே நாளில் மதுவிலக்கை அமல்படுத்துவோம் என கூறினீர்கள். நாங்கள் படிப்படியாக அமல்படுத்துவோம் என்று வாக்குறுதி கொடுத்தோம். அதன்படி தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்றார்.

13:40 (IST)18 Feb 2020

அதிமுகவில் விரைவில் சீர்திருத்தங்களை செயல்படுத்துவோம்

அதிமுகவில் விரைவில் மாற்றங்கள் மற்றும் சீர்திருத்தங்களை செயல்படுத்துவோம். வருகின்ற உள்ளாட்சி மற்றும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று முதல்வர் பழனிசாமி துணைமுதல்வர் பன்னீர்செல்வம் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

13:15 (IST)18 Feb 2020

சிறுபான்மையினருக்கும் பாதிப்பில்லை – முதல்வர் பழனிசாமி

குடியுரிமை சட்டத்தால் தமிழ்நாட்டில் பிறந்த எந்த சிறுபான்மையினருக்கும் பாதிப்பில்லை.  மத்திய அரசுதான் முடிவெடுக்கும் சூழலில் உள்ளது; மத்திய அரசிடம் திமுக உறுப்பினர்கள் வலியுறுத்துங்கள் என்று சட்டசபையில் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

12:23 (IST)18 Feb 2020

ஆர் எஸ் பாரதிக்கு கமல் கட்சி கண்டனம்

தமிழக ஊடகங்கள் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த திமுக எம்பி ஆர் எஸ் பாரதியின் செயலுக்கு கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

11:55 (IST)18 Feb 2020

காஞ்சிபுரம் மதுவிலக்கு பிரிவு பெண் காவல் ஆய்வாளர் மீது கொடூர தாக்குதல்

காஞ்சிபுரம் மதுவிலக்கு பிரிவு பெண் காவல் ஆய்வாளர் மீது கொடூர தாக்குதல் நடத்தும் சிசிடிவி காட்சி வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது.  ஓய்வுபெற்ற காவல் அதிகாரியின் மகனுக்கும், பெண் காவல் ஆய்வாளருக்கும் நடந்த  சண்டையில் பெண் காவல் ஆய்வாளர் மீது கடும் தாக்குதல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

11:28 (IST)18 Feb 2020

தமிழகத்தில் விரைவில் நடமாடும் ரேசன் கடைகள் – அமைச்சர் செல்லூர் ராஜூ

தமிழகத்தில் நடமாடும் ரேசன் கடைகள் செயல்பட அரசு நடவடிக்கை எடுத்துவருவதாக சட்டசபையில் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

10:42 (IST)18 Feb 2020

நிர்பயா குற்றவாளிகளுக்கு மார்ச் 3ம் தேதி மரணதண்டனை நிறைவேற்றம்

மருத்துவ மாணவி, ‘நிர்பயா’ பாலியல் பலாத்கார வழக்கின் குற்றவாளிகளுக்கு, மார்ச், 3ம் தேதி அதிகாலை, 6:00 மணிக்கு துாக்கு தண்டனையை நிறைவேற்ற, திஹார் சிறை அதிகாரிகளுக்கு, டில்லி நீதிமன்றம் புது, ‘வாரன்ட்’ பிறப்பித்துள்ளது.

10:35 (IST)18 Feb 2020

கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை 1868 ஆக அதிகரிப்பு

சீனாவில், ‘கொரோனா’ வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை, 1,868 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை, 72 ஆயிரத்து, 436 பேருக்கு, இதன் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

10:09 (IST)18 Feb 2020

நெற்றிக்கண் பட உரிமையை தனுஷிற்கு விற்கவில்லை

கே பாலசந்தர் இயக்கத்தில் விசுவின் வசனத்தில் ரஜினிகாந்த் நடிப்பில்  உருவான நெற்றிகண் படத்தை நடிகர் தனுஷ் ரீமேக் செய்ய இருப்பதாக தகவல் வெளியானது. முறையான உரிமம் வாங்கியே தனுஷ், இந்த படத்தை ரீமேக் செய்ய வேண்டும் இல்லையென்றால் வழக்கு தொடரப்படும் என்று  இயக்குனர் விசு எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில், கவிதாலயா நிறுவனம், நெற்றிக்கண் பட உரிமையை, தனுஷிற்கு விற்கவில்லை என்று விளக்கமளித்துள்ளது. 

09:53 (IST)18 Feb 2020

பெட்ரோல், டீசல் விலை குறைவு

சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 5 காசுககள் குறைந்து, ஒரு லிட்டர் ரூ.74.68 ஆகவும், டீசல், நேற்றைய விலையில் இருந்து, 5 காசுகள் குறைந்து, ஒரு லிட்டர் ரூ.68.27 ஆகவும் உள்ளது. 

09:48 (IST)18 Feb 2020

டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் திமுக முன்னாள் அமைச்சர்களுக்கு தொடர்பு – அமைச்சர் ஜெயக்குமார்

டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில், திமுக முன்னாள் அமைச்சர்களான கே என் நேரு, வீரபாண்டி ஆறுமுகம் உள்ளிட்டோருக்கு தொடர்பு இருப்பதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

Tamil nadu news today updates : சுற்றுச்சூழலுக்கு ஆபத்து ஏற்படுத்தாத பொருளாதார வளர்ச்சியை முன்னெடுக்கும் நடவடிக்கைகளை, இந்தியா மேற்கொண்டு வருகிறது.சுற்றுச்சூழல் பாதுகாப்பில், பாரீஸ் உடன்படிக்கையை அதிகம் அமல்படுத்தி உள்ள நாடுகளில், இந்தியாவும் ஒன்று. இயற்கையுடன் நல்லிணக்கத்துடன் வாழ வேண்டிய அவசியத்தை வலியுறுத்தும் வகையில், இந்த மாநாட்டின் சின்னமாக, தென்னிந்தியாவின் கோலம் அமைந்திருப்பது, முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

டி.என்.பி.எஸ்.சி., நடத்திய தேர்வுகளில் முறைகேடு செய்த, இடைத்தரகர் ஜெயகுமாருக்கு, தானாக அழியும் மையுடன் கூடிய, பேனா தயாரித்து கொடுத்தவரை, சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்துள்ளனர்.

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Tamil nadu news today live updates tnpsc scam minister jayakumar anti caa protests pm modi